சுகம் எங்கே 1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இது கே. ராம்நாத் இயக்கி, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரைப்படம். திரைக்கதையை ஏ.கே.வேலன் மற்றும் கண்ணதாசன் எழுதியுள்ளனர். கண்ணதாசன் மற்றும் மருதகாசி எழுதிய பாடல்களுக்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர்.
ஜிக்கி, கோமளா, ராணி, கிருஷ்ணன் பின்னணி பாடியுள்ளனர்.
நடிகர்கள்
கே.ஆர். ராமசாமி
கே நடராஜன்
கே.ஏ. தங்கவேலு
சந்திரபாபு
பி.எஸ். வீரப்பா
கே கே சௌந்தர்
டி கே ராமச்சந்திரன்
எஸ் ராமராவ்
எஸ் வி சுப்பையா
சி பி கிட்டான்
ஆர். பாலசுப்ரமணியம்
ஓ.ஏ.கே. தேவர்
எஸ் சி கிருஷ்ணன்
ஆர் எம் சேதுபதி
கே சாவித்திரி
டி.பி. முத்துலட்சுமி
எம் டி கிருஷ்ணாபாய்
சி ஆர் ராஜகுமாரி
பி தனம் டி இந்திரா பி சுசிலா
பண்ணை ஒன்றில் வேலை செய்பவர் வேலன். அதே பண்ணையில் கணக்கப் பிள்ளையாக இருப்பவரின் மக்கள் வேணி. இருவரும் காதலிக்கிறார்கள்.
பண்ணையாரும் அவர் மனைவியும் வேலன் மீது அன்பு வைத்து இருக்கிறார்கள். அவர்களின் குழந்தை சிறுவயதில் காணாமல் போய்விட்டது. இப்போதே வேலன் யார் எனத் தெரிந்துவிட்டதா? ஆம் காணாமல் போன மகன் இவர் தான். ஆற்றங்கரையில் தன் காதலியைச் சந்திக்கும்போது வேலன், ஒரு சங்கிலியைப் பரிசாகப் போடுகிறார். இப்போது மீதிக்கதையும் தெரிந்து விட்டது. இப்போதே கதை தெரிந்து விட்டதா? ஆனாலும் தொடர்ந்து பாருங்கள்.
பட்டணத்திலிருந்து பண்ணையாரின் தம்பி வருகிறான். வேணி மீது ஆசை கொள்கிறான். வேலனுக்கும் அவருக்கும் மோதல். விளைவு, வேலன் வேலை இழக்கிறார். வேணியின் அப்பா, தன் மகளை மறந்துவிடுமாறு கெஞ்சுகிறார்.
கொட்டகிரி கோரா எஸ்டேட்டிற்கு ஆள் எடுக்கிறார்கள். கொத்தடிமை வேலைதான். வேலன் அஞ்சல் நிலைய அலுவலர் பூபதி வீட்டில் தான் வாடகைக்கு இருக்கிறார். எஸ்டேட் வேலைக்கு ஆள் சேர்த்து விட்டால், ஆளுக்குப் பத்து ரூபாய் அஞ்சல் நிலைய அலுவலருக்குக் கிடைக்கும். அதனால் பூபதி வேலனிடம் சொல்கிறார். வேலன் அந்த வேலைக்குப் போவதாகச் சம்மதித்துக் கையெழுத்துப் போடுகிறார். ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற நூறு ரூபாய் குறிப்பிட்ட நாளுக்குள் கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை.
இதையறிந்த வேணி, நூறு ரூபாய் கொடுத்து அனுப்புகிறார். பணம் பூபதி கையில் கிடைக்கிறது. அவன் கொடுக்கவில்லை. வேலன், எஸ்டேட்டிற்கு இழுத்துச் செல்லப் படுகிறார்.
பணக்காரன் என்பதால், பண்ணையாரின் தம்பி பாண்டித்துரையைத் தன் மகளுக்குத் திருமணம் செய்து வைத்தால் நல்லது என நினைக்கும் வேணியின் அப்பா, வேணி அவரைக் காதலிப்பதாகச் சொல்லி ஆசையை வளர்க்கிறார். அண்ணனுக்குத் தெரியாமல் திருமணத்தை வேறு ஊரில் நடத்துவோம் என்கிறார். கோயம்புத்தூரில் திருமண ஏற்பாடு நடக்கிறது.
இதை அறிந்த பூபதி, நாகப்பனுக்குத் தகவல் சொல்ல, நாகப்பன், வேலனை அங்கு அனுப்புகிறான். கூடவே வேணியைக் கடத்த ஆள் அனுப்புகிறான். திருமணத்தில் இருந்து தப்பிக்க நினைத்த வேணி, பாண்டித்துரையைப் பெண் வேடமிட்டு வரச்சொல்கிறார். இவர் ஆண் வேடத்தில் வருகிறார். இதனால் நாகப்பனின் ஆட்கள், பாண்டித்துரையைக் கொண்டு செல்கிறார்கள்.
வேணியும் வேலனும் பாண்டிச்சேரி சென்று தையல்கடை வைத்து வாழ்கிறார்கள். ஒரு நாள் ஒரு நாடகம் பார்க்கிறார்கள். பிரிதிவிராஜ், சம்யுக்தா கதையில், மகளை அப்பா ஏற்றுக் கொள்வதாகக் கதை. இதைப் பார்த்த வேணி, அப்பாவிற்குக் கடிதம் எழுதுகிறார். திருந்தாத அப்பா, இவர்களைத் தமிழ்நாட்டிற்குக் கூட்டி வந்து பிரித்து விடுகிறார். மீண்டும் சேரும் இவர்கள், திருச்சியில் யாருக்கும் தெரியாமல் வாழ்கிறார்கள்.
கையாடல் செய்த குற்றத்திற்காகப் பூபதி சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். வழியில் தப்பித்து, மாறுவேடத்தில் திருச்சியில் சுற்றுகிறான். வேணியைப் பார்க்கிறான். நாகப்பனுக்குத் தகவல் போகிறது. பூபதி துப்பாக்கியால் சுட, இறந்தது நாகப்பன். பழி வேலன் மீது.
வழக்கு நடத்தப் பணம் வேண்டும் என வேலன் கொடுத்த சங்கிலியை வேணி விற்கக் கொடுத்து அனுப்புகிறார். பண்ணையாருக்கு, வேலன் தன் மகன் எனத் தெரியவருகிறது. பூபதியின் வேடம் கலைகிறது. குற்றம் நிரூபிக்கப் படுகிறது.
‘வாழ்க்கை வாழ்வதற்கே பகையை வளர்ப்பதற்கு அல்ல’ என அனைவரும் இணைகிறார்கள்.
பல புகழ்பெற்ற பாடல்கள் உள்ளன.
ஜிக்கி மற்றும் கே.ஆர்.ராமசாமி இருவரும் இணைந்து பாடிய புகழ்பெற்றப் பாடல்
செந்தமிழ் நாட்டு சோலையிலே
சிந்து பாடி திரியும் பூங்குயிலே
தென்றல் அடிக்குது என்னை மயக்குது
தேன் மொழியே இந்த வேளையிலே
சிந்தை கவர்ந்த ஆண் அழகா
உம்மால் எனது வாழ்விலே சொந்தம் மிகுந்தது
காதலில் புது சுகமும் என் மனம் காணுதே
அன்பில் விளைந்த அமுதே
என் ஆசை கனவும் நீயே
இன்ப நிலாவே உனது கண்கள்
இனிய கதைகள் சொல்லுதே
உம்மை அன்றி இங்கு இன்பம் இல்லை
உற்ற துணை வேறு யாரும் இல்லை
என்னுயிரே தமிழ் காவியமே
என்றும் ஒன்றாகவே வாழ்ந்திடுவோம்
இன்பம் துன்பம் எதிலும்
சம பங்கு அடைந்தே நாமே
இல்லறம் என்னும் பேதமில்லை
எண்ணம் கொண்டு வாழலாம்
எண்ணி எண்ணி இந்த ஏழையின் மனம்
இன்ப கனவு காணுதே
ஜிக்கி மற்றும் கே.ஆர்.ராமசாமி இருவரும் இணைந்து பாடிய புகழ்பெற்ற பாடல் இது. கேட்க மிகவும் இனிமையாக இருக்கும் வானொலியில் அடிக்கடி ஒலித்த பாடல் இது.
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம்
காதல் நெஞ்சின் சாட்சியே
தொல்லை மாந்தர் சூழும் நாட்டில்
சுகம் எங்கே அடிமை வாழ்வில்
இல்லை என்பார் இல்லை என்னும்
இன்ப நாளை காண்போமா
உயர்ந்த எண்ணம் மலரும் நெஞ்சில்
சிறிதும் இன்பம் இல்லையே
கயவர் கூட்டம் உலவும் நாட்டில்
காணும் யாவும் தொல்லையே
மனிதன் வாழ்வை மனிதன் பறித்து
வாழும் காலம் மாறுமா
இனியும் நாட்டில் ஏழை செல்வன்
பேதம் யாவும் வாழுமா
ஏ.பி. கோமளா, கே.ஆர். ராமசாமி இருவரும் இணைந்து என தையல் வேலை குறித்து சொல்லும் ஒரு பாடல் வருகிறது.
கண்ணை கவரும் அழகு வலை
கலைகளில் சிறந்த தையல் கலை- பல
கலைகளில் சிறந்த தையல் கலை
பெண்ணின் அழகை பெருக்கியே காட்டும்
உன்னதமான உருவம் உண்டாகும்
படிக்காதவரை பிஏ எம்ஏ
பட்டதாரி போல் மாற்றி விடும்- இது
பட்டதாரி போல் மாற்றி விடும்
புது சட்டைகார துரை ஆக்கிவிடும்
பண்ணை வேலை செய்யும் பெண்ணை
பாரிஸ் லேடி ஆகிவிடும்
படித்தவர் போலே காட்டிவிடும்.
கிழவர்கள் தம்மை குமாரர்கள் ஆக்கி
கின்னாரம் போடா செய்திடுமே
கிளவிகள் தமையும் குமரிகள் ஆக்கி
கேலி பேசவும் செய்திடுமே
ஆடும் மாடும் மெய்ப்பவர் கூட
அணியும் மைனர் புஷ்கோட்
இது ஆடும் ராணி இன்னிசை வாணி
போடம் ஹை நெக் ஜாக்கெட்
மின்னும் துணிகள் பல வகை யாலே யாளே
வித விதமான துணிகள் உண்டாக்கி
இந்தப் பாடல் அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களை சொல்கிறது. குறுக்கெழுத்துப் போட்டி, கூப்பன் போன்றவை குறித்து பேசுகிறது.
ஒண்ணா ரெண்டா எது
இந்த உலகத்தை கெடுக்குது
உசிரை வாங்குது
மண்ணாங்கட்டியை மலை போல் ஆக்கும்
வழியை காட்டிடும் பணத்தை குவிக்குது
பெண்கள் கண்ணில் பட்டால் போதும்
பிரியம் கொடுக்குது
பட்டு புடவை ஒண்ணு புஷ்பம் ரெண்டு
பெட்டி பாம்பை புருஷரை ஆக்கும்
பெண்களின் ஆயுதம் இது
கண்ணீர் ஒண்ணு புன்னகை ரெண்டு
ஆம்பளை பொம்பளை அத்தனை பேரையும்
ஆட்டி படைக்குது இது -பொய்
காதல் ஒண்ணு காசு ரெண்டு
ஆட்டம் பாட்டும் சேர்ந்து நடந்திடும்
ஆனந்த காட்சியே இது
நல்ல சினிமா ஒண்ணு நாடகம் ரெண்டு
குறுக்கெழுத்து போட்டி நடத்தும்
கூட்டம் பெருத்து போச்சு
குறுக்கு வழியில் பணத்தை சேர்க்கும்
ஆசை பெருகலாச்சு- பல
குழந்தை குட்டிகள் கிழவர் மத்தியில்
கூப்பன் என்பதே பேச்சு
ஹோட்டல் சர்வர் ஆசிரியர் டிரைவர்
கேள்வி இதுவே ஆச்சு
படிச்சவன் மூளையும் மங்கி போச்சு
இது பட்டிக்காட்டுக்கும் பரவி போச்சு
கடைக்கு கடை இந்த அறிவிப்பு ஆச்சு
அரசாங்கமும் இது பத்தி யோசிக்கலாச்சு
கே.ஆர்.ராமசாமி அவர்கள் பாடிய இந்தப் பாடல், திரைப்படத்தின் பெயரைத் தாங்கி வருகிறது.
சுகம் எங்கே சுகம் எங்கே
குணத்தை உதறி பணத்தை நாடும்
கூட்டம் மலிந்த கொடிய உலகில்
அமுத மொழியும் குமுத விழியும்
ஆசை பொங்கும் பார்வையும் -அழகு சிலையே
பழைய கதையாய் ஆனபோது -உலகிலே
அன்பின் உருவே ஆடிப்பாடி
வாழ்ந்த வாழ்வும் போனதே
அன்பினால் உன்னை பிரிந்து
வாடும் காலம் நேர்ந்ததே
இன்ப வாழ்வும் இந்த நாடும்
இருப்பவர் தமக்கே சொந்தமே- பொருள்
ஏழையாக பிறந்த எனக்கு
துன்பம் ஒன்றே சொந்தமே
1954 அக்டோபர் 21 அன்று பாண்டிச்சேரி, மாஹே, ஏனாம், காரைக்கால் இந்த நான்கு பகுதிகளின் முழு அதிகாரத்தை இந்திய அரசுக்கு மாற்றும் ஒப்பந்தத்தில் பிரெஞ்சு அரசு கையெழுத்திட்டது.
நவம்பர் 1 அன்று இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. இந்தத் திரைப்படம் இந்த காலகட்டத்திற்கு முன் வந்த திரைப்படம் என்பதால், பாண்டிச்சேரி சென்று கைது செய்ய முடியாது என்பதற்காக, வேணி, வேலன் அங்குச் சென்று வாழுகிறார்கள்.
நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமி நடிப்பு மிகவும் இயல்பாக நன்றாக இருக்கிறது. சாவித்திரி அம்மாவின் நடிப்பு மட்டுமல்ல வேணி என்னும் அவரின் பாத்திரமும் வலுவாகக் கட்டமைக்கப் பட்டுள்ளது. காதலைக்/ காதலனைக் காப்பாற்ற அவர் செய்யும் முயற்சிகள், தையல் வேலை செய்து குடும்பத்தை நகர்த்துவது என இயல்பான பாத்திரம்.
பூபதியாக வரும் எஸ் வி சுப்பையா அவர்களின் உடல்மொழி சிறப்பாக இல்லை என்றாலும், அதுவே கதையின் ஓட்டத்திற்குத் தேவையானதாக இருந்ததைக் கதையின் முடிவு சொல்கிறது.
வீரப்பா, கே நடராஜன் எனப் பெரிய வில்லன்கள் இருந்தாலும் அவ்வப்போது டணால் டணால் எனப் பேசிக்கொண்டு வரும் தங்கவேலு தான் பெரிய வில்லனாக இருக்கிறார்.
மாறுபட்ட வேடத்தில் சந்திரபாபு குறைந்த நேரம் வந்தாலும் அசத்துகிறார்.
திரைப்படத்தில் வரும் தோட்டம், காட்சியமைப்பு அனைத்தும் இயல்பாக இருக்கின்றன.
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.