ஹாய் தோழமைகளே,

நலம், நலம்தானே?

நாம் இதுவரை உணர்வுசார் நுண்ணறிவின் மூன்று முக்கியத் தூண்களைப் பற்றிப் பேசினோம்.

  1. தன்னை அறிதல் (Self Awareness)
  2. சுய ஒழுங்குமுறை விதிகள் (Self Regulation)
  3. மற்றவரின் மேல் காட்டும் பரிவு (Empathy)

இப்போது நான்காவது தூண், நாம் அனைவரும் சறுக்கக்கூடியதும், முக்கியத் திறனுமான உறவை நல்ல விதமாகப் பேணுதல் (Relationship management) பற்றிப் பார்க்கலாம். எவ்வளவு பெரிய மனிதரும் தவறு செய்யுமிடம் இது.

முதல் மூன்று திறன்கள்தாம் இதனடிப்படை என்றாலும், அதையும் மீறி தவறு நேரும் வாய்ப்பு இங்கு அதிகம், காரணம் உறவின்பால் உள்ள பிடிப்பு.

ராமும் அருணும் நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் இடையே ரகசியமே கிடையாது. ஒரே கல்லூரி, ஒரே அலுவலகம், இவர்கள் நட்பை மதிக்கும் மனைவியர் என எல்லாம் சரியாக அமைந்ததில் இருவருக்குமான நட்பு இன்னும் பலப்பட்டது.

அருணுக்கு நீண்ட நாட்களாக ஒரு நவீன மாடல் ப்ளே ஸ்டேஷன் வாங்க வேண்டுமென ஆசை. ஆனால் அதன் விலை கட்டுப்படியாகாததால் வாங்க முடியவில்லை. வரும் மாதம் அருணுக்குப் பிறந்தநாள், அவனுக்கு அந்த ப்ளே ஸ்டேஷனைப் பரிசளிக்க வேண்டுமென ராம் கடந்த வருடத்திலிருந்தே பணம் சேர்க்கிறான். இந்த மாதம் அமேசான் கிரேட் இண்டியா சேலில் நல்ல விலைக்குக் கிடைத்ததால் ஆர்டரும் செய்து விட்டான், பிறந்தநாளன்று நண்பனுக்கு இனிய அதிர்ச்சி தர வேண்டுமென்ற திட்டம்.

அடுத்த வீட்டிலிருக்கும் பொது நண்பன் ஆனந்த், டெலிவரியை வாங்க வேண்டிய நிலை, அன்று பார்த்து ராமின் வீட்டில் யாரும் இல்லை.

எப்போதும் போலக் கடைகளில் தனக்குப் பிடித்த PS மாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்த அருணை ஒரு நாள் ஆனந்த் பார்த்தான்.

“என்னப்பா இன்னும் இதையெல்லாம் கடையில் பாத்துட்டு இருக்க, உன் பிரண்ட் வீட்டிலதான் லேட்டஸ்ட் மாடல் வாங்கியாச்சே, அங்கே போய் விளையாடுறது தானே?“ என்றான்.

அருணோ, “எந்த பிரண்ட்?” என்றான்.

“உனக்கு ஒரே ஒரு நெருங்கிய நண்பன் தானேப்பா, ராம் வீட்டில்தான்.“

அருணுக்கு அதிர்ச்சி, எல்லாவற்றையும் சொல்லும் நண்பன் இதைச் சொல்லவில்லையே என்று…  அதையே மனதில் போட்டு உருட்டிக்கொண்டிருந்தான்.

மறுநாள் இருவரும் சந்தித்த போதும் அதைப் பற்றிக் கேட்க மனமில்லாமல், ஆனால் அதை ஒதுக்கியும் தள்ள முடியாமல் மனதோடு போராடிக்கொண்டிருந்தவனால் இயல்பாக ராமுடன் பழக முடியவில்லை.

இரண்டொரு நாளில் வித்தியாசம் தெளிவாகப் புரிய ராம் என்னவென்று கேட்க ஆரம்பித்தான். ஒன்றுமில்லை எனச் சமாளித்த அருணுக்கு சகஜமாகப் பேச வரவில்லை.

இப்படியே பிறந்தநாளும் வந்தது. ராம் அருணை வீட்டிற்கு அழைத்தான். அருண் வேறு வேலை இருப்பதாக மறுத்துவிட்டான்.

வீட்டிற்குச் சோர்வாகத் திரும்பிய கணவனைப் பார்த்த ராமின் மனைவி, “என்னாச்சு உங்க நண்பர் வரலையா?“ எனக் கேட்டாள். இல்லையென்ற ராம், அருணிடம் சமீபமாக வந்த மாற்றத்தை வருத்தத்தோடு கூறினான்.

“சரி, இதை இன்றே சரி செய்வோம்“ என்றவாறே அருணை அழைத்தவள், “அருண், உங்களுக்காக நானும் இவரும் நல்ல டின்னரோடு ஆவலாகக் காத்திருக்கிறோம், நீங்களும் உங்கள் மனைவியும் என்ன வேலை இருந்தாலும் ஒதுக்கிவிட்டு அரை மணி நேரம் வந்தே ஆகவேண்டும்” என அழுத்திக் கூறினாள்.

அதை மறுக்க இயலாமல் மனைவியோடு ராமின் இல்லத்தை அடைந்தான். அங்கே வெகு பிரமாதமான டின்னர், கேக், பரிசு அருணுக்குக் காத்திருந்தது.

அந்தப் பரிசை ராமின் வற்புறுத்தலுக்காகப் பிரித்தவன் அதிர்ச்சியில் உறைந்தான். தனக்காகப் பரிசு வாங்கிய நண்பனைத் தவறாக நினைத்ததற்காகத் தன் மீதே வெட்கப்பட்டான்.

விருந்து முடிந்து வீட்டிற்கு வந்தவனுக்கு, நல்லவேளை இதைக் கேட்டு நட்பைக் கெடுத்துக்கொள்ளவில்லை என்ற ஆறுதல்.

ஆனால், இத்தனை நாட்களாக அவன் மனதில் இருந்த உறுத்தலுக்கு யார் காரணம்?

தானும் ராமும் எத்தனை நெருக்கமான நண்பர்கள் என்றாலும் ராமுக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை உண்டு என்பதை மறந்ததுதான் காரணம். ராம் எல்லாவற்றையும் சொல்லித்தான் ஆகவேண்டிய அவசியம் இல்லை, எதைப் பகிரலாம் என்பது அவரின் தனிப்பட்ட விஷயம். அதற்கும் நட்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லையே. நாம் அனைவருமே அவ்வப்போது தவறும் இடம் இது, நம் அன்பின் ஆழம் காரணமாக அடுத்தவரின் மேல் கண்மூடித்தனமான ஆதிக்கம் செலுத்துவோம், பல நேரம் நம்மை அறியாமலேயே. நல்ல வேளையாக இந்தப் பிணக்கை ராமிடம் காட்டவில்லை. அப்படி நடந்திருந்தால் அந்த அழகிய நட்பில் விரிசல் விழுந்திருக்கும். எந்த உறவும் சிறக்க எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டியது, ’உங்கள் சுதந்திரம் அடுத்தவரின் மூக்கு நுனி வரையே.’ அதைத் தாண்டும் போது உறவு கெடுவது ஒருபுறம் நமது மன அமைதியும் கெடுகிறது. இதனால் வரும் உணர்வு கொந்தளிப்பு பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

ஆகவே தோழமைகளே உங்களது சுதந்திரம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு  அடுத்தவரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் மதியுங்கள். உங்கள் உறவு மலர்ந்து மணம் வீசுவதை மகிழ்வோடு அனுபவியுங்கள்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

’உன்னை அறிந்தால்…’ என்கிற தலைப்பில் ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய தொடர், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் புத்தகமாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்று இருக்கிறது.