தமிழில் மொத்தம் 246 எழுத்துகளில் 42 எழுத்துகளுக்குத் தனியே பொருள் உண்டு. அவற்றை ஓரெழுத்து ஒரு மொழி என்று கூறுவர். ஒற்றை எழுத்துச் சொற்கள் என்று பொருள்; எழுத்தாகவும் இருந்து சொல்லாகவும் இருக்கும் ஒரு சொல். உதாரணமாக, தீ என்னும் எழுத்தே சொல்லாக இருந்து நெருப்பு என்னும் பொருளைத் தருவதால் ‘தீ’ என்பது ஓரெழுத்து ஒரு மொழி; சேர்த்து, ஓரெழுத்தொரு மொழியென்றும் சொல்லலாம். ஓர் எழுத்து தன்னைக் குறிக்கும்போது எழுத்தாகிறது; அதுவே பிற பொருளைச் சுட்டும்போது சொல்லாகிறது என்று சொல்லலாம்தானே! இது பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் வரும்.

உயிரெழுத்து வரிசையில் ஆறு எழுத்துகள் – ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ

ஆ – பசு, எருது, ஆச்சா மரம்

ஈ – பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு

ஊ – இறைச்சி, உணவு, விகுதி

ஏ – அம்பு, எய்யும் தொழில், இறுமாப்பு, அடுக்கு

ஐ – அழகு, ஐந்து, ஐயம், அசை, தலைவன், அரசன்

ஓ – சென்று தாக்குதல், மதகு நீர், ஒழிவு, தங்கும் பலகை

உயிர்மெய் வரிசையில்,

வரிசையில் நான்கு எழுத்துகள் – கா, கூ, கை, கோ

கா – சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, சரஸ்வதி, தோட்டம்

கூ – பூமி, ஏவல், கூழ், கூவு

கை – உறுப்பு, ஒப்பனை, செயல், துதிக்கை, படை, கைப்பொருள், கைமரம்

கோ – வேந்தன், தலைவன், இறைவன், அரசன்

வரிசையில் நான்கு எழுத்துகள் – சா, சீ, சே, சோ

சா – சாதல், சோர்தல், பேய், மரணம்

சீ – வெறுப்புச் சொல், சீழ், சளி, இலக்குமி, அடக்கம், நித்திரை

சே – சிவப்பு, எருது, அழிஞ்சல் மரம்

சோ – மதில், அரண்

வரிசையில் ஐந்து எழுத்துகள் – தா, தீ, தூ, தே, தை

தா – கொடு, குறை, கேடு, குற்றம், பகை

தீ – நெருப்பு, இனிமை, அறிவு, இடம்

தூ – வெண்மை, இறைச்சி, பறவை இறகு

தே – கடவுள்

தை – தமிழ் மாதம், தையல், திங்கள்

வரிசையில் ஐந்து எழுத்துகள் – நா, நீ, நே, நை, நோ

நா – நாக்கு, தீயின் சுவாலை

நீ – நீ

நை – வருந்து, இகழ்ச்சி

நோ – நோவு, துன்பம், வலி

வரிசையில் ஐந்து எழுத்துகள் – பா, பூ, பே, பை, போ

பா – அழகு, பாட்டு, நிழல்

பூ – மலர், சூதகம்

பே – அச்சம், நுரை, வேகம்

பை – கைப்பை, பாம்பு படம், கொள்கலம், பசுமை

போ – செல்

மகர வரிசையில் ஆறு எழுத்துகள் – மா, மீ, மூ, மே, மை, மோ

மா – பெரிய, நிலம், விலங்கு, மாமரம்

மீ – மேலே, ஆகாயம், மேன்மை, உயர்வு

மூ – மூப்பு (முதுமை), மூன்று

மே – மேல், மேன்மை

மை – கண் மை (கருமை), இருள், செம்மறி ஆடு, அஞ்சனம்

மோ – முகர்தல்

வரிசையில் ஓர் எழுத்து – யா

யா – ஒருவகை மரம், யாவை, அசைச் சொல்

வரிசையில் நான்கு எழுத்துகள் – வா, வீ, வை, வெள

வா – வருகை

வீ – மலர், பூ, மகரந்தம், அழிவு, சாவு

வை – வைக்கவும், வைக்கோல், கூர்மை, வையம்

வெள – வவ்வுதல் (அ) கெளவுதல் (ஒலிக்குறிப்பு)

இந்த நாற்பது எழுத்துகள் நெட்டெழுத்துகள் (நெடில்) என்பதைக் கவனியுங்கள். எனவே, 

நொ – வருந்து, நோய், மென்மை, துன்பம், நொய்வு

து – உண், விகுதி, நடத்தல், உணவு, வகுத்தல்

எனும் இரண்டு குற்றெழுத்துகள் (குறில்) சேர்த்தால், தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் மொத்தம் 42 உள்ளன.

இதில் பீ – மலம் எனும் எழுத்து ஏன் இல்லையென்று சந்தேகம் வருகிறதுதானே? பின்பக்கம் வருவதால் பீ; ஆ + பீ – பசுவின் சாணி என்று பொருள். சங்க காலத்தில் ஆப்பி என்று புழக்கத்தில் இருந்த சொல்லே, பின்னர் பீ என்று மலத்தைக் குறிப்பதாயிற்று.

‘மெழுகு மாப்பிகண் கலுழ்நீ ரானே’ (புறநானூறு – 249)

‘அள்ளி வைத்த ஆப்பி – தம்பி அதில் கடவுள் இல்லை’ (பாரதிதாசன்).

தமிழின் சொல்வளத்தில், ஓரெழுத்தொரு மொழியைத் தனிச் சிறப்பான ஒன்று என்று சொல்லலாம்.

*

மண்ணில் சொர்க்கம்

அண்மையில் ஈரோடு, அந்தியூருக்கு அருகில் இருக்கும் சோளகா கிராமத்திலுள்ள பழங்குடியினருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் குக்கூ நண்பர்கள் அமைத்திருக்கும் நூலகத்துக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. மிக அருமையானதொரு முயற்சி. முன்னர், அறிவொளி இயக்கம் எழுந்ததுபோல் புத்தக வாசிப்புக்கென்று ஓர் இயக்கம் உருவாக வேண்டுமென்று தொடர்ந்து சொல்லி வருகிறேன். இன்னமும்கூட, பலருக்கும் புத்தகம் வாங்குவது தண்டச் செலவு என்ற மனப்போக்கு மாறவில்லை. அதில் பல ஆசிரியர்களும் அடக்கமென்பதுதான் பெரிதும் வருந்தத்தக்க செய்தி. இத்தகைய சூழலில் குக்கூ சிவராஜ் உள்ளிட்ட நண்பர்கள் அரசுப் பள்ளிகளில் நூலகம் அமைத்துத் தரும் அரும்பணியைச் செய்து வருகின்றனர். குழந்தைகளைக் கவரும் வகையில் நூலக அறையை ஓவியங்களால் நிறைத்து, அழகிய அலமாரிகளில் புத்தகங்களையும் வைத்துத் தரும் அவர்களுடைய பணி போற்றத்தக்கது.

குக்கூ விழாக்களுக்குச் சென்றவர்களுக்குத் தெரியும், அவர்களுடைய அழகிய விழா அமைப்பு பற்றி. அங்கங்கே வண்ண வண்ணமாகக் காகிதக் கொக்குகள் சடகோவை நினைவுறுத்தித் தொங்கிக்கொண்டிருந்தன. மணல் பரத்திய இடம் தூய்மை செய்யப்பட்டு, பாய்களும் ஜமுக்காளங்களும் விரிக்கப்பட்டிருந்தன. உள் நுழைகையிலேயே, அங்கங்கே காற்றிலாடித் தொங்கிய துணிவிரிப்புகளில் எழுதப்பட்டிருந்த பொன்மொழிகள் வரவேற்றன. இலைகளும் மலர்களுமே அழகிய வடிவிலான வரவேற்பு வளைவுகள். தரையிலும் அவையே கோலங்கள்; ஆங்காங்கே சிறிய மண் பொம்மைகள். காந்தி, அசோகமித்திரன், பஷீர் உள்ளிட்ட பெருமக்களின் பொன்மொழிகளோடு கூடிய படங்கள் அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. இந்த எளிய அலங்காரத்தில் அந்த இடம் அத்தனை அழகு; அது இப்போதும் என் கண்களில் நிறைந்திருக்கிறது.

எவ்வளவு பேசினாலும் செய்தாலும் குழந்தைகளுக்கு ஆட்டமும் பாட்டமும்தானே கொண்டாட்டம். வேலு சரவணனின் கடல்பூதம் நாடகம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை. ஒவ்வோர் இடத்திலும் பார்வையாளர்களைத் தன்னுடன் இணைத்து நடிக்க வைக்கும் அந்த உத்தியை வியந்தேன். அதனாலேயே, அது ஒவ்வோரிடத்திலும் புதிய புதிய வடிவம் பூணுகிறது. குழந்தைகளின் அந்த உற்சாக முகங்கள், தெறிக்கும் சிரிப்பு அடடா.. அன்று மண்ணில் சொர்க்கம் இறங்கி வந்தது என்பேன். ஒரு சிறுவன் எழுந்து, ‘என் வாழ்நாளில் இப்படிச் சிரித்தது இல்லை’ என்று சொன்னது மகிழ்ச்சியைத் தந்த அதேநேரத்தில் ‘என் வாழ்நாள்’ என்ற சொற்பிரயோகம் எல்லோரையும் சிரிக்க வைத்தது.

பள்ளியின் தலைமை ஆசிரியரைக் கண்டு, இதை அப்படியே கொண்டு செலுத்தி, மாணவர்களை உற்சாகமாகப் படிக்க வையுங்கள் என்று இறைஞ்சியதுடன் அதற்கான சில கருத்துகளையும் பகிர்ந்தேன். அந்த மலையடிவாரத்திலிருக்கும் அழகிய கிராமமும் பள்ளியும் பள்ளி நூலகமும் என்னை மீளவும் அழைக்கத் தொடங்கிவிட்டன. மீண்டும் சோளகா கிராமத்துக்குச் செல்ல வேண்டும் விரைந்து!

(தொடரும்)

படைப்பாளர்

தி. பரமேசுவரி

 ‘எனக்கான வெளிச்சம், ஓசை புதையும் வெளி, தனியள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள்,  ‘ம.பொ.சி பார்வையில் பாரதி,  சமூகம் – வலைத்தளம் – பெண், சொல்லால் அழியும் துயர் ‘ஆகிய மூன்று கட்டுரைத் தொகுப்புகள்,  மற்றும் ‘ம.பொ.சியின் சிறுகதைகள், ம.பொ.சியின் சிலப்பதிகார உரை, ஜோ.டி.குரூஸின் கொற்கை நாவலை முன்வைத்து ‘கலிகெழு கொற்கை’ என்னும் கட்டுரைத் தொகுப்புகளையும் ‘தமிழன் குரல்’ என்ற இதழை மூன்று தொகுதிகளாகவும் தொகுத்துள்ளார். கலை இலக்கியப் பேரவை விருது, பாலா விருது, அன்னம் விருது பெற்றிருக்கிறார்.