ஹாய் தோழமைகளே, நலம் நலம்தானே ?

போன அத்தியாத்தில் நம்மை நாம் கவனித்துப் பார்ப்பதினால் வரும் நன்மைகளைப் பார்த்தோம். அதனுடன் போனஸாக உங்களுடன் நீங்களே ஒரு நட்புறவுக்கு வந்திருப்பீர்கள்.   “அழகிடி நீ, இன்னும் கொஞ்சம் கேர் எடுத்தா சும்மா ஜொலிப்ப“ என்று உங்கள் மனம் கூறும் அளவிற்கு உங்களின் நட்பு கூடி இருக்கும். நாம் யாரை அடிக்கடி பார்க்க நேர்ந்தாலும் நம்மை அறியாமல் ஒரு நட்புணர்வும் அவர்களைப் பார்த்ததும் விரியும் புன்னகையும் யாருக்கும் வெகு இயல்பான ஒன்று. நமக்கு முக்கியமான நம்மிடம் அது இன்றியமையாத தேவையும்கூட. நம்மை நாம் கண்ணாடியில் பார்க்கும் போதே ஒரு நட்புணர்வும், மலரும் புன்னகையும், சிறிது ரசனையும் நமக்கு இயல்பாகவே தோன்ற ஆரம்பிக்கும். அதற்கிந்த கண்ணாடி பார்க்கும் பயிற்சி மிகுந்த பலனைத் தரும்.

சும்மா பார்த்துக் கொண்டே இருந்தால் காதல் கைகூடுமா? அதைச் சொல்லவும் வேண்டுமல்லவா? நான் உன்னை நேசிக்கிறேன் என்று நேசிப்பவரிடம் சொல்வது எத்தனை இயல்பான ஒன்று, ஆனால் நம்மைப் பார்த்து நாம் அதிகம் இதைச் சொல்வதில்லை. ஏன்? அப்படிச் சொல்லி பழகவில்லை அவ்வளவு தான். வேறெந்த காரணமும் பெரிதாக இல்லை.

ஒவ்வொரு முறை கண்ணாடியைப் பார்க்கும் போதும் ஒரு ரசனை மிகுந்த பார்வை பார்த்து, புன்னகை சிந்தி, “ஐ லவ் யூ“ என்று சொல்லித்தான் பாருங்களேன். கேட்கும் போது சிறிது பைத்தியகாரத்தனமாகத் தோன்றலாம்.  ஆனால், இது ஒரு முக்கிய பயிற்சி. கண்ணாடி முன் நின்று நீங்கள் எதைச் செய்தாலும் அதை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளும் சக்தி மிகுந்த வார்த்தைகள். நீங்கள் சலிப்பாக, “எங்க, நா போறதுக்கு முன்னாடி என் ராசி போய் நின்னு முட்டுகட்டைப் போடுதே, நான் எங்க  இருந்து முன்னேற“ என்று கூறுவீர்களானால், நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும் அந்தக் காரியம் ஈடேறாது அல்லது கடுகத்தனை வேலைக்கு நீங்கள் மலையளவிற்கு மெனக்கெட வேண்டி இருக்கும். ஏன்? அதற்குக் காரணம் நீங்கள்தான். நீங்களே முடிவு பண்ணி விட்டீர்களே காரியம் அத்தனை சுலபமாக நடக்காது என்று, அதைக் கண்ணாடியைப் பார்த்து சொல்லி உங்கள் ஆழ்மனதிலும் பதிய வைத்தாயிற்று. பின்பு அதானே நடக்கும், அதானே உலக நியதி! செய்வதெல்லாம் சிறப்பாகச் செய்துவிட்டு பின் புலம்புவதைவிட, “ நான் வலிமையானவள். நான் எடுத்த காரியத்தில் வெற்றி பெற எனக்கு முழு தகுதி உள்ளது. என் பிரபஞ்சம் என் கூடவே இருந்து வழிநடத்துகிறது“ என்று நம்பிக்கையோடு சொல்லும் போது அந்த வேலை எத்தனை அழகாக, சுலபமாக முடிகிறது என்று நீங்களே பார்க்கலாம்.

எனவே தினமும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், “ஐ லவ் யூ, நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே உன்னை நேசிக்கிறேன். உன் லட்சியத்தை நிறைவேற்றும் திறமை உனக்குண்டு. உன் கனவுகள் சீக்கிரம் வசப்படும்“ என்று புன்னகையுடன் பேசிப் பாருங்கள். உங்கள் உள்ளும் புறமும் மலர்ந்து, தன்னம்பிக்கை கூடுவதையும், அதனால் நீங்கள் செய்யும் காரியம் அனைத்தும் சிறப்பாகச் செய்வதையும் நீங்களே உணர முடியும்.

இதெற்கெல்லாம் ஒரு ஐந்து நிமிடம்கூட எடுக்காது. நமக்குத் தனியான நேரமும் ஒரு கண்ணாடியும் தேவை அவ்வளவே!

எந்த விதமான நேர்மறை / எதிர்மறை சூழ்நிலையிலும் நீங்கள் இதைப் பயன்படுத்தலாம். எல்லாம் சரியாக நடக்கும் போதும், “ஐ லவ் யூ, உன் வெற்றிகளுக்கான என் வாழ்த்துகள், உன்னை நினைத்து எனக்கு மிகப் பெருமையாக இருக்கிறது“ என்று ஊக்கப்படுத்தலாம். எப்படி ஊக்கம் கொடுத்து ஒரு நல்ல சூழ்நிலையில் வளரும் குழந்தை மேன் மேலும் சிறப்பாக வளருமோ, அதே தான் உங்களுக்குள் இருக்கும் குழந்தையும் கேட்கிறது. அதைத் தாராளமாக கொடுங்கள்.

ஒருவேளை சூழ்நிலை சரி இல்லாத நிலை இருந்தால் அப்போதும், “ஐ லவ் யூ. உன் மேல் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. நீ இவை எல்லாவற்றையும் ஊதித் தள்ளி விடுவாய். இது  தற்காலிகம்தான், எப்போதும் உன்னுடன் நானிருக்கிறேன்“ என்று கூறுங்கள். சரியான சமயத்தில் கிடைக்கும் சிறப்பான, கனிவான வார்த்தைகள் எப்படி ஒருவரின் மனதில் உத்வேகத்தை தருமோ, அதையே உங்களுக்கு நீங்களே தந்து கொள்ளமுடியும். ஆனால் அத்தனைக்கும் அடிப்படை கண்ணாடியில் தெரியும் உருவத்தின் மேல் உள்ள நெஞ்சார்ந்த நேசமே. நம் இணையருக்கு, பிள்ளைகளுக்கு, தோழமைகளுக்கு ஒரு கஷ்டம் வரும் போது எப்படி அன்போடு பேசுவோமோ அப்படி உங்களிடம் பேசப் போகிறீர்கள். அவ்வளவுதான்!

என்னென்னவோ செஞ்சாச்சு, இதைச் செய்ய மாட்டோமா நமக்காக.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ’உன்னை அறிந்தால்…’ ‘உணர்வு சூழ் உலகம்’ ஆகிய தொடர்கள், ஹெர் ஸ்டோரிஸில் புத்தகங்களாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளன.