ஐம்பது நாட்கள் கழித்து வெளிக்காற்றை சுவாசிக்கப் போகிறேன். உள்ளுக்குள் சந்தோசம் எனினும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
“நீங்களே பாத்து வாங்கிட்டு வாங்க அத்தை.”
“பரவால்ல போய்ட்டு வா… முதன்முறையா புள்ளைக்கு விசேஷம் வெச்சிருக்கீங்க.. என்ன வேணுமோ நீயே பாத்து வாங்கிட்டு வா” என்றார் என் மாமியார்.
என் குழந்தையின் பெயர்சூட்டு விழாவிற்குத் தேவையான பொருட்கள் வாங்க நானும் என் கணவரும் வெளியில் கிளம்பினோம். விழா என்னவோ வீட்டிலேயே எளிமையாகத்தான் செய்கிறோம். ஆனாலும் இதைக் காரணம் காட்டி என் கணவருடன் வெளியே வந்தேன்.
புதிய தாயாக இருந்து கொண்டு என்ன காரணம்தான் சொல்லி வெளியில் வருவது, அதுவும் கைக்குழந்தையை விட்டுவிட்டு. ஏற்கெனவே இரண்டு முறை வெளியில் செல்ல முயற்சித்தும் நடக்கவில்லை. என் சுய வேலைக்காகச் செல்லவே முடியவில்லை. ஏதோ ஒரு காரணத்தால் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியால் மீண்டும் வீட்டிலேயே அமர்ந்து விடுவேன்.
குழந்தை பிறந்து வீட்டிற்கு வந்தபின் மறு பரிசோதனைக்குச் சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்ததோடு சரி.. ஐம்பது நாட்களாக வீட்டிற்குள்ளேயேதான் இருந்தேன். ஐம்பது நாட்கள்தானே ஆகிறது என நினைக்கலாம் எனக்கென்னவோ தூங்காமல், சரியாக உண்ணாமல், உடல் வலியோடு இருந்ததில் பல மாதங்கள் இப்படியே இருப்பது போல் தோன்றுகிறது. என் உடலைத் தேற்ற முக்கியமாக என் மனதைத் தேற்ற எனக்கு வெளியில் செல்ல வேண்டும்.
இன்று என் மாமியாரே கடைக்குச் செல்ல என்னை வெளியே அனுப்பி வைத்தார்.
தாய்ப்பால் கொடுத்துவிட்டு இரண்டு மணி நேரத்திற்குள் வந்துவிடுவதாகவும் ஒருவேளை தாமதம் ஆனால் கொடுப்பதற்கு கொஞ்சம் தாய்ப்பாலும் எடுத்து வைத்துவிட்டு கிளம்பத் தயாரானேன்.
நைட்டி மற்றும் பீடிங் ட்ரெஸ்ஸில் மட்டுமே இருந்த நான் மீண்டும் சுடிதார் அணிந்தேன். மகிழ்ச்சியோடு திருமணமான புதிதில் எடுத்த சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டேன். (தையல் பிரித்துதான் அணிய முடிந்தது). தலை சீவி பொட்டு வைத்துக் கொண்டேன். வெகு நாட்களுக்குப் பின் கண்ணாடி முன் சில நிமிடங்கள் செலவழித்தேன்.
அழகான மாலைப் பொழுது. என் கணவருடன் இரு சக்கர வாகனத்தில் கிளம்பினேன். முகத்தில் வந்து அறைந்த காற்றில் நான் நானாக மட்டும் உணர்ந்தேன். எந்தவித மன பாரமும் இல்லாத சுவாசிப்பு அது.
ஒரு பள்ளத்தில் வண்டி ஏறி இறங்கியது. வயிற்றில் சிறு வலி ஏற்பட்டது. இன்னும் நான் முழுமையாகத் தயாராகவில்லை. குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் முடியப் போகிறது. ஆனாலும் அவ்வப்போது வயிற்றில் வலி ஏற்படுகிறது. அதனால்தான் முதல் சில வாரங்கள் வீட்டிலேயே இருந்து ஓய்வெடுக்கச் சொல்கிறார்களா? சரிதான் வீட்டிலேயே இருந்தால் மனச்சோர்வு ஏற்படுகிறதே. அதை எப்படிச் சரி செய்வது?
எல்லோருக்கும் சூழல் ஒரே மாதிரி அமைவதில்லை. குழந்தை பிறந்து சில நாட்களிலேயே வேலைக்குச் செல்பவர்களும் இருக்கிறார்கள். எனக்கு ஆறு மாதங்கள் மகப்பேறு விடுப்பு இருக்கிறது. குழந்தையையும் என்னையும் தேற்ற நிச்சயம் எனக்கு இந்த ஆறு மாதங்கள் தேவை. கோயிலுக்குச் செல்லலாம் என்றால் மூன்றாவது மாதம்தான் குழந்தையைக் கோயிலுக்கு அழைத்து செல்லும் வழக்கம் என்றார் அத்தை. நெருங்கிய சொந்தங்களில் வீட்டில் இப்போதைக்கு எதுவும் விஷேசமும் இல்லை. அதனால் எனக்கு வெளியில் செல்லும் வாய்ப்பே அமையவில்லை.
பிரசவம் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து இன்றுதான் வெளியில் வந்தேன்.
கடைக்குள் நுழைந்தேன். யாரும் என்னைக் கவனிக்கவில்லை. எனக்கு அதில் ஏமாற்றம். ஏன் என்னைக் கவனிக்க வேண்டும் உள்ளே சென்றதும் உட்கார இடம்கொடுக்க வேண்டுமென ஏன் எதிர்பார்த்தேன்? அப்படித்தானே நான் கர்ப்பமாக இருக்கும் பொழுது என்னைக் கவனித்துக் கொண்டார்கள். நான் குழந்தை பெற்றுவிட்டேன், இனி அந்தப் பாசமான கவனிப்பு எனக்குக் கிடைக்காது என்பதை உணர்ந்து ஏமாந்து போனேன். வயிற்றை ஒரு முறை தடவிப் பார்த்தேன். நான் அந்த மனநிலையில் இருந்து வெளி வர வேண்டும் நானும் இயல்பானவள் என்பதை எனக்கு நானே தெளிவு படுத்திக்கொண்டேன்.
“என்னங்க.. பாப்பா என்ன பண்றான்னு வீட்ல போன் பண்ணி கேளுங்களேன்.. அழப் போறா” என்றேன் என் கணவரிடம்.
“வந்து பத்து நிமிஷம்தான ஆச்சு.. அதுக்குள்ள என்ன.. அழுதா அவங்களே போன் பண்ணுவாங்க” என்றார்.
என் மனம்தான் தவித்துக்கொண்டே இருந்தது. இதுதான் பெத்த மனமோ!
வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பினோம்.
எங்கள் தெருவிற்குள் நுழையும் பொழுதே என் மகளின் அழுகை சத்தம் உரக்கக் கேட்டது. என்னுள் பதற்றம் ஏற்பட்டது.
வேக வேகமாக வண்டியில் இருந்து இறங்கி செருப்பை உதறிவிட்டு உள்ளே ஓடினேன்.
அழுது அழுது தேம்பியவளைத் தேற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார்கள் என் அம்மாவும் அத்தையும்.
“ஏன் அழறான்னா போன் பண்ணிருக்கலாம்ல?”
“இப்போதான் அழ ஆரம்பிச்சா.. சமாளிக்கலாம்னு நினைச்சோம்.. எடுத்து வெச்சிட்டு போன பாலும் குடிக்க மாட்டிங்கிறா.. சரி நீ போய் கை, கால் முகம் கழுவிட்டு வந்து பால் குடு” என்றார் அம்மா
வேக வேகமாக கை கால் முகத்தைக் கழுவினேன். சுடிதாரை மாற்றிக் கொண்டு மீண்டும் நைட்டிக்குள் புகுந்தேன். என் குழந்தையின் அழுகுரல் என்னை வருத்தியது. மீண்டும் ஒரு குற்ற உணர்ச்சி.
“சாரி தங்கம் அம்மா உன்னை விட்டுட்டு வெளிய போய்ட்டனா?” அழுகையைச் சமாதானம் செய்யும் வரை அவளிடம் மன்னிப்பு கேட்டேன்.
ஒருவழியாக அவளைச் சமாதானம் செய்தேன். அவளின் சமாதானம் என்னைத் தேற்றியது.
ஒரு வாரத்திற்குப் பின், “என்னங்க.. டெலிவரி முடிஞ்சு ஒரு டைம்தான் செக் அப் போயிருக்கோம்.. மறுபடியும் ஒரு தடவை எனக்கு செக்கப் போலாமா?”
“ஏன் என்னாச்சு எதாவது பண்ணுதா உடம்பு?”
“இல்லை.. வீட்டுலயே இருக்க ஒரு மாதிரி இருக்கு.. பாப்பாவ விட்டுட்டு வெளிய போறேன் பாத்துக்கோங்கன்னு பெரியவங்ககிட்ட சொல்லவும் ஒரு மாதிரி இருக்கு.. அதான் சும்மா செக் அப் போய்ட்டு வரலாம்னு கேட்டேன்” என்றேன்.
என்னையே வியப்போடு பார்த்தார் என் கணவர்.
பின் எப்படித்தான் வெளியில் செல்வது!
(தொடரும்)
படைப்பாளர்:

ரேவதி பாலாஜி
சேலம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். தற்சமயம் ஈரோட்டில் வங்கிப் பணியாற்றி வருகிறேன். சிறு வயதில் இருந்தே தமிழ் மீதும் புத்தக வாசிப்பின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக வாழ்க்கை ஏற்படுத்துகிற தாக்கங்களைக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் பதிவு செய்து வருகிறேன். மைவிகடன் இணைய தளத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். கடந்து ஆண்டு சஹானா இணைய இதழ் நடத்திய நாவல் 2023-24 போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளேன். அதில் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்கிற தலைப்பில் நான் எழுதிய நாவல் புத்தகமாகவும் வெளிவர உள்ளது.
Excellent revs… I’m excited to read more