இல்லற ஜோதி என்பது 1954ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இது ஜி. ஆர். ராவ் இயக்கி மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தது. கவியரசு கண்ணதாசன் கதை வசனம் எழுதியிருக்கிறார்.
ஆண் நடிகர்கள்
மனோகராக சிவாஜி கணேசன்
நெட்டிலிங்கமாக தங்கவேலு
பேராசிரியராக கே.கே.பெருமாள்
சவுதனாக திருப்பதிசாமி
துறவியாக எம்.என்.கிருஷ்ணன்
மோகனாக அசோகன்
அமீனாவாக ராமராவ்
யுனானி மருத்துவராக சேதுபதி
கதை பார்ப்பவராக கொட்டாம்புளி ஜெயராமன்
சௌந்தர் ராஜாமான் சிங்காக
பெண் நடிகர்கள்
சித்ரலேகாவாக பத்மினி
காவேரியாக ஸ்ரீரஞ்சனி
ஆனந்தியாக சி.கே.சரஸ்வதி
லக்ஷ்மியாக கமலம்
நடனம்
சந்திரா -காமா
மனோகர் (சிவாஜி கணேசன்) வேலை எதற்கும் செல்லாமல் நாடகம், கவிதை என எழுதிக் கொண்டு இருக்கும் வாலிபன். ‘திருமணம் செய்து வைத்தால் சரியாகி விடுவார்’ என நினைத்து, அவருக்குக் காவேரியைத் (ஸ்ரீரஞ்சனி) திருமணம் செய்து வைக்கிறார்கள். எந்த மாற்றமும் இல்லை. அதனால், அவருக்கு உளநிலைப் பிறழ்வு ஏற்பட்டு விட்டது என மருத்துவம் பார்க்கிறார்கள்.
இந்த காலகட்டத்தில், இவர் எழுதிய கவிதையின் ஒரு பகுதி, தற்செயலாக ஒரு பேராசிரியர் குடும்பத்தின் கையில் கிடைக்கிறது. அவரின் உதவியால், மனோகரின் நூல்கள் அச்சேறுகின்றன. பணமும் புகழும் பெறும் பெரிய எழுத்தாளராக ஆகிவிடுகிறார். பேராசிரியரின் மகள் சித்ராவுடன் (பத்மினி) கலை, இலக்கியம் எனப் பழகத் தொடங்கி, பின் நிறைய நேரம் அவருடன் செலவிடுகிறார். இருவர் மனதிலும் சபலம் இருக்கத் தான் செய்கிறது. சித்ராவில் முறைப்பையன் மோகனுக்குச் சித்ரா மீது மிகவும் விருப்பம். அதனால், சித்ராவிடம் ‘நீ செய்வது சரியில்லை’ என சொல்லிப் பார்க்கிறார். அவர் கேட்பதாக இல்லை. அதனால், காவேரியிடம் வந்து சொல்கிறார்.
ஏற்கனவே இது தொடர்பாக மனக்குழப்பத்தில் இருக்கும் காவேரி, கணவரிடம் சொல்லிப் பார்க்கிறார். “நானும் கவிதை தொடர்பாக கற்றுக் கொள்கிறேன். சொல்லிக் கொடுங்கள்” என்றெல்லாம் கெஞ்சுகிறார். (சிந்து பைரவி திரைப்படம் நினைவிற்கு வருகிறது). மனோகரன் திருந்துவதாக இல்லை. அதனால் சித்ராவிடம் போய்க் கெஞ்சுகிறார். இறுதியில், அவர் இல்லை என்றால், ‘அவர் கட்டிய தாலி எனக்கு எதற்கு?’ என அதைக் கழற்றவும் துணிகிறார். சித்ரா உள்ளம்மாறித் தான் இனிமேல் மனோகரைச் சந்திக்கப் போவதில்லை என உறுதி கூறுகிறார்.
மனோகர் வரும்போதெல்லாம் சித்ரா சந்திக்க மறுக்கிறார். சித்ராவின் திருமண வேலைகள் நடக்கின்றன. உளக்குழப்பத்தில் சித்ராவின் வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது, மனோகர், மோகனின் வாகனத்தில் அடிபடுகிறார். மருத்துவமனையில் ‘சித்ரா, சித்ரா’ எனப் புலம்புகிறார். இப்போது காவேரி சித்ராவிடம் வந்து, மனோகரைப் பார்க்க வருமாறு கெஞ்சுகிறார். காவேரியுடனான நீண்ட விவாதத்திற்குப் பின் சித்ரா திருமணத்தை நிறுத்துமாறு தனது தந்தையிடம் சொல்லிவிட்டுச் செல்கிறார்.

இதுவரை சித்ராவின் அப்பா மனோகர், சித்ரா உறவைக் கலை இலக்கியம் தொடர்பானது தான் என நினைத்து இருந்திருக்கிறார். அதனால், அவர் கோபத்தில் செல்கிறார். ‘இல்லற ஜோதி’யான காவேரி, தனது கணவனுக்காக, சித்ராவைப் பெண் கேட்டு அவரிடம் மன்றாடுகிறார். அதை, உள்ளே இருந்து கேட்டுக்கொண்டிருந்த மனோகர் திருந்தி, காவிரி தான் தனது உறவு என முடிவு செய்கிறார். உடனே சித்ராவைச் சகோதரி என்கிறார். மோகனுடன் அவரை இணைத்து வைக்கிறார்.
கதை வசனம் பாடல்கள் என அனைத்தும் கவியரசின் கைவண்ணம் தான். மனோகரன் சொல்லும் கவிதைகள் கவித்துவமாக இருக்கின்றன. நாடகம் எழுதும் கதாபாத்திரத்திற்கு ‘அனார்கலி சலீம்’ எனப் பழைய நாடகமே வருகிறது. புது நாடகம் என அதாவது அவர் எழுதியதாக எதுவும் திரைப்படத்தில் இல்லை. அதனால் அவரின் எழுத்தாளர் என்ற பாத்திரத்தின் அழுத்தமும் குறைகிறது.
“சொல்லித் தெரிவதோ சுந்தரக்கலைகள் சொல்லாமல் தெரிய ஜோதிடன் அல்லவே நான். ஏன் ஜோதிடனுக்கும் சொல்லாமல் தெரிவதில்லை” போன்ற பல உரையாடல்கள், கவியரசு கடவுள் நம்பிக்கை அற்றவராக இருந்த காலத்தில் எழுதப்பட்டவை என்பதை உணர்த்துகின்றன.
‘காண்பதெல்லாம்’ பாடலில் இரு வாத்தியங்கள் சிவாஜி வாசிப்பது போல காட்சியமைத்து இருப்பது புதுமை தான்.
அனார்கலி நாடகம் மட்டும், பாடல்கள் வெளியிடப்படுவது போல – இசைத்தட்டு வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
களங்கமில்லா காதலிலே
காண்போம் இயற்கையெல்லாம்
கல்யாண வைபோக நாளே , களங்கமில்லா காதலிலே காண்போம் இயற்கை எல்லாம், உனக்கும் எனக்கும் உறவு காட்டி
போன்ற பாடல்கள் உள்ளன. “உனக்கும் எனக்கும் உறவு காட்டி” பாடல் கொஞ்சம் பிரபலமான பாடல்.
இந்தத் தளத்தில் இத்திரைப்படத்தின் பாட்டுப்புத்தகம் உள்ளது.
ஜி. ராமநாதன் இசையமைத்திருக்கிறார். ஏ. எம். ராஜா, ஜிக்கி, பி. லீலா. சுவர்ணலதா, எஸ். ஜே. காந்தா ஆகியோர் பின்னணி பாடியுள்ளனர்.
முதலிரவில், ‘ஒரு எழுத்தாளனை மணந்த நீ பாக்கியசாலி’ எனத் தன்னைத் தானே பெருமையாகச் சொல்லிக் கொள்வதாகட்டும், இறுதியில் தடாலடியாகக் காதலித்தப் பெண்ணை சகோதரி என்பதற்காகட்டும், ‘என்ன மாதிரியான நாயகன்?’ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. இளம் வயது தங்கவேலு நாயகனின் அப்பாவாக மிகவும் நிறைவாகச் செய்து இருக்கிறார். திரைப்படத்தில் மனதில் நிற்பவர் என்றால் அவர் தான்.
அடுத்தவர் கணவனை விரும்பும் நாயகி, கணவனுக்காக அனைத்தையும் துறக்க நினைக்கும் நாயகனின் மனைவி, திருமணம் செய்து வைத்தால் திருந்துவான் என நினைக்கும் நாயகனின் அம்மா என எந்தப் பெண் பாத்திரமும் இப்படத்தில் வலுவானதாகவே இல்லை.
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.