பயணங்களில் இசை போல நமக்கு இன்னோர் அருமையான துணை என்றால் அவை புத்தகங்கள்தாம். அதிலும் எளிமையான மனிதர்களின் பயணங்களை இனிமையாக்குபவை ஜனரஞ்சகமான எழுத்துகளே. பயணங்களில் மட்டுமல்ல பல்வேறு குடும்பத்தலைவிகள் சற்று நேரம் தங்கள் குடும்ப பாரங்களை இறக்கி வைத்துவிட்டு இளைப்பாறுவதும், சரணடைவதும்கூட ஜனரஞ்சகமான எழுத்துகளிடம்தாம். முகம்கூட வெளித் தெரியாமல் தன் எளிமையான படைப்புகளின் மூலம் மட்டுமே அறிமுகமாகி, ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த படைப்பாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் வி.உஷா. பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கிருஷ்ணா டாவின்ஸியின் சகோதரி. நானூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதிய வி.உஷா, நம்மிடம் பகிர்ந்துகொண்ட அவரது வாழ்வனுபவங்கள்…

எழுதுவதற்கான சூழல் ஏற்பட்டது எப்படி? எந்த வயதில் எழுத ஆரம்பித்தீர்கள்? உங்கள் இளமைப்பருவம் எப்படி இருந்தது?

எழுத்துச் சூழல் இளம் வயதிலேயே வாய்த்துவிட்டது. அப்பா வெங்கட்ராமன் ‘சுகந்தி’ என்கிற பெயரில் குமுதம், ஆனந்த விகடனில் நிறைய எழுதி இருக்கிறார். என்னுடைய பெரியப்பா ‘கல்பனா’ என்கிற பெயரில் நிறைய கதைகள் எழுதி இருக்கிறார். சுகந்தி, கல்பனா என்கிற பெயர்கள் முந்தைய தலைமுறை வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவை. இப்படி அப்பா, பெரியப்பா, சித்தப்பா என்று சுற்றிலும் எழுத்தாளர்களாக இருந்ததாலே புத்தகங்கள், வாசிப்பு என்பது சுலபமாகக் கிடைத்தது.

17 வயதில் எழுத ஆரம்பித்தேன். இளமைப் பருவம் சென்னை மாநகரத்தில்தான். கிராமம், வயல், வரப்பு, ஏரிக்கரை, தென்னந்தோப்பு போன்ற வசீகரங்களுக்கு வாய்ப்பில்லை. பீச், மூர்மார்க்கெட், மியூசியம், சர்க்கஸ், பொருட்காட்சி, சினிமா என்று நகரத்து வாழ்க்கையும் இனிமையாகவே இருந்தது.

குடும்பம்…

கணவரும் என்னைப்போலவே வங்கிப் பணி செய்து ஓய்வு பெற்றவர். ஒரே மகன். ஒரே பேரன். எங்களுடையது அன்பான சிறிய வட்டம்.

எழுத்து எத்தனை பிடித்தமானது? அதற்காகப் போராட வேண்டி இருந்ததா? குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தார்களா?

வாசிப்பதன் இனிமையைச் சிறுவயதிலேயே உணர்ந்து கொண்டதுதான் என்னுடைய நல்வாய்ப்பாகத் தோன்றுகிறது. நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் எத்தனை உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருக்கின்றன? ஏன், எதற்காக, எப்படி என்கிற கேள்விகள் இயல்பாகவே எழ ஆரம்பித்தன. ஊழ்வினை, பிறவிப்பயன் போன்ற எதுவும் நிஜமில்லை, அனைத்துமே மனிதன் உண்டாக்கியவை என்பதும் புரிய ஆரம்பித்தது. அதுவே எழுதவும் ஆதாரமாக இருந்தது. இருக்கிறது. ஆதரவான குடும்பம்தான். 17 வயதில் நான் எழுதுவதற்கு அம்மாவின் தூண்டுகோல்தான் காரணம். மெளன ஆதரவு அப்பா. இப்போதும் துணைவர், மகன், மருமகள், பேரன் என்று எல்லாரும் அனுசரணையானவர்கள்தாம். தற்போது குழந்தைபோல என் தாய் இருக்கிறார். ஆனாலும் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றுவது சவாலாகவே இருக்கிறது. எதையும் ஒரு கை பார்த்துவிடலாம் என்கிற பிறவி ஆர்வமே வாழ்வை வழி நடத்துகிறது என நினைக்கிறேன்.

முதல் கதை வெளிவந்த போது எப்படி உணர்ந்தீர்கள்? எப்போது, எந்தப் பத்திரிகையில் வெளிவந்தது என்று ஞாபகமிருக்கிறதா?

முதல் சிறுகதை சாவியில் வந்தது. முதல் கதை பிரசுரம் என்பது வானத்தில் பறக்கும் சந்தோஷமாகத்தான் இருந்தது. கூடவே இது ஒரு பெரிய பொறுப்பு என்பதையும் உணர்ந்தேன். தமிழின் அழகும் இனிமையும் கூடுதல் மகிழ்ச்சியில் திளைக்க வைத்தன. வைத்துக்கொண்டிருக்கின்றன.

ஆதர்ச எழுத்தாளர்?

ஆதர்ச எழுத்தாளர் என்று ஒரே ஒருவரை எப்படிக் குறிப்பிட முடியும்? செ. யோகநாதன், பிரபஞ்சன், ஸ்டெல்லா புரூஸ், ராகுல சாகிருத்தியாயன், தஸ்த்யோவெஸ்கி என்றென்றும் எனக்குப் பிடித்தமான படைப்பாளர்கள்.

உங்கள் காலத்தில் எழுத்துலகில் பயணித்த சக பெண் எழுத்தாளர்கள் யார்? அவர்களுடனான நட்பு எப்படி இருந்தது?

ஷைலஜா, வித்யா சுப்ரமணியம், அனுராதா ரமணன் போன்றவர்கள் என் சமகால எழுத்தாளர்கள் எனலாம். நெருங்கிய நட்பு இல்லை. நான் வங்கிப் பணியும் செய்துகொண்டு எழுத்துலகிலும் இருந்ததால் போதுமான நேரம் கிடைக்கவில்லை.

ஆகப் பெரிய மகிழ்ச்சி, ஆற்ற முடியாத துயரம்?

மகிழ்ச்சிகளால் துள்ளுவதும் துயரங்களால் துவள்வதுமான மனநிலைகளைக் கடந்து வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. ஆனால், என்றென்றும் ஆறாத மனப்புண் ஒன்று உண்டு. அது என் அருமைத் தம்பி கிருஷ்ணா டாவின்சியைப் பறிகொடுத்தது. கிருஷ்ணாவைப் பற்றி அவன் நண்பர்களிடம் கேட்டால் அவன் ஒரு நல்ல எழுத்தாளன் என்பதைத் தாண்டி நல்ல மனிதன் என்றே பலரும் கூறுவார்கள். அதுவே அவன் வாழ்வுக்குக் கிடைத்த அங்கீகாரம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விளிம்புநிலை மக்களுக்காகவும் வாழ வேண்டும் என்று நினைத்த மகத்தான மனம் கொண்டவன். அபார திறமைசாலி. அவனுடைய 45 வயதிலே எங்களை எல்லாம் விட்டுப் போய்விட்டான். பெரும் பேரிழப்பு அது. அவன் நினைவுகள் எங்கள் இதயங்களில் பொக்கிஷங்களாக இருக்கின்றன.

பிடித்தமான விஷயம்

பொதுவாகப் பயணங்கள் என்பது எனக்குப் பிடித்தமானது. நானும் கணவரும் மகனும் நிறைய பயணம் சென்றிருக்கிறோம். பயணங்களினால்தாம் என் மனம் விசாலமடைந்தது என்று சொல்லலாம். பல மாநிலங்களுக்கும் பல நாடுகளுக்கும் பயணிக்கும் போது வித்தியாசமான மக்கள், வித்தியாசமான வாழ்க்கைமுறை இவற்றைப் பார்க்க நேரிடுகிறது. அவ்வாறு செல்லும் போது சில இடங்களில் அங்குள்ள மக்கள் சின்னச் சின்ன வசதிகளோடு மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும். அலுப்பு, சலிப்பு இல்லாத மக்களைப் பார்க்கும்போது மனதிற்கான புது உரம் கிடைத்த மாதிரி இருக்கும். வாழ்க்கையை, வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும், இதுவும் கடந்து போகும் என இயல்பாகக் கொண்டு செல்ல உதவியதே பயணங்கள்தாம். சிறந்த வாழ்க்கை முறையைக் கற்றுக் கொடுத்ததோடு மட்டுமல்லாது எழுத்துலகப் பயணத்துக்கும் உதவியாக இருந்தவை பயணங்களே.

இதுவரை எழுதியுள்ள நாவல்களின் எண்ணிக்கை?

மன்னிக்கவும். சரியான எண்ணிக்கை என்னிடம் இல்லை. இந்த முப்பது வருடங்களுக்கும் மேற்பட்ட எழுத்து வாழ்க்கையில் நானூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

கிடைத்த மிகப்பெரிய பாராட்டு?

இன்றும் தொடர்ந்து வாசகர் கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் என்று பாராட்டுகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. ஒவ்வொன்றும் எனக்கு அவ்வளவு புத்துணர்ச்சி தரும். தனியொரு மனிதரை என் எழுத்தோ, கருத்தோ, கதையோ, கட்டுரையோ எங்கோ தொட்டு நெகிழ்த்தியிருக்கிறது என்பதைவிட வேறு என்ன விருது வேண்டும்?

வாசகர்களின் அன்பு…

வாசிப்பதன் மூலம் வாழ்க்கையை நேசிக்கும் வாசகர்கள் என் தேவதைகள். எதையுமே அன்பால் புரிந்துகொள்ளலாம் என்பதன் நிதர்சன சாட்சியங்கள் அவர்கள். கரம் குவித்து வணங்குகிறேன் ஒவ்வொருவரையும்.

வாங்கிய பரிசுகள்? விருதுகள்?

இலக்கிய சிந்தனை அமைப்பு நடத்தும் மாதாந்திர சிறந்த சிறுகதையாகவும், அதே அமைப்பு நடத்தும் வருடாந்தர சிறந்த சிறுகதையாகவும் என் கதை தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வாங்கியிருக்கிறேன். குமுதம் மாவட்ட சிறுகதைப் போட்டி, கல்கி சிறுகதைப் போட்டி, விகடன் சிறுகதைப் போட்டி, கலைமகள் சிறுகதைப் போட்டியில் பரிசுகள் வென்றிருக்கிறேன். ஆறேழு மாணவர்கள் என் படைப்புகளைத் தங்கள் ஆராய்ச்சி பட்டத்திற்க்காக எடுத்துக் கொண்டு முனைவரானார்கள். என் மனதிற்கு மிக நெருக்கமான மகிழ்ச்சி இது.

எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டதுண்டா?

இதுவரை இல்லை. ஆனால், பொதுவெளியில் ‘குடும்ப எழுத்தாளர்’ என்று நவீன இலக்கிய எழுத்தாளர்கள் சொல்வார்கள் என்று எனக்குத் தெரியும். இருக்கலாம். மனிதன் ஒரு சமூக விலங்கு. அன்பு காட்டவும் பெறவும் அருகில் ஒரு ஜீவன் இல்லாமல் அவனால் வாழ இயலாது. அன்புக்காக குடும்பம் என்கிற அமைப்பில் இருக்கும் ஓட்டைகளை அவரவர் சரி செய்து கொள்ளத்தான் வேண்டும். இல்லையா?

ஜனரஞ்சகமான எழுத்தாளர்களை இந்த இலக்கிய சமூகம் எப்படிப் பார்க்கிறது?

ஹா ஹா போன பதில்தான் இதற்கும். ஜனரஞ்சகத்திற்கும் தீவிர இலக்கியத்திற்குமான இடைவெளியை இட்டு நிரப்பும் எழுத்துகளே உண்மையான மக்கள் பணியாற்றுகின்றன. கண்டேன் சீதையை என்று அனுமன் சொல்வதாக கம்பன் எழுதுகிறான். இது ஜனரஞ்சகம்தானே? எவ்வளவு எளிமையாகப் பல்வேறு விஷயங்களை எடுத்துச் சொல்லிவிட்டான்? உலகை ஜெயித்து நிற்கும் பல்வேறு படைப்பாளிகளின் எழுத்துகள் எளிமையானவை. படிக்கும் மனதைக் கவர்பவை. நிச்சயமாகக் கடினமானவை அல்ல.

நானூறுக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதி இருக்கிறீர்கள். அதற்கான உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா? அல்லது கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம் இருக்கிறதா?

திருப்தியான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. நான் எழுத வந்த காலத்தில் இருந்த அத்தனை பத்திரிகையாசிரியர்களும் முழுமையாக ஆதரவு கொடுத்தார்கள். இத்தனைக்கும் யாருடனும் கடிதப் போக்குவரத்தோ, தொலைபேசி உரையாடல்களோகூட கிடையாது. எழுதி அனுப்பிய ஒரு பதினைந்து நாட்களுக்குள் பிரசுரம் ஆகிவிடும். அவ்வளவு ஆனந்தம், அவ்வளவு மனநிறைவு. எனக்கென சில எல்லைகள் இருந்தன. பணி அழுத்தங்கள், பெற்றோரைப் பேணுதல், வீட்டைப் பராமரித்தல் போன்ற காரணங்களால் என்னால் வானம் வரை போக முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால், எழுதிய ஒவ்வொரு சொல்லும் எனக்குத் தொடர்ந்து அன்பையும் அங்கீகாரத்தையும் கொடுத்தபடியே இருந்தன, இருக்கின்றன.

ஜனரஞ்சகமான எழுத்தாளராக இருந்ததனால் குறைந்தபட்சம் பொருளாதார ரீதியாகப் பலன் கிடைத்ததா?

ஆமாம். சன்மானத்திற்குக் குறைவில்லை. அதில் எந்தக் குறையும் இல்லை.

உங்களுக்குப் பெருமளவில் ஆதரவாக இருந்த பதிப்பகங்கள் குறித்து?

பதிப்பகங்கள் என்பதைவிட பத்திரிகைகள் எனக்குப் பெருமளவில் உதவின. தொடர்ந்து என் நாவல்கள், கதைகள், கட்டுரைகள் வெளியாகிக்கொண்டே இருந்தன. அண்மைக் காலங்களில் அமேசான், நாவல் ஜங்ஷன், பிஞ்ச் போன்ற செயலிகளில் என் நாவல்களைக் காணலாம்.

எழுத்தின் காரணமாக உங்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவாரஸ்யமான அனுபவங்கள் எதாவது?

வி. உஷா என்கிற பெயர் பார்த்து என் பள்ளித் தோழிகள் என்னைத் தொடர்புகொண்டார்கள். முப்பது வருட காலத்திற்குப் பின் நாங்கள் மீண்டும் சந்திக்க எழுத்துதான் காரணமாக இருந்தது. பொதுவாகக் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் அன்பும்தான் எழுத்து கொண்டு வரும் பெருமகிழ்ச்சி. எதிர்பாராத இடத்தில் யாராவது ஓடிவந்து சிரித்துப் பேசி கதை பற்றிச் சொல்வார்கள். தொடர்ந்து கிடைத்து வரும் அனுபவங்கள் இவை. உயிர்நீர் போல.

தமிழகத்து இலக்கியப் போக்கை கவனிப்பதுண்டா? பெண் படைப்புகள் குறித்து ஆண்களின் மனப்பான்மை எப்படி இருக்கிறது?

தொடர்ந்து கவனித்து வருகிறேன். தரமான படைப்பாளிகள் கண்ணியமாகவே நடத்தப்படுகிறார்கள். யதார்த்தம் என்கிற போர்வையில் சங்கடமான விஷயங்களைத் தவிர்த்தல் நல்லது என்பதே என் எண்ணம். ஆண் படைப்பாளிகளின் ஆபாச எழுத்துகளை எப்படி நாம் தூசாக நினைக்கிறோமோ அதே அளவுகோல்தான் பெண்ணுக்கும். தவிர, வேண்டுமென்றே பெண் எழுத்து என்பதற்காகவே அலட்சியம் காட்டும் ஆண் எழுத்துகளை ஜஸ்ட் லைக் தட் கடந்து போவதே சிறப்பு.

தோழிகளுக்குச் சொல்ல விரும்புவது?

என் அனுபவத்தில் சொல்வது, தெளிவாக இருங்கள். உறுதியாக இருங்கள். உங்களுக்கென நேரம், பொருளாதாரம், ஆர்வம், திறமை என்று தினம் வைத்துக் கொள்ளுங்கள். சுய சிந்தனை, சுய மரியாதை, சுய செயல்கள் என்று இருக்கும் பெண்ணை மற்றவர்கள் மதிப்பார்கள், அத்தனையையும் பரிவுடனும் கனிவுடனும் செய்யுங்கள்.

படைப்பாளர்:

ஸ்ரீதேவி மோகன்

ஏழு ஆண்டுகால பத்திரிகையாளரான ஸ்ரீதேவி மோகன், குமுதம், தினகரன் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றியிருக்கிறார். 2015–ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். 2018-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கியத்தில் மதம், சமூகம்’ பற்றிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை அளித்துள்ளார். எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி மற்றும் திருவையாறு ஐயா கல்விக்கழகம் இணைந்து நடத்திய எட்டாவது தமிழ் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

­­