உடலளவில் ஆண்கள் பலமானவர்கள், ஆனால் மனதளவில் பெண்கள் பலமானவர்கள் போன்ற வசனங்களைப் பேசாத வாய்களும் இல்லை, கேட்டுக் கடக்காத காதுகளும் இல்லை. அறிவியல் ரீதியாக உண்மை என்று நிரூபிக்க எந்தச் சான்றுகளும் இல்லை. அப்படி இருந்தும் இப்படியான கருத்துகள் உலவக் காரணம் ‘பொதுப் புத்தியை’ ஆமோதிக்கிற ‘சமூக ஒப்புதல்’ என்கிற செயல்பாடே.

சமூகத்தின் பல நிலைகளிலும் வடிவங்களிலும் இந்தச் செயல்பாடு பழக்கப்படுத்தப்படுகிறது. ஆனால், அறிவியலைக் கற்பிக்கிற கல்வி நிறுவனங்களிலும் கற்றவர்களும் கற்பிப்பவர்களும்கூட இத்தகைய கருத்துருவாக்கத்தை உண்மை என நம்புவது கல்வியின் தரத்தின் மீதும் அதன் நோக்கம் குறித்தும் மிகப்பெரிய நம்பிக்கையின்மையை விதைக்கிறது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ‘தேச உருவாக்கத்தில் பெண்களின் பங்கு’ குறித்த தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பல்வேறு ஆய்வுத் தாள்கள் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் சமர்ப்பிக்கப்பட்டன. அந்தக் கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய பேராசிரியர் ஒருவர், ‘ஆண்கள் உடலளவிலும் பெண்கள் மனதளவிலும் பலமானவர்கள்’ என்கிற கருத்தையும் போதாததுக்குப் ‘பெண்களுக்குத் திருமணத்தின்போது கொடுக்கப்படுகிற வரதட்சணை சட்டரீதியாக இல்லை என்றாலும் சமூக ரீதியாக அனுமதிக்கப்பட்ட ஒன்று எனவும், பெண்களின் நலனுக்காகவே அவை வழங்கப்படுகின்றன. அது அவர்களைப் பலப்படுத்தும்’ போன்ற அபார கருத்துகளைக் கூறினார்.

பெண்களின் ஆரோக்கியம் குறித்துப் பேசிய மற்றொரு பேராசிரியரோ, ‘அந்தக் காலத்தில் பெண்கள் எத்தனை குழந்தை பெற்றாலும் சுகப்பிரசவமாகத்தான் இருக்கும், இப்போ எல்லாம் ஒரு குழந்தைக்கே சிசேரியன். அந்த அளவுக்கு பலவீனமாகிட்டாங்க பெண்கள்’ என்கிற அரியக் கருத்தைக் கூறினார். எந்த ஆய்வின் அடிப்படையில் அவர் அந்தக் கருத்தைக் கூறினார் என்பதெல்லாம் அவருக்குத்தான் தெரியும். ஆய்வு மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் பேசிய ஒரு மாணவி, ‘உடலளவில் ஆண்கள் வலிமையானவர்கள், பெண்கள் மனதளவில் வலிமையானவர்கள்’ என்கிற அதே சம்பிரதாயக் கருத்தைக் கூறினார்.

பழமைவாத வீடுகளில் பேசப்படும் கருத்துகள் இன்று ஆராய்ச்சிக் கல்வி நிறுவனங்கள் வரை நீண்டிருப்பது ஏன், எப்படி, எவ்வாறு? சமூகத்தில் பழக்கப்படுத்தப்படும் கருத்துகள்தாமே அதனை உள்ளடக்கிய நிறுவனங்களிலும் எதிரொலிக்கும்.

ஆனால், அறிவியல் இத்தகைய பொதுப்புத்திக்கு எதிர் நிலையிலேயே நிற்கிறது. அறிவியல் ரீதியாக (Survival of the Fittest), தகுதியான பாலினம் பெண்ணாக மட்டுமேதான் இருக்க முடியும் என்பதையும் ஆண்கள் பலவீனமானவர்கள்தாம் என்பதை மனநல மருத்துவர் ஷாலினி நிரூபிக்கிறார்.

கருச்சிதைவில் ஆண் கருச்சிதைவின் எண்ணிக்கையே அதிகம், குறைப்பிரசவ எண்ணிக்கையிலும் ஆண் குழந்தைகளே அதிகம். பிறந்தவுடன் அதிக தொற்றுக்கு ஆளாகும் குழந்தைகளில் ஆண்களே அதிகம், அதேபோல ஐந்து வயது குழந்தைகளில் இறப்பு விகிதமும் ஆண்களிடத்திலே அதிகம். மேலும் மரண விகிதம் அதிகமாக இருக்கும் பாலினம் ஆண் என்பதை அறிவியல் ரீதியாக விளக்குகிறார் மருத்துவர் ஷாலினி.

2021ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புள்ளிவிவரப்படி தற்கொலை செய்துகொள்பவர்களில் ஆண்கள் 72.5சதவீதம், பெண்களோ 27.5 சதவீதம். ஆனால், அறிவியலுக்குச் சம்மந்தமே இல்லாத நம் மதங்கள் என்ன சொல்கின்றன? முதலில் படைக்கப்பட்டது ஆண்தான் என்றும் அவனுக்குத் துணையாகப் பெண்ணைப் படைத்தான் என்றும் பெண்ணைப் பாதுகாப்பதே ஆணின் தலையாய கடமை என்பது போலவுமான உருட்டுகளை உருட்ட, உண்மைக்குத் தொடர்பே இல்லாத கற்பிதங்களை மனிதர்கள் கடைப்பிடிப்பது இன்றும் தொடர்கிறது.

பெண்ணைப் பாதுகாப்பவனாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளப் பெண் பலகீனமானவள் என்றும், அவளைப் பாதுகாக்கும் ஆண் வலிமையானவன் என்கிற கருத்துருவாக்கத்தை கடவுள், மதம், கலாச்சாரம், பண்பாட்டின் வழியும், தற்போது நவீன ஊடகத்தின் வழியும் பரப்புரை செய்து நம்பவைக்கும் நுட்பத்தை ஆண்மைய மேலாதிக்கச் சமூகம் தொடர்ந்து செய்துவருகிறது. பாதுகாப்பு என்னும் போர்வையில் அடக்குமுறையை நிகழ்த்துவதே அதன் சாராம்சம்.

தன்னைப் பாதுகாப்பவனுக்கு அடிபணிந்து செல்வது பெண்ணின் கடமை எனவும் பெண் தானே தன் அடிமை சாசனத்தை எழுதிக் கொடுக்கும் வேலையைக் காலங்காலமாகக் குறிப்பாகத் திரைப்படங்கள், பாடல்கள் வழி ஆணாதிக்க சிந்த்தனை கொண்ட நிறுவனங்கள் செய்துவருகின்றன. (அடிமை சாசனம் எழுதித் தருகிற என்னை ஏற்றுகொள்ளு, அவன் ஒரு விரல் தீண்டி நொறுங்கிடவே நான் உயிரை வளர்த்தேனே – இந்தப் பாடல்களையெல்லாம் இன்றும் சிலாகித்து ரசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.)

இதன் விளைவாகச் சமூகத்தில் எதிரொலிக்கும் நிகழ்வுகள்:

மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவளது பிறப்பிறப்பில் குப்பைகளைச் சொருகி அவளை அடைத்து வைத்து சித்திரவதை செய்த ராணுவ வீரர். காதல் மனைவி வேலைக்குச் செல்லும் இடத்தில் வேறோர் ஆண் மீது காதல் வயப்பட்டுவிடுவாளோ என்கிற சந்தேகத்தில் தினமும் குடித்துவிட்டு கெட்ட வார்த்தைகளில் வதைத்து, உதைத்து அந்தப் பெண்ணை உடல்ரீதியாக, உளவியல் ரீதியாக நிலைகுலையச் செய்யும் காதல் கணவன். ஆண் நண்பர்களுடன் பேசக் கூடாது, பழகக் கூடாது எனக் கட்டளையிடும் காதலர்கள். காதலி ஆண் நண்பர்களுடன் பழகுகிறாள் என்று தெரிந்ததும் படிப்பை நிறுத்தச் சொல்லிக் கட்டாயப்படுத்திய காதலும் இருக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு படிக்கலாமா வேண்டாமா, வேலைக்குச் செல்லலாமா வேண்டாமா என முடிவு எடுக்கும் கணவன்மார்கள். வேறு சாதி ஆணைக் காதலித்துவிடுவாளோ என்கிற பயத்தில் படிப்பைப் பாதியிலே நிறுத்தும் அப்பா. சுயம்புவாகத் தன்னை வளர்த்த அம்மா இன்னொரு ஆணுடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தவுடன், இது தொடர்ந்தால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டும் மகன். பக்கத்து வீட்டுக்காரரின் தவறான நடத்தையால் அம்மாவின் ஒழுக்கத்தைக் கேள்விக்குட்படுத்தி மானம் போச்சு, மரியாதை போச்சு என்று வீட்டைக் காலி செய்த மகன். திரையரங்குக்குப் போனால் அங்கே வருகிறவர்கள் தேவையில்லாமல் வம்புக்கு வருவார்கள் என்று மனைவியை தியேட்டருக்கே கூட்டிட்டுப் போகாத கணவன். முன்னால் காதலனைப் பார்ப்பதே கணவனுக்குச் செய்கிற துரோகம் என்று வரிந்துகட்டிக்கொண்டு வரும் ஆண்கள். பாலியல் ரீதியான தனது விருப்பத்தைத் தெரிவிக்கும் மனைவியிடம், ‘உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்’ என்று கேட்டு பதற்றமடையும் ஆண்கள். அரசுப் பணிகளில் பெண்களுக்கான 40% இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெருவில் இறங்கிய ஆண்கள். பாலியல் குற்றங்களுக்குப் பெண்களின் உடைதான் காரணம் எனக் குற்றம் சுமத்தும் ஆண்கள் என இப்படி ஆண்களின் அடாவடிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. என் பதின்ம வயதில் என் வயது பெண்களோடு ஓதச் செல்வதுண்டு. அப்படி ஓதச் செல்லும் இடத்தில் தொழுகை முடிந்ததும் பயான் (மார்க சொற்பொழிவு) நடத்துவார்கள். அதில் ஒரு கதை, ‘குழந்தைக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்த பெண் தனது கால்கட்டை விரலால் கதவை முட்டுக் கொடுத்திருந்தார். அங்கு வந்த அவரது கணவர் கதவை தட்டியும் உதைத்தும் திறக்க முடியவில்லையாம். அதன் பின் அப்பெண்ணே கதவைத் திறந்து காரணத்தைச் சொல்ல, அந்த ஆண் அதிர்ந்து போய், முகமது நபிகள் நாயகத்திடம் முறையிட்டாராம். என் மனைவிக்கு எப்படி அவ்வளவு பலம், அதுவும் அந்த ஒரு கட்டை விரலுக்கே, எனவே அந்தப் பலத்தைக் குறைக்க வேண்டும் நபியே’ என முறையிட, அப்பெண்ணுக்கு அந்தப் பலம் குறைக்கப்பட்டதாம்.’

கதையோ உண்மை சம்பவமோ எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இங்கு கவனிக்க வேண்டியது பெண்ணின் பலத்தைக் கண்டு ஆணுக்கு இவ்வளவு பதற்றம், பயம் ஏன்?

இவ்வாறாக ஆண்கள் தங்களது பயத்தை, பலவீனத்தை மறைக்கவும் தங்களைப் பலமானவர்களாக, வலிமையானவர்களாகக் காட்டிக்கொள்ளவும் முயற்சிக்கவே மற்றவர்கள் (பெண்கள்) மீது தங்களது ஆதிக்கத்தைச் செலுத்துகின்றனர். அந்த ஆதிக்கம் பல வடிவங்களில் நிகழ்த்தப்படுகிறது.

அரசு நேரிடையாக, மறைமுகமாக என இரண்டு விதமாக அடக்குமுறையை மக்கள் மீது செலுத்துகிறது. அதாவது ஆளும் வர்க்கம் தங்களது பலவந்தத்தை போலிஸ், ராணுவம் போன்ற அரசு நிறுவனங்களின் மூலம் நேரிடையாகவும், சமயம், குடும்பம், கல்வி என மறைமுகமாக குடிமைச்சமூகத்தின் மூலமும் செலுத்துகிறது. இங்கு ஆணாதிக்க சமூகம் பெண்கள் மீது தங்களது ஆதிக்கத்தை, பலவந்தத்தை இப்படியான உணர்வு ரீதியான குடிசமூகத்தின் வழி, அடக்குமுறையைப் பெண் சமூகத்தின் மீது செலுத்தி வருகிறது.

இத்தகைய நிறுவனங்கள் அரசியல் சமூகம் (Political Society), குடிமைச்சமூகம் (Civil Society) வழி ஆளும் வர்க்கமாக இருக்கக்கூடிய ஆண் சமூகம் தனக்குச் சாதகமான கருத்தை, ‘பொது மனோபாவமாக’ (Common sence) உருவாக்கி, தனக்கு ஆதரவான பொது சம்மதத்தை (Concern) குடிமைச்சமூகத்தின் வழி பெற்றுவிடுவதின்மூலம் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்கிறது.

இப்படிப் பெண்களுக்கு எதிராகப் பரப்பப்படும், ‘பெண்கள் பலவீனமானவர்கள்’ கருத்து நிலையானது, வெகுமக்களால் உள்வாங்கப்பட்டு அதுவே அவர்களுடைய பொதுப்புத்தியாக அமைந்துவிடுகிறது.

பெண்களின் ஒடுக்கப்பட்ட நிலைக்குக் காரணமான கருத்து நிலையானது, பெண்களுக்கு எதிரான ஒரு ‘பொதுப்புத்தியை’ உருவாக்கியதும் அது வெகுமக்களால் உண்மையென நம்பியதன் விளைவே பெண்களுக்கு எதிரான அநீதி நிலை தொடர்வதற்குக் காரணம் என்பதைப் பெரியார், ‘இந்நிலைச் சட்டத்தாலும் மதத்தாலும் மாத்திரம் ஏற்பட்டதென்று சொல்வதற்கில்லாமல் பெண் சமூகம் ஒப்புக்கொண்டு இந்நிலைக்கு உதவி புரிந்துவருவதனாலும் இது உரம் பெற்று வருகிறதென்றே சொல்ல வேண்டும்’ என்றார்.

இத்தகைய அடக்குமுறைக்கு எதிராகச் செயல்பட வேண்டுமெனில் ஆளும் வர்க்கத்தின் குடிமைச்சமூக மேலாண்மைக்குள் தீவிர தலையீடுகளை நிகழ்த்தி கருத்தியல் பொதுச்செல்வாக்கை (Counter Hegemony) உருவாக்க வேண்டும் என்கிறார் கிராம்ஷி.

பார்ப்பனிய கருத்து நிலை (Brahminical Ideology) சாதிய ஏற்றத்தாழ்வுகளையும், சாதிய இழிவையும் எந்தெந்த நிலைகளில் கட்டிக்காக்கிறது என்பதைத்தான் பெரியார் தொடர்ந்து பேசிவந்திருக்கிறார். அப்படியாகத்தான் ஆண் மேலாதிக்க கருத்துநிலை இங்குப் பல வடிவங்களில் ஏற்றத்தாழ்வுகளைப் பாதுகாக்கிறது. எனவே இத்தகைய பாகுபாடுகள் நிறைந்த கருத்தியலுக்குள் தீவிர தலையீடுகளை நிகழ்த்தாமல் இங்கு முழுமையான பெண் விடுதலையோ ஏற்ற தாழ்வற்ற சமத்துவ சமூகத்தையோ உருவாக்க முடியாது.

படைப்பாளர்:

மை. மாபூபீ

சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பில் துறையில் முனைவர்பட்ட மாணவி. அரசியல், சமூகம் பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவருகிறார். தீக்கதிர் நாளிதழ், கீற்று, Thenewslite போன்ற இணையதளங்களில் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.