கமலா இந்திரஜித் (27/12/1946 – 28/06/2015)
தம் சிறுகதைகளின் மூலம் தஞ்சை மாவட்டத்தில் வெண்ணாறு பாயும் இடங்களைப் படம் பிடித்துக் காட்டியவர் எழுத்தாளர் எஸ். கமலா இந்திரஜித்.
கமலா இந்திரஜித் பிறந்த ஊர் தஞ்சாவூர். இவருடைய தந்தை சோமசுந்தரம். தாய் திரிபுரசுந்தரி. இவர் ஆங்கிலத்தில் முதுகலை படித்தவர். ஆசிரியர் பயிற்சி பெற்று, முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இவர் தம் திருமணத்தின்போது பதினொன்றாம் வகுப்பு முடித்துவிட்டு இளநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றிருந்தார். இவர் திருவாரூர் மாவட்டம் புள்ளமங்கலம் என்ற கிராமத்திற்குத் திருமணம் ஆகி வந்தார். கணவர் இந்திரஜித் பட்டப் படிப்பு படித்தவர் என்றாலும், தங்கள் குடும்பத் தொழிலான மளிகைக் கடை வைத்து நடத்தி வந்தார். தம்பதியருக்கு ஒரே மகன். பெயர் வில்சன்.
குழந்தை பிறந்த பின், ஆசிரியர் பணியுடன், படிப்பையும் தொடர்ந்தார். தொலை தூரக் கல்வியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். பின்னர் சிதம்பரம், திருவாரூர் அரசு பள்ளிகளில் பணியாற்றி, இறுதியாக, திருநெய்பேர் எங்க ஊரில், உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். கமலா இந்திரஜித், தன் பணி ஓய்வுக்குப் பின்னரே எழுதத் தொடங்கினார்.
அவர் மொத்தம் எழுதிய காலம் 15 ஆண்டுகளே. இரண்டாயிரத்துக்குப் பின் எழுதத் தொடங்கியவர், சிறுகதைகள் மட்டுமே எழுதியுள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள அவர், தம் முதல் கதையான ‘வாசுகி’ என்பதை, தினமணி கதிர் இதழில் வெளியிட்டுள்ளார். பின்பு தினமலர் டி வி ஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டு, பலமுறை பரிசுகளைப் பெற்றுள்ளார். மங்கையர் மலர் இதழில் ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டியில் ‘மூடுபல்லக்கு’ என்ற சிறுகதைக்காக முதல் பரிசினைப் பெற்றார். பின்பு இதே போட்டியில் கலந்து கொண்டு ‘விஷக்கொட்டு’ என்ற சிறுகதைக்காக மூன்றாவது பரிசினைப் பெற்றுள்ளார். தினமணி- நெய்வேலி புத்தகக் கண்காட்சி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘யுத்த காண்டம்’ என்ற இவரது கதை மூன்றாம் பரிசினைப் பெற்றது.
கலைமகளின் கா. ஸ்ரீ. ஸ்ரீ நூற்றாண்டு சிறுகதைப் போட்டியில் ‘ஆழ்கடல்’ என்ற இவரது கதை முதல் பரிசாக, ரூபாய் 50,000/- பெற்றது.
இதைப் பற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் சுப்ர பாரதி மணியன், இந்தச் சிறுகதையின் ஒவ்வொரு சொல்லும் ரூபாய் 100 /- வெகுமானம் பெற்றுள்ளது என்கிறார். பல்சுவைக் காவியம் என்கிற கலை இலக்கிய சமூக மாத இதழில் ‘மழை வெள்ளம்’ என்ற இவரது சிறுகதை ரூபாய் 25,000/- பரிசினைப் பெற்றது. இவர் தம் எழுத்துக்காகப் பலமுறை பரிசுகளை வென்றுள்ளார்.
இவர் ‘மூடுபல்லக்கு’ என்ற பெயரில் ஒரு சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். இதனை, காவ்யா பதிப்பகம், 2013இல் வெளியிட்டுள்ளது. கமலா இந்திரஜித்தின் நடை மிக எளிமையானது. படிப்பவர்களுக்கு இதம் தரக்கூடிய சரளமான தஞ்சை மாவட்டத்தின் மொழி நடை இவரது கதைகளில் காணக் கிடக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் வாழ்ந்து கெட்ட பெரிய வீட்டு வாழ்வியலை இவரது பெரும்பான்மையான கதைகள் படம்பிடித்துக் காட்டுகின்றன. குறிப்பாக யானை கட்டிப் போரடித்த தஞ்சை மண் இன்று நீர் இல்லாது வறண்டு காணப்படுகின்ற காட்சியையும், ஒரு காலத்தில் ஜமீந்தார்களும் மிட்டா மிராசுகளும் வாழ்ந்த தஞ்சை மண், கலையை வளர்த்த தஞ்சை மண், நாகரீகத்தின் தொட்டிலாகத் திகழ்ந்த தஞ்சை மண் இன்று சிதைந்து சிதலமடைந்து அதன் எச்சமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கும் அவல நிலையினையும் இவரது கதைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
இவரது ‘மூடு பல்லக்கு’ என்கிற சிறுகதையும், ‘ராஜாப் பல்லி’ என்ற சிறுகதையும் இத்தகைய அவலத்தைப் பேசுகின்றன. அரண்மனை குளத்தில் குளித்து எழுந்த தன் மகள் உடை மாற்றும் பொழுது, வேலைக்கார பெண்ணின் மகனான சிறுவன் ஒருவன் அங்கு இருக்க, அவன் பார்த்து விடக்கூடாது என்பதற்காக அவனைத் தண்ணீரில் மூச்சு மட்டும் அளவிற்கு மூழ்கடித்துக் கொண்டிருந்தாள் அவள் தாய். காலம் மாறி, இன்று பெங்களூர் நட்சத்திர விடுதியில் நூற்றுக்கணக்கான கண்கள் விரிந்துப் பார்க்க, ஒவ்வொரு ஆடையாகக் கழற்றி எறிந்து, தன் உடல் அழகைக் காட்சிப் பொருளாகும் தஞ்சை பெண்ணின் வாழ்வியல் அவலத்தை ‘மூடு பல்லக்கு’ சிறுகதைப் பேசுகின்றது.
ஊருக்கே திருமணத்திற்கு இடம் தரும் பெரிய அரண்மனை வீடு, நாளும் பூஜையும் புனஸ்காரமும் என்று இருந்த வீடு, ஊருக்கே நீதி சொல்லும் பெரிய மனிதரின் வீடு அடுத்த தலைமுறையினரால் சீரழிந்து கிடக்கும் அவலத்தைப் பேசுகிறது ராஜாப் பல்லி சிறுகதை. தன் பெண்களின் சீரழிந்த வாழ்க்கையினையும் அவர்களுக்கு உதவும் மகனின் அதர்ம செய்கையினையும் காணவும் கேட்கவும் அது பற்றிப் பேசவும் விரும்பாத பெரிய பண்ணை, உயிருடன் இருந்தும் தன் கண்களைக் கட்டிக் கொண்டும் காதிலும் வாயிலும் துணியை அடைத்துக் கொண்டும், உயிர் இருந்தும் பிணமாக வாழும் அவலத்தை இக்கதை எடுத்துச் சொல்கிறது.
இவ்வாறு கமலா இந்திரஜித் கதைகள், சுமார் ஐம்பதாண்டுக்கும் மேலான, தஞ்சை மாவட்ட வாழ்வியலை, முரணாக முன் வைக்கும் எதார்த்த எழுத்துகளாக அமைந்துள்ளன. கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு, வாழ்வியலில் நுணுக்கங்களைத் தம் கதைகளில் தந்தவர் என்ற விதத்தில், தஞ்சை மாவட்டத்தின் நல்லதொரு எழுத்தாளராக, அவர் அடையாளம் காண தக்கவர்.
இவருடைய ‘பிராயசித்தம்’ மற்றும் ‘விஷக்கொட்டு’ என்ற கதைகள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. கர்நாடகாவில் அந்த மொழிபெயர்ப்பு முதல் பரிசினைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கமலா இந்திரஜித், ஆங்கிலத்திலும் சரளமாக எழுத வல்லவர். இவர், ஆங்கில இலக்கியம் குறித்துப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
நவீன தமிழ் இலக்கிய உலகம் கொண்டாட வேண்டிய நல்லதொரு எழுத்தாளராக இவரை அடையாளம் காண இயலும்.
படைப்பாளர்

இரா. பிரேமா
தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது வென்ற இரா.பிரேமா, தமிழ்ப் பேராசிரியர்; பெண்ணிய ஆர்வலர்; எழுத்தாளர்; ஆய்வாளர். இவர் 27 ஆண்டுகள் கல்லூரிப் பேராசிரியர் பணியிலும் நான்கு ஆண்டுகள் கல்லூரி முதல்வர் பணியிலும் 30 ஆண்டுகள் ஆய்வுப் பணியிலும் ஈடுபட்டவர். இவர் 23 நூல்களையும் 250க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் பதிப்பித்த நூல்கள் 3. இவர் எழுதிய ‘பெண்ணியம்’ என்ற நூல் 12 பதிப்புகளைக் கண்டுள்ளது. இவரது பெண்ணிய நூல்கள் தமிழகப் பல்கலைக்கழகங்களிலும் பல தன்னாட்சிக் கல்லூரிகளிலும் பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்திலும் பாடநூலாகவும் நோக்கு நூலாகவும் எடுத்தாளப்படுகின்றன. இவரின் இரண்டு நூல்களை சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது. இலக்கிய வட்டத்தில் ‘பெண்ணியம் பிரேமா’ என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.