நீரும் செம்புல சேறும் கலந்தது போல கலந்தவர் நாம்… எவ்வளவு அருமையான பாடல். நாம் பிறக்கும் போதே நமக்கான பிரச்னைகளும்கூடவே பிறந்து விடுகின்றனவா?

‘கொடுமை கொடுமை எனக் கோயிலுக்குப் போனால் அங்கே இரண்டு கொடுமை தலை விரித்து ஆடும்’ என்று சொல்வதுபோல நமக்கு நம் பிரச்னை மட்டுமில்ல, குடும்பத்திற்கு உள்ளே வெளியே , சமூகத்தில், நட்பு வட்டாரத்தில், பணியிடங்களில் என எல்லா இடங்களிலும் பிரச்னை சும்மா வரிசைக்கட்டி அடிக்கிறது. நமக்கும் கிடைத்த பாலில் எல்லாம் சிக்ஸர் அடித்து ஸ்கோர் பண்ண வேண்டும் என்றுதான் ஆசை, நடக்குமா என்ன? தட்டியும் முட்டியும் எப்படியோ சமாளித்து போய்க்கொண்டிருக்கிறோம்.

தோற்றாலும் ஜெயித்தாலும் மீசையை முறுக்கு என்றுதான் கடந்துகொண்டிருக்கிறோம். இப்படி எல்லாவற்றையும் ‘வந்து பார்’ என்று சொல்கிற மனம் நம் குழந்தைகள் என வரும்போது, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று துணிவதில்லை. வயிற்றில் இருக்கும்போது கவனம் கவனம் எனப் பாதுகாக்க பதறும் மனம், அவர்களுக்கு எத்தனை வயதானாலும் அமைதியாவதில்லை. பிறந்தவுடன் அவர் களுக்கு நோவாமல் தூக்க ஆரம்பிக்கும் நாம், எந்த வயதிலும் அவர்கள் நோவதை விரும்புவதில்லை. பல் மேல் பல் போட்டுப் பேசினாலும் பதறுவதில்லை… விட்டுத் தொலை என்கிறது மனம்.

முன்ன பின்ன அம்மாவாக இருந்து பழக்கம் இல்லை. என்ன செய்ய அவர்களின் ஒவ்வொரு வயதிலும் நாம் அனுபவமில்லா தாயாகத்தானே இருக்கிறோம்? அதனால் அவர்கள் விஷயத்தில் எந்த ஒரு முடிவு எடுப்பதும் கத்தி மேல் நடப்பது போன்றே தோன்றுகிறது. சரி, நம் அம்மாவின் அனுபவங்களை அள்ளிக்கொள்ளலாமா என நினைக்கும் போதே நாம் இவர்கள் போல் இல்லை எனத் தெளிவாகப் புரிகிறது.

வீட்டின் வறுமைக்குப் பயந்த தலைமுறை எங்கே, ராஜா வீட்டுக் கன்னுக் குட்டி தலைமுறைகள் எங்கே? அம்மாவின் பார்வைக்குப் பயந்த தலைமுறை எங்கே, நம்மை வடிவேலாக எண்ணிக் கலாய்க்கும் இந்தத் தலைமுறை எங்கே!

டிவி ரிமோட் வீட்டின் பெரியவர்கள் கையில் இருப்பதே வழக்கம் என வளர்ந்த தலைமுறை எங்கே, சொந்த செல்போனுக்கு லாக் போட்டு பர்சனலாகப் பயன்படுத்தும் இவர்கள் எங்கே?

போன தலைமுறைகள் அடியும் மிதியும் வாங்கிக்கூட வளர்ந்து இருப்பார்கள், ஆனால் இந்தத் தலைமுறைக்கு நோ சொல்லக்கூடப் பயமாக இருக்கிறது. எதிலும் இவர்களை முதன்மைப்படுத்த வேண்டும், இவர்கள் தோற்றுவிடக் கூடாது, கஷ்டப்படாமல் எல்லாம் கைகூட வேண்டும் இந்தத் தலைமுறைக்கு. உறக்கம், விழிப்பு, உணவு என எல்லாம் நேரங்கெட்ட நேரத்தில்.

பெரியவர்களோடு எதிர்வாதம் செய்வது தவறென வளர்ந்த தலைமுறையினருக்குப் பிறந்ததெல்லாம் எடுத்த எடுப்பில் கேட்கிறது, “இப்ப எதற்கு என்னைப் பெற்றீர்கள்” என்பதுதான்.

இப்படி எல்லாமே வேறுபாடாக இருக்கும்போது எப்படி அம்மாவின் அனுபவத்தைப் பின்பற்றுவது?

சரி, போன தலைமுறை வளர்ந்த சமூகநிலை எப்படி இருந்தது?

பள்ளிக்கூடங்களில் பாலியல் வன்முறை இல்லை.

பக்கத்து வீடுகளில் பகை இல்லை. படிக்க நடந்தே சென்றோம். வாகனங்கள் அவசியமாக இருந்ததில்லை.

இரவு விழித்திருந்த நினைவில்லை. அநாவசிய பொருட்கள் வீட்டில் வாங்கிக் குவித்ததில்லை. வறுமையிலும் அத்தியாவசியங்கள் கிடைக்கத் தவறியதில்லை.

இவனுக்கு, அவளுக்கு எனத் தனித்தனி சமையல் இல்லை.

பண்டிகை நாட்கள் தவிர்த்து வேறு நாட்களில் புதுத் துணி எடுத்துப் பழக்கம் இல்லை.

பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களை எப்பொழுதும் பதற்றத்தில் வைத்திருக்கும் இத்தனை ஊடகச் செய்திகள் இல்லை. படிக்கும் வயதில் வாகனங்கள் வாங்கிக் கொடுத்து விழியில் பயத்தோடு வாசலோரம் காத்துக் கிடந்த பெற்றவர்கள் இல்லை. சொந்தமாகக் கைபேசி இல்லை.

எடுத்ததற்கெல்லாம் செல்ஃபி இல்லை. பொருந்தா காதலை, வன்முறைகளை ஆதரிக்கும் சினிமாக்கள் இல்லை.

எல்லாக் கலைகளையும் பிள்ளைகளின் புத்திக்குள் புகுத்த நினைக்கும் பெற்றோர் இல்லை.

புதிராக இருக்கிறது இப்போதைய உலகம். புதிய சூழலை அனுபவமில்லாத இந்தப் புதிய பெற்றவர்களால் களமாட முடியவில்லை. களமாட கற்றுக் கொடுக்க யாரும் இல்லை. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வினாத்தாள்கள் கொண்ட தேர்வு.

இடுப்பிலே இறுக்கிக் கட்டிக்கொண்ட குழந்தையோடு போர்க்களம் பூண்டவர் ஜான்சி ராணி மட்டுமல்ல. ஒவ்வொரு தாயுமே இன்று ஜான்சி ராணிதான்!

வாழ்க்கையே போர்க்களம்…

வாழ்ந்துதான் பார்க்கணும்…

போர்க்களம் மாறலாம்…

போர்கள்தாம் மாறுமா?

படைப்பாளர்:

அமுதா பாலமுருகன்

சிறு வியாபாரி. புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. பள்ளிப் பருவத்தில் எழுத்தின் மேல் தீவிர ஆர்வம் கொண்டு, இடையில் மறந்து, திரும்பவும் பேனாவைக் கையில் எடுக்க ஆர்வமாக இருக்கும் ஒரு பெண்.