தேவிகா, வரிசையில் காத்திருந்த நோயாளிகளை ஓவ்வொருவராக அழைத்து விசாரித்து, பின்னர் அவர்களைச் சோதித்து குறிப்பெழுதி மருத்துவர் அறைக்குள் அனுப்பினாள்.
முதல் ஆள்களாக ஈஸ்வரியும் நிகாவும் நுழைந்தனர். அவர்களைப் பார்த்ததுமே அகல்யா, “என்ன தேவி. உன் ஃப்ரெண்டுனு முதல் ஆளா ஈஸ்வரியை உள்ள விட்டியோ?” என்று கிண்டலாகக் கேட்டாள்.
மகளின் உடல்நிலைக்காக அடிக்கடி அங்கு வந்து போக நேரிட்டதில், ஈஸ்வரிக்கு செவிலியர் தேவிகாவுடன் நல்ல பழக்கம் உண்டாகியிருந்தது. அதனால் கூட்டம் அதிகமாக இருக்கும் சமயங்களில் ஈஸ்வரியை அவள் முன்னே அனுப்புவதும் நடக்கும்.
அதனை அறிந்து அகல்யா கேட்க, “அய்யய்யோ அப்படி எல்லாம் இல்ல டாக்டர், ஈஸ்வரி காலையிலயே வந்துட்டா” என்று அவசரமாக மறுத்தாள் தேவி.
அகல்யா பேசிக் கொண்டே நிகாவை அருகே அமர்த்திச் சோதித்தாள்.
“ஆமா… என்னாச்சு நிகா குட்டிக்கு? ஏன் ஜுரம் வந்துச்சு?”
“ஒரே ஒரு ஐஸ்க்ரீம்தான் சாப்பிட்டேன்” என்று பாவமாக அம்மாவைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே கூறினாள் சின்னவள்.
“என்னைக்கோ ஒருநாளைக்கு சாப்பிட்டாலும் உடனே ஜுரம் வந்துடுது டாக்டர்” ஈஸ்வரியும் கூடவே ஆதங்கப்பட்டாள்.
நிகாவின் உடலை முழுவதுமாக சோதித்த அகல்யா, “எதிர்ப்பு சக்தி கம்மியா இருக்குற குழந்தைங்களுக்கு இது போல நடக்கும். ஒன்னும் பெரிய பிரச்னை எல்லாம் இல்ல. எனக்கு தெரிஞ்சு முன்ன விட நிகாவோட ஹெல்த் எவ்வளவோ பரவாயில்ல. என்ன நிகா… நீ ஸ்டிராங்காயிட்டே வரதானே?” என்று அகல்யா நிகாவிடம் கேட்க, அவள் வேகமாகத் தலையசைத்தாள்.
“குட், மருந்தெல்லாம் ஒழுங்கா சாப்பிடணும் நிகா” என்றபடி அகல்யா மருந்துகளைத் தந்தாள். அதனைப் பெற்றுக் கொண்ட ஈஸ்வரி, தேவிகாவிடம் ரகசியமாகக் கண்ணைக் காட்டினாள்.
“வெளியே வெயிட் பண்ணு நான் வரேன்” என்று வாயசைப்பில் சொன்ன தேவிகா, அடுத்த நோயாளியை உள்ளே அனுப்பிவிட்டு வர, “ஆமா இன்னைக்கு அந்த கவுன்சிலர் அக்கா வரலயே, இப்போ நான் என்ன பண்றது” என்று தவிப்புடன் கேட்டாள்.
பெரும்பாலும் அரசு சுகாதார நிலையங்களில் கருத்தடை மாத்திரைகள் தருவதற்கு ஆலோசகர் ஒருவர் இருப்பார். அவரை குறித்து ஈஸ்வரி கேட்க, “உனக்கு மாத்திரை உடனே வேணுமா?” என்று கேட்டாள் தேவிகா.
“ஆமா வேணும் க்கா”
“அப்போ கொஞ்ச நேரம் இரு… நான் இரண்டு மூணு பேஷன்ட்டை அனுப்பிட்டு வந்து தரேன்” என்று உள்ளே சென்றவள்தான், அதன் பிறகு வெகுநேரமாகியும் வரவில்லை.
“அம்மா ரொம்ப நேரம் நின்னுட்டே வேலை செய்றேன் இல்ல… அதான் கால் வலிக்குது” என்று மகளைச் சமாளித்துக் கொண்டிருந்த சமயம், கைக்குழந்தையுடன் ரேகா உள்ளே நுழைந்தாள்.
அவளைப் பார்த்ததுமே ஈஸ்வரி முகத்தைத் திருப்பி கொண்டு விட்டாள். ஆனால் அவர்களிடம் நேராக வந்த ரேகா, “என்னாச்சு க்கா … நிகாவுக்கு உடம்புக்கு முடியலயா?” என்று அக்கறையாக விசாரித்தாள்.
நிகா முந்தி கொண்டு, “ஆமா ஜுரம்…” என்று ஐஸ்க்ரீம் சாப்பிட்ட அவள் கதையெல்லாம் கூறி கொண்டிருந்தாள்.
“போதும் போதும் ஐஸ்க்ரீம் புராணம்” என்று கடுகடுத்த ஈஸ்வரி, “நீ இங்கேயே இரு, நான் நர்ஸ் க்காவை பார்த்துட்டு வரேன்” என்று மகளிடம் சொல்லிவிட்டு, மருத்துவர் அறைக்குச் சென்று எட்டிப் பார்த்தாள்.
மும்முரமாக நோயாளியை சோதித்து கொண்டிருந்த தேவிகா இவளை பார்த்ததும், ‘லேட்டாகும் போல… நீ நாளைக்கு வர்றியா’ என்று கை காட்டினாள்.
‘இதை முதலையே சொல்லி இருக்கலாம்’ என்று புலம்பியபடி வந்தவள், நிகா ரேகாவின் குழந்தையை ஆசையாகக் கொஞ்சி விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து வியப்புற்றாள்.
அந்தக் காட்சியைப் பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது. இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற ஈஸ்வரியின் பிடிவாதம் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்து கொண்டு வந்தது.
அதேநேரம் யோகேஸ்வரன் குடும்பத்துடன் மகள் உறவாடுவது அவளுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
“நிகா வா போலாம்” என்று மகள் கையை பிடித்துக் கொண்டு கிளம்ப எத்தனிக்க, “நீ கால் வலிக்கு மாத்திரை வாங்கிட்டியா ம்மா?” என்று கேட்டாள்.
“நான் அப்புறம் வாங்கிக்கிறேன்” என்று சொல்லி மகளை அழைத்துக் கொண்டு வெளியேறிய ஈஸ்வரி, ஆரம்பத்திலிருந்தே அங்கே நின்ற ரேகாவை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை.
‘இந்த அக்காவுக்கு ஏன் நம்மள புடிக்கல? அப்படி என்ன நம்ம செஞ்சுட்டோம்?’ என்று ரேகா யோசித்துக் கொண்டிருக்கும் போதே, தேவிகா அவளை அழைத்தாள்.
என்ன ஏதென்று விசாரித்தவள் எரிச்சலுடன், “குழந்தைக்கு சொல்ற மாதிரி படிச்சு படிச்சு சொல்லி அனுப்பினாலும் நீங்க செய்றதைதான் செய்வீங்க இல்ல..? எப்படித்தான் இவ்வளவு கேர்லஸா இருப்பீங்களோ, கொஞ்சம்கூட உடம்பைப் பத்தின அக்கறையே இல்லயா உங்களுக்கு எல்லாம்?” என்று மானாவாரியாகத் திட்ட தொடங்க, ரேகாவின் முகம் வாடிச் சுருங்கியது.
“இந்தா போய் செக் பண்ணிட்டு வா” என்று கர்ப்ப பரிசோதனைக் கருவியை எடுத்துத் தந்தாள்.
“குழந்தையை எங்க விட்டுப் போறது க்கா…” என்று ரேகா தயங்க, “புருசனை கூட்டினு வர வேண்டியதுதானே, படுக்குறதுக்கு மட்டும்தான் புருசன்காரனா?” என்று எரிந்து விழுந்த தேவிகா, “உள்ள சரசு அக்கா இருப்பாங்க பாரு, அவங்ககிட்ட கொடுத்துட்டு போ” என்றாள்.
அந்த ஆயம்மாவைத் தேடி குழந்தையைத் தந்துவிட்டு கழிவறைக்கு வந்தாள். தொட்டாலே விழுந்துவிடும் நிலையிலிருந்த கதவை மெதுவாக இழுத்து மூடினாள்.
கண்களில் கண்ணீராகக் கொட்டியது.
‘கடவுளே இருக்க கூடாது… இருக்க கூடாது” என்று வேண்டிக் கொண்டே சோதனையைச் செய்தாள். ஆனால் அவள் எதிர்பார்ப்பு, பொய்த்துப் போனது. இரு கோடுகள்.
அங்கேயே நின்று உடைந்து அழுதவள், ஒருவாறு தன்னை தேற்றிக் கொண்டு முகத்தை அலம்பியபடி வெளியே வந்தாள்.
அதன்பின் அந்த சோதனைக் கருவியை தேவிகாவிடம் காட்ட, “நினைச்சேன்” என்று உதட்டை சுழித்து கொண்டே அவளை அகல்யாவிடம் அழைத்து சென்றாள்.
அந்தத் தகவல் அகல்யாவிற்கும் அதிருப்தியை உண்டுபண்ணியது. ஆனால் அவள் தேவிகா போலச் சத்தமிடவில்லை. நிதானமாக விசாரித்தாள்.
“குழந்தைக்கு ஃபீட் பண்ணிட்டு இருக்கீங்க இல்ல”
“இல்ல டாக்டர், பால் வர்றதில்ல… நின்னுடுச்சு” என்று தலையை தொங்கப் போட்டு கொண்டு குற்றவுணர்வுடன் சொன்னாள் ரேகா.
“போன தடவை வந்த போது, ஏன் இதை பத்தி சொல்லல?”
“இல்ல… குழந்தை மத்த ஆகாரம் எல்லாம் நல்லா சாப்பிடுறான். அதான் பால் குடிக்குறதை குறைச்சுட்டான். எனக்கும்…”
“ப்ச்… சரி ஒகே… இப்போ என்ன பண்ணலாம்? உங்க முடிவு?” என்று அகல்யா சுற்றி வளைக்காமல் விஷயத்திற்கு வர, “என் வூட்டுகாரரை கேட்டுட்டு சொல்றேன் டாக்டர்” என்றாள் ரேகா.
அந்தப் பதிலில் கடுப்பான தேவிகா, “இன்னுமா உன் வூட்டுகாரருக்கு விஷயம் தெரியாது, ஏன் உன்னை ஆபரேஷன் பண்ணிக்கக் கூடாதுன்னு சொன்ன நல்லவர் அவர்தானே?” என்று எடக்காக கேட்டு வைக்க, ரேகாவின் முகம் இருண்டது. மீண்டும் கண்களில் கண்ணீர் கட்டி நின்றது.
தேவிகாவிடம் அமைதியாக இருக்கச் சொல்லிக் கண்ணைக் காட்டிய அகல்யா, “சரி நாளைக் கடத்தாம சீக்கிரம் முடிவு பண்ணிச் சொல்லுங்க. அடுத்த முறை வரும்போது, உங்க வீட்டுகாரரையும் கூட்டிட்டு வாங்க” என்று சொல்லி அனுப்பினாள்.
கண்களைத் துடைத்தபடி வெளியே வந்த ரேகா, வாசலில் கணவனின் வண்டி நிற்பதைப் பார்த்து ஆச்சரியமானாள்.
“நீங்களும் என் கூட வரீங்களா?” என்று காலை அவள் கேட்ட போது, “நீயே போயிட்டு வந்திரு ரேகா, எனக்கு லோடு எடுக்கப் போகணும்” என்ற அவன், இப்போது இங்கே என்ன செய்கிறான்?
‘ஒருவேளை வேலை முடிச்சுட்டு கூட்டிட்டுப் போக வந்திருக்காரு போல’ என்று எண்ணிக் கொண்டவள், “உங்க அப்பா நம்ம கூட்டிட்டு போக வந்திருக்காரு…” என்று உற்சாகமாகக் குழந்தையிடம் பேசிக் கொண்டே வண்டி அருகே வந்தாள். ஆனால் உள்ளே அவன் இல்லை.
எங்கே அவன் என்று சுற்றிலும் பார்வையைச் சுழற்றி தேடினாள். அப்போது எதிரே இருந்த உணவகத்தில் அவன் நிற்பதைக் கவனித்தவளுக்கு, மனதில் அப்படியொரு ஆசுவாசம்.
அத்தனை நேரமிருந்த அவளுடைய தவிப்பெல்லாம் விலகியது. ஓடிச்சென்று அவனை அணைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழ வேண்டும் போல ஓர் உணர்வு தொண்டையை அடைத்தது.
“மாமா மாமா…” என்று ரேகா சத்தமாக அழைக்க, அவன் திரும்பவில்லை.
‘வண்டி சத்தத்துல கேட்கல போல’ அவள் குழந்தையுடன் சாலையைக் கடந்து சென்றாள்.
‘மாமா’ என்று மீண்டும் அவள் அழைக்க எத்தனித்த சமயம், அதே உணவகத்திலிருந்து ஈஸ்வரி நிகாவுடன் வெளிப்பட்டாள். அவள் நேராக யோகேஷிடம் வந்து விரல்களை ஆட்டி ஏதோ எச்சரிக்க, அவன் பவ்வியமாகக் கைகூப்பி நின்றான்.
ரேகாவிற்கு நடப்பது ஒன்றும் பிடிபடவில்லை.
‘மாமா எதுக்கு அந்த அக்காகிட்ட பேசிட்டு இருக்காரு’ என்று யோசித்தபடி ரேகா அவர்களை நெருங்க, “வயிறெரிஞ்சு சொல்றேன்யா… நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட” என்று ஈஸ்வரி அவனை உக்கிரமாக சபித்துவிட்டு, கடந்துசென்றாள்.
அவள் சொன்ன விதமும் சொன்ன அந்த வாரத்தைகளும் ரேகாவை கதிகலங்கச் செய்தது. இது வெறும் சாதாரண கோபத்தில் உதிர்க்கும் வார்த்தைகள் அல்ல. இதற்கு பின்னணியில் வேறென்னவோ இருக்கிறது.
தொடரும்…
செயற்கை நுண்ணறிவுப் படங்கள்: மோனிஷா
படைப்பாளர்
மோனிஷா
தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இணையத்தில் 27 நாவல்களை இதுவரை எழுதியுள்ளார். அவற்றில் இருபது நாவல்கள், புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பெண்ணியம், சூழலியல் விழிப்புணர்வு இரண்டும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன. சிறார் எழுத்திலும் தற்போது ஈடுபட்டுள்ளார். இவரின் ‘ஒரே ஒரு காட்டில்’ சிறார் நூலை ஹெர் ஸ்டோரீஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை எதிர்பார்ப்பு சமூகத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்படுதல் என்பதே. அதீத சாதிப் பற்று கொண்ட சென்ற தலைமுறை ஆட்களோ அல்லது அத்தனைக்கும் ஸ்டோரி வைக்கும் இன்ஸ்டா தலைமுறையோ, இவர்களின்…
வன்முறைச் செயல்கள் கணக்கற்றவை. ஒருவரைக் காயப்படுத்துவது அல்லது நோவூட்டுவதைக் கண்ணால் பார்த்தோ அல்லது காதால் கேட்டோ புரிந்துகொள்கிறோம். ஆனால், ஒரு சிலர் நுட்பமான செயல்களால் காயப்படுத்தும் போது அதைப் புரிந்து கொள்ள வேண்டும். சில…