அடர் பச்சை வாழை இலையில் சூடான நிலாக் குட்டிகளாக மூன்று இட்லிகளை இட்டார் சீதா. ஆவி பறந்த அவற்றின் வயிற்றின் மீது கிண்ணத்தில் இருந்த நெய்யை குட்டியூண்டு ஸ்பூனில் ஊற்றினார். நெய் மணம் கமகமவென்று எழுந்தது. வெள்ளையாக தேங்காய் சட்னி, ஆரஞ்சு நிறத்தில் காரச் சட்னி இரண்டையும் கொஞ்சம் கொஞ்சம் பக்கத்தில் வைத்தார்.
சம்யுக்தா சிறுதுண்டு இட்லியைப் பிய்த்து தேங்காய் சட்னியில் தோய்த்து சாப்பிடத் தொடங்கினாள்.
“இன்னொரு இட்லி வெச்சுக்கறியா? இல்லை மொறு மொறுன்னு தோசை ஊத்தித் தரவா?” பதில் சொல்லாமல் சம்யுக்தா சாப்பிட்டுக் கொண்டே இருந்தாள்.
“ஏய்… நான் பேசுறது காதுல விழுதா?” சீதா வேகமாகக் கேட்கவும், சம்யுக்தா நிகழ் உலகத்துக்குத் திரும்பினாள்.
“என்னடி யோசனை?”
“அது வந்தும்மா…” இட்லியோடு வார்த்தைகளையும் விழுங்கினாள்.
‘அம்மாகிட்ட சொல்லலாமா? வேண்டாமா?’ ஒருகணம் யோசித்தாள்.
“இல்லம்மா, நேத்து சாயந்திரம்…” மெல்ல நிறுத்தினாள்.
“சாயந்திரம்..? வெட்டு வெடுக்குன்னு சொல்லித் தொலை”, சீதா சிடுசிடுத்தாள்.
“இல்லம்மா… நேத்து நைட் என்னோட க்ளாஸ் மேட் ராகவியோட தங்கச்சி டியூஷன் முடிச்சிட்டு நடந்து வந்திருக்கா. அவ வீட்டுல இருந்து ரெண்டு கட் தள்ளித்தான் டியூஷன் அக்கா வீடு. அப்ப எதிர்ல சைக்கிள்ல வந்த ஒரு பையன் திடீர்னு அவ நெஞ்சைப் பிடிச்சு அழுத்திட்டு வேகமா சைக்கிள்ல போயிட்டானாம். வீட்ல சொன்னதும் அவங்கப்பா இனிமே அவளை டியூஷன் போக வேண்டாம்னு சொல்லிட்டாராம். அவ மேத்ஸ்ல ரொம்ப வீக்னுதான் டியூஷன் போறா. எக்ஸாம் வேற வருதுன்னு ஒரே அழுகை. பாவம்லம்மா?” அவசர அவசரமாக பேச்சினூடே சாப்பிட்டு முடித்தாள்.
“ம்ம்… ஆனா அந்தப் புள்ளை எப்படி ட்ரஸ் பண்ணியிருந்தாளாம்? அதைக் கேட்டியா மொதல்ல? நான் அவளை நிறையத் தடவை பார்த்திருக்கேன். எப்பவும் மாடர்ன் டிரஸ். ஷால் போடறதில்லை. ஈ ன்னு சத்தமா இளிப்பு வேற! அப்புறம் பசங்க எப்பிடி சும்மா இருப்பானுங்க?” அவள் அம்மாவை நிமிர்ந்து பார்த்தாள்.
“அப்ப அந்தப் பையன் மேல தப்பில்லை… அவ டிரஸ்ஸிங்தான்னு முடிவு பண்ணிட்டிங்களா? சத்தமா சிரிக்கிறது ஒரு குத்தமா..?”
“அவ ஒழுங்கா துணி போட்டிருந்தா ஏன் இந்த மாதிரி பிரச்சினை வருது?”
“அவ ஸ்கூல் யூனிஃபார்ம் சுடிதார் போட்டு, ஷாலை ரெண்டு பக்கமும் பின் பண்ணியிருந்தா…” சம்யுக்தா அம்மாவை உற்றுப் பார்த்தாள்.
சீதா பாத்திரங்களைக் கழுவிக் கொண்டே, ” அதான் இறுக்கமா துணி போடக்கூடாதுன்னு சொல்றது!” என்றார்.
“ஓ… அப்பவும் அவ மேல தான் தப்புன்னு சொல்றீங்களா? லூசா போட்டு சோளக்கொல்லை பொம்மை மாதிரி போகணுமா? அந்தப் பையன் செஞ்சது பத்தி பேசவே மாட்டேங்குறீங்க?” கையை உதறிக் கொண்டு எழுந்தாள்.
“இங்க பாரு… நாமதான் ஒழுக்கமா, அடங்கி நடந்துக்கணும். ஆம்பளைங்க அப்படித்தான் இருப்பாங்க. நகரு… உன் தம்பி சாப்பிட வருவான். இட்லி திங்க மாட்டான்ல? சுடச்சுட தோசை ஊத்தணும்…” சீதா கையைத் துடைத்துக் கொண்டு நகர்ந்தார்.
‘இதென்ன அநியாயம்? ட்ரஸ் பண்றது அவங்கவங்க விருப்பம் தானே? அவ மேல கையை வைக்க அவனுக்கு என்ன உரிமை இருக்கு? ஊர்ல இருக்குறவங்களுக்கு எல்லாம் புடிச்ச மாதிரி நடந்துக்கணுமா என்ன..? என்ன மாதிரியான சொசைட்டில இருக்கோம்? பாதிக்கப்பட்டவங்களையே குற்றவாளிகளாக்குறது நியாயமா?’ அவளுக்குள் கேள்விகள் அலைமோதின. அம்மாவிடம் கேட்டால் பதில் கிடைக்காது. ‘இவங்க கிட்ட எப்படி என் பிரச்னையைச் சொல்லுறது?’ சாப்பிடப் பிடிக்காமல் கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினாள்.
***
சம்யுக்தாவின் குடும்பம் ரொம்ப கட்டுதிட்டங்கள் கொண்டது. அவளின் அப்பாவுக்கு பெண்கள் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும். புடவை, பாவாடை, தாவணி, சுடிதார் (கட்டாயம் துப்பட்டா போட்டே ஆக வேண்டும்) தவிர இதர ஆடைகளை விரும்பக் கூடாது. அம்மாவும் அதே எண்ணம் கொண்டிருந்தார். சத்தமாகப் பேசக் கூடாது. உரக்கச் சிரிக்கக் கூடாது. “குடும்பப் பொம்பளைங்க மாதிரி அடங்கி இருங்க… இருக்குற இடம் தெரியாம அமைதியா இருக்கணும்” அப்பா அதட்டுவார்.
அவளது ஆடைகள் பேருந்தில் பயணிக்க, இதர சமயங்களில் எல்லாம் சௌகரியமாக இல்லாதபோது அவளுக்கு எரிச்சல் மண்டிக் கொண்டு வரும். “நம்ம சௌகரியத்தை விட, மத்தவங்க பார்வை எப்படி இருக்கும்னு யோசி…” அப்பாவின் குரல் காதில் ஒலிக்கும். அவளின் தம்பிக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. அவன் விருப்பப்படி உடுத்தலாம். பிடித்ததைச் சாப்பிடலாம்.
“தம்பி சாப்பிட உக்காந்தப்புறம் தோசை ஊத்து… ஆறினா சாப்பிட மாட்டான்” அரக்கப் பறக்க சமையலறைக்குள் ஓடுவார் அம்மா. குடிக்கக் தண்ணீர்கூட அவன் கையில் எடுத்துக் கொடுக்க வேண்டும். சாப்பிட்ட தட்டிலேயே அவன் கையைக் கழுவிக் கொள்ளலாம். “இந்தாடி… அவன் தட்டையும் சேர்த்துக் கழுவு. அதுக்கு முன்னாடி அவனுக்கு கை துடைக்க துண்டெடுத்துட்டு வா…”
சம்யுக்தா கணினி அறிவியல் படித்து முடித்தாள். பெண்கள் வேலைக்கெல்லாம் போகக் கூடாது என்ற சிந்தனை கொண்டவர் அவளின் தந்தை. கல்லூரி விழாவில் கலந்து கொள்ள வந்த ஒரு பெண்ணியப் பேச்சாளர், “பெண்கள் தன்னம்பிக்கையோடு துணிச்சலாக இருக்க வேண்டும். பொருளாதார சுதந்திரம் கைக்கொள்ள வேண்டும். மனதில் உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். சுயமரியாதையை எங்கேயும் விட்டுக் கொடுக்கக் கூடாது. கட்டாயம் வேலைக்குச் செல்ல வேண்டும்.. அல்லது சுயதொழில் தொடங்க வேண்டும்” என்றெல்லாம் அழகாகப் பேசியிருந்தது அவளது மூளைக்குள் ஆணியடித்ததுபோலப் பதிந்து போயிருந்தது. அப்போதே வேலைக்குப் போக வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள்.
கல்லூரியில் இறுதிப் பருவப் பாடமொன்றுக்கு வகுப்பெடுக்க ஞானசேகரன் சார் வந்தார். அவரது வகுப்புகள் எப்போது வருமென்று எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். ஏனென்றால் அவர் பாடத்தையும் தாண்டி பொது விஷயங்களை சிரிக்கச் சிரிக்க சொல்லுவார். நகைச்சுவையாகப் பேசி சிரிக்க வைப்பார். எல்லோரும் அவருடைய வகுப்புகளை ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். அவளுக்கு சாரை ரொம்பப் பிடிக்கும். அவருடைய பேச்சு எல்லோரையும் ஈர்க்கும்.
அவள் படித்து முடிக்கும் போது அப்பாவிடம் வேலைக்கு செல்ல அனுமதி கேட்டாள். அவர் மறுக்கவே, சாப்பிடாமல் இரண்டு நாட்கள் அடம்பிடித்து எப்படியோ சம்மதம் வாங்கி விட்டாள். ஆயிரம் நிபந்தனைகளுடன் தான் அப்பா அனுமதித்தார். “இதோ பாரு… வெளியே போனா ஒழுங்கா இருக்கணும். குனிஞ்ச தலை நிமிராம போய்ட்டு வரணும். தேவையில்லாத நட்புகள் எல்லாம் இருக்கக் கூடாது. நீ சம்பாதிச்சு இங்க ஒண்ணும் நிறையப் போறதில்லை. இன்னொரு வீட்டுக்குப் போற பொண்ணு. அதை மனசுல வெச்சு நடந்துக்கோ… எந்தப் பிரச்னையையும் இழுத்துட்டு வந்திராத. இல்லேன்னா…” கர்ஜித்தார்.
ஞானசேகரன் சார் அவருடைய நண்பரின் அலுவலகத்தில் வேலை வாங்கித் தந்தார். அவள் வீட்டிலிருந்து காலை எட்டுமணி பேருந்துக்கு ஓடுவாள். ஒன்றரை மணி நேரப் பயணம். அலுவலகத்துக்குள் நுழைந்தால் பணிகள் வரிசை கட்டிக் காத்திருக்கும். இரண்டு மாதங்கள் வேகமாக ஓடின.
மூன்றாவது மாதம் பிறந்ததும் பிரச்னை முளைத்தது. புதிதாக வந்த மேலாளர் தேவையின்றிப் பேசுவதாகத் தோன்றியது. அவள் புடவை கட்டும் நேர்த்தியைப் பாராட்டுவதும், சுருள் முடியை ரசிப்பதும் அவளுக்கு எரிச்சல் மூட்டியது. அனைத்துக்கும் உச்சமாக நேற்று நடந்தது அவளுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது. ஒரு பைலை எடுத்துக் கொண்டு அவரது அறைக்குள் நுழைந்தவளின் கைகளைப் பற்றிக் கொண்டு, “ரெண்டு நாள் வெளியூர் போறேன். நீ விருப்பப்பட்டா கூட வரலாமா..?” என்று அவன் கேட்கவும், ஆடிப் போனாள். “இஷ்டம் இல்லேன்னா விடு. ஆனா இதை யார்கிட்டயாவது சொன்னே…” அவன் குரலைக் கடுமையாக்கிக் கொண்டான். “ஆபீஸ்ல உன் பேரை ரிப்பேர் பண்ணிருவேன்…” சிரித்தான். அவள் அவனது கைகளை உதறிவிட்டு தனது இருக்கைக்கு ஓடி வந்து அமர்ந்து கொண்டாள். பதட்டத்தில் மூச்சு வாங்கியது. தண்ணீர் பாட்டிலைத் திறந்து மேலெல்லாம் நீர் வழிய அருந்தினாள். அப்பாவின் முகம் நினைவுக்கு வந்ததும் வியர்த்தது.
ஒருமணி நேரம் கழித்து ராஜினாமா கடிதத்தை எழுதி எம்.டி. அறைக்கு எடுத்துச் சென்றாள். காரணம் கேட்டவரிடம் தனிப்பட்ட காரணம் என்றாள். “அடுத்த ஆளை வேலைக்கு எடுக்குற வரைக்காவது வாம்மா…” என்றார். அவள் மறுக்கவே, கடுப்பான அவர் அவளது சான்றிதழ்களை உடனடியாக ஒப்படைக்க இயலாது என்றார். அவள் கைப்பையை எடுத்துக் கொண்டு விடுவிடுவென்று வெளியே வந்தாள்.
வெயில் சுட்டெரித்தது. மணியைப் பார்த்தாள். மதியம் ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. வீட்டுக்குப் போக முடியாது. நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். உடனடியாக அடுத்த வேலை தேட வேண்டும். இல்லாவிட்டால் அப்பா வீட்டுக்குள் முடக்கி விடுவார். பக்கத்தில் ஒரு சிறிய பிள்ளையார் கோவில் பூட்டி இருந்தது. பக்கத்தில் அரச மரத்தின் நிழல் அடர்த்தியாக இருந்தது. அங்கே போய் அமர்ந்தாள். என்ன செய்வதென்றே தெரியாத நேரத்தில் சட்டென்று ஞானசேகரன் சார் நினைவுக்கு வந்தார். அவரைக் கைபேசியில் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னாள்.
“அப்படியா..? சரி… நான் அவர் கிட்ட பேசி நாளைக்கு வாங்கித் தரேன். நாளைக்கு பத்து மணிக்கு போன் பண்ணும்மா…”
“சார் அவர்கிட்ட உண்மையான காரணத்தைச் சொல்லிறாதீங்க…”
அவர் ஒரு சில நிமிடங்கள் யோசித்துவிட்டு, “சரிம்மா..” என்றார். அவள் தற்காலிக நிம்மதியுடன் கைபேசியை அணைத்தாள். சிறிது நேரம் ஏதேதோ குருட்டு யோசனைகள். ‘சும்மாவே அப்பா வெளியே விட மாட்டாரு. இப்ப வேலையை விட்ட காரணத்தை எப்படி சொல்றது..? என்ன பிரச்னையாலன்னு கேட்டா என்ன சொல்றது? பொய் சொல்லி நாளைக்கு வீட்டுக்குத் தெரிஞ்சா என்ன பண்றது..?’ மாம்பழ வண்டாய் கேள்விகள் மூளையைக் குடைந்தன.
தெருவைப் பார்த்தாள். நிறையப் பெண்கள் போய் வந்து கொண்டிருந்தார்கள். ‘இவங்களுக்கு எல்லாம் இந்த மாதிரி பிரச்னை வந்திருக்குமா? வீட்ல சொல்லியிருப்பாங்களா? அவங்க என்ன ரியாக்ட் பண்ணியிருப்பாங்க? திரும்ப வேலைக்கு அனுப்பியிருப்பாங்களா..?’ மறுபடியும் மாம்பழ வண்டு ரீங்கரித்தது. தலை வலித்தது. பக்கத்தில் இருந்த டீக்கடைக்குப் போய் சூடாக ஒரு டீ வாங்கிக் குடித்தாள். கொஞ்சம் இதமாக இருந்தது. அங்கிருந்த ஒன்றிரண்டு ஆண்கள் அவளையே உற்றுப் பார்க்க, எரிச்சலாக வந்தது. காசு கொடுத்து விட்டு பேருந்தைப் பிடித்து வீட்டுக்கு வந்தாள். கேள்விக்குறியாகப் பார்த்த அம்மாவிடம், “தலைவலிம்மா… அதான் சீக்கிரம் வந்துட்டேன்” என்றுதான் சொல்ல முடிந்தது.
***
மறுநாள். காலையில் வழக்கம் போல அலுவலகம் கிளம்பி பஸ் ஸ்டாப் வந்தாள். கைபேசியை எடுத்து ஞானசேகரன் சார் எண்ணை அழுத்தினாள்.
“சார்… குட்மார்னிங்…” மேற்கொண்டு என்ன கேட்பதென்று தெரியவில்லை.
“சம்யுக்தா… உன்னோட சர்ட்டிபிகேட்ஸை நேத்து என் ப்ரெண்டு கிட்ட பேசி வாங்கிட்டேன். அவர் கிட்ட நீ என்ன ரீஸன்னு ஏன் சொல்லலை..?” ஞானசேகரன் கேட்டார்.
“அந்த மேனேஜர் பேரைக் கெடுத்துடுவேன்னு மிரட்டினான், சார். எங்கப்பாவுக்கு தெரிஞ்சா என்னைக் கொன்னே போட்டுருவாரு.. அதான் யார்கிட்டயும் சொல்லலை. நீங்க அவர்கிட்ட என்ன சொன்னீங்க சார்..?” அவளுக்கு கழிவிரக்கத்தில் தொண்டை அடைத்தது.
“சரிம்மா… ஃப்ரீயா இரு. என் கிட்ட என்ன காரணம்னு கேட்டாரு. ஏதோ பர்ஸனல் ரீஸன்னு சொல்லி சமாளிச்சிட்டேன். கவலைப் படாதே…”
அவள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். “சார்… என் சர்ட்டிபிகேட்ஸை காலேஜ்ல வந்து வாங்கிக்கட்டுமா..?”
“நான் இன்னிக்கு லீவு…” ஞானசேகரன் மறுமுனையில் இருமினார். “உடம்பு சரியில்லை. நீ ஒன்னு பண்ணு. என் வீட்டுக்கு வந்து வாங்கிட்டுப் போயிரு…”
“சார்..” அவள் தயங்கினாள்.
“எனக்கு ரொம்ப உடம்புக்கு முடியலைம்மா… அதான் லீவ் போட்டுட்டேன். வந்து வாங்கிக்க… வீட்டோட லொக்கேஷனை அனுப்பறேன். வந்துரு…” அவளது மறுமொழிக்குக் காத்திராமல் கைபேசி துண்டிக்கப்பட்டது.
புலனத்தில் ஞானசேகரன் சார் வீட்டு இருப்பிடம் வந்தது. அங்கிருந்து முக்கால் மணி நேரம் தான். சம்யுக்தா ஒரு நிமிடம் யோசித்தாள். சான்றிதழ்களை வாங்கி வந்து உடனடியாக வேறு வேலை தேட முடிவு செய்தாள். அதுவும் அப்பாவுக்குத் தெரியாமல்…
பேருந்தில் ஏறி அமர்ந்தாள். குழப்பமான மனநிலையில் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தாள். நீண்ட நேரம் பயணிப்பது போல் தோன்றியது. ஒருவழியாக இறங்க வேண்டிய இடம் வந்தது. கைபேசியை சுடிதார் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டு பேருந்திலிருந்து இறங்கினாள்.
ஞானசேகரன் சார் வீட்டு வெளி வாயில் கதவு திறந்திருந்தது. உள்ளே நுழைந்தாள். வாசலில் ரோஜாச் செடிகள் ஆரஞ்சும், மஞ்சளுமாகப் பூத்திருந்தன. படியேறி அழைப்பு மணியை அழுத்தினாள்.
காத்திருந்தது போல் கதவு திறக்கப்பட்டது. ஞானசேகரன் இருமியவாறு கதவைத் திறந்தார். கைலியும், பனியனும் மட்டும் அணிந்திருந்தார். அவளுக்கு சங்கடமாக இருந்தது.
“சார்… இந்தாங்க!” வழியில் வாங்கி வந்த ரொட்டி பாக்கெட்டையும், பழங்களையும் நீட்டினாள். மறுக்காமல் வாங்கிக் கொண்டார்.
“உள்ளே வாடா…” அழைத்தார்.
“இல்லை சார். நான் கிளம்பணும்… சர்ட்டிபிகேட்ஸை குடுங்க சார்…” தயங்கினாள்.
“என்ன நீ..? கடன்காரன் மாதிரி வாசலோட கிளம்புற..? உள்ளே வந்து ஒரு காஃபி சாப்டுட்டு சர்ட்டிபிகேட்ஸை எடுத்துட்டுக் கிளம்பு…” சிரித்தவாறே சொன்னதை மறுக்கத் துணிவின்றி உள்ளே நுழைந்தாள். வீட்டில் வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அவள் சோஃபா நுனியில் பட்டும் படாமல் அமர்ந்தாள். ஏனோ அவஸ்தையாக இருந்தது.
“மேடம் இல்லைங்களா சார்..?” ஏனோ நாக்கு வறண்டது.
“அவங்க ஊருக்குப் போயிருக்காங்கடா… ரெண்டு நாளாகும் வர…” ஞானசேகரன் கதவைச் சாத்தினார்.
“சார்.. கதவு திறந்திருக்கட்டுமே..” என்றாள் திணறலாக.
“இல்லைடா… எதிர் வீட்டுல ஒரு பாட்டி இருக்கு. அது தேவையில்லாம உங்கக்கா கிட்ட எதாவது சொல்லும். எதுக்கு வம்பு..?” சிரித்தார். அவளுக்கு சிரிப்பு வரவில்லை.
“சார் சர்ட்டிபிகேட்ஸ்..?” மெல்ல இழுத்தாள்.
“என்ன சாப்பிடுறே..? டீயா காஃபியா..?”
“ஒண்ணும் வேணாம் சார். நான் கிளம்பறேன். சர்ட்டிபிகேட்ஸை குடுங்க…”
“அடடா… ஏண்டா பறக்கிறே..? மொத தடவையா வீட்டுக்கு வந்திருக்கே… எனக்கு காஃபி போடத் தெரியாது. ரெண்டு பேருக்கும் காஃபி போட்டுக் கொண்டு வா…” ஞானசேகரன் சமையலறையைக் காட்டி விட்டு சோஃபாவில் சாய்ந்து கொண்டார்.
சம்யுக்தாவுக்கு முள்ளில் இருப்பது போல அவஸ்தையாக இருந்தது. வேறுவழியின்றி எழுந்து சமையலறைக்குள் புகுந்தாள். காஃபி பொடி, சர்க்கரை எங்கிருக்கிறதென்று தேடி மேலே அலமாரியில் இருப்பதை எடுக்கக் கை உயர்த்தியவளைப் பின்னாலிருந்து இறுக்கமாக அணைத்தன இரண்டு கரங்கள்.
திடுக்கிட்டுத் திரும்பியவளை இன்னும் மூர்க்கமாக அணைத்து முத்தமிட முயன்றான் ஞானசேகரன். அதிர்ச்சியில் அவனைத் தள்ளி விட முயன்றாள் சம்யுக்தா. கைகள் இரண்டும் வலுவிழந்தது போல் இருந்தது.
“சா…சா…சார்… என்ன சார் இது..? ப்ளீஸ் விடுங்க என்னை…” இடுப்பைச் சுற்றியிருந்த அவனது கைகளை விலக்க முயன்றாள். அவன் மலைப்பாம்பு இரையை வளைப்பது போல் அவளைச் சுற்றி வளைத்திருந்தான். அவளால் நகரக் கூட முடியவில்லை.
“யுக்தா.. காலேஜ்ல எத்தனை பொண்ணுங்களைப் பார்த்தாலும்… உன் மேல எனக்கு ஒரு ஸ்பெஷல் இதுடி…” இளித்தான்.
“நோ சார்.. ப்ளீஸ் விட்ருங்க சார்.. வேண்டாம் சார்..” அழுகை முந்திக் கொண்டு வந்தது.
“உன்னைத் தனியா மீட் பண்ண நிறையத் தடவை ட்ரை பண்ணேன். ஆனா நீ கூட எவளையாவது கூட்டிட்டு தான் வருவே. அதான் லட்டு மாதிரி சந்தர்ப்பம் கிடைச்சதும் லீவ் போட்டுட்டேன். நீ சந்தோஷமா ஒத்துழைச்சேன்னா… வேற நல்ல கம்பெனியில வேலை வாங்கித் தரேன். என்ன சொல்றே..?” பேசிக் கொண்டே அவளை கீழே தள்ள முனைந்தான்.
சம்யுக்தாவுக்கு எல்லாமே ஒருகணம் சுழன்றது. சட்டென்று, “சார்… ப்ளீஸ்… அவசரப்படாதீங்க. நான் ஃபர்ஸ்ட் ரெஸ்ட் ரூம் போகணும்…” என்றாள்.
அவன் பிடியைத் தளர்த்தினான். ஹாலுக்குப் பக்கத்தில் இருந்த பாத்ரூமைக் காட்டினான். அவள் ஓடி விடக் கூடாததென்று வாசற்கதவுக்கருகில் சென்று நின்று கொண்டான். சம்யுக்தா பாத்ரூம் கதவைத் திறந்து உள்ளே போய் சட்டென்று தாழிட்டுக் கொண்டாள். பிளாஸ்டிக் வாளியில் தண்ணீரைத் திறந்து விட்டாள். சுடிதார் பாக்கெட்டுக்குள் இருந்த மொபைலை எடுத்து தோழி வானதிக்கு அழைப்பு விடுத்தாள். அவசர அவசரமாக நிலைமையைச் சொல்லி விட்டு, அவன் வீடு இருக்குமிடத்தையும் புலனத்தில் அனுப்பி வைத்தாள்.
அவன் வெளியே நின்று கதவைத் தட்டினான். அவள் திறக்கவேயில்லை.
“ஏய்… கதவைத் திறடி… நீ வெளியே தப்பிக்கவே முடியாது!”
அவன் உறுமினான். அவள் அமைதியாக இருந்தாள்.
வானதி உடனடியாக அவன் வீடு இருந்த பகுதி காவல் நிலையத்துக்கு கைபேசியில் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லிவிட்டு, இருப்பிடத்தைப் புலனத்தில் அனுப்பி வைத்தாள்.
பதினைந்து நிமிடங்களில் காவல் துறை ஜீப் வீட்டு வாசலில் வந்து நின்றது. உதவி ஆய்வாளர் வித்யாதேவி இறங்கி வந்து அழைப்பு மணியை அழுத்தினார்.
ஞானசேகரன் திடுக்கிட்டான். வேறுவழியின்றி கதவைத் திறந்தான். அவனைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தார் வித்யாதேவி.
“எங்கடா அந்தப் பொண்ணு..?” அதட்டினார்.
ஞானசேகரன் எச்சில் விழுங்கினான். “மேடம்… எதுக்காக வீட்டுக்குள்ள புகுந்து என்னை மிரட்டுறீங்க..? எந்தப் பொண்ணு..? என் மிஸஸ் தான் குளிச்சிட்டு இருக்காங்க…” குரலை உயர்த்தினான்.
பளாரென்று அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார் வித்யாதேவி.
பக்கத்தில் இருந்த கழிவறைக்குள் அரவம் கேட்டதும் அங்கே போய் கதவைத் தட்டினார்.
“ம்மா.. நாங்க போலீஸ் வந்திருக்கோம். வெளியே வாம்மா… உன் ஃப்ரெண்டு வானதி இன்ஃபார்ம் பண்ணியிருந்தாங்க. தைரியமா வெளியே வா…” என்றதும் கதவு திறந்தது. உள்ளிருந்து பயத்துடன் வெளியே வந்தாள் சம்யுக்தா.
ஞானசேகரனை மீண்டும் கன்னத்தில் பளாரென்று அறைந்தார் வித்யாதேவி. அவன் பனியனைக் கொத்தாகப் பிடித்து இழுத்தார். அவன் தடுமாறினான்.
“ஏண்டா டேய்.. பரதேசி நாயே.. அறிவில்ல உனக்கு..? படிச்சவன் தான நீ? உனக்கெல்லாம் பொண்டாட்டி, குழந்தை, குடும்பம்… ச்சே…” ஞானசேகரன் தளர்ந்து போய் தலைகுனிந்திருந்தான்.
சம்யுக்தா அவனிடம் வந்தாள். “சார்…” அவளை ஏறிட்டுப் பார்க்கத் துணிவின்றி அவன் தலை கவிழ்ந்தவாறே நின்றிருந்தான்.
“உங்க பேச்சை நம்பித்தானே சார் இங்க வந்தேன்… ஏன் சார் இப்படி நடந்துகிட்டீங்க..?” மேற்கொண்டு பேசப் பிடிக்காமல் நிறுத்தினாள்.
“நீ ஸ்டேஷன் வரணும்மா… அப்பத்தான் இவன் மேல எஃப்.ஐ.ஆர் போட முடியும். தண்டனை வாங்கித் தர முடியும். பயப்படாம வா… நாங்க இருக்கோம்…” வித்யா தேவியின் பேச்சைக் கேட்டதும் லேசாகத் துணிவு பிறந்தது அவளுக்கு.
“உங்க அப்பா நம்பர் சொல்லு… அவர்கிட்ட விஷயத்தை சொல்லணும்…” துணிச்சல் வந்த வேகத்திலேயே பின்வாங்கியது.
“அது… அது… வந்து… மேடம்…” என்றவள் தந்தையைப் பற்றிச் சொன்னாள்.
“என்னம்மா இது..? இந்தக் காலகட்டத்தில இப்படி இருந்தா எப்பிடி..? அவரை வரச் சொல்லு. பாத்துக்கலாம்…” என்றவாறே அவர்களைக் காவல் நிலையம் அழைத்து வந்தார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் சம்யுக்தாவின் அப்பா அங்கே கடும் கோபத்துடன் வந்தார்.
“இதுக்குத் தான் பொம்பளைங்க வேலைக்குப் போகக் கூடாது… வெளியே தெருவுல போகக் கூடாதுன்னு தலைப்பாடா அடிச்சிகிட்டேன். கேட்டியா..?” என்றவரின் பேச்சில் குறுக்கிட்டார் வித்யாதேவி.
“என்ன சார் உளர்றீங்க..? பொண்ணுங்க வேலைக்குப் போகாம வீட்ல உக்காந்துட்டா… எல்லாம் சரியாயிடுமா..? பொத்தி பொத்தி வீட்டுக்குள்ளேயே வெச்சிருந்தா நாளைக்கு வெளி உலகத்துல வாழ பொண்ணுங்க எப்படி பழகுவாங்க..?” என்றார் நிதானமாக.
“எங்க குடும்பம் ரொம்ப பண்பாடானது மேடம்…” அப்பா சொல்லி வாய் மூடவில்லை.
“அப்போ வேலைக்குப் போற பொண்ணுங்க..? ப்ச்… அதை விடுங்க… உங்ககிட்ட எதையும் பகிர்ந்துக்கலாம்ங்குற நம்பிக்கையை நீங்களோ, உங்க மனைவியோ உங்க பொண்ணுக்கு குடுத்திருக்கிங்களா..?” அப்பா விழித்தார்.
“பின்ன என்ன சார்..? தனக்கு வேலை செய்யுற இடத்துலே ஒரு பிரச்னைன்னு உங்க கிட்ட சொல்லக்கூட உங்க பொண்ணு பயப்படுறா. அதை சரி பண்ணுங்க முதல்ல… எப்பவும் பாதிக்கப்பட்ட பொண்ணுகளையே திட்டுறது…” வித்யா தேவி மேசை மீது வைத்திருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து தண்ணீரை அருந்தினார்.
அப்பா அமைதியாக அமர்ந்திருந்தார்.
“உங்க பொண்ணு ரொம்ப புத்திசாலி.. இக்கட்டான சூழ்நிலையில் தன்னைக் காப்பாத்திக்கிறது எப்படின்னு அவளுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கு. போங்க சார். பொண்ணைக் கூட்டிட்டு போய் மனசு விட்டுப் பேசுங்க… எல்லாம் சரியாய்டும்… இவனை நாங்க பாத்துக்கிறோம். தேவைப்படும் போது போன் பண்றேன்” வித்யா தேவி மேசை மீது இருந்த சான்றிதழ்களை எடுத்து சம்யுக்தாவின் கையில் கொடுத்தார்.
அப்பாவும், அவளும் வெளியே வந்தார்கள். வானம் பளிச்சென்று இருந்தது. அவள் அப்பாவை ஏறிட்டாள்.
“அப்பா… நடந்தது என்னன்னா…” அவர் அவள் கைகளை ஆதுரமாய்ப் பற்றினார்.
“நான் உன்னை நம்பறேன்மா… நீ எந்த விளக்கமும் சொல்ல வேண்டாம். பேப்பர்ல வான்டெட் காலம் பார்த்து வேற வேலைக்கு அப்ளை பண்ணு…” அவள் அப்பாவின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
படைப்பாளர்

கனலி என்கிற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.