நம்முடைய மனம் எந்த விஷயத்தோடு தொடர்பு கொண்டுள்ளதோ அது தொடர்பான அனுபவங்கள் எண்ணங்களாகப் பரிணமிக்கின்றன. இந்த அனுபவங்களை மனம் அளவிடுவதே எண்ணங்களாக மாறுகின்றன.

எந்த ஒரு விஷயத்தையும் நேர்மறை மற்றும் எதிர்மறை என்ற இரண்டு விதமாக சிந்திக்கலாம். நேர்மறை நல்ல ஆற்றலையும், எதிர்மறை அதற்கு மாறான ஆற்றலையும் தருகிறது. இதற்கு ஒரு அழகான உதாரணத்தைச் சொல்லலாம். ஒரு ரோஜாச் செடியில் அழகான பூவைக் காண்பவர்கள் நேர்மறையான சிந்தனைகள் உடையவர்களாகவும், அதன் கூரிய முட்களைக் காண்பவர்கள் எதிர்மறையான சிந்தனைகள் உள்ளவர்களாகவும் கருதப்படுவார்கள்.

நாம் எப்போதும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் அந்த மகிழ்ச்சியும், நிம்மதியும் எல்லோருக்கும் கைவரப் பெறுகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நமது மகிழ்ச்சியும், நிம்மதியும் நம்மிடம்தான் இருக்கின்றன. அதை நிறையப் பேர் தேடிக் கண்டறிவதில்லை. எப்போது இவற்றை வெளியில் தேடுகிறோமோ அப்போதே இவை நாம் என்ன முயன்றாலும் கைவரப் பெறுவதில்லை. ‘மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும் வெற்றி தருணங்களில் இல்லை; அதை ஏற்றுக் கொள்ளும் நம் மனநிலையில்தான் இருக்கிறது..’ என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

சிலர் இருக்கிறார்கள். எவ்வளவு பொருள், பணம் கிடைத்தாலும் தன்னிடம் இல்லாத ஒன்றுக்காகக் கவலைப்பட்டுக் கொண்டு, இருப்பதையும் அனுபவிக்காமல் வீணடித்து விடுவார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள். ஒரு சின்னஞ்சிறு வெற்றியோ, சந்தோஷமோ, பொருளோ கிடைத்தாலும் போதும். அதைக் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள். அவர்களிடம் எப்போதும் மகிழ்ச்சியும், நிம்மதியும் கொட்டிக் கிடக்கும்.

‘நல்லதே நடக்கும், நடக்கட்டும்’ என்று எண்ணுவது அவ்வளவு சுலபம் அல்ல. நல்லதை நினைக்கும் போதுதான் அல்லதுகள் பலதும் வரிசை கட்டி வந்து மனதில் மோதும். ஏனென்றால் நம்மைச் சுற்றிலும் எதிர்மறை எண்ணங்கள்தான் பெருகிக் கிடக்கின்றன. வீட்டில், சமூகத்தில், ஊடகங்களில் எங்குமே எதிர்மறைச் செய்திகள்தான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எதிர்மறை விஷம்போல் பரவுகிறது. நேர்மறை அவ்வளவு வேகமாகப் பரவுவது இல்லை. எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி இருக்கிறார். எப்போது பேசினாலும் கவலையோடும், வருத்தத்தோடும்தான் பேசுவார். 

“நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டால், “சாவாம இருக்கேன்…” என்பார் பட்டென்று. அரைமணி நேரம் அவருடன் பேசினால் இருபத்தொன்பது நிமிடங்கள் புலம்பலாகவே இருக்கும். நம்முடைய சக்தி அனைத்தும் வடிந்து விடும். அவருக்கு எத்தகைய நல்லது நடந்திருந்தாலும் நடக்காத ஒன்றைப் பிடித்துக் கொண்டுதான் பேசுவார். இத்தகைய எதிர்மறை எண்ணங்கள் கொண்ட மனிதர்கள்தான் நம்மிடையே அதிகமாக இருக்கிறார்கள். 

நேர்மறை எண்ணங்களை நமக்குள் வளர்த்துக் கொள்ளவேண்டும். ஒரு வெற்றுப் பாட்டிலில் உள்ள காற்றை வெளியேற்ற வேண்டும் என்றால் அதனுள் முதலில் தண்ணீரை ஊற்ற வேண்டும். அப்போது காற்று தானாகவே வெளியேறிவிடும். அது போல நாம் எதிர்மறை எண்ணங்களை நமக்குள்ளிருந்து அகற்ற வேண்டும் என்று நினைத்தால், முதலில் நம் மனதை நேர்மறைச் சிந்தனைகளால் நிரப்ப வேண்டும். அப்போது தானாகவே நாம் நினைத்தது நடக்கும். 

‘எண்ணிய எண்ணியாங்கு எய்துபர் எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின்’ என்பது வள்ளுவர் வாக்கு. ஒரு செயலைச் செய்து முடிக்க எண்ணுபவர் அந்தச் செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மன உறுதியும், வலிமையும் உடையவராக இருந்தால், அவர் எண்ணியவாறு வெற்றி பெறுவார் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. எண்ணங்களுக்கு எப்போதுமே மிகுந்த வலிமையும், சக்தியும் உண்டு. ‘எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்’ என்பது பாரதி வாக்கு. நம் எண்ணங்களால் நம்முடைய வாழ்வில் நிச்சயம் தாக்கம் உண்டு.

எண்ணுவதெல்லாம் உயர்வாகவே இருக்க வேண்டும். சாதகமான சூழலில் நல்ல எண்ணங்களோடு இருப்பது முக்கியமில்லை. நமக்குப் பாதகமான சூழ்நிலையிலும்கூட நாம் நல்ல எண்ணங்களை மட்டுமே கைக்கொள்ள வேண்டும். ஏனெனில் நம் மனம் எதை அதிகமாக உள்ளே அனுமதிக்கிறதோ, அதை ஆழமாக வேரூன்றிக் கொள்ளும். அதனால் எதிரமறை சிந்தனைகளுக்கு ‘தடா’ போடுவோம். “நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்கிறார் விவேகானந்தர்.

இதற்கு ஒரு கதை சொல்லுவார்கள். ஒரு நாட்டின் அரசரும், மந்திரியும் மாறுவேடத்தில் நகர் வலம் சென்று கொண்டிருக்கும் போது, வழியில் ஒரு மரக்கடையைத் தாண்டிச் செல்வார்கள். அப்போது அரசனின் மனதில், ‘அந்தக் கடைக்காரனைக் கொன்று விட வேண்டும்’ என்ற எண்ணம் தோன்றும். அதை மந்திரியிடம் தெரிவிப்பார். அதிர்ச்சியடைந்த மந்திரி மறுநாள் காலை தனியே வந்து அந்த கடைக்காரரைச் சந்திப்பார். ‘விறகுகள் நன்றாக விற்பனையாகிறதா?’ என்று விசாரிப்பார். அவர் வருத்தத்துடன்,”இல்லை. என்னிடம் யாரும் விறகுகளை வாங்குவதில்லை. நல்ல சந்தனக் கட்டைகளை வைத்திருக்கிறேன். அவற்றை முகர்ந்து பார்ப்பதோடு சரி, யாரும் காசு கொடுத்து வாங்குவதில்லை. ஒருவேளை இந்த நாட்டின் அரசன் இறந்தால் இந்த சந்தன கட்டைகள் அவரை எரிக்க விற்பனையாகலாம்…” என்றார்.

அதிர்ச்சியடைந்த மந்திரி ‘ஓ… இவரது இந்த எண்ணத்தால்தான் நேற்று அரசருக்கும் எண்ணம் தடுமாறியிருக்கிறது’ என்று புரிகிறது. அவர் மேற்கொண்டு பேசாமல், பத்து சந்தனக் கட்டைகளை வாங்கிக் கொண்டு அரசரிடம் செல்கிறார். “நேற்று இரவு நாம் பார்த்த கடைக்காரர் தன் அன்புப் பரிசாக இதனை உங்களுக்கு அளித்திருக்கிறார்” என்று அவரிடம் கொடுத்தார். அவற்றை மகிழ்ச்சியுடன் வாங்கிய அரசர், தன் மனதுக்குள் அந்த கடைக்காரர் குறித்து தவறான எண்ணம் ஏற்பட்டதற்காக உள்ளபடியே வருந்தினார். மந்திரியிடம் சில பொற்காசுகளை கொடுத்து அந்த கடைக்காரரிடம் சேர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மந்திரி அந்தக் காசுகளைக் கொண்டு வந்து கடைக்காரரிடம், “இந்நாட்டு அரசர் தன் அன்புப் பரிசாக இந்தப் பொற்காசுகளை அளித்திருக்கிறார்” என்று கூறிக் கொடுக்கிறார். கடைக்காரரின் வறுமை நீங்குகிறது. கடைக்காரர் மனதுக்குள் அரசர் குறித்து தனது கெட்ட எண்ணம் குறித்து வருந்துகிறார். மந்திரியால் இருவரும் மனம் திருந்துகிறார்கள். அடுத்த முறை சந்திக்கும்போது இருவர் மனமும் அடுத்தவர் நலமுடன் வாழ வாழ்த்துகிறது. நமது எண்ணங்களின் வலிமையையும், அது ஏற்படுத்தும் பாதிப்புகளையும் இந்தக் கதை விளக்குகிறது. 

Photo by Dakota Corbin on Unsplash

நேர்மறையான சிந்தனைகள் மூலம் எத்தகைய பிரச்சினைகளையும் ஓட ஓட விரட்டலாம். என் தோழி ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு மிகப்பெரிய துரோகத்தையும் சோதனையையும் சந்தித்தார். சில நாள்கள் துவண்டு கிடந்தவரை மீட்டெடுத்து உற்சாகப்படுத்தியது அவரது நேர்மறைச் சிந்தனைகளே. அவர் விரைவிலேயே அதிலிருந்து மீண்டு விட்டார். வாழ்க்கையை இலகுவாகவும், பிரச்சினைகளை எளிதாகவும் இப்போது கையாள்கிறார். அவரது மனம் முழுக்க மகிழ்ச்சி நிரம்பிக் கிடக்கிறது.

அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தால் வாழ்க்கை இனிமையாகத் தோன்றும். அவரைச் சுற்றியிருப்பவர்கள் எப்படி இருந்தாலும் அவர் தன்னை நேர்மறை எண்ணங்களால் புதுப்பித்துக் கொள்கிறார். அவரைப் பார்த்து எப்போதும் உற்சாகமாக இருப்பது எப்படி என்று கற்றுக் கொள்ளலாம். இதுவும் கடந்து போகும் என்று வாழ்க்கையை அவர் அழகாக எதிர்கொள்கிறார். நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொண்டால் நாம் மகிழ்ச்சியாக இருப்பதோடு, நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்வாக வைத்துக் கொள்ளலாம்.

நமக்குத் தெரியாமலே நம்முள் வளரும் தன்னியக்க எதிர்மறை எண்ணங்களை (Automatic Negative Thoughts) ஆரம்பத்திலேயே கண்டறிந்து அழிக்க வேண்டும். அத்தகைய எதிர்மறை எண்ணங்களை நீக்க நாம் புதிதாக ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ளலாம். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்ற ஏதாவதில் ஈடுபடலாம். இசை, நடனம், புத்தக வாசிப்பு போன்றவற்றுக்கு நேரம் ஒதுக்கலாம். தனிமையில் உழன்று கொண்டு நிலைமையை மேலும் சிக்கலாக்கிக் கொள்ளாமல் நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசலாம். அதனாலும் தீர்வுகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. 

எதிர்மறை எண்ணங்கள் தேவையற்ற மன உளைச்சல், பதட்டம், சோர்வு போன்றவற்றுக்கு வழி வகுக்கும். இத்தகைய எண்ணங்களால் நமக்கு இழப்புகள்தான் ஏற்படும். இன்னொரு கதை உண்டு. ஒரு ஊரில் ஒரு பயில்வான் வாழ்ந்து வந்தான். அவனது அடாவடித்தனம் பொறுக்காத ஊர்மக்கள் அவனை ஒழிக்கத் திட்டம் தீட்டுகின்றனர். ஒருநாள் காலை அவன் வயலுக்குப் போய்க் கொண்டிருக்கும்போது எதிரே வந்து ஒருவன், “என்ன அண்ணே… ஆளே ஓஞ்சு போயிட்டீங்க? உடம்பு கிடம்பு சரியில்லையா..?” என்க, இவனுக்குக் குழப்பம். சொல்லி வைத்தாற் போல எதிரே வந்த அனைவரும், “என்ன அண்ணே… இளைச்சிட்டீங்க? ஏன் சோர்வா இருக்கீங்க? வைத்தியர் கிட்ட போலாமா..?” என்றெல்லாம் மாற்றி மாற்றி விசாரிக்க, ஒரு கட்டத்தில் பயிவ்வானால் உண்மையிலேயே நடக்க முடியாமல் போய்விட்டது. எதிர்மறை எண்ணங்களும், பேச்சுக்களும் ஏற்படுத்தும் தாக்கத்தின் விளைவை இந்தக் கதை அழகாகச் சொல்கிறது.

நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்வது, நேர்மறைச் சிந்தனை உள்ளவர்களோடு இருக்கும் சூழலை ஏற்படுத்திக் கொள்வது, எதிர்மறையான எண்ணம் கொண்டவர்களைத் தவிர்ப்பது, மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வது, உற்சாகமாக இருப்பது, பயணங்கள் மேற்கொள்வது போன்றவற்றின் மூலம் நேர்மறைச் சிந்தனையாளர்களாக நம்மை மாற்றிக் கொள்ளலாம்.

நேர்மறை பேச்சு செயல்கள் எண்ணங்கள் போன்றவற்றை முதலில் நம்மிடம் இருந்து வளர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தையின் மனநிலையும், ஞானியின் பக்குவமும் கிடைக்கப் பெற்றவர்கள் வாழ்க்கையைக் கொண்டாடுபவர்கள். பள்ளிகளில் மீண்டும் நீதிபோதனை வகுப்புகளை வைத்து இளமையில் இருந்தே நேர்மறை எண்ணங்களை ஊட்டி வளர்க்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் நேர்மறையான வார்த்தைகளில் சொல்லிப் பழகுதலும், பழக்குதலும் நன்று.

நாம் வாழும் சூழல் எத்தகையதாக இருந்தாலும் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்கள் எத்தகைய சிந்தனைகள் கொண்டவர்களாக இருந்தாலும் நாம் நேர்மறை சிந்தனை கொண்டவர்களாக இருந்து, அந்த சூழலையே மாற்றிவிடும் எண்ணத்தை எப்போதும் வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்மிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதுபோல பிறரிடம் நாம் நடந்து கொள்ள வேண்டும்.

எதிர்மறை எண்ணங்கள் முற்றிலுமாக ஒருவரிடம் இருந்து அழியாது. ஆனால் அதனைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் நம்மிடம்தான் இருக்கிறது. சிறிய விஷயங்களைக் கூட நல்ல சிந்தனைகளுடன் அணுகத் தொடங்கினால் நாளடைவில் பெரிய விஷயங்களும் நம் கைவசப்படும். எத்தனையோ சந்தோஷங்கள் நம்மீது தினமும் கொட்டப்படுகின்றன. நாம் மனது வைத்தால், அவற்றை அனுதினமும் ரசிக்கலாம். நம் கஷ்டங்களும்,  துயரங்களும் நிரந்தரமல்ல. இதைப் புரிந்து கொண்டவர்கள் சாதிக்கத் தொடங்குவார்கள். அதன்பின் “உள்ளாற எப்போதும் உல்லாலா… உல்லாலா…” என்ற உற்சாகம்தான்.

படைப்பாளர்:

கனலி என்கிற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ என்கிற நூல்களாக வெளிவந்திருக்கிறது