“ஆண்கள் இப்போதெல்லாம் மாறிவிட்டார்கள். முன்புபோல் இல்லை. அவ்வளவு விட்டுக்கொடுத்துப் போகிறார்கள். எதையுமே பெரிதுபடுத்துவதில்லை. வீட்டில் ஏற்படுகிற பல பிரச்னைகளுக்குப் பெண்களே காரணம்.” இவைதானே சமூகத்தின் குரல். இந்தக் குரலின் உண்மைத்தன்மையைப் பரிசோதித்துப் பார்க்கலாம்.
நம் வீடுகளில் நாம் பார்க்க நம் கண்முன்னே வளர்ந்த ஆண் பிள்ளைகள்கூட அவர்களைவிடச் சற்றே பெரிய பெண்பிள்ளையிடம் ‘குரல் உயர்த்திப் பேசும்’ பண்பு மிக இயல்பாக நிகழ்கிறது. இயல்பாகவே பார்க்கவும் படுகிறது.
இதையே இப்படி எண்ணிப் பார்ப்போமே. தன்னைவிட வயது மூத்த அல்லது தன் வயதில் உள்ள ஆண்பிள்ளையை ஒரு பெண்பிள்ளை குரலை உயர்த்திப் பேசினால் எப்படி இருக்கும்? சிந்திக்கும்போதே தவறெனத் தோன்றுகிறதுதானே?
இது தவறு எனில் முந்தைய காட்சி மட்டும் எப்படிச் சரியாக இருக்க முடியும்? எப்போதுமே இயல்பாக ஒரு பெண்பிள்ளை குரலை உயர்த்தி ஆண்பிள்ளையிடம் பேசிவிடவே முடியாது. அப்படிக் குரல் உயர்த்துவதை நாம் விரும்பவும் இல்லை.
ஆதிக்கத்தை மறைபொருளாகக் கொண்டு யார் யாரிடம் குரல் உயர்த்தினாலும் அது தவறு. அப்படியிருக்க, தன்னைவிட வயது மூத்த பெண்ணிடம் அந்த வீட்டுப் பதின்ம வயதுச் சிறுவன் குரலை உயர்த்தலாம் என்கிற தைரியத்தை எது கொடுக்கிறது?
கவனித்துப் பார்த்தால் நம் குடும்ப அமைப்புகள்தான் கொடுக்கின்றன என்பது புரியும். அதிலும் குறிப்பாக அந்தப் பெண், ஆண் – இரு பிள்ளைகளின் அம்மாக்களே இதனைப் பெருமையாகக் கருதுவதும் பேசுவதும் உண்டு.
“அம்மு வாசல்ல நின்னாலே தம்பி உள்ள போகச் சொல்லுவான்” என அம்மாக்களுக்குள் இந்தப் பெருமை நீளும்.
உண்மையிலேயே இதில் பெருமைப்பட ஒன்றுமேயில்லை. நம் வளர்ப்பு சரியில்லை என நாம் வருத்தப்பட வேண்டிய ஒன்றிற்கு மகிழ்ச்சி அடையப் பழகியிருக்கிறோம். இதுவே பெருமை என நம் ஆழ்மனம் நம்புகிறது.
இந்தச் சிறுவனைவிட வயதும் சமூகப் பழக்கமும் அதிகமே கொண்டவள் அந்த வயது மூத்தவள். அவள் தன்னைவிட அனுபவமும் வயதும் குறைந்த சிறுவனால் அதிகாரம் செய்யப்படுகிறாள். இது தவறு என்பது அந்தச் சிறுவனின் வளரும் மூளைக்குள் பதிய வேண்டும்.
அப்பாக்கள் முழுநேரப் பணியில் இருப்பதால் பெரும்பாலும் அம்மாக்களின் கண்டிப்பிலும் கவனிப்பிலுமே பிள்ளைகள் வளர்கின்றனர். பதின்ம வயதை எட்டியதும் இந்த ஆண்பிள்ளைகளுக்குக் கூடுதலாகக் கொம்புகளோ திமில்களோ முளைத்துவிட்டதைப்போல் நடந்துகொள்கின்றனர். இந்த நடத்தையை வீடுகள் குறிப்பாக அம்மாக்கள் பெருமையாக நினைக்கின்றனர்.
“அவனுக்குச் சாப்பாட்டுக்கு முன்னாடி கை கழுவக்கூட தண்ணீ எடுத்து வைக்கணும்.” “நான் நைட்டி போட்டா தம்பிக்குப் புடிக்காது”, “தண்ணீ கூட அவனா எடுத்துக் குடிக்க மாட்டான்” என பூரிப்போடு சில அம்மாக்கள் சொல்வதைக் கேட்க முடிகிறது. வெளியே அவள் பூரிப்போடு சொல்வதைப்போலத் தெரியலாம். ஆனால் உள்ளுக்குள் ஒருவித அச்சமும் பதட்டமும் இயலாமையும் சூழ அவள் மனத்துக்குள் புழுங்கி அழுகையை முழுங்குகிறாள்.
’இதற்காகவா இத்தனை நாள்கள் இந்தப் பிள்ளையை இப்படி வளர்த்தோம்’ என அவள் மனதில் ஓர் எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கும். தான் எந்த இடத்தில் சரியாக வளர்க்கத் தவறினோம் என அவள் நிதானிப்பதற்குள் இந்த உருட்டல் மிரட்டல் வளர்ந்து எங்கோ சென்றிருக்கும்.
சரி. வீட்டில் இருக்கிற அப்பா இதையெல்லாம் கவனிக்கிறாரா, இல்லையா?
அம்மாவை அதட்டுகிற ஆண்பிள்ளைகளை நினைத்து அப்பாக்களும் உள்ளூற மகிழ்ச்சி அடைவதும் உண்டு. பனியனும் அரைக்கால் டிரவுசருமாக ஊரையே வலம் வருகிற பிள்ளைகள்தான் அம்மாக்களைச் சுடிதாரோ நைட்டியோ போடக் கூடாது என அவர்களது உடைகளில் தலையிடுகின்றனர்.
இடுப்பும் வயிறும் தெரிய புடவை உடுத்துவது ஓகே. முழுதாக மூடும் சுடிதார் வேண்டாம். சற்றே வயது கூடிவிட்டால் அம்மாவை அதட்டலாம் என்கிற ஆதிக்க மூளையை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும்.
தெருவில் இருக்கிற நான்கு சிறுவர்கள் சேர்ந்துகொண்டு நைட்டிமீது துப்பட்டா போடாத அம்மாக்களைக் கிண்டல்செய்வது தவறு என்று நமக்குத் தோன்றவில்லை. இவள் எத்தனை வயதானாலும் இழுத்துப் போர்த்த வேண்டும் என்பது பல்லாயிரம் ஆண்டுகால அழுக்கும் அடர்ப்பாசியும்தான்.
இன்னமும் பிள்ளைகள் எந்த வகுப்புப் படிக்கின்றனர் எனத் தெரிந்து வைத்திருக்காத அப்பாக்கள், உருட்டல் மிரட்டலோடு பிள்ளைகளை பள்ளிக்கு அழைக்க வந்துகொண்டுதான் உள்ளனர்.
வகுப்பில் இருப்பது பெரும்பாலும் பெண் ஆசிரியர் என்பதால் கூடுதல் அதட்டலோடு வந்து அழைத்துப் போக விரும்பும் பழக்கம் அப்பாக்களிடம் இருக்கிறது. பேருந்தின் நடத்துநர்கள் பலரும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. கைப்பையோடு பெண்கள் பேருந்தில் ஏறினால் அநாவசியமாகவே ஓர் அதட்டல் கொடுக்கப்படுகிறது.
பெண்களின் நிலைதான் எவ்வளவு மோசமாக இருக்கிறது. அவள் குழந்தையாக இருந்தபோது அப்பாவுக்குப் பயப்பட வேண்டும். பருவமடைந்தபின் அண்ணனுக்கும், திருமணத்துக்குப்பின் கணவருக்கும் பயப்பட வேண்டும். அவளுக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்து வளரும்போது அவனுக்கும் பயப்பட வேண்டும். பெண் பிள்ளையைப் பெற்ற அம்மா எனில் மருமகனுக்குக் கூடுதல் மரியாதையும் கொடுக்க வேண்டும்.
இங்கே விதிவிலக்காகச் சில ஆண்கள் இருக்கின்றனர். அவர்களது எண்ணிக்கையை விரல் விட்டுச் சொல்லிவிடலாம்.
புள்ளிவிவரம் இல்லாத தரவாக இருப்பினும் இது எவ்வளவு உண்மை என உங்களைச் சுற்றி இருக்கிற பெண்களிடம் கேட்டுப் பாருங்கள்.
ஒரு நாளுக்கு ஒருமுறையேனும் ஏதோ ஓர் ஆணால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ போகிற போக்கில் ஒரு பெண் சீண்டப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறாள். சாலையில் இருசக்கர வாகனத்தில் முன்னே செல்வது ஒரு பெண் எனில் எவ்வளவு முன்தீர்மானத்தோடு ஆண் மூளை அவளை மதிப்பிடுகிறது; ஏளனப் பார்வையையோ எரிச்சல் பார்வையையோ அவளை நோக்கி வீசுகிறது. நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறது.
தேவையே இல்லாமல் அவளது நிதானத்தை சீர்குலைக்க அவள் வண்டியை முந்திச்சென்று ஒரு ’Z’ போட வைப்பது எது? சுனிதா வில்லியம்ஸ் போல விண்வெளிக்கே சென்றுவந்தாலும் “இவர்களுக்கு வாகனம்கூட இயக்கத் தெரியாது” என எது சொல்ல வைக்கிறது?
ஒரு பெண் எத்தனையோ படித்துப் பட்டங்கள் பெற்று மதிப்புக்குரிய பணியிலும் பதவியிலும் பொறுப்பிலும் இருக்கலாம். இருந்தாலுமே வீட்டில் அவளது பணி அனுபவம் ஒரு பொருட்டல்ல என்பதே உண்மை. அவளது துறைசார்ந்த ஒரு விசாரிப்புக்கே அந்தக் குடும்பம் அதே பணியிலுள்ள வேறோர் ஆணின் அனுபவத்தையும் வழிகாட்டலையுமே எதிர்பார்க்கிறது. அதுவே சரியாக இருக்குமென குடும்பம் நம்புகிறது.
எப்போதுமே இங்கே ’எல்லாம் தெரிந்தவர்களாக’ ஆண்களே இருக்க நினைப்பதன் வெளிப்பாடே இவ்வகைச் செயல்பாடுகள். குடும்பத்தின் முக்கியமான முடிவுகள் அனைத்தும் ஆண்களாலேயே எடுக்கப்படுகிறது. இந்த அவமதிப்புகளின் பாரம் தாங்காமல் பேசத் தொடங்குபவள் ’ராட்சசி’ ஆகிவிடுகிறாள்.
தந்தைகளின் இளவரசிகளாக வளர்க்கப்படுகிறவர்கள் கணவர்களின் பட்டறைகளில் ராட்சசியாகவோ தேவதையாகவோ வார்க்கப்படுவதற்கான அச்சு அந்த ஆண்கள் பெண்களை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதிலேயே இருக்கிறது.
குடும்பத்துக்காக எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்கள் என்பதிலேயே உங்கள் மன அமைதி இருக்கிறது. நீங்கள் அமைதியை வெளியே தேடுகிறவரை, குடும்பங்களில் அமைதி பெருகாது என்பதை உணருங்கள்.
இறுதியில் எந்த நட்பும், எந்த வேலையும், எந்தப் பொழுதுபோக்கும், எந்தச் செயலியும் படுக்கையில் விழுந்தால் உங்களுக்குத் துணை நின்று டயாபர் மாற்றிடாது. அதைக் கொஞ்சமேனும் பருவத்தே உணர்ந்தால் நாற்பதுகளிலேனும் நிம்மதி கிடைக்கும். பேசுவோம்.
(தொடரும்)
படைப்பாளர்

பா. ப்ரீத்தி
தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ்நாடு அரசின் தமிழ்ப் பாடநூல் குழுவில் நூலாசிரியராகப் பணியாற்றியுள்ளார். பேறுகாலம் குறித்த இவரது அனுபவப் பகிர்வை ‘பிங்க் நிற இரண்டாம் கோடு’ என்கிற புத்தகமாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.