சமீபத்தில் மக்கள் மத்தியில் பேசு பொருளாக உலவி வரும் கோவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவுகளைப் பற்றிப் பல வாதங்கள் எழுந்துவரும் நிலையில், இதைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து

கொள்ள முதலில் நாம் தடுப்பூசியைப் பற்றிச் சில தகவல்களைத் தெரிந்து கொள்வது அவசியம். தடுப்பூசி என்றால் என்ன? அதை எப்படித் தயாரிக்கிறார்கள்? அதன் சாதக பாதகங்கள் என்ன என்பதைப் பற்றிய முழு புரிதல் இருந்தால் மட்டுமே தடுப்பூசியை எடுத்துக் கொள்வதா, வேண்டாமா என்கிற முடிவுக்கு நம்மால் வர முடியும்.

ஒரு நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியைப் பல முறைகளில் தயாரிக்கலாம். அப்படித் தயாரிக்கப்பட்ட போலியோ, சின்னம்மை போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகள் மருத்துவ உலகில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தக் கொடிய நோய்களில் இருந்து பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கின்றன. எந்த நோய்க்கு எந்த வகை தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு‌ நெறிமுறை இருக்கிறது.

தடுப்பூசி செலுத்திக் கொண்டதும் உடலின் வெப்பம் அதிகரித்து காய்ச்சல் வந்தால் அந்தத் தடுப்பூசி உடலுக்குள் தன் வேலையைச் சரியாகச் செய்கிறது என்று அர்த்தம். சிலருக்குக் காய்ச்சல் வராமல் தலைவலி போன்ற வேறு சிறு உபாதைகளும் வரலாம். இவை அனைத்தும் தடுப்பூசி செவ்வனே செயல்படுகிறது என்பதற்கான அறிகுறிகள்.

நோய்த் தொற்றுக்குக் காரணமான பேக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளை முழுமையாக அல்லது நோய் உண்டாக்கும் பகுதியை மட்டும் அல்லது அதன் மரபணு மூலக்கூறுகளை மட்டும் ஒரு குறிப்பிட்ட அளவில் உடலுக்குள் ஊசி வழியாகச் செலுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டிவிடுவதுதான் தடுப்பூசி. இதன் விளைவுதான் காய்ச்சல். இந்த நிகழ்வுக்குப் பிறகு நோய் எதிர்ப்பு செல்கள், உள்ளே நுழைந்த நுண்ணுயிரியின் வடிவத்தையும் அதன் பிற தகவல்களையும் நினைவில் வைத்துக் கொள்ளும். பிற்காலத்தில் அதே நுண்ணுயிரி உடலுக்குள் நுழையும் போது இந்த நோய் எதிர்ப்பு செல்கள் முன்பு தாங்கள் செயல்பட்ட அதே உத்தியைப் பயன்படுத்தி அந்த நுண்ணுயிரியால் ஏற்படும் நோயைத் தடுக்கும்.

இந்த நுண்ணுயிரிகளை முழுமையாக உடலுக்குள் செலுத்தும் போது அதன் வீரியத்தைக் குறைப்பதற்காக அல்லது அந்த நுண்ணுயிரியை முழுமையாகச் செயலிழக்க வைப்பதற்காக வெப்பம், ரசாயனம், கதிர்வீச்சு போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். இம்முறையில் உருவாக்கப்பட்டதுதான் போலியோ சொட்டு மருந்து‌.

சில நேரம் உயிரற்ற நிலையில்கூட அந்த நுண்ணுயிரியை உடலுக்குள் செலுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டிவிடலாம். அப்படி உருவான தடுப்பூசிகள் தட்டம்மை, சின்னம்மை, ரூபெல்லா போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவுகின்றன.

தடுப்பூசியின் இன்னொரு வகைதான் குறிப்பிட்ட நுண்ணுயிரியின் மரபணு மூலக்கூறுகளை உடலுக்குள் செலுத்தி நோய் எதிர்ப்புச் செல்களைத் தூண்டுவது. புரதங்கள் தயாரிக்கப்படுவதற்கான முழுத் தகவல்களும் இந்த மரபணு மூலக்கூறுகளில்தான் இருக்கின்றன. சரி புரதம் எப்படி உருவாக்கப்படுகிறது என்று பார்த்தால், முதலில் தாயனையில் (DNA) இருக்கும் தகவல்கள் ஆறனைக்குக் (RNA) கடத்தப்பட்டு, பிறகு ஆறனையில் இருந்து புரதம் உருவாகிறது. ஒவ்வோர் உயிரும் செயல்படுவதற்கு இந்தப் புரதங்கள்தாம் காரணம்.

வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் இந்தப் புரதங்கள் வழியாகத்தான் நோயைக் கடத்துகின்றன. நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளின் மரபணு மூலக்கூறுகளை நேரடியாக உடலுக்குள் செலுத்தி நோய் எதிர்ப்புச் செல்களைச் செயல்பட வைக்கும் இந்த முறைதான் கோவிட் தடுப்பூசிகளில் பயன்படுத்தப்பட்டது‌‌. மக்களுக்குப் பயன்படுத்தப்படுவதற்காக முழு அனுமதி பெற்ற மரபணு மூலக்கூறுகளான தாயனை மற்றும் ஆறனையை வைத்துத் தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பூசி கோவிட்தான். இந்த முறையில் தயாரிக்கப்பட்ட மற்ற தடுப்பூசிகள் அனைத்தும் இன்னும் மருத்துவ பரிசோதனையில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.‌

கோவிஷீல்ட் தடுப்பூசியைத் தயாரித்த அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கோவிஷீல்ட் தடுப்பூசி கணிசமான பக்கவிளைவுகளை மக்களுக்கு ஏற்படுத்துகிறது. அதுவும் குறிப்பாக TTS (Thrombosis with thrombocytopenia syndrome) என்று சொல்லக் கூடிய ரத்த உறைவுடன்‌ சேர்ந்து ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை குறைவு இந்தத் தடுப்பூசியை எடுத்துக் கொள்பவர்களுக்கு அரிதாக ஏற்படும்  என்று தெரிவித்துள்ளது. இந்தப் பக்கவிளைவால் இங்கிலாந்தில் சில உயிர்கள் பலியாகி இருப்பது தெரிய வந்தது‌. இதைத் தொடர்ந்து கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு எதிராக அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் மீது 51 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் அஸ்ட்ராஜெனிகா நிறுவனமும் அதை ஒப்புக்கொண்டு தாங்கள் தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசியைத் திரும்பப் பெற்றுள்ளது.

கோவிட் பெருந்தொற்றின் போது தடுப்பூசிகள் எடுத்துக் கொண்ட சிலர் மாரடைப்பால் இறந்ததும், அவர்களுக்கு ஏற்கெனவே சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற வேறு சில உடல்நலப் பிரச்னைகள் இருந்ததாகவும் தகவல் வெளியாகிய நிலையில் மக்கள் கோவிட் தடுப்பூசியை எடுத்துக்கொள்வதில் தயக்கம் காட்டினர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அப்படியானால், பக்கவிளைவுகள் இருக்கும் தடுப்பூசிகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?

பொதுவாகவே ஒரு மருந்தோ அல்லது தடுப்பூசியோ மக்கள் பயன்பாட்டிற்கு வர கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் எடுக்கும். இந்தப் பத்து ஆண்டுகளில் பல விதமான மருத்துவப் பரிசோதனைகளுக்கு அந்த மருந்தோ அல்லது தடுப்பூசியோ உள்ளாக்கப்படுகிறது. இதில் பல நிலைகள் உண்டு. அதில் ஒன்றுதான் இருதய நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களை உடையவர்களுக்கு அந்தத் தடுப்பூசியைச் செலுத்தி அதன் பக்கவிளைவுகளை ஆராய்வது. இதற்குப் பல நெறிமுறைகள் உள்ளன.‌ யார் அந்தத் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும்? எந்த அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்? எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ள வேண்டும்? பரிசோதனையில் இருக்கும் மருந்தை எடுத்துக் கொள்வதற்கான அந்தத் தனிநபரின் ஒப்புதல், தனிநபரின் அடையாளங்களை ரகசியமாகக் காப்பது போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளன. இவற்றையெல்லாம் கடந்து முழுப் பரிசோதனையும் முடிந்து கண்டுபிடிக்கப்பட்ட மருந்தோ தடுப்பூசியோ விற்பனைக்கு வர பத்து ஆண்டுகள் பிடிக்கும்.

ஆனால் இந்த முழுப் பரிசோதனை முறையைத் தவிர்த்து மக்களின் அவசரப் பயன்பாட்டிற்காக வெறும் பத்தே மாதங்களில் உருவானதுதான் கோவிஷீல்ட். பெருந்தொற்றின் அதிவேகப் பரவலும், மக்களின் உயிரிழப்பும்தான் இந்த அவசரத் தேவைக்குக் காரணம். பொதுவாகவே செயற்கையாகத் தயாரிக்கப்படும் மருந்துகளுக்குப் பக்கவிளைவுகள் உண்டு.‌ ஆனால் அது எந்த அளவிற்கு இருக்கிறது என்பதுதான் முக்கியம். உலகின் பெரும்பான்மையினர் கோவிட்‌ தடுப்பூசியை எடுத்துக் கொண்டதும், கோவிட் பெருந்தொற்றிலிருந்து தங்களை காத்துக் கொண்டதும் ஒருபுறம் இருக்க, இந்த கோவிட் தடுப்பூசிகள் ஏற்படுத்திய பக்கவிளைவுகள்தாம் இன்றும் விவாதத்திற்குள்ளாகி இருக்கின்றன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசியை இங்கிலாந்து சந்தைகளில் விற்பனையிலிருந்து திரும்பப் பெற்றுள்ளது.

சரி, இப்போது தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளலாமா என்கிற கேள்விக்கு வருவோம். ஒரு நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியைக் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு முன்னால் அந்தத் தடுப்பூசியின் பக்கவிளைவுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளும் ஒவ்வொரு முறையும் அவற்றை ஆராய்ந்து அறிந்து உட்கொள்வது சாத்தியமில்லை என்றாலும் கோவிட் போன்ற ஒரு பெருந்தொற்றை எதிர்கொள்ளும் போது அதன் இயல்பையும், அதை எதிர்கொள்ளும் மருத்துவ சிகிச்சைகளையும் பற்றிய குறைந்தபட்ச அறிவையேனும் நாம் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற இக்கட்டான தருணங்களில் சிறந்த முடிவுகளை எடுப்பதற்கு உதவியாக இருக்கும். இதைவிட மிக முக்கியமான ஒன்று மருந்துகளைப் பற்றியோ நோய்களைப் பற்றியோ இணையத்தில் தேடுவதைத் தவிர்ப்பது. பெரும்பான்மையான வலைத்தளங்கள் தவறாகத் தகவல்களையே தருகின்றன. அவற்றைப் படித்து தவறாகப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக உலக சுகாதார அமைப்பு (world health organization – https://www.who.int/) போன்ற அங்கீகரிக்கப்பட்ட வலைத்தளங்கள் அல்லது நம்பிக்கைக்குரிய மருத்துவர்கள் மூலம் தகவல்களைப் பெறுவதே சிறந்தது.

(தொடரும்)

படைப்பாளர்:

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார்.