“இப்பதான் காதுகுத்துப் பண்ணினோம். திரும்பவும் பிறந்தநாள் வேற பண்ணணுமா மாமா” ரேகா மகளைத் தட்டி தூங்கவைத்தபடி மெல்லிய குரலில் கணவனிடம் பேசினாள்.

செலவு கணக்கை எழுதி கொண்டிருந்தவன் அவளை நிமிர்ந்து பாராமலே, “மலருக்கு நல்லா பண்ணோம். அதேபோல கயலுக்கும் பண்ண வேண்டாமா, அதுவும் இல்லாம அப்படி என்ன செலவாகிடப் போகுது. எல்லாம் நான் பாத்துக்குறேன். நீ விடு” என்றான்.

“நம்ம இருக்க நிலைமைல இது தேவையில்லாத செலவு மா…” என்று சொல்லி முடிப்பதற்குள்ளாகச் சரேலென்று தலையை நிமிர்த்தினான்.

“அப்படி என்னடி நிலைமை… நாலு சொந்தகாரங்கள கூப்பிட்டு நம்ம புள்ளைங்களுக்கு ஒரு பிறந்தநாள் பங்க்ஷன்கூட நடத்த முடியாதா என்னால?”

“நான் அப்படிச் சொல்லல மாமா.”

“நீ சொல்ல மாட்ட. உன் அண்ணங்காரன் சொல்லுவான். பெத்த புள்ளையோட பிறந்தநாள் பங்க்ஷனைக்கூட நடத்த துப்பில்லனு என்னைய அசிங்கப்படுதுவான்.”

“இப்ப எதுக்கு எங்க அண்ணனைப் பத்திப் பேசுறீங்க” என்று குரலை உயர்த்த, “கூடப் பொறந்தவனைப் பத்திச் சொன்னதும் அப்படியே பொத்துக்கிட்டு வந்துருச்சாகும்” என்று பதிலுக்கு அவனும் சத்தமிட்டான்.

“அப்படி ஒண்ணும் இல்ல.”

“அப்புறம் வேற எப்படிறி?”

“நானே எங்க அண்ணனைப் பத்தி நினைக்குறது இல்ல, ஆனா நீங்க எதுகெடுத்தாலும் உங்க அண்ணன் உங்க அண்ணன்னு சொல்லி என்னைக் குத்திக்காட்டிக்கிட்டே இருக்கீங்க. இப்போகூட நீங்க காதுகுத்து பங்ஷன் நடத்துனது வேணும்னே எங்க அண்ணனைக் கூப்பிடாம அவமானப்படுத்துறக்குதானே?”

அவளின் அந்தக் கேள்வியில் சீற்றமான யோகேஷ், “எனக்கென்ன வேல வெட்டி இல்லயா? உங்க அண்ணனை அவமானப்படுத்துறதுதான் எனக்கு ஒரே வேலையாக்கும்” என்று அவன் அதட்டிய வேகத்தில் ரேகா மடியில் உறங்கிக் கொண்டிருந்த சின்னவள் வீலென்று அலறத் தொடங்கிவிட்டாள்.

அதன் பிறகு அவளைச் சமாதானம் செய்து மீண்டும் தூங்க வைப்பதற்குள் ரேகாவிற்கு போதும் போதுமென்றாகிவிட்டது.

ஆனால் எதைப் பற்றியும் கவலை இல்லாமல் யோகேஷ் திரும்பிப் படுத்துக் கொண்டு உறங்கிவிட்டான். அவன் பேசியதை யோசிக்கும் போதே அவளுக்கு வலித்தது .

சமயம் கிடைக்கும் போதெல்லாம், ‘உங்க அண்ணன் அதைச் சொல்லுவான்… இதைச் சொல்லுவான்’ எனக் குத்துவதே அவனுக்கு வழக்கமாகப் போய்விட்டது.

அதுவும் சின்னவளின் பிறந்த நாளுக்கு முன்பாகவே காது குத்து நடத்த வேண்டும் என்று அவன் அவசரப்பட்டதற்கு முக்கியக் காரணமே அவள் அண்ணனை அவமானப்படுத்துவதற்காகத்தான். இப்போது பிறந்த நாள் விழா. ஆனால், அவள் இப்போதும் பேசியது அவள் அண்ணனுக்காக இல்லை. அவளுக்காக. 

குழந்தைக்கு ஒரு வயது முடிவதற்குள் இவள் மீண்டும் கருத்தரித்திருப்பது தெரிந்தால் அவள் பெரியம்மா, அத்தை மகள்கள் எல்லாம் ஏளனம் செய்வார்கள். அதுதான் அவள் பயமே. ஆனால், இதெல்லாம் அவனுக்கு எங்கே புரியப் போகிறது. சுகாதார நிலையத்தில்கூட தேவிகாவிடம் அசிங்கப்பட்டது அவள்தானே. 

பெரியவள் வயிற்றில் இருந்த சமயத்தில்தான் அவன் மருத்துவப் பரிசோதனைகளுக்கு வந்தது எல்லாம். சின்னவளுக்கு எப்போதாவது அழைத்துப் போவான். ஆனால் அப்போதும் உள்ளே எல்லாம் வரமாட்டான்.

அவள் உள்ளே கூப்பிட்டாலும், “நான் வந்து என்ன செய்ய போறேன். நீயே பார்த்துட்டு வா” என்பான். அன்றுகூட அவளை அழைத்துப் போக மட்டுமே வந்திருந்தான்.  

“கைக்குழந்தையை வைச்சுட்டு ரொம்ப கஷ்டம் மாமா. பேசாம இந்தக் கருவை கலைச்சிடலாம்” என்று அவள் சொன்னபோது, “என்ன ரேகா… கலைக்குறேன் அது இதுன்னு பேசுற. நம்ம புள்ள ரேகா, அதெல்லாம் வேணாம். நா இருக்கேன். நான் பார்த்துக்கிறேன்” என்று நம்பிக்கையாக அவள் கை பிடித்துப் பேசினான். ஆனால் எல்லாம் வெறும் வார்த்தைதான். 

குழந்தையைப் பார்த்துக் கொள்வது தொடங்கி வீட்டில் அத்தனை வேலைகளையும் இன்றும் அவள் ஒருத்தியாகத்தான் செய்கிறாள். ஒருபக்கம் இந்த வேலைகளால் அவள் உடல் சோர்ந்து போகிறது என்றால் மறுபுறம் கருவுற்றதற்கான பக்கவிளைவுகள் வேறு அவளைப் பாடாய்ப்படுத்துகிறது.

முந்தைய முறையெல்லாம் வெறும் வாந்தி, மயக்கம் மட்டும்தான். இம்முறை நெஞ்சு கரிப்பு, எச்சில் சுரப்பது என்று புதிது புதிதாகக் கிளம்பியிருக்கின்றன.

உட்கார்ந்தால் படுத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. படுத்தால் உட்கார வேண்டும் போலிருந்தது. லேசில் உறக்கமும் வருவதில்லை. எதற்கென்றே தெரியாமல் அழுகை வந்தது.

சொந்த வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டது போல உணர்ந்தாள். குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன சேட்டைகளுக்குக்கூடக் கோபப்பட்டாள். அடித்தாள். பின்னர் அவளே அவர்களைச் சமாதானம் செய்தாள். இப்படியாக ஒவ்வொரு நாளையும் தவிப்பும் வேதனையுமாகக் கடத்தினாள்.

அவள் மனமோ விரிசல் விழுந்த கண்ணாடி பாத்திரம் போல அழுத்தித் தொட்டாலே நொறுங்கிவிடும் நிலையிலிருந்தது. அவளைப் புரிந்து அரவணைத்துக் கொள்ள வேண்டிய கணவனோ மேலும் மேலும் அவளைக்  காயப்படுத்தினான். உடைத்துப் பார்த்தான்.  

 ‘இப்போவே முடிவு பண்ணிட்டா மாத்திரைலயே கலைச்சிடலாம்’ என்று மருத்துவர் அகல்யா சொன்னதை இன்று நினைத்துப் பார்த்து வருந்தினாள். யோசித்திருக்க வேண்டும்.

‘இன்னும் எட்டு மாதம் எப்படித் தாக்குப் பிடிக்கப் போகிறோம்.’ அவளுக்குப் பயமாக இருந்தது.

கண்களில் கண்ணீர் கரைபுரண்டோடியது. தலையணை முழுவதும் ஈரமானது. ஒரு வகையில் அழுகை அவள் உணர்வுகளின் வடிகாலானது. நன்றாக அழுது முடித்த பின் ஒரு வழியாக அவள் உடலும் உள்ளமும் உறக்கத்தை நாடியது. 

“அம்மா அம்மா” என்று மலர்விழியின் குரல் எங்கோ தூரமாக ஒலித்தது. மகளின் மெல்லிய கரம் கன்னங்களைப் பிடித்து இப்படியும் அசைத்து திருப்பவும், அவளுக்கு விழிப்பு வந்தது.

கண்களைத் திறந்ததும் எதிரே மகளின் முகம் பிரசன்னமானது.

“என்னாச்சும்மா?”  

யோகேஷ் பின்னே நின்று கொண்டு, “மணி ஏழரை ஆகுது” என்றான்.

அவள் எழ முயன்றாள். முடியவில்லை. இரண்டு மூன்று மண் மூட்டைகளை வைத்து அழுத்தியது போலத் தலைக் கனத்தது.

சிரமப்பட்டு எழுந்து அமர்ந்தாள்.

“என்னாச்சு உனக்கு” என்று கேட்டான். அவன் குரலில் கரிசனம் இல்லை. நேற்றைய இரவின் கோபம்தான் தெரிந்தது. 

அவள் தலையைப் பிடித்துக் கொண்டாள்.

“என்ன பண்ணுது உனக்கு?”

“ஒண்ணும் இல்ல… கொஞ்சம் மயக்கமா இருக்கு” என்றாள்.

“பார்த்துக்குவியா? எனக்கு டைமாச்சு, கிளம்பணும்” என்று காலில் வெந்நீர் ஊற்றிக் கொண்டவன் போல அவசரப்பட்டான். அவள் தலையை மட்டும் அசைக்க, அவன் புறப்பட்டுவிட்டான்.

வேறு சமயமாக இருந்தால், “இருங்க காபி போட்டு தர்றேன்” என்று சமையலறைக்கு ஓடி இருப்பாள். 

இப்போது அவளே நினைத்தாலும் அதெல்லாம் முடியாது. அவளுக்கே யாராவது காபி போட்டுத் தந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

“ம்ம்மா நான் ஸ்கூலுக்குப் போகணும்… லேட்டா போனா மிஸ் திட்டுவாங்க” என்று மலர் அவளை உலுக்கவும் மெதுவாக எழுந்து கொண்டாள். மகளைப் பள்ளிக்குத் தயார் செய்து அனுப்பிவிட்டு, உள்ளே வந்ததுமே வயிற்றைப் புரட்டியது.

மீண்டும் வெளியே வந்து வாந்தி எடுத்தாள். பின்னர் முகத்தைக் கழுவித் துடைத்துக் கொண்டு வந்து பாலைச் சூடு செய்து காபியைக் கலக்கி எடுத்து வந்தாள். அதற்குள் சின்னவள் கயல்விழியும் எழுந்துவிட்டிருந்தாள்.

“பாப்பா எழுந்துட்டீங்களா? பால் சாப்பிடுறீங்களா” என்று கேட்டபடி உள்ளே சென்ற போதுதான் மகள் கணவனின் பெட்டியிலிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தாள்.

 “அடிப்பாவி உங்க அப்பாவோட பெட்டிடி அது… முக்கியமான பேப்பர்ஸ்லாம் வச்சிருக்கார்” என்று ரேகா பதற்றத்துடன் மகளைத் தூக்க, அவள் கியோ மியோ என்று கால்களை உதைத்துக் கத்தத் தொடங்கினாள்.

“சரி சரி… அழக் கூடாது அம்மா உனக்கு விளையாடச் சொப்பு எடுத்துத் தரட்டுமா, பாரு காரு. இங்க பாரு பொம்மை” என்று விளையாட்டுச் சாமான்களை எடுத்துத் தந்து மகளைச் சமாதானப்படுத்தினாள்.

பின்னர் ஓரமாகக் கிடந்த அவன் பெட்டியிடம் வந்தாள். மேலே இருந்த பெட்டியிலிருந்து ஏதோ ஒரு பொருளை எடுத்துவிட்டு அலட்சியமாக அப்படியே திறந்து போட்டுவிட்டுப் போயிருக்கிறான். 

கணவன் மீது கோபமாக வந்தது. 

“எத எடுத்தாலும் அப்படியே போட்டுட வேண்டியது குழந்தை இருக்கிற வீடாச்சேனு கொஞ்சமாச்சும் அறிவு வேண்டாம்” என்று அவனைத் திட்டிக் கொண்டே பெட்டிக்குள் பொருட்களை எடுத்து வைக்கும் போதுதான் உள்ளிருந்து பழைய ஒளிப்டங்களை எல்லாம் பார்த்தாள்.

தாவணி அணிந்திருந்த அவள் அம்மாவின் இளமைக்கால ஒளிப்படம், பாட்டியின் மடியில் அமர்ந்திருந்த அவள் கணவனின் குழந்தைப் படம் என எல்லாமே அவள் ஏற்கெனவே பார்த்தவைதான்.

அந்த நொடி மீண்டும் அவற்றை எல்லாம் புரட்டிப் பார்க்க ஆசை வந்தது. அவர்களின் கல்யாண ஆல்பமும் உள்ளே இருந்தது. அதனை எடுத்த போது அடியிலிருந்த ஒரு நோட்டுப் புத்தகம் கண்ணில் பட்டது.  

‘இது என்ன நோட்டு?’ என்றபடி அதனைப் பிரித்தாள். முதல் பக்கத்தில், ‘ஈஸ்வரி பன்னிரண்டாம் வகுப்பு’ என்று இருந்தது. மற்ற படங்களைத் திறந்தாள். இரண்டு மூன்று பக்கங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருந்தன.

மீண்டும் முதல் பக்கத்தைத் திருப்பினாள். அத்தனை நேரம் தெளிவில்லாமல் இருந்த விஷயங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத்  தெளிவாவது போலிருந்தது.

 அன்று சுகாதார நிலைய வாசலில் ஈஸ்வரியும் அவனும் பேசிக் கொண்டதைப் பற்றி யோசித்தாள்.

“ஏன் அந்த அக்கா அப்படிப் பேசுனாங்க?” என்று அவள் கேட்டதற்கு, “எப்பவும் அந்தப் பொம்பள அப்படிதான் பேசும்னு தெரியாதா உனக்கு” என்று ஏதேதோ பேசி அந்த விஷயத்தை அப்படியே பூசி மெழுகிவிட்டான்.

போதாகுறைக்கு அவளை மேலே பேச விடாமல், “ஆஸ்பத்திரில என்ன சொன்னாங்க” என்று பேச்சை மாற்றிவிட்டான்.

அதே சமயம் மகள்களின் காதுக் குத்திற்கு அழைக்க பக்கத்து வீட்டிற்குச் சென்ற போது ஈஸ்வரியின் மாமியார், “என் மருமகளும் உங்க பக்கத்தூர்தா” என்று சொன்னது நினைவு வந்தது.

அவள் மனம் பின்னோக்கி நகர்ந்தது. அவள் நினைத்துப் பார்க்கவே விரும்பாத சம்பவங்கள். 

அவள் அம்மாவிற்கு யோகேஸ்வரனுக்கும் இடையில் நடந்த அந்த மோசமான வாக்குவாதம்.

“ஏண்டா யாரோ, பக்கத்தூரு பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருக்கியாமே?”

“எனக்கு அந்தப் பொண்ணைதான் பிடிச்சிருக்குக்கா. நான் அந்தப் பொண்ணைதான் கட்டிக்குவேன்.”

“அப்போ என் பொண்ணு?”

“நான் எப்பவுமே ரேகாவை அப்படிப் பார்த்ததே இல்லக்கா. எந்தக் காலத்திலும் நான் ரேகாவை கல்யாணம் பண்ணிக்கவும் மாட்டேன்” என்று அவன்  உறுதியாகச் சொன்னான்.

அன்று அவள் மனம் சுக்குநூறாக உடைக்கப்பட்டது. ‘மாமா’ மாமா’ என்று அவள்தான் அவன் மீது பித்துப்பிடித்துச் சுற்றிக் கொண்டிருந்தாள். ஆனால் அவன் விரும்பியதோ வேறு எவளோ ஒருத்தியை.

அந்த எவளோ ஒருத்திதான் இப்போது அவளின் பக்கத்து வீட்டுக்காரியாக இருக்கிறாள் என்பதை நினைக்கும் போதே நெஞ்சை அடைத்தது. இது இயல்பாக நடந்ததா இல்லை திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதா? அவளுக்குப் புரியவில்லை. தெளிவாக எதையும் யோசிக்கவும் முடியவில்லை. 

(தொடரும்)

படைப்பாளர்

மோனிஷா

தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இணையத்தில் 27 நாவல்களை இதுவரை எழுதியுள்ளார். அவற்றில் இருபது நாவல்கள், புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பெண்ணியம், சூழலியல் விழிப்புணர்வு இரண்டும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன. சிறார் எழுத்திலும் தற்போது ஈடுபட்டுள்ளார். இவரின் ‘ஒரே ஒரு காட்டில்’ சிறார் நூலை ஹெர் ஸ்டோரீஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.