‘மோகன சுந்தரம்’ 1951ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். 

டி.ஆர்.மகாலிங்கம் அளிக்கும் ஸ்ரீ சுகுமார் ப்ரொடக்ஷன்ஸ் அளிக்கும் மோகன சுந்தரம்; கே ஆர் ரங்கராஜுவின் துப்பறியும் நவீனம் எனத் திரைப்படம் தொடங்குகிறது. 

நடிகர்கள் 

டி.ஆர். மகாலிங்கம் – பூபதி

பி.ஆர். பந்துலு – சுந்தர முதலியார்  

கே. சாரங்கபாணி – சுப்பண்ணா

வி.கே. ராமசாமி – மோகன முதலியார் 

டி.கே. ராமச்சந்திரன் – சீதாராமன் 

வி.கே. கார்த்திகேயன் – கோபாலசாமி 

கே. சாயீராம் – பீமா ராவ் 

கே.எஸ். ஹரிஹரன் – பாலு முதலியார் 

கே. நடராஜன் – துப்பறியும் கோவிந்தன் 

என். திருவேங்கடம் – சப் இன்ஸ்பெக்டர் 

சி.வி.வி. பந்துலு – ராமதாஸ் 

சந்திர பாபு கோபுவாக 

கொட்டாம்புளி ஜெயராமன் – கான்ஸ்டபிள் 

முத்து ராமலிங்கம், பைரவன், மணி, கோவிந்தன்,

மற்றும் மாஸ்டர் சுப்ரமணியம்.

நடிகைகள் 

S. வரலட்சுமி = விசாலாக்ஷி (பாப்பா) 

V. சுசீலா – லீலாவதி 

S K. வேணு பாய் – ஜெகதாம்பாள் 

S R. லட்சுமி – சிங்காரம் 

G. சகுந்தலா – மரகதம் 

சரஸ்வதி – லீலாவதியின் தாயார் 

K S அங்கமுத்து – லட்சுமி

கிருஷ்ணவேணி, ராஜேஸ்வரி, ஞானகுமாரி,

சரஸ்வதி, பிரபா, மீராமற்றும் பலர்.

நடனம்

குமாரி கமலா

திரைக்கதை, வசனம், டைரக்ஷன்  ஏ.டி.கிருஷ்ணசாமி B A. 

பாடல்கள் K. D. சந்தானம்

சங்கீத டைரக்ஷன் T. G. லிங்கப்பா

மோகன சுந்தரம் என்ற ஒரு நிறுவனம், நண்பர்களான மோகனம் மற்றும் சுந்தரத்தால் நடத்தப் படுகிறது.

மோகனம், காந்தி குல்லாவுடன் இருப்பவர்; எப்போதும் பேசத்தொடங்கும் போது வந்தேமாதரம் சொல்லி, முடித்ததும் ஜெய்ஹிந்த் எனச் சொல்லுபவர். ‘தாட்சண்ணியம் தன நாசம்’ என்பவர். பழைய காங்கிரஸ்காரர். இப்போது தொழில் என வந்தபிறகு கொள்கைகளைப் புறம் தள்ளியவர். 

சுந்தரம், தாட்சண்யம் பார்க்கக் கூடியவர், எல்லோருக்கும் கடன் கொடுக்கக் கூடியவர். இவரின் மகள் பாப்பா; தங்கை மகன் பூபதி. 

பெற்றோர் இல்லாத பூபதியைச் சுந்தரம்தான் வளர்க்கிறார். பாப்பாவுக்கும் பூபதிக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்பது இவரின் விருப்பம். பிள்ளைகளுக்கும் விருப்பம் தான்.

பாப்பா, கல்லூரி மாணவி. அவருக்குப் பாட்டு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியையாகத் தனது அம்மாவுடன் வருகிறாள் லீலா. மனைவி இல்லாத சுந்தரத்தைத் தன் கைக்குள் போடுவதுதான் லீலாவின் திட்டம். லீலா, ஏற்கனவே திருமணமானவர். கணவர் பாலு, நகைத் திருட்டு  தொடர்பாகச் சிறையில் இருக்கிறான். மோகன சுந்தரம் நிறுவனத்தில்தான் அவன் திருட்டு நகையை அடகு வைத்து இருக்கிறான். 

பூபதிக்கும் பாட்டு ஆசிரியைக்கும் தொடர்பு இருப்பதாக மோகனம் சொல்ல, சுந்தரம், பூபதியை வீட்டை விட்டுத் துரத்தி விடுகிறார். பூபதி வீட்டைவிட்டுத் துரத்தப்பட்ட பின் சுந்தரம், லீலாவைத் திருமணமும் செய்து கொள்கிறார். சித்தியின் கொடுமை தொடங்குகிறது.

இந்தத் திருமண செய்தி பத்திரிகையில் வருகிறது. இதைப் பார்த்து, பூபதி மீண்டும் இங்கு வருகிறார்; லீலாவின் கணவனின் தம்பியும் வருகிறான். லீலாவின் தம்பி என அவன் தன்னைச் சுந்தரத்திடம் அறிமுகம் செய்து கொள்கிறான். இந்த காலகட்டத்தில் லீலாவின் கணவர் பாலுவும் சிறையிலிருந்து வெளியே வந்து விடுகிறான்.

அவன்தான் நகையை மோகன சுந்தரம் நிறுவனத்தில் அடகு வைத்தவன். அதனால் நகையைத் திருப்ப வருகிறான். அப்போது நிறுவனத்தில் சுந்தரம்தான் இருக்கிறார். நகை வைத்திருக்கும் பீரோவைத் திறந்து பார்த்தால் அங்கே நகை இல்லை. அதை மீட்டுக் கொண்டு போய்விட்டதாக நிறுவனத்தின் கணக்கு சொல்கிறது. இதனால் பாலு சண்டை போடுகிறான். சாயங்காலம் வருவதாகச் சொல்லிச் செல்கிறான்.

இதே நேரம், சித்தியுடனான சண்டையால், பாப்பா பூபதியைத் தேடிப் போகிறார். ஆனால் அவர், பூபதியின் வீடு போய்ச் சேரவில்லை. 

பாலுவின் தம்பி, பாப்பா இருக்குமிடம் தெரியும் ஏன் சொல்லி  சுந்தரத்தை அழைத்துச் செல்கிறான். அங்கு அவரைக் கட்டிப் போட்டுவிட்டு, அவரின் வேடத்தில் பாலு, நிறுவனத்திற்கு வருகிறான். வந்த இடத்தில் பாலு கொலை செய்யப் படுகிறான். ஆனால் எல்லோரும் சுந்தரம்தான் இறந்தது என நினைக்கிறார்கள். பழி பூபதி மேல் விழுகிறது. 

பாப்பாவை, வயதான,  மோகனம்தான் பூட்டி வைத்து இருக்கிறான். திருமணம் செய்து சொத்து முழுவதையும் அபகரிப்பது அவனது எண்ணம். பூட்டி வைத்திருக்கும் வீட்டில் இருக்கும் வேலைக்கார மரகதம், உதவ முன்வருகிறார். அவர், தனது காதலன் கோபுவிற்குக் கடிதம் எழுதப் பெயர் போட்டு வைத்திருந்த உறையை, பாப்பாவிடம் கொடுக்க, பாப்பா, பூபதிக்குக் கடிதம் எழுதுகிறார்.

அஞ்சலக சீல், பெயர் போன்றவற்றை வைத்துக் கடிதம் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து வந்திருக்கிறது எனக் கண்டுபிடிக்கிறார்கள். கோபுவைப் பூபதி கண்டுபிடித்து கேட்கும் போது, அருகில் மூன்று மைல் தூரத்தில் உள்ள ஒரு பங்களாவில் தனது காதலி வேலை செய்வதாகக் கூறுகிறார். பூபதி அங்குச் சென்று பாப்பாவை மீட்கிறார். 

நிறுவனத்தில் ஏற்கனவே கோபால்சாமி செய்த கையாடல் குறித்து அங்கு வேலை செய்பவர் போலீசிடம் தெரிவிக்க, போலீஸ் அவனிடம் செல்கிறது. மோகனன் அந்த நகைகளைப் பம்பாய் கொண்டு போய் விற்று விட்டான் என இவன் சொல்கிறான்.

ஏற்கனவே, லீலா ஜமீன்தார் வீட்டிலிருந்து தான்  அந்த நகைகளைத் திருடி வந்து இருக்கிறாள். அதைப் போலீஸ் கண்டுபிடித்து, அவரைச்  சிறையில் தள்ளுகிறது. சுந்தரத்தைப் பூபதி மீட்க, அவர் மகளுடன் இணைகிறார். அனைத்து குற்றங்களையும் செய்த மோகனன் கைது செய்யப் படுகிறான். பாப்பா பூபதி திருமணம் நடைபெறுகிறது.

நாயகன் பூபதியாக TR மகாலிங்கம் வருகிறார். அவர்தான் படத்தைத் தயாரிக்கவும் செய்து இருக்கிறார். ஆனாலும் திரைப்படத்தின் பெயரைத் தனது கதாபாத்திரத்தின் பெயராக மாற்றாமல், கதை என்ன தலைப்பில் எழுதப்பட்டதோ, அதே பெயரை வைத்திருப்பது சிறப்பு. படத்தின் கதை ஜெ.ஆர். ரங்கராஜுவின் ‘மோகன சுந்தரம்’ துப்பறியும் நாவலை ஒட்டியது. பாளையங்கோட்டையைச் சேர்ந்த ரங்கராஜுதான் தமிழின் முதல் அறிவியல் புனைகதையை 1909ஆம் ஆண்டு எழுதியவர். இவரது மோகன சுந்தரம் நாடகமாகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

எழுத்தாளர் ஜெ.ஆர். ரங்கராஜு

நாயகி பாப்பாவாக வரலட்சுமி வருகிறார். சிறு வயது முதலே நடித்து வந்தாலும், நாயகியாக இது தான் அவருக்கு முதல் படம் என நினைக்கிறேன். இதற்குப் பின்னான பல திரைப்படங்களிலும் வயதான வேடமே ஏன் கொடுத்தார்கள் என வருத்தம் அளிக்கும் அளவுக்கு, அழகாக இருக்கிறார். சிறப்பாக நடித்தும் இருக்கிறார். படத்தில் ஒரு பாடலைத் தவிர அனைத்துப் பாடல்களையும் இவரே பாடியுள்ளார்.

ஐந்து நிமிடங்களே வந்தாலும், நெஞ்சை அள்ளிக் கொண்டு செல்பவர் சந்திரபாபு தான். தன் காதலியின் பெயரை, ‘மரகதம்’ என சொல்லும் போது அவரின் வெட்கம் கவிதை போல உள்ளது. ஆங்கிலமும் தமிழும் கலந்த பாடலுக்கு அவர் ஆடும் நளினம் அற்புதம். 

இன்பம் கொஞ்சும் வேளை மனம் 

இன்பம் கொஞ்சும் வேளை 

மலர் எழில் மேகம் போலே 

Hello my dear darling

Hello my rose charming

உன்னை எதிர்பார்த்து my eyes are suffering 

நீ இல்லாமல் என் love ஏ boring 

Come on my love 

என வரும் இந்த பாடலைக் கேட்டதும், why this கொலை வெறி கொலை வெறி டி பாடல் மனதில் வந்தது. அந்தக் காலத்தில் சூப்பர் ஹிட் பாடல் இந்த Hello My Darling!

T. G. லிங்கப்பா இசை அமைத்து இருக்கிறார். பல பாடல்கள் நன்றாக இருக்கின்றன. ‘பாட்டு வேணுமா? என்ற பாடல் மிகவும் பிரபலமானது. 

ஒலியும் ஒளியும் போல பேசும் படத்தில், pictureம் sound ம் சிங்க் ஆவது போல நகமும் சதையும் போலப் பீச்சும் கடலும் போல  நம் உறவு எனப் பல வசனங்கள் நன்றாக உள்ளன.

பழைய சென்னை நகரம், நேப்பியர் பாலம் போன்றவை காட்டப் படுகின்றன. 

கேரம் விளையாடுகிறார்கள். அப்போதே வீடுகளில் எல்லாம் இந்த விளையாட்டு இருந்திருக்கிறது.

லீலா, தன்னை சிலோன் அகதி என்கிறார். அப்போதே இந்த சிக்கல் இருந்து இருக்கிறது எனத் தெரிய வருகிறது.

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.