அந்த இளமைப் பருவத்தில், பொறுப்புகளைச் சுமக்கத் தேவையில்லாத வாழ்க்கையில் கல்லூரியில் என்றாலும் சரி; விடுதியில் என்றாலும் சரி; தோழிகள் எல்லோரும் ஒருவருக்கொருவர் அன்பாக, கிண்டலாக, ஆறுதலாகப் பேசிக் கொள்வோம். உதவும் மனப்பான்மை எல்லோரிடமும் இருந்தது. நெருங்கிய தோழிகளாக இருந்தாலும், கருத்து திணிப்பு இருக்காது. 

விடுதியில் ரெக்கிரியேஷன் நேரத்தில் கூடியமர்ந்து பேசிச் சிரிப்போம். நான்கு பேர் அமரும் இடத்தில் ஐந்தாறு பேர் அமர்ந்து சாப்பிடுவோம். தந்தையை இழந்தவர், தாயை இழந்தவர், வறுமையில் இருப்பவர்கள், வசதியானவர்கள் என ஒரு கலவையாகவே வாழ்ந்தோம். அதுவும் இனிமையாகவே இருந்தது. பல ஊர்களிலிருந்தும் வந்திருந்தோம். அந்தந்த ஊரின் வாழ்வியல் எங்களுக்கு இயல்பாகவே கடத்தப்பட்டது. சிறு காலர் வைத்த ஷெர்டும், பேன்ட் துணியில் நீள மிடியும் அணியும் தோழி, குட்டை மிடியும் கண்ணுக்கு ஐ லைனரும் போடும் தோழி, பாவாடை தாவணி மட்டுமே அணிந்த பெரும்பாலான தோழிகள் என இருந்தாலும், இவை எங்களுக்கும் ஏற்றத் தாழ்வை உருவாகவில்லை. 

பலவகை உணவுகள், சொல்லப்போனால் இத்தனை வகை உணவுகள் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் இருப்பது தெரியவந்தது. 

கரிசல் கிராமத்திலிருந்து வரும் தோழி மூங்கில் குழலில் தேனும் தினை மாவும் வைத்து, கொண்டு வருவார். சுவையாக இருக்கும். நெடுநாள் கெட்டுப் போகாது. கப்பலிலிருந்தவரின் மகள், மில்க் மெய்ட் போன்ற டின்னில் அடைக்கப்பட்ட பொருள்கள் கொண்டு வருவார். அப்போது அவை அபூர்வமாகவே கிடைக்கும்.

விடுமுறைக்கு ஊருக்குச் சென்று வந்தாலோ ‘விசிட்டர்ஸ் டே’ எனப் பெற்றோர் வந்தாலோ, ஆப்பிள் ஜாம், இட்லிப் பொடி,  ஊறுகாய் எண்ணெய் குடிக்காமல் மொறுமொறு என்றிருக்கும் முறுக்கு, அதிரசம், சிறு சிறு வில்லைகளாக அப்படியே வாயில் கரையும் வெண்ணெய்/ உப்பு சேர்த்த கலகலா (அப்போது வெண்ணெய் நாங்கள் பயன்படுத்தியதே இல்லை), என விதவிதமான பண்டங்கள் கிடைக்கும். சிலர், தோழியிடம் முழு டப்பாவையும் கொடுத்து, ‘பங்கு வை’ எனச் சொல்லுவதும் உண்டு. 

நான் எப்போதும் உருண்டைக்  கலகலா, பொரிகடலைப் பொடி, நார்த்தங்காய் ஊறுகாய், அவல், ஓட்டு மாவு கொண்டு செல்வேன்.  ஓட்டு மாவு பொதுவாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகம் செய்வார்கள். இஸ்லாமியர்கள் கொஞ்சம்  வேறுவகையில் செய்வார்கள். ஒருபக்கா ( படி) பச்சரிசியை ஊற வைத்து, உரலில் இடித்து அரித்து (சலித்து) வைத்துக் கொண்டு, அந்த மாவையும் முழு தேங்காயின் துருவலையும் வறுக்கும் ஓட்டில் போட்டு, உப்பு நீர் தெளித்துத் தெளித்து நன்றாகப் பொன்னிறம் ஆகும் வரை வறுக்க வேண்டும். மாவு நன்கு வறுபட்டதும் சீனி கலந்து சாப்பிடலாம் இந்த ஓட்டு மாவு முறுக்குப் பொடி போல மிகவும் சுவையாக இருக்கும். 

வறுக்கும் ஓடு என்பது ஒரு பக்கம் உடைந்த மண் பானை. ஆனால் விளிம்பு இருக்க வேண்டும். உடைந்த பாகம் வாயாகச் செயல்படும். வறுப்பதற்கு  வசதியாக இருக்கும். பெரிய ஆணி அல்லது இரும்புக் கம்பிகளில் தொங்க விட்டிருப்பார்கள். 

நான் முதலாம் ஆண்டு படிக்கும்போது எனது அறை தோழியின் ஓட்டு மாவில் உப்பு இல்லை என்று நாங்கள் குறை சொல்ல (எனது ஓட்டு மாவை அதற்குள் தீர்த்து விட்டோம்) தனக்குத் தாய் இல்லை; தந்தைதான் வறுத்துக் கொடுத்தார் என்று கண்ணீர் மல்கக் கூறியதும் நாங்கள் விக்கித்துவிட்டோம். பலமுறை மன்னிப்பு கேட்டோம். தந்தையார் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளாமல், பாட்டியின் உதவியுடன் பிள்ளைகளைக் கண்போல் பாதுகாத்தார். ஆறுமுகநேரியைச் சேர்ந்த அவர் ஒரு ஆசிரியர். அவர் மகளைப் பார்க்க வரும்போது ஓலைப் பெட்டியில் மிகச்சுவையான பெரிய பெரிய மிக்சர் வாங்கி வருவார். 

சகாயராணி கீழக்கரைச் சேர்ந்தவர். நாங்கள் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது நானும், பவுலாவும் மூன்று நாள் விடுமுறைக்கு (ஆயுத   பூஜை/ பக்ரீத்) சகாயராணி வீட்டிற்குச் சென்றோம். இந்த முறை பெற்றோர், வார்டன் சிஸ்டரிடம் அனுமதியை முதலிலேயே பெற்று விட்டனர். அனுபவம் தந்த பாடம். 

சகாய ராணியின் தந்தை மின்வாரிய ஊழியராக வேலை பார்த்ததால், பல இடங்களுக்கு மாற்றல் ஆகி, அவள் ஆறாம் வகுப்பு படிக்கும் போது கீழக்கரையில் வந்து குடியேறி இருக்கிறார்கள். அவள் தந்தை பல இடங்களுக்கு மாற்றலான போதும் அவர்கள் கீழக்கரையிலேயேதான் வசித்தார்கள். அந்த அளவு அந்த ஊர் அவர்களுக்குப் பிடித்துப் போனது. தந்தை மோட்சானந்தம் (இப்போது வயது 95),  தந்தை மின்வாரிய ஊழியராக எந்த ஒரு சிறு அன்பளிப்பையும் வாங்கியதே இல்லை. 

அவர்கள் வசித்த  வாடகை வீடு எளிமையாக அழகாக இருந்தது. தண்ணீர் கிணற்றில் இறைக்க வேண்டும். ஒரு கிணற்றை இரண்டு வீடுகள் பகிர்ந்து கொண்டன. கிணற்றின் மேல் பாதியில் ஒரு சுவர் இருக்கும். அங்கே நிற்பவர் இங்கே தெரியாது. ஆனால் கிணற்றின் மேல் – சுவரின் கீழ் கையை நீட்டி பொருட்களைப் பரிமாறிக் கொள்வார்கள். அந்த கிணறு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கிணற்றைப் பகிர்ந்த அடுத்த வீட்டு ஆசிரியை தன் மகனுடன் தனியாக வசித்து வந்தார். அவர் ஒருநாள் எங்களைக் காலை உணவுக்கு அன்போடு அழைத்தார். சர்க்கரைப் பொங்கலும், பருப்பு வடையும் தந்தார். இந்த மாதிரி காலை உணவு வித்தியாசமாக (எங்கள் வீட்டில் பொங்கல் செய்ததே இல்லை), நன்றாக இருந்தது. 

இதே மாதிரி சகாய ராணியின் வீட்டிற்கு இரண்டு வீடுகள் தள்ளி செய்யது என்ற தோழி பக்ரீத் அன்று மதிய உணவுக்கு அழைத்திருந்தாள். பக்ரீத் அன்று சிலர் கொடுக்கும் குருபானியை (கால்நடைகளைப் பலியிடுதல்) சிலர் இலவசமாகப் பெற்றுச் சென்றதை வேடிக்கை பார்த்தோம். கீழக்கரை இஸ்லாமியர்களிடையே கணவன் தான் மனைவி வீட்டோடு வசிக்க வேண்டும். எனவே பெண்ணுக்குச் சீதனமாக வீடு அல்லது வீடு கட்ட நிலம் கொடுக்க வேண்டும். முடியாதவர்களுக்கு ஜமாத் உதவி செய்யும்.

பக்ரீத் அன்று செய்யது வீட்டில் விசேஷமான உணவான அரிசி அடையும், வட்டலப்பமும் (முட்டையில் செய்த அல்வா), வேறு சில உணவும் இருந்தன. எல்லாமே சுவையாக இருந்தன. ஆனால் மதிய உணவாக இதைச் சாப்பிட்டு எனக்குப் பழக்கமில்லை. தோழியின் தோழி என்ற முறையில் பழகியது இன்னமும் எங்களுக்குள் தொடர்பு உள்ளது. ஒருமுறை எனது வீட்டிற்கு (கன்னியாகுமரி) குடும்பத்தோடு வந்து தங்கிச் சென்றார். இன்னொரு முறை கணவரோடு வந்திருந்தார். 

அந்தக் காலத்தில் அரசியில் கல் கிடக்கும். அரிசியைக் களைந்து கல் எடுக்க வேண்டும். களைதல் என்றால் நீக்குதல் என்று பொருள். அரிசியில் உள்ள கற்களை நீக்குவதால் அரிசி களைதல். அரிசியை ஓரளவு அதிக நீரில் போட்டு அப்படியும், இப்படியுமாக ஆட்டி அரிசியை வேறு ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொண்டே வர வேண்டும். கடைசியில் அரிசியைவிட அதிக எடை கொண்ட கற்கள் அடியில் தங்கிவிடும். அதனை எளிதில் நீக்கி விடலாம். ஆனால் அதே எடை கொண்ட சிறு கற்கள் கீழே தங்காது. அவை சோறு பொங்கும்போது, சோற்றுடனோ சோற்றின் அடியிலோ கிடக்கும். சகாய ராணி அம்மா மரிய நேசம் (இப்போது வயது 86) அரிசி களையும்போது வளையல் ஒன்றை அதில் போட்டுக் களைந்தார்கள். எல்லாவித கற்களும் அதில் தங்கி விடுமாம். அந்தக் காலத்தில் நெல்லை வாங்கி, அவித்து, காய வைத்து, குத்தி, புடைத்து, அரித்து, களைந்து அதன்பின்தான் சோறு பொங்க முடியும். இதில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வேலையும் தனித்தனியே பெரிய செயல் முறையைக் (Process) கொண்டதாகும்.

கீழக்கரையில் காலை உணவு பெரும்பாலும் இடியாப்பம் தான். அதற்கென இருக்கும் வீடுகளுக்குச் சென்று வாங்கிக் கொள்கிறார்கள் (முன்பு எங்கள் ஊரிலும் இட்டிலி இப்படித்தான் வீட்டிற்கு நாங்கள் சென்று வாங்குவோம். சட்டினி மட்டும்தான் கிடைக்கும் சாம்பார் கிடைக்காது). இடியாப்பம் பஞ்சு போலச் சரியான வடிவத்தில் வெள்ளை வெளேர் என்றிருந்தது. தற்போதைய இயந்திரம்கூட அப்படி இடியாப்பம்  பிழியாது. ஒரு ரூபாய்க்கு 12 இடியாப்பம். ஒரு இடியாப்பம் என்றால் பத்து பைசா. குருமா எல்லாம் கிடையாது. நாம் தேங்காய்ப் பால், இனிப்பு சேர்த்துச் சாப்பிட வேண்டியதுதான். அப்போது இடியாப்பம், ஆப்பம் இரண்டுமே அவ்வாறுதான் சாப்பிடுவோம். குழம்பு எதுவும் கிடையாது.

கீழக்கரை பாண்டியர்கள் காலத்தில் துறைமுகமாக இருந்துள்ளது. முத்துக் குளித்தலும் நடைபெற்றுள்ளது. அப்போது அதன் பெயர் பவித்திர மாணிக்கப் பட்டினம். சங்க கால இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளது.

அரேபியர்கள் வணிகத்திற்காக அதிக அளவில் இங்கு வந்ததால் இஸ்லாம் மார்க்கம்  பரவிற்று. இந்தியாவிலேயே பழமையான மசூதி இங்குதான் உள்ளது. 

சீதக்காதி வள்ளல், ராமநாதபுரம் அரசர் உதவியுடன் கட்டிய இந்து கோயில் அமைப்பில் இன்னொரு மசூதியும் உள்ளது. இந்தத் தளம் மசூதி குறித்த வரலாற்றைச் சொல்கிறது.

முதல் நாள் கடற்கரைக்குச் சென்றோம். 

கடற்கரை மிக அழகாகத் தூய்மையாக இருந்தது. நாங்கள் ஜெட்டி (jetty) பாலத்தின் மேல் நடந்து சென்றோம். கடலுக்குள் செல்வது போன்ற உணர்வைத் தந்தது. இவ்வாறு செல்வது இதுவே முதல் முறை. கலங்கரை விளக்கமும் இருந்தது. அதன்பின் ஒரு பெரிய மனிதருக்குச் சொந்தமான ஒன்பது பங்களாக்கள் அடங்கிய ஒரு பகுதிக்குச் சென்றோம். உடன்பிறந்தவர்கள் 9 பேருக்காகக் கட்டியதாம். அப்போதே நீச்சல் குளம் முதலிய சகல வசதிகளோடு கூடிய பெரிய பெரிய  பங்களாக்கள். ஆனால் ஒரு சில வீடுகளில்தான் ஆட்கள் வசித்தார்கள். செக்யூரிட்டி எங்களை உள்ளே வந்து பார்வையிட அழைத்தார். ஆனால் நாங்கள் போகவில்லை. 

ஒரு தடவை இந்த ஒன்பது பங்களாக்களைச் சேர்ந்த 9 பேருக்கு ஒரே நேரத்தில் அங்கே திருமணம் நடத்தினார்களாம். சகாய ராணியின் தந்தை இந்த பங்களாக்கள் கட்டி முடித்தபோது மின் இணைப்பு கொடுக்கும் பணி செய்ததால் அவர்களுக்கும்  திருமண அழைப்பு கொடுத்தார்களாம். எல்லாம் ஒன்பது ஒன்பதாகச் செய்தார்களாம். ஒன்பது தொட்டிகளில் ஒன்பது வகையான குளிர் பானங்கள், ஒன்பது வகையான உணவு வகைகள், இப்படி…பெரும்புள்ளிகள், நடிகர் நடிகைகள் வந்து இறங்க புதிய ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டதாம். தாம்பூலப் பையில் வால்நட், பாதாம், பிஸ்தா என்று ஒன்பது வகையான கொட்டை பருப்பு வகைகளைப் போட்டுக் கொடுத்தார்கள். இந்தத் தாம்பூலப் பையை சகாயராணி அப்படியே என்னிடம் கொண்டு வந்து கொடுத்தாள். வால்நட்டை நான்  அப்போதுதான் பார்த்தேன். பாதாம், பிஸ்தா போன்றவை எனது தந்தை கொண்டு வருவார்கள் என்பதால் பார்த்திருக்கிறேன். 

பின்னர் சகாயராணியின் பள்ளித் தோழி நக்கிபா வீட்டிற்குச் சென்றோம். வீடு பிரம்மாண்டமாக இருந்தது. ஆனால் தெரு ஐந்து அடி தான் இருக்கும். அண்ணாந்து வீட்டைப் பார்க்க இயலவில்லை. அங்கு நிறைய வீடுகள் அவ்வாறுதான் இருந்தன. ஒரு சில வீடுகளைத் தவிர எல்லா வீடுகளிலும் ஆண்கள் அரேபிய தேசங்களில்தான் வேலை பார்த்து வந்தார்கள். எனவே அதிக பணப்புழக்கம் உள்ள ஊர். எங்குப் பார்த்தாலும் பெண்கள்தான். ஆண்களை மருந்துக்குக்கூட காண முடியவில்லை. வீடு அப்போதே ஷோ கேஸ், வாஷ் பேசின் போன்ற சகல வசதிகளோடும், பளிங்குத்தரையோடும் இருந்தது. விதவிதமான பெயர் தெரியாத பலகாரங்கள் தந்து உபசரித்தார்கள். மிக மிக சுவையாக இருந்தன. 

அந்த வீட்டில் மருதாணிச் செடி நின்றிருந்தது (அதுவரை நான் வீடுகளில் மருதாணி செடி வளர்த்துப் பார்த்ததில்லை). எனக்கு மருதாணி வைப்பது பிடிக்கும் என்று மருதாணி அவர்கள் பறித்துத் தர, வீட்டிற்கு வந்ததும் சகாயராணி அம்மா அம்மியில் அரைத்துத் தர, இரவு விரல்களில் தொப்பி போல வைத்திருந்தோம். காலையில் நான் எழுந்து  கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தால் கன்னத்தில் ஆரஞ்சு நிறத்தில் புள்ளி. சகாயராணியும், பவுலாவும் சேர்ந்து நான் தூங்கும் போது கன்னத்தில் மருதாணி வைத்துள்ளார்கள். நல்லவேளை கொஞ்ச நேரத்தில் அது விழுந்து விட்டது என்று நினைக்கிறேன். எனவே அழுத்தமான நிறமாகவில்லை. இரண்டு பேரும் சொல்லிச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். சகாயராணி அம்மாதான் ‘என்ன அந்தப் பிள்ளையை இப்படி பண்ணிட்டீங்க’ என்று எனக்குப் பரிந்து பேசினார்கள்.

இரண்டாம் நாள் விஜயதசமி. பகல் உணவுக்குப் பின் சகாராணி அப்பா ராமநாதபுரம் அரண்மனையைப் பார்க்கக் கூட்டிச் சென்றார்கள். நவராத்திரிக்கு மட்டுமே அரண்மனை திறந்திருக்கும். அங்கே போர்த் தளவாடங்கள் மற்றும் சில சேதுபதி மன்னர்களின் புகைப்படங்களைப் பார்த்தோம். விவேகானந்தரை சிகாகோ மாநாட்டுக்கு அனுப்பியவர், அமைச்சராக இருந்தவர் என்று புகைப்படங்களைக் காண்பித்து யாரோ சொன்னது நினைவில் உள்ளது. ராமநாதபுரம் அரண்மனையின் தர்பார் மண்டபத்தில் தான் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் வரும் வீரபாண்டிய கட்டபொம்மனும், ஜாக்சன் துரையும் சந்தித்துச் சண்டையிடும் சம்பவம் உண்மையாக நடைபெற்றது. அங்கேதான் அந்தக் காட்சியின் படப்பிடிப்பும் நடந்ததாம்.

எனக்கு ஒரு டார்ச் லைட் தேவையாக இருந்தது. டார்ச் லைட் பெரிய ஊர்களில் பெரிய கடைகளில்தான் அப்போது கிடைக்கும். அதை சகாயராணி அப்பா வாங்கித் தந்தார்கள். பிளாஸ்டிகில் கிட்டத்தட்ட வாடாமல்லி வண்ணத்தில் கைக்கு அடக்கமான இரண்டு சிறிய பேட்டரி செல் போடக் கூடியது, எவரெடி கம்பெனி; அழகாக இருந்தது. அப்போதெல்லாம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில்  பெரிய டார்ச்தான் பெரும்பாலும் கிடைக்கும்.

நாங்கள் மூவரும் ஒரு புகைப்பட நிலையத்தில் பாம்பன் பாலம் பின்னணியில் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். இரவு உணவிற்கு முனியாண்டி விலாசில் முட்டை கொத்து பரோட்டா வாங்கி தந்தார்கள். நான் முதன்முதலாக முட்டை பரோட்டா சாப்பிட்டது அங்கேதான். மிகவும் சுவையாக இருந்தது.

மூன்றாம் நாள் மாலை ‘கழுகு’ திரைப்படம் பார்க்கச் சென்றோம். திரையரங்கின் பெயர் லக்கி தியேட்டர். படம் வெகு விறுவிறுப்பாகச் சென்றது. அதில் வரும் பேருந்து அப்போது பெரிதாகப் பேசப்பட்டது. ரஜினி படங்கள் எல்லாம் ‘பிச்சுக்கிட்டு’ ஓடிய காலம் அது. மறுநாள் கிளம்பி விடுதிக்கு வந்து சேர்ந்தோம். சகாய ராணி அம்மாவும் அருமையாகச் சமைப்பார்கள். கறிக் குழம்பு, சாம்பார், வெண்டைக்காய் பொரியல் என விதவிதமாக கொடுத்தார்கள்.  கீழக்கரை பயணம் மறக்க முடியாத இனிய பயணம். 

இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில் வேதியல் துறையைச் சார்ந்த ஜோதி சிஸ்டர் வார்டன். அவர்கள் குரூப் ஸ்டடி செய்ய வசதியாக இருக்கும் என்று ஒரு அறையில் ஒரே துறையைச் சார்ந்தவர்களையே போட்டார்கள். அதனால் ஒரே துறையைச் சார்ந்தவர்கள் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது பி யு சி முறை நீக்கப்பட்டது. பிளஸ் 2 முடித்த மாணவிகள் நேரடியாக முதலாமாண்டு வந்து சேர்ந்தார்கள். பின் அந்த வழக்கமே இன்றும் தொடர்கிறது. 

விஜய விஷாலாட்சிக்கு,  நாங்கள் மூன்றாம் ஆண்டு படிக்கும்போதே  திருமணம் நடைபெற்றது (அவளது மாமா மகனுடன்). அதை ஒட்டி மூக்கு குத்திக் கொண்டாள். திருமணத்தன்று கல்லூரி விடுமுறை. எங்கள் வகுப்பு விடுதி மாணவிகள் அனைவரும் அனுமதி பெற்று, திருமணத்திற்குச் சென்று வந்தோம். அனுமதி அளித்ததற்குப் பெரிதாக மகிழ்ந்தோம். நலங்கு வைத்தல் போன்ற சம்பிரதாயங்களை அவளது திருமணத்தின்போதுதான் முதல் முதலாகப் பார்த்தேன். 

கல்லூரியில் இணைந்து வாழ்ந்த பலரும் இன்றும் நல்லபடி தொடர்பில் உள்ளோம். சிலருடன் அக்கா, தம்பி, அண்ணன், தங்கை என குடும்பம் முழுவதுமே உறவான நண்பர்களும் உண்டு. கள்ளிகுளம் கோவிலின் நூற்றாண்டு விழா 1985-ம் ஆண்டு நடைபெற்றது. அதற்குச் சகாய ராணி, அம்மா, பெரியம்மா எல்லோரும் வந்து சில நாள்கள் தங்கிச் சென்றார்கள். என் அம்மா உடல்வலு இல்லாதவர்கள். அதனால் வேறு வீடு என்ற சிந்தனையே இல்லாமல் அவர்களே அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்தார்கள். நான் ஊரில் இல்லை என்றாலும், தோழிகள் என் வீடு சென்று என் அம்மாவைப் பார்த்து வருவார்கள். தங்குவார்கள். கருப்பட்டி பனங்கிழங்கு எனக் கொண்டு கொடுப்பார்கள்.

அகில இந்திய வானிலை மையத்தில் வேலை, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் டீன், வ உ சி கல்வியியல் கல்லூரி பேராசிரியர், பெரியகுளம் கல்லூரியில் பேராசிரியர், பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர் என பல்வேறு துறைகளில் பணிபுரிந்த தோழிகள் பலரும் இப்போது ஓய்வு பெற்றுப் பேரக்குழந்தைகளுடன் வாழ்கிறோம். 

தொடர்பு கொள்ளும் வசதி குறைவான காலத்தில் படித்த நாங்கள், இவ்வளவு நெருக்கத்தை உருவாக்கியிருக்கிறோம் என்றால், இன்றைய தலைமுறை இன்னமும் கூடுதல் நெருக்கமாக வாழலாம். வாழ்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இப்பகுதியை நிறைவு செய்கிறேன். 

படைப்பாளர்

பொன் ஜெய இளங்கொடி

MSc. Chemistry. MSc. Psychology. B.Ed. PGDGC. வயது 62. கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். இவர் PUC மற்றும் BSc. புனித மரியன்னை கல்லூரி, தூத்துக்குடியில் 1978 முதல் 1982 வரை படித்தவர். அப்போது அவர் பெற்ற அனுபவங்களை இந்தத் தொடரில் எழுதியுள்ளார். இது இவரின் முதல் முயற்சி.