இணைய அச்சுறுத்தல்கள் நமக்கொன்றும் புதியதல்ல. அதிலும் இப்போதெல்லாம் பதின்ம வயதினர்கூட அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். முன்பெல்லாம் தோழிகள், அல்லது தோழர்களுக்கு இடையே சண்டைகள், கைகலப்புகள் வந்தால் அன்று மாலையே பழைய நிலைக்கு வந்துவிடும். வீட்டில் உள்ளோர்கூட அறிய மாட்டார்கள். ஆனால், இன்று அப்படி இல்லை. இரண்டு நண்பர்களுக்கு இடையே நடக்கும் சண்டையை இன்னொருவர் காணொளியாக்கி அது ஃபேஸ்புக்கில் லைக்குகளுக்காகப் பதிவாகிறது. பெற்றோர் இடையே பள்ளிகளின் நிர்வாகம் என்ன செய்கிறது, பெற்றோர் வளர்ப்பு இப்படித்தானா என்று தொடங்கி சொல்வன்முறை முதல் அடக்குமுறை வரை செல்கிறது. அத்தோடு முடிந்தால்கூடப் பரவாயில்லை. அடுத்த வருடம், நினைவடுக்கில் அதே காணொளி வந்து ஆறிய புண்ணைக் கிளறிவிட்டுப் போகிறது.

பதின்ம வயதினருக்கு இணைய அச்சுறுத்தல் ஒருபுறம் என்றால், ஒரு திரைப்படம் வந்தால் நாயகியர் படும்பாடு வேறுவிதம். இப்போது த்ரிஷா எந்த மாதிரி பாத்திரத்தில் நடித்திருக்க வேண்டும், அவர் என்ன குணாதிசயங்கள் கொண்டவர் என்று அவர்மீதே செலுத்தப்படும் வன்முறை கட்டுக்கடங்காமல் ஆற்றுவெள்ளம் போலப் பெருகிறது. யாரேனும் விவாகரத்து செய்துவிட்டால்கூட, இந்த வன்முறைகளும் அச்சுறுத்தலும் வந்தால் வழிப்போக்கர்கள் என்ன செய்ய வேண்டும்?

இணைய ஆராய்ச்சியாளர்களின் கண்டறிதல்களின்படி, இணைய அச்சுறுத்தல்கள் முக்கியமாக மக்களின் ’நியாயமான உலக நம்பிக்கை’ காரணமாக நடக்கிறது. மக்கள் ’இந்த உலகம் நியாயமானது, நல்லவர்களுக்கு நல்லது நடக்கும், கெட்டவர்களுக்குக் கெட்டது நடக்கும்’ என்று நம்புகிறார்கள். யாராவது பாதிக்கப்படும் போது, ’இவரிடம் ஏதோ தவறு இருக்கும்’ என்று நினைத்து, பாதிக்கப்பட்டவரையே குறை சொல்கிறார்கள். இணையத்தில் எதிர்மறையான விஷயங்களைப் பகிர்பவர்களை மக்கள் ’”கவனம் பெற விரும்புபவர்கள்’ என்று நினைத்து, அவர்களுக்கு உதவ மறுக்கிறார்கள். எதிர்மறை சார்பு கோட்பாட்டின்படி (Negativity Bias), நேர்மறையான கருத்துகளைவிட எதிர்மறையான கருத்துகள் மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கின்றன. சமூக அடையாள கோட்பாட்டின்படி, மக்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அதிக ஆதரவு கொடுக்கிறார்கள். இணைய ஆராய்ச்சியின்படி 54% மக்கள் பாதிக்கப்பட்டவரையே குறை சொல்லும் போக்கு உள்ளது.

சின்மயி விவகாரம்:

பிரபல பாடகி சின்மயி  கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்த போது, சமூக வலைதளங்களில் பலர் அவரைத் தாக்கினார்கள். ’ஏன் இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு சொல்கிறார்’, ’இது கவனம் பெறுவதற்காக’ என்று குறை சொன்னார்கள். இது இணைய ஆராய்ச்சியின் ’பாதிக்கப்பட்டவரைக் குறை சொல்லும்’ கோட்பாட்டை நிரூபிக்கிறது.

ஓர் இளம் தாய் தன் குழந்தைக்குச் சோறூட்டும் போது அந்தக் குழந்தைத் தவறுதலாக விழுந்துவிட்ட காட்சி நினைவிருக்கிறதா?. இதை வீடியோவாகப் பதிவேற்றிய பிறகு, இணைய பயனர்கள் அந்தத் தாயைக் ’கவனம் பெறுவதற்காக’ என்று தாக்கினார்கள். இந்த சைபர் தாக்குதல் காரணமாக அந்தத் தாய் தற்கொலை செய்து கொண்டார்.

இணைய பாதுகாப்பு கல்வி:

குழந்தைகளுக்கு இணையத்தின் சாதக பாதகங்களைக் கற்றுக்கொடுங்கள். இணைய ஆராய்ச்சியின்படி அதிகமாகத் தனிப்பட்ட விஷயங்களையும், எதிர்மறையான கருத்துகளையும் பகிராமல் இருக்கச் சொல்லுங்கள்.

தனியுரிமை அமைப்புகள்:

சமூக வலைதளங்களில் யார் என்ன பார்க்கலாம், கருத்து எழுதலாம் என்பதைக் கட்டுப்படுத்தும் அமைப்புகளை (control features) பயன்படுத்த கற்றுக்கொடுங்கள். உடல் நலம் அல்லது மனநலப் பிரச்னைகள் உள்ளவர்கள் அசாதாரண நடத்தைக் காட்டக்கூடும் என்பதால் அவர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு தேவை.

நேர்மறையான பகிர்வு:

நல்ல விஷயங்களை மட்டுமே பகிர வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள். இணைய ஆராய்ச்சியின்படி நேர்மறை பகிர்வுகளுக்கு 60% அதிக ஆதரவு கிடைக்கிறது. ’நேர்மறையான ஆற்றல்’ பகிர்வை ஊக்குவிக்கும் சீனக் கலாச்சார மதிப்புகளின்படி, எதிர்மறையான பதிவுகள் சமூக வெறுப்பை ஏற்படுத்துகிறது.

நம்பிக்கையான சூழல்:

குழந்தைகள் ஏதேனும் பிரச்னையில் சிக்கினால் பெற்றோரிடம் தைரியமாகச் சொல்ல வேண்டும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.

உணர்வுப்பூர்வ கல்வி:

மற்றவர்களின் வலிகளைப் புரிந்துகொள்ளும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.

இணைய பழக்கவழக்கங்கள்:

அதிகமாக இணையதளங்கள் (அல்லது Facebook, Twitter) பயன்படுத்துபவர்கள் இணைய கொடுமைகளுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம்.

நமக்குத் தெரிந்தவரை எப்படி ஆதரிப்பது?

உடனடி ஆதரவு:

யாராவது இணையத்தில் கொடுமைப் படுத்தப்படுவதைப் பார்த்தால், அவர்கள் முன்பு என்ன செய்தார்கள் என்று பார்க்காமல் உடனே ஆதரவு கொடுங்கள்.

பார்வையாளர் தலையீட்டு நடவடிக்கைகள்:

’பாதிக்கப்பட்ட நபருக்கு- ஆதரவாகக் கருத்துச் சொல்லுங்கள்’, ’தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு ஆறுதல் சொல்லுங்கள்’, ’கொடுமைப்படுத்துபவரை நிறுத்தச் சொல்லுங்கள்’,  ’தனிப்பட்ட முறையில் பேசி தவறைச் சுட்டிக்காட்டுங்கள்’, ’அவருடைய கருத்துகளை ஃபேஸ்புக் தளங்களுக்குப் புகார் செய்யுங்கள்’. தமிழ்நாட்டில் நடந்த சம்பவங்களில் மக்கள் பாதிக்கப்பட்டவர்களை முதலில் குறை சொன்னதுதான் பிரச்னையை அதிகப்படுத்தியது.

பாதிக்கப்பட்டவரைக் குறை சொல்லாதீர்கள்:

’இவருக்குதான் இப்படி ஆகிறது’, ’இது கவனம் பெறுவதற்காக’ என்று நினைக்காமல், கொடுமைப்படுத்துபவரை எதிர்த்துக் குரல் கொடுங்கள்.

பட்டம்பூச்சி தத்துவம் (Butterfly Effect):

க்ரீன் டாட்டின் கணிதப்படி, ஒரு சிறிய நல்ல செயல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஒருவரை ஆதரிக்கும் ஒரு சின்ன கருத்து அவர் வாழ்க்கையையே காப்பாற்றலாம். அதே போல் ஒரு சின்ன தாக்குதல் ஒருவரைத் தற்கொலைக்குத் தள்ளலாம். எனவே நமது ஒவ்வொரு கருத்தும் பொறுப்புடன் இருக்க வேண்டும்.

நெருங்கிய உறவுகளின் பொறுப்பு:

ஆராய்ச்சியின்படி நெருங்கிய நண்பர்களுக்கு 70% அதிக ஆதரவு கிடைக்கிறது. எனவே குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்வந்து ஆதரவு கொடுக்க வேண்டும்.

மனநல ஆதரவு:

பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ஆலோசனை மற்றும் மனநல உதவி அளிக்க வேண்டும்.

உண்மையான ஆன்லைன் உறவுகள்:

மேலோட்டமான ’நன்றாக இருக்கிறது’ என்கிற கருத்துகளுக்குப் பதிலாக, ’இந்த ஒளிப்படம் உண்மையிலேயே அந்தத் தருணத்தின் அழகான வெளிச்சத்தைப் பிடித்துள்ளது. இதைப் பகிர்ந்ததற்கு நன்றி’ போன்ற உண்மையான மற்றும் ஆழமான கருத்துகள் நம்பிக்கையையும் சமூக உணர்வையும் அதிகரிக்கும். ஒற்றைச் சொல்லில் பிடித்திருக்கிறது, அருமை, நெத்தியடி என்பது போலச் சொல்லாமல் எதனால், ஏன் என்று காரணத்தோடு உண்மையாக ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

இணைய அச்சுறுத்தல்களைப் பற்றி அறிய ஓர் ஆரய்ச்சி சில அரசியல் சட்ட பல்கலைக்கழகங்களில் 2022 மார்ச் முதல் ஜூலை வரை நடத்தப்பட்டன. இதன் மூலம் தெரிய வந்த சில புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி தரக்கூடியவையாக இருந்தன.

அதன்படி,  COVID-19 காலத்தில் இணைய கொடுமைகள் 8.9% முதல் 49.2% வரை அதிகரித்துள்ளது. கல்லூரி மாணவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் கடந்த ஆறு மாதங்களில் இணைய கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் அறிந்து கொண்ட சில முக்கிய கருத்துகளில் முதலாவதாகப் பாதிக்கப்பட்டவர் நேர்மறையான விஷயங்களைப் பகிர்ந்தால் 60% அதிக ஆதரவு கிடைக்கிறது. குறைந்த தனியுரிமை சூழலில் நேர்மறையான சுய-வெளிப்பாடு பார்வையாளர் தலையீட்டை அதிகரிக்கிறது. இரண்டாவதகாக எதிர்மறையான பதிவுகள் மக்களை 54% அதிகமாக பாதிக்கப்பட்டவரை குறை சொல்ல வைக்கிறது. மூன்றாவதாக, நெருங்கிய நண்பர்களுக்கு 70% அதிக ஆதரவு கிடைக்கிறது. மனிதர்களுக்கு இடையே உள்ள இடைவெளி (Interpersonal Distance) பாதிக்கப்பட்டவரைக் குறை சொல்வதை 77% குறைக்கிறது.

வன்முறையைப் பல வகைகளில் தடுக்க முயல வேண்டும். இணைய வழி அச்சுறுத்தல்கள் மூலம் முகம் தெரியாத காரணத்தால் பலரும் அச்சுறுத்த இயலும் என்பதால், யார் வன்முறை செய்யக் கூடியவர் என்பதே தெரியாத சூழலில் கவனமாக இருத்தல் அவசியம். எனவே அதிகமான வழிப்போக்கர்களுக்கும் அவசியம்.

(தொடரும்)

படைப்பாளர்:

பத்மா அர்விந்த்

மருத்துவத்தில் முனைவர் பட்டமும் நிர்வாகவியலில் மேலாண்மை பட்டமும் பெற்றவர். அமெரிக்க மத்திய மாநில அரசின் மனிதவள மற்றும் உடல்நலத் துறையின் கொள்கை மாற்ற ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். அமெரிக்க அரசியல் குறித்து மெட்ராஸ் பேப்பர் வார இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘கனவுகள் மின்னும் தேசம்’ எனும் புத்தகம் ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறது.