மைக்கேல் ஹாஃப்மேன் மொழிபெயர்த்த ஜென்னி எர்பென்பெக்கின் கைரோஸ் நாவல், 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளது.

ஜென்னி எர்பென்பெக் (Jenny Erpenbeck) பிறந்து வளர்ந்தது கிழக்கு ஜெர்மனியில். வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பெர்லின் சுவருக்கு அருகில் நான்காவது மாடியில் இருந்தது இவர் வீடு. சுவர் இடிப்பு ஆரம்பித்த நேரத்தில் ஒயின் அருந்தித் தன் தோழியருடன் பேசிக் கொண்டிருந்தார். காலையில் எழுத்து பார்த்தால் சுவரும் கிழக்கு ஜெர்மனும் இல்லாமல் போய்விட்டது. “அதுவரை நான் அறிந்த நிகழ்காலம் அன்று முதல் கடந்த காலம் ஆகிவிட்டது”, என்கிறார் ஜென்னி. அவர் அறிந்த வாழ்வைப் பதிவு செய்ய எழுத்தாளர் ஆனார். புத்தகங்களை பைண்டிங் செய்து கொண்டிருந்த ஜென்னி, புக்கர் பரிசை வென்றதன் ஆரம்பம் அதுதான்.

ஜெர்மனியில் போய் விசாரித்தால் யார் ஜென்னி என்று கேட்கக்கூடும். அதனாலென்ன? அவர் அருமை பெருமைகளை உணர்ந்து, “ஒரு நாள் இவர் நிச்சயம் நோபல் பரிசை வெல்வார்”என்று கட்டியம் கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதன் முன்னோட்டமாகத்தான் புக்கர் பரிசு கிடைத்துள்ளது போலும். இது மட்டுமின்றி மேலும் பல பரிசுகளும் அங்கீகாரங்களும் பெற்றவர் ஜென்னி. சமூக, அரசியல், வரலாற்றுப் பின்னணியில் கதை சொல்லும் பாணி இவருடையது.

அவருடைய முந்தைய நாவலான ‘கோ, வென்ட், கான்’ (Go, Went, Gone), கடல் பயணத்தில் தப்பிப் பிழைத்து ஜெர்மனி வந்த ஆப்பிரிக்க அகதியைப் பற்றியது. அகதியின் கதையை எழுதும் கிழக்கு ஜெர்மன் பேராசிரியரின் தனிமையும், அலைபாயும் அகதிக்கு இணையான அவர் வாழ்வும் சொல்லப்பட்டிருக்கும்.

தன் கைரோஸ் நூலுடன் ஜென்னி

தி எண்ட் ஆப் தி டேஸ் (The End of Days) நாவல் 2014 ஆம் ஆண்டு வெளியானது. நூறாண்டுகளுக்கு முன் இருந்த ஆஸ்திரிய ஹங்கேரியப் பேரரசில் பிறக்கும் யூதப் பெண் வாழ்வின் சாத்தியங்களைச் சொன்னது அந்த நாவல். தன் கதைகளுக்கான கருவைத் தன் குடும்பத்தில் இருந்தே ஜென்னி எடுத்துக்கொள்கிறார்.

ஜென்னியின் பாட்டி ஹெட்டா ஜென்னர் யூதர். பாஸிஸ எதிர்ப்பாளரும் கூட. 1929 ஆம் ஆண்டில் பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்தவர், ஹிட்லர் பதவியேற்றதும் ஜெர்மனை விட்டு வெளியேறி வியன்னாவிலும் ப்ராக்கிலும் வாழ்ந்தார். திரைக்கலைஞர், செய்தியாளர், எழுத்தாளர். அவர் கணவர் பிரிட்ஸ் எர்பென்பெக்கும் கலைத்துறை ஆர்வம் கொண்டவர். 1935ஆம் ஆண்டு சோவியத் வந்த பிரிட்ஸ், 12 ஆண்டு காலம் அங்கு வாழ்ந்த பிறகு சோஷலிச ஆட்சியை கிழக்கு ஜெர்மனில் நிர்மாணம் செய்யும் பணியில் தன்னை இணைத்துக் கொண்டு சொந்த நாடு திரும்பினார்.

“சோஷலிச அமைப்பின் குறைபாடுகள் பற்றிய விவாதம் எங்கள் வீட்டில் எப்போதும் இருக்கும். அமைப்பின் உள்ளே இருந்துதான் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என என் பாட்டி சொல்வார்” என்று குறிப்பிடுகிறார் ஜென்னி. அவர் பாட்டி அரசாங்கத்துக்கு எழுதிய ஏராளமான கடிதங்களில் புகார்களும் ஆலோசனைகளும் அடங்கும். 1995ஆம் ஆண்டு இறந்த பாட்டி ஹெட்டா, அரசின் உயரிய விருதான கார்ல் மார்க்ஸ் விருதைப் பெற்றவர்.

ஜென்னியின் அம்மா அரபு மொழிபெயர்ப்பாளர். அப்பா மருத்துவர். ஜென்னி, கல்லூரியில் சேர்ந்து நாடகக்கல்வி கற்கும் முன்பு, புத்தகம் பைண்டிங் செய்யும் வேலை பார்த்தார். படித்து முடித்து நாடக மேடை பொருள்கள் இயக்குநராக வேலை செய்தார். பின்னர் இசை கற்று, ஓபரா இசை இயக்குநர் ஆனார். வேலைக்கு நடுவே கொஞ்சம் எழுதிக் கொண்டிருந்தவர், வாசகர்களின் வரவேற்புக்குப் பிறகு முழு நேர எழுத்தாளராகிவிட்டார்.

தன் வீட்டில் ஜென்னி

57 வயதாகும் ஜென்னியே ஒரு வாழும் வரலாறு. நடமாடும் அருங்காட்சியகம். அவர் வீடு புத்தகங்களால் நிறைந்திருக்கும். கிழக்கு ஜெர்மனி குறித்த தன் சேகரிப்பை வீட்டில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.  அவரைப் பேட்டி எடுக்க வெளிநாடுகளில் இருந்து காணொளி அழைப்பு விடுத்தால், வீடு, தெரு, நகரம் எல்லாம் இணையவழி சுற்றிக்காட்டிவிடுகிறார்.

ஜென்னி வீட்டின் சுவர்

வரலாறை எழுதுவதில் உள்ள ஆகப் பெரிய சிக்கல் எந்த நிலைப்பாட்டை எடுப்பது என்பதுதான். நெடுங்காலமாக ஒரு தரப்பை எழுதிச் செல்வதே வரலாறு என்று இருந்தது. நவீன வரலாறு என்பது இரு தரப்பையும் சேர்த்துச் சொல்ல முயல்கிறது. சில நேரம் இரு தரப்பில் இருக்கும் தவறையும் சொல்ல நேரும்போது எழுத்தாளரின் நோக்கம் கேள்விக்குட்படுகிறது.

வரலாற்று உண்மைகள் எப்போதும் சரி அல்லது தவறு என்கிற இரண்டு கோணங்களை மட்டுமே கொண்டதல்ல. அது நடந்த காலகட்டத்தைப் பொறுத்து அங்கே இன்னொரு கோணம் நுழைகிறது. அந்தக் கோணம் சரிக்கும் தவறுக்குமான கோட்டை அழித்து இரண்டுக்குமான இடைவெளியைக் குறைத்துவிடும். இதையெல்லாம் யோசித்தோ என்னவோ புனைவு வடிவத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார் ஜென்னி. இது சரி, இது தவறென்று தீர்ப்பெழுத முடியாத உணர்வுகளை அம்மாதிரியான அரசியல் களத்தின் பின்னணியோடு சேர்த்து எழுதுகிறார்.

பெர்லின் சுவர் வீழ்ந்து ஜெர்மனி இணைந்த பிறகு, மேற்கு ஜெர்மனி தங்களைச் சிறுமைப் படுத்தியதாக உணர்கிறார் ஜென்னி. வேண்டிய பொருள்கள் வாங்கிக் கொள்ள தலைக்கு 100 மார்க் பணம் கொடுக்கப்பட்டதைக் கோபத்துடன் நினைவுகூர்ந்து தாங்கள் பிச்சைக்காரர்கள் இல்லை என்கிறார். சொல்லப்போனால் கிழக்கு ஜெர்மனியில் பிச்சைக்காரர்களோ, பாலியல் தொழிலோ கிடையாது என்கிறார். எந்த வாழ்வு சரி எந்த வாழ்வு தவறென்பது பற்றி அவர் பேசவில்லை. தான் அறிந்த வாழ்வு திடீரென ஒருநாளில் மதிப்பற்றுப் போனது பற்றித்தான் ஜென்னி அங்கலாய்க்கிறார்.

ஜெர்மனி இணைப்புக்கு முன்பு ஜென்னியின் குடும்பம் மதிப்புமிக்க இடத்தில் இருந்தது. கிழக்கு ஜெர்மனி இல்லாமல் போனதால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களில், ஜென்னியின் குடும்பமும் ஒன்று. அதனால்தான் அந்தப் பக்க நியாயங்களைப் பதிவு செய்ய நினைக்கிறது அவர் மனம். அந்தப் பதிவுகள் வெறுப்பும் விரக்தியும் நிறைந்த வெற்றுச் சொற்கள் அல்ல.

ஆண்டுக் கணக்கில் உழைத்துத் தகவல்களைத் திரட்டுகிறார். வரலாற்றுச் சம்பவங்களில் பதிவு செய்யப்படாத கண்ணிகளைத் தேடுகிறார். தகவல்களால் தன் கதையை நெய்கிறார். மேலோட்டமாகத் தெரியும் கதைக்குக் கீழே வரலாற்றைப் பொதிந்து வைக்கிறார் ஜென்னி. மிக நுட்பமான இத்திறன் ஜென்னியின் கதைகளுக்கு இலக்கியத் தரம் கொடுக்கிறது. அதோடு நிற்கவில்லை.

ஒரு தரப்பில் நின்று இதுதான் சரி என்று கூச்சலிடுவதில்லை இவர் நாவல்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணமாக ஒவ்வொரு தரப்பைச் சித்தரிக்கிறார். தற்போது புக்கர் பரிசு வாங்கியுள்ள ‘கைரோஸ்’ நாவலின் களம் அவர் பிறந்து வளர்ந்த கிழக்கு பெர்லின். கிழக்கு ஜெர்மன் அரசு சமவுடைமைக் கொள்கைகளுடன் பாலின சமத்துவத்தைக் கடைபிடித்தது. பெண்கள் ஆண்களுக்கு நிகரான சம்பளம் பெற்றனர். அரசாங்கம் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள, கிட்டதட்ட எல்லாப் பெண்களுமே வேலைக்குச் சென்றனர். அதை மட்டுமா செய்தது சமவுடைமை?

அடிப்படைத் தேவையை மீறி ஆசைப்பட்ட எதையும் வாங்க முடியாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சியின்றி இருந்தது. மக்கள் நாடு விட்டு நாடு செல்ல முடியாமல் சுவர் கட்டித் தடுத்தது. சுமார் 150 கிலோ மீட்டர் நீளம் இருந்த சுவரைக் கட்டவும் அதைப் பாதுகாக்கவும் செலவிட்ட பணத்தையும் மனித உழைப்பையும் கொண்டு இன்னும் எவ்வளவோ முன்னேறி இருக்கலாம். ஆனாலும் பிடிவாதம் பிடித்தது அரசு. உச்சகட்டமாக உளவு அமைப்பை உருவாக்கி மக்களை வேவு பார்த்தது. ஸ்டாசி (Stasi) எனப்பட்ட இந்த உளவு அமைப்பில் பணியாற்றியவர்களின் கோப்புகள் பின்னாளில் வெளியிடப்பட்டன. கதை எழுதுவோரின் கற்பனைக்கெட்டாத உண்மைகள் அவற்றில் வெளிப்பட்டன.

ஒவ்வொரு கோப்பும் ஒரு நாவலுக்குச் சமம். அதில் ஒருவரைப் பற்றிய கோப்பின் அடிப்படையிலேயே தன்னுடைய கைரோஸ் நாவலின் நாயகனை உருவாக்கியதாகச் சொல்கிறார் ஜென்னி. திருமணமாகி பதின்ம வயதுப் பையனை வைத்திருக்கும் ஐம்பதுகளில் இருக்கும் நாயகன், பத்தொன்பது வயதுப் பெண்ணைக் காதலிப்பதுதான் கதை.

காதலில் விழுந்ததும் எல்லாரையும் போல அது ஓர் அதி உன்னத உறவாகத்தான் தோன்றுகிறது. நாயகனின் சுய உருவம் மெல்ல மெல்ல வெளிப்படும்போது இளம்பெண்ணான நாயகியால் அதை எதிர்கொள்ள முடியவில்லை. தன்னைக் குற்றம் சொல்லி வித விதமாகத் துன்புறுத்தும் நச்சு உறவில் சிக்கிக்கொள்கிறாள். நாயகனுக்கு, காதல் தொடங்கிய அந்தப் பொழுதில் இருந்தது போலவே அவள் மாறாமல் இருக்கவேண்டும். அவளோ அறிவும் அனுபவமும் கூடி வளர்ந்து கொண்டே இருக்கிறாள்.

கைரோஸ்

கடந்த காலத்தை விரும்பும் நாயகனும், எதிர்காலத்தை அதிகம் சிந்திக்கும் நாயகியும் கிழக்கு ஜெர்மனைச் சேர்ந்த மக்களின் மனப்போராட்டத்தின் குறியீடு. நாவலில் இந்த இரு வேறு நிலைப்பாட்டுக்கும் மத்தியில் நின்று பேசுகின்றன ஜென்னியின் சொற்கள். சுவர் உடைவதற்கு வெகுகாலம் முன்பே அரசு தோற்றுவிட்டதைப் போல, நாவலில் காதல் முறியும் முன்பே காதல் உணர்வு செத்துப்போய்விட்டது. எதிர் எதிரே நின்று முரண்படும் உண்மைகள் இணைந்து பயணம் செய்கின்றன இவர் கதைகளில்.

இலக்கியம் என்பதே ஒரு கதையில் பல்வேறு அடுக்குகள் பிணைந்திருப்பதுதானே? ஜென்னி அதைச் சரியாகச் செய்கிறார். ஒரு அடுக்கில் ஏறுக்குமாறான காதல் கதை. ஒரு அடுக்கில் முதலாளித்துவம். ஒரு அடுக்கில் பொதுவுடைமை. வாசிக்கும் வாசகர்களின் அறிவுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற இன்னும் எத்தனையோ அடுக்குகள். மற்ற நாவல்களைவிட குட்ரீட்ஸ் தளத்தில் மிகக் குறைந்த புள்ளிகளுடன் உள்ளது கைரோஸ் நாவல். பரிசுக்குத் தகுதியற்ற நாவல் என்று சாடும் மதிப்புரைகளுக்கு நடுவில் தேடினால், சிலர் ஐந்து நட்சத்திரங்களைச் கொடுத்திருக்கிறார்கள்.

“இதுவரை சொல்லப்படாத எங்கள் வாழ்க்கையைச் சொல்கிறது இந்நாவல்” என்கின்றன அந்த மதிப்புரைகள். சொல்லப்படாதவர்களின் கதைகளைச் சொல்ல ஜென்னி எர்பன்பெக் போல நம்மில் பலர் வரவேண்டும்.

படைப்பாளர்:

இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.

ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற தொடர், ‘இன்பாக்ஸ் இம்சைகளைச் சமாளிப்பது எப்படி?’ என்கிற புத்தகமாக ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. ‘உலரா ரத்தம்’ என்கிற அரசியல் வரலாறு நூல், சிறார்களுக்கு , ‘தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி’ ஆகிய நூல்களும் இந்த ஆண்டு வெளிவந்துள்ளன.