மருமகளிடம் அவமானப்பட்டுக் கொண்டிருக்க விருப்பமில்லாமல் கணவன் இறந்ததுமே கஜலக்ஷ்மி, அவர்கள் நிலத்தில் அமைந்துள்ள சிறிய வீட்டிற்குக் குடிபெயர்ந்துவிட்டார்.
மகனைப் பார்க்க வராவிட்டாலும் பேத்தியைப் பார்க்க அவ்வப்போது வந்து போவார். நிகாவிற்கும் பாட்டியிடம் கொள்ளை பிரியம். எப்போது வந்தாலும் அவளுக்குப் பிடித்தமான அச்சுமுறுக்கு, ரவாலட்டு போன்றவற்றைச் செய்து எடுத்து வருவார்.
“புள்ள ஆசையா சாப்பிடுது. செஞ்சு போட துப்பில்ல” என்று அத்தனையும் கொடுத்துவிட்டுக் கூடவே ஈஸ்வரியையும் குத்தி வைப்பார். அதையும் நேரடியாகச் சொல்ல மாட்டார். அவளுக்குக் கேட்காத தூரத்தில் இருக்கும் சமயங்களில் இப்படி ஏதாவது எடக்கு முடக்காகப் பேசுவது அவரின் வழக்கம்.
தற்சமயம் ஈஸ்வரி சமையலறையில் இருந்தாள். சட்டியில் தளதளவென்று மீன் கொழும்பு கொதித்துக் கொண்டிருந்தது.
அப்போது, “அக்கா…” என்று யாரோ அழைக்கும் குரல்.
‘குரல் புதுசா இருக்கு. யார் வந்திருக்கா?’ என்று ஈஸ்வரி எட்டிப்பார்க்க , “ஆயா… என் பிரண்டு மலர்விழியோட அம்மா” என்றாள் நிகா.
“வாம்மா வா. உள்ள வா, ஏன் வெளியவே நிற்குற?” என்று ரேகாவை அழைத்தார் கஜலக்ஷ்மி.
ரேகா என்று அறிந்ததும் ஈஸ்வரி, ‘இவ என்னத்துக்கு வந்திருக்காளாம்’ என்று நொடித்துக் கொண்டாள்.
“அக்கா இல்லைங்களா” என்று கேட்டாள் ரேகா.
“ஈஸ்வரி பக்கத்து வீட்டு பொண்ணு வந்திருக்கு பாரு” என்று கஜலக்ஷ்மி மருமகளை சத்தமிட்டு அழைத்தார்.
‘கெழவிக்கு ரொம்பத்தான் அதிகாரம் தூள் பறக்குது’ என்று முனகியபடி வெளியே வந்தாள் ஈஸ்வரி.
“அக்கா… நாளைக்கு வீட்டுலேயே குழந்தைகளுக்கு மொட்ட அடிச்சு காது குத்தப் போறோம், நீங்க அம்மா அண்ணன் எல்லாம் கண்டிப்பா வரணும்” என்று அழைத்தாள் ரேகா.
ஈஸ்வரியின் முகம் சிடுசிடுத்தது. கஜலக்ஷ்மி அப்போது, “ஆமா உனக்கு எத்தனை புள்ளைங்க” என்று விசாரணையை ஆரம்பித்து அவள் ஊர், உறவு, குலதெய்வம் என்று அத்தனையையும் கேட்டவர், “ஓ… என் மருமக ஊருக்கு பக்கத்து ஊருத்தானா நீயி” என, ரேகாவின் முகத்தில் வியப்பு.
“அப்படியா க்கா” என்றாள். ஆனால் ஈஸ்வரிக்கோ அவள் ஊர்ப் பெயரைக் கேட்டதுமே எரிச்சல் மிகுந்தது. அங்கே நிற்க விருப்பமில்லாமல் மீண்டும் சமையலறைக்குள் புகுந்தாள்.
அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த குழம்பை அணைத்தாள். அணைத்த பிறகும் சட்டியில் கொதிப்பு அடங்கவில்லை. அதேபோல அவள் மனமும் என்றோ நடந்த சம்பவத்தை எண்ணி இன்னும் அடங்காமல் கொதித்துக் கொண்டிருந்தது.
இனி அதைப் பற்றி எல்லாம் யோசித்து எந்த பலனும் இல்லை. தேவையில்லாத நினைவுகளை எல்லாம் ஒதுக்கியவள், மாமியாருக்கும் மகளுக்கும் உணவு பரிமாறினாள்.
சாப்பிட்டுக் கொண்டே கஜலக்ஷ்மி, “வந்து போச்சே… அந்த பொண்ணோட மூத்த புள்ளைக்கு நம்ம நிகா வயசுதானாம்ல” என்று இழுத்தார்.
ஈஸ்வரிக்கு அவர் எங்கே சுற்றி எங்கே வருவார் என்று புரிந்துவிட்டது.
“நிகாவுக்கு வயசு ஒன்னும் பெருசா ஆகிடல இல்ல. இன்னொரு புள்ள இருந்தா நல்லா இருக்கும். ஒண்ணுக்கும் ஒண்ணு துணையா இருக்கும்” என்று கஜலக்ஷ்மி பேசியதைக் கேட்டு, ஈஸ்வரிக்கு சரசரவென்று கோபம் ஏறிவிட்டது.
“வந்தோமா சாப்பிட்டோமோனு கிளம்பி போயிட்டே இருங்க. கண்டதை எல்லாம் பேசிட்டு இருக்காதீங்க” என்றவள் எரிச்சலுடன் மொழிய, “அப்படி என்னடிம்மா நான் பேச கூடாததை பேசிபுட்டேன்” என்று கஜலக்ஷ்மி தட்டில் கையை உதறி கொண்டு எழுந்து நின்றார்.
“ஆமா பேசக் கூடாதுதான்” என்று ஈஸ்வரியின் குரலும் சரிக்குச் சரியாக உயர்ந்தது. அவ்வளவுதான். மாமியாரும் மருமகளும் மாறி மாறி வார்த்தைகளை வீசிக் கொண்டனர்.
“இனிமே இந்த விஷயத்தைப் பத்திப் பேசுறதா இருந்தா என் வூட்டு பக்கமே வர வேணா” என்று விட்டாள் ஈஸ்வரி.
“எதுடி உன் வீடு… எது உன் வூடு” கஜலக்ஷ்மி கர்ஜித்தார்.
இதெல்லாம் கண்ட நிகாவல்லி மிகவும் பயந்து போனாள். ஆனால் அவர்கள் வாக்குவாதம் நின்றபாடில்லை. நடுவீதியில் நின்று வசைமாரியாகப் பொழிந்து கொண்டிருந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் தலையிட்டு சமாதானம் செய்தனர்.
கஜலக்ஷ்மியோ அழுது வடிந்து ஒரு நாடகத்தை அரங்கேற்றிய பின்னரே அங்கிருந்து கிளம்பினார். அவரின் நாடகத்தை நம்பிய மக்களும் ஈஸ்வரியைத் தாறுமாறாகத் திட்டிவிட்டுக் கலைந்து சென்றனர்.
அதைப் பற்றி எல்லாம் ஈஸ்வரி கவலைப்படவில்லை. ஆனால் மிரண்டு அழுது கொண்டிருந்த மகளைப் பார்த்ததும்தான் இப்படிச் சண்டை போட்டிருக்கக் கூடாதோ என்று அவளுக்குக் குற்றவுணர்வு ஏற்பட்டது.
“ஏம்மா ஆயா கூட சண்டை போட்ட” என்று கேட்ட மகளிடம் தன் நிலைமையையும் வலியையும் அவளால் புரிய வைக்கவும் முடியவில்லை.
“ஆயா இனிமே நம்ம வூட்டு பக்கமே வரமாட்டங்களா” என்று அழுது கொண்டே கேட்டாள் நிகா.
“அதெல்லாம் வருவாங்க… நீ சாப்பிடு” என்று தட்டிலிருந்த உணவை ஊட்டி மகளைச் சமாதானம் செய்து படுக்க வைத்துவிட்டாள். அவளும் உறங்கிவிட்டாள். ஆனால் நடந்த பிரச்னையை எல்லாம் யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்த ஈஸ்வரிக்குப் பசியும் எடுக்கவில்லை. உறக்கமும் வரவில்லை.
கதவு தட்டும் சத்தம் கேட்டது. குணாவாகத்தான் இருக்கும். அவன் அம்மா போன் செய்து நடந்த சண்டையை பற்றி ஒப்புவித்து இருப்பார். முக்கியமாக அவளைப் பற்றித் தப்பு தப்பாகச் சொல்லி இருப்பார்.
‘எல்லாம் கேட்டுட்டு சும்மாவா வந்திருப்பான். நல்லா ஏத்திட்டுல வந்திருப்பான். சை! இவனை வேற சமாளிக்கணும். இதெல்லாம் ஒரு பொழப்பு’ என்று புலம்பியபடி எழுந்து சென்று கதவைத் திறந்தவளுக்கு வியப்பானது. அவனிடமிருந்து குடித்த வாடை வரவில்லை.
“பாப்பா அதுக்குள்ள தூங்கிட்டாளா?” என்று சாதாரணமாகக் கேட்டபடி குணா உள்ளே வந்து கைலியை மாற்றினான்.
‘இந்த கெழவி எதுவும் போன் பண்ணி வத்தி வைக்கல போலவே’ என்று அவள் எண்ணி கொண்டிருக்கும் போதே, “இந்தா” என்று சில ரூபாய் நோட்டுகளை நீட்டினான்.
“ஆமா. ஏது இது?” என்று ஈஸ்வரி வினவ, “ஒரு புது வீடு… பெயின்ட் அடிச்சு கொடுத்ததுக்கு கூலி. இந்தா உள்ளே எடுத்து வை” என்றான். அதனைக் குழப்பத்துடன் வாங்கிக் கொண்டு சமையலறைக்குள் வந்தாள்.
“என்ன புதுசா இருக்கு, குடிக்காம வரான், காசு எல்லா கொண்டு வந்து தரான்” என்று யோசித்தபடி அவன் கொடுத்த பணத்தை பிரித்து இரண்டு மூன்று டப்பாவில் வைத்தாள்.
“சோறு எடுத்துனு வாடி… பசிக்குது” என்று குணா சத்தமிட, “தோ வரேன்” என்றவள் அவனுக்கு உணவு பரிமாற, “நீ சாப்பிட்டியா?” என்று கேட்டான்.
அடுத்த ஆச்சரியம் அவளுக்கு. “உன்னைத்தான் ஈஸ்வரி… சாப்பிட்டியா?” என்று மீண்டும் கேட்கவும், “இல்ல பசிக்கல” என்றாள்.
“அது எப்படி பசிக்காம இருக்கும்?” என்றவன் அருகே இருந்த தட்டில் சோறு போட்டு, அவள் கையில் திணித்தான். எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டாள். அவன் அதன் பின்பும் நிறுத்தவில்லை.
“மீன் குழம்பு ருசியா இருக்கு. உன் அளவுக்கு யாராலயும் மீன் குழம்பு வைக்க முடியாது” என்று அளக்க, அவள் கடுப்பாகிவிட்டாள்.
“போதும், நீ எதுக்கு அடி போடுறன்னு எனக்கு விளங்கிடுச்சு. சாப்பிட்டு முடிச்சு கம்னு போய் படு” என்றவள் உண்டு முடித்துப் பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்தாள். பின்னர் படுக்கையை விரித்து விட்டுத் திரும்ப, அவனைக் காணவில்லை.
“இந்த ஆளு எங்கே போய் தொலைஞ்சான்” என்றவள் தேடி கொண்டு வெளியே வர, அவன் திண்ணையில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தான்.
“என்னய்யா இங்க உட்கார்ந்துட்டு இருக்க”
“இப்படி உட்காரேன், உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”
“இந்நேரத்துல உன்கிட்ட கதை பேசிட்டு இருக்க எனக்கு நேரமில்ல. காலைல சீக்கிரமாவே எழணும். வேலை கிடக்கு” என்று கூறிவிட்டு ஈஸ்வரி நகரப் பார்க்க, “எங்க அம்மாகூட நீ போட்ட சண்டையை பத்தி நான் கேட்கப் போறதில்ல” என்றான்.
அப்படியே நின்றுவிட்டவள் அவனை ஏறஇறங்க ஒரு பார்வை பார்த்து, “அப்போ எல்லாம் தெரியும் உனக்கு” என்றாள்.
“எப்படி தெரியாம இருக்கும். அதான் ஊரே வேடிக்கை பார்த்துச்சாம்ல”
“உங்க அம்மாதான் என்னைய சீண்டி சண்டை வளிச்சது”
“நான் அதை பத்தி பேச போறதில்ல ஈஸ்வரி”
“பொறவு வேற என்ன”
“இப்படி உட்காரு” என்று மீண்டும் அருகே அமரச் சொல்லி கை காட்டினான். இம்முறை எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்தாள்.
சில நிமிட மௌனத்திற்குப் பின், “நான் உனக்கு நல்ல புருஷனாவே இருந்தது இல்ல, உனக்கு ரொம்ப கஷ்டம் கொடுத்திருக்கேன். நிறைய அநியாயம் பண்ணி இருக்கேன்” என்று புலம்பினான்.
ஈஸ்வரி அசரவில்லை. “குடிச்சுட்டும் வரல. அப்புறம் என்னத்துக்கு இப்படி உளறிட்டு இருக்க?” என்று கேட்டாள்.
“அது இல்லடி, சித்தி சாவுறதுக்கு முன்ன உன்னை பத்திதான் சொல்லுச்சு. அப்பத்துல இருந்து என் மனசு உறுத்திட்டேதான் இருக்கு” என்றான்.
ஈஸ்வரியின் நினைவில் அவன் சித்தி சந்தானலட்சுமி வந்து நின்றார். அவருடைய வாழ்க்கையும் ஒரு வகையில் அவள் வாழ்க்கையைப் போலத்தான். என்ன, அவருக்குக் குழந்தைகள் இல்லை. கணவனால் அவருக்கு எந்த பயனும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேல் உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்த மனிதி.
மாமியார் குடும்பத்தில் அவளுக்கு ஆதரவாகப் பேசிய ஒரே ஜீவனும் அவர்தான். இரண்டு வாரத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். அவர்தான் குணாவை வளர்த்தவர். அந்த வகையில் அவரின் மரணம் அவனுள் பாதிப்பை ஏற்படுத்தியதை அவளுமே அறிவாள்தான். ஆனால் அவன் இப்படி எல்லாம் பேசுவதைதான் அவளால் நம்ப முடியவில்லை.
தன் அம்மாவின் உடன் பிறந்த தங்கை பற்றி குணா உருகி உருகிப் பேசியதை எல்லாம் பொறுமையாக கேட்ட ஈஸ்வரி, “சின்ன அத்த பத்தி எனக்கு தெரியும். நிச்சயம் அது உன்கிட்ட நல்ல புத்தி சொல்லி இருக்கும். ஆனா அதெல்லாம் கேட்டுட்டு நீ திருந்திட்டனு எல்லாம் நான் சத்தியமா நம்பல. எதையாச்சும் உளறிட்டு இல்லாம கம்னு வந்து படுக்கிற வழியை பாரு” என்று விட்டு பட்டென்று எழுந்து நின்று கொண்டாள்.
அவளை உள்ளே செல்லவிடாமல் கை பிடித்து நிறுத்திய குணா, “உண்மைதான். இதுவரைக்கும் சித்தி சொன்னது எல்லாம் நான் கேட்டது இல்ல. ஆனா என்னைய மாதிரியே அந்த புள்ளைய மாத்திடாதேன்னு சொல்லிட்டு சித்தி உயிரை விட்டப்ப எனக்கு என்னவோ போலவாகிடுச்சு” என்றான். அந்த வார்த்தைகள் ஈஸ்வரியையும் கொஞ்சம் கலங்கடித்துவிட்டது.
மறுபுறம் குணா, “மன்னிச்சுடு ஈஸ்வரி மன்னிச்சுடு” என்று ஜபித்தபடி அவள் இடையைக் கட்டிக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழ, அவள் அசையாமல் நின்றாள்.
அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்து, கோடிட்டு கன்னம் வழியே வழிந்தது. ஆனால் அவனுடைய மன்னிப்பும் அழுகையும் அவளுடைய வலிகளை மறக்கடிக்க முடியாது.
அந்தளவு ஏமாற்றங்களையும் வலிகளையும் வாழ்க்கை அவளுக்குத் தந்திருக்கின்றன. அவன் தந்திருக்கிறான்.
அழுது ஓய்ந்து மனைவியை நிமிர்ந்து நோக்கியவன், “இனிமே நான் சத்தியமா குடிக்க மாட்டன் ஈஸ்வரி. ஒழுங்கா வேலைக்கு போறேன். உன்னை கண்கலங்காம வைச்சு பார்த்துக்கிறேன்” என்றான்.
எந்தவித கலக்கமும் இல்லாமல் தன் இடையைச் சுற்றியிருந்த அவன் கையை விலக்கிய ஈஸ்வரி, “சரி சரி உள்ளே வந்து படு” என்றுவிட்டுச் சென்று படுத்துக் கொண்டாள்.
நாளை விடிந்ததுமே இந்த பேச்சை எல்லாம் மறந்துவிடுவான் என்றுதான் நினைத்தாள். ஆனால் அடுத்த வாரம் முழுக்க ஒழுங்காக வேலைக்குச் சென்றுவிட்டு வந்தான். ஆயிரமோ ஐந்நூறோ என்று தினமும் கிடைக்கும் வருமானத்தை அவளிடம் கொண்டு வந்து தந்தான். இதெல்லாம்விட முக்கியமாகக் குடிக்காமல் வந்தான்.
இப்படியாக இரண்டு வாரம் கழிந்தன. குணா அன்று, “ஈஸ்வரி நல்ல படம் ஒன்னு வந்திருக்கு, நீ நான் பாப்பா எல்லாம் படத்துக்கு போயிட்டு வரலாமா?” என்று கேட்க, “போலாம் ப்பா போலாம் ப்பா” என்று ஆர்வமாக குதித்தாள் நிகாவல்லி. ஆனால் ஈஸ்வரி கணவனை முறைத்துப் பார்த்தாள்.
“ஏய் பழைய மாதிரி எல்லாம் இல்லடி நான்” என்று அவன் கெஞ்ச, இப்போதும் அவனை அவள் நம்பவில்லை. அதேநேரம் முன்பு போல அவன் தனியாக விட்டுச் சென்றால் பயந்து கொண்டிருக்க, அவள் ஒன்றும் பழைய ஈஸ்வரி இல்லை. ஆதலால் மகளின் விருப்பத்திற்காக அவனுடன் கிளம்பிச் சென்றாள்.

மகளும் அப்பாவும் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து செல்வதைப் பார்க்க அவ்வளவு ரசனையாக இருந்தது. திருமணம் செய்த இத்தனை வருடங்களில் அன்றுதான் குணா அத்தனைப் பொறுப்பாக நடந்து கொண்டான். அதுவும் அவர்கள் இருவருக்கும் என்ன வேண்டுமென்று அக்கறையாக கேட்டுக்கேட்டு வாங்கி வந்து தந்தான்.
“ம்மா ஒரே ஒரு ஐஸ்க்ரீம் ம்மா” என்று நிகா ஆசையாகக் கேட்க, என்னவோ அன்று மகள் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவிக்க, ஈஸ்வரிக்கு மனம் வரவில்லை.
மூவரும் சினிமா பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்புவதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. ஆட்டோவில் வரும்போதே நிகா உறங்கிவிட்டாள். ஈஸ்வரி பூட்டைத் திறக்க, மகளை படுக்கையில் கிடத்தினான் குணா.
அவள் உடைமாற்றிக் கொண்டிருந்த சமயம் குணாவின் கரங்கள் அவளைப் பின்புறமாக அணைத்தன.
“வுடுய்யா… குழந்தை முழிச்சுக்க போது”
“இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருந்த ஈஸ்வரி” என்று குழையவும் சட்டென்று எட்டிப் பார்த்த வெட்கத்தை மறைத்துக் கொண்டவள், “ஆமாமா இத்தனை வருஷத்துல இன்னைக்குதான் நான் உன் கண்ணுக்கு அழகா தெரியுறானாக்கும்?” என்று பதிலுக்குக் கேட்டாள்.
“இல்ல… இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா சிரிச்ச முகமா இருந்த” என்றவன் சொன்னதை ஆமோதிக்கும் விதமாக அவள் முகத்தில் எட்டிப் பார்த்த புன்னகை கணநேரத்தில் மறைந்தும் போனது.
“போதும் போதும் போய் படு” என்று அவனிடம் கடுகடுத்தாள். குணாவின் முகம் சுருங்கியது. அமைதியாகத் தரையில் படுக்கையை விரித்துப் படுத்துக் கொண்டான்.
கண்ணாடியில் தன் முகத்தை ஆராய்வாகப் பார்த்த ஈஸ்வரியின் முகம் புன்னகைப் பூத்திருந்தது.
ரொம்ப நாள்கள் கழித்துத் தன்னைத்தானே சந்தோஷத்துடன் ரசித்துக் கொள்ளும் பாவம் அவளின் முகத்தில். மனதில் புதிதாக ஒரு பரவச உணர்வு பொங்கிப் பெருக, தன்னைத்தானே ரசித்துக் கொண்டாள்.
அந்தக் கணம் மறுத்துவிட்ட அவளின் உணர்வுகள் யாவும் மீண்டும் துளிர்விட்டன. எப்போதும் மகளருகே படுத்து கொள்ளும் ஈஸ்வரி அன்று கணவன் அருகே படுத்தாள்.
ஆச்சரியமாகத் திரும்பிய குணா, மனைவியின் முகத்திலிருந்த பிரகாசத்தைக் கண்டதுமே அவளை ஆசையுடன் தழுவிக் கொண்டான்.
எப்போதும் போல விடியற்காலை ஈஸ்வரிக்கு விழிப்பு வந்தது. ஆனால் உடலில் அப்படியொரு சோர்வு. எழமுடியவில்லை. நேற்று நடந்தது எல்லாம் கனவா நினைவா என்ற சந்தேகம் வேறு.
இதெல்லாம் யோசித்தபடியே படுத்துக் கிடந்தவள் செவியில், ‘அம்மா அம்மா…’ என்ற முனகல் சத்தம் கேட்டது. பதறித் துடித்து எழுந்த ஈஸ்வரி நிகாவல்லியின் உடலைத் தொட்டுப் பார்க்க, அது அனலாகத் தகித்தது.
தொடரும்…
செயற்கை நுண்ணறிவு படங்கள்: மோனிஷா
படைப்பாளர்

மோனிஷா
தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இணையத்தில் 27 நாவல்களை இதுவரை எழுதியுள்ளார். அவற்றில் இருபது நாவல்கள், புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பெண்ணியம், சூழலியல் விழிப்புணர்வு இரண்டும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன. சிறார் எழுத்திலும் தற்போது ஈடுபட்டுள்ளார். இவரின் ‘ஒரே ஒரு காட்டில்’ சிறார் நூலை ஹெர் ஸ்டோரீஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.