அடையாள அரசியல் என்பது இனம், தேசியம், மதம், பாலினம், சமூகப் பின்னணி, சாதி மற்றும் வர்க்கம் போன்ற ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் அரசியலாகும். இது  குறித்து இங்கு பல கருத்துகள் நிலவுகின்றன. சிலர் அடையாள அரசியல் ஆரோக்கியமானது என்று சொல்வர். சிலர் அது முற்றிலும் தவறு என்பர். இன்னும் சிலர் இடம், பொருள், ஏவல் கருதி அடையாள அரசியல் செய்யலாம் என்பர். இந்தக் கட்டுரையில் அடையாள அரசியல் குறித்து வெவ்வேறு அரசியல் கொள்கை கொண்டு செயல்படுபவர்கள் எவ்வாறு எண்ணுகிறார்கள் என்று விரிவாகக் காணலாம்.  

அரசியல் கொள்கைகளை ஒரு நேர்க்கோட்டில் வைத்தால், தீவிர இடது, தீவிர வலது, மிதவாத இடது, மிதவாத வலது, நடுநிலை என்று பிரிக்கப்படுகின்றன. இவ்வாறு அரசியல் நிலைப்பாடுகள் வகைப்படுத்துவதை அரசியல் ஸ்பெக்ட்ரம் என்பர். மேல் குறிப்பிட்ட ஒவ்வோர் அரசியல் கொள்கையைச் சார்ந்து பேசுபவர்களும் அடையாளம் குறித்தும் அடையாள அரசியல் குறித்தும் வெவ்வேறு புரிதல் கொண்டு செயல்படுவார்கள். பொதுவாக, தீவிர வலதும் தீவிர இடதும் முற்றிலும் எதிர் கொள்கைகள் என்று கூறப்படுகிறது. உதாரணத்திற்கு, தீவிர வலது முதலாளித்துவம் மற்றும் தனியார்மயமாக்கலை ஆதரித்தால், தீவிர வலது பொதுவுடைமை மற்றும் அரசுடைமையை ஆதரிக்கும். இவ்வாறு எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் தீவிர வலதும் தீவிர இடதும் அடையாள அரசியல் குறித்தும் முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டுடன் இருக்கின்றனவா?

முதலில் அடையாள அரசியல் செய்வதன் மூலம் என்னென்ன சாதக பாதகங்கள் நிகழக்கூடும். அரசியல் என்பது நாம் நம் உரிமைகளைப் பெற உதவும் கருவி என்றால், அடையாள அரசியல் என்பது நாம் எந்த அடையாளத்தை வைத்து ஒடுக்கப்பட்டு நம் உரிமைகளை இழந்தோமோ அந்த அடையாளத்தை முன்னிறுத்தி போராடி, இழந்த உரிமையைப் பெற உதவும் கருவியாகிறது. ஒடுக்கப்படுபவர்கள் ஓர் அடையாளம் கொண்டு ஒன்று சேர்ந்து போராட அடையாளம் உதவும் என்றால், அடையாள அரசியல் செய்வது நன்மை தானே என்று தோன்றலாம். ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.  

இந்தியச் சமுதாயத்தில் பெரும்பான்மையான மக்கள் ஏதோ ஓர் அடையாளம் மூலம் ஒடுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, இந்தியாவின் முதல் குடிமகள் என்று கூறப்படும் இந்திய ஜனாதிபதியாகவே இருந்தாலும், அவர் பழங்குடி இனத்தைச் சார்ந்தவராக, அதிலும் பெண்ணாக இருப்பதினாலேயே திரௌபதி முர்மு பலமுறை முக்கிய அரசு நிகழ்வுகளுக்கு அழைக்கப்படாமலும் கோயில் போன்ற பொது இடங்களுக்குள் நுழைய விடாமலும் அவமானப்படுத்தப்பட்டு ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டார். இந்திய ஜனாதிபதிக்கே இந்த நிலை என்றால் எந்த அதிகாரமும் இன்றி வாழும் சாதாரணக் குடிமக்களுக்கு இன்னும் பல அடையாளங்கள் கொண்டு பல அடுக்குகளில் ஒடுக்குமுறைகள் தினம் தினம் நிகழ்கின்றன. 

இங்கு அரசியல் பேசும் அனைவரும் எல்லா வகையான ஒடுக்குமுறைகளை எதிர்த்தும் போராட வேண்டும் என்பதை ஒத்துக்கொள்வர். ஆனால், எப்படிப் போராட வேண்டும் என்பதில்தான் இங்கு வெவ்வேறு அரசியல் கொள்கைகள் பேசுபவர்கள் மத்தியில் வேறுபாடு வருகிறது. இவ்வாறு பல அடுக்குகளில் பல அடையாளங்கள் அடிப்படையில் ஒடுக்குமுறைகள் நிகழும் போது, எந்த அடையாளம் முன்னிறுத்தி நான் போராட வேண்டும் என்கிற குழப்பம் வரலாம். ஒருவேளை நான் எந்த அடையாளம் கொண்டு மிக அதிகமாக ஒடுக்கப்பட்டு மிகுந்த வாழ்வியல் பிரச்னைகளைச் சந்திக்கிறேனோ, அந்த அடையாளம் முன்னிறுத்திப் போராடித் தீர்வு காண முற்படலாம். ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்றுக்கும் அதிகமான அடையாளங்களால் மிக தீவிரமாக ஒடுக்கப்பட்டால், எந்த அடையாளம் முன்னிறுத்தி எந்த அமைப்போடு சேர்ந்து போராடினால் எனக்குத் தீர்வு விரைவாகக் கிடைக்கும் என்று தடுமாற நேரிடலாம். எனவே, எந்த நேரத்தில், எந்தப் பிரச்னைக்கு, எந்த அடையாளத்தை முன்னிறுத்தி, எந்த அமைப்போடு சேர்ந்து போராட வேண்டும் என்கிற தெளிவு நம் போராட்டம் வெற்றிகரமாக முடிவடையச் செய்ய அவசியமாகிறது.   

இப்போது, தீவிர இடது அடையாளம் குறித்து என்ன சொல்கிறது என்று பார்ப்போம். தீவிர இடதுசாரிகள் நம் சமூதாயத்தில் நிலவும் அனைத்து வகையான ஒடுக்குமுறைகளுக்கும் மூலக் காரணம் தனிச்சொத்துடைமையும் முதலாளித்துவமும்தான் என்கிற நிதர்சனத்தை அடித்தளமாகக் கொண்டு ஒவ்வொரு சமுதாய பிரச்னையையும் அணுகுவார்கள். முதலாளித்துவத்தை முற்றிலும் ஒழிக்கத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி, புரட்சி வெடிக்கச் செய்து, இப்போது இருக்கும் முதலாளித்துவ அமைப்பை முற்றிலும் வேர் அறுத்து, பாட்டாளி வர்க்க ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று நம்புவார்கள். பாட்டாளி வர்க்கப் புரட்சியே சமத்துவமான சமுதாயத்தைப் படைக்க நமக்கு இருக்கும் ஒரே கருவி என்று கூறுவார்கள். எனவே, பாட்டாளி என்கிற ஒற்றை அடையாளம் கொண்டு நாம் அனைவரும் ஒடுக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து, நம் மற்ற அடையாளங்களை எல்லாம் களைந்து போராட வேண்டுமே தவிர, நாம் தனித்தனியாக சாதி, மதம், பாலினம் போன்ற அடையாளங்களாகப் பிரிந்து அந்தந்த அடையாளங்கள் மூலம் நிகழும் ஒடுக்குமுறைகளை மட்டும் எதிர்த்துப் போராடுவது நம்மை பாட்டாளிகளாக ஒன்றிணைய விடாமல் தடுக்கிறது என்று கருதுகிறார்கள்.   

உதாரணத்திற்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பழங்குடி பெண்ணாக இருப்பதால், அவர் பழங்குடி இனத்தவர் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் அமைப்புகளோடு சேர்ந்து போராடுவார் என்று கருதி, பெண்ணிய அமைப்புகள் விலகி நின்றுவிட்டால் மீண்டும் முர்முவின் குரல் போராட்டத் களத்தில்கூடத் தனிமைப்படுத்தப்படும். அடையாள அரசியலை மேலோட்டமாக அணுகும் போது, காணப்படும் பாதகங்களில் ஒன்று, இவ்வாறு தனி தனி அடையாளங்களாகப் பிரிந்தே இருந்து சமூகப் படிநிலையை அப்படியே நீடிக்கச் செய்தல். இந்தப் பாதகத்தைத் தவிர்க்க ஒடுக்குமுறைகள் எதுவாக இருந்தாலும் ஒட்டுமொத்த சமூகமும் அனைத்துவகையான சுரண்டல்களில் இருந்தும் விடுதலைப் பெற்று நாம் அனைவரும் சமமாக வாழத் தோழமை உணர்வோடு ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.

எனவே, வர்க்கப் பார்வையோடு அந்த அந்தச் சூழல் தேவை கருதி அந்த அந்த அடையாளங்களை முன்னிறுத்தி தோழமையுடன் அனைவரும் ஒன்றிணைத்து அடையாள அரசியல், அதாவது அடையாளங்கள் மத்தியில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து அரசியல் செய்ய வேண்டும் என்று தீவிர இடதுசாரி தத்துவம் பேசுவோர் தொடர்ந்து பரப்புரைச் செய்துவருகிறார்கள். போராடுவதே அடையாள அரசியலின் முதன்மை நோக்கமாக இருக்கும் பட்சத்தில், தத்துவமாகவே போராட்டத்தை எதிர்க்கும் தீவிர வலதுசாரிகளும் அடையாள அரசியலை ஆதரிக்கிறார்கள். ஏன்?  

முதலில் தீவிர வலதுசாரிகளின் சமூக அரசியல் பார்வை என்ன என்று ஆராய்வோம். வலதுசாரிகள், இந்தச் சமூகக் கட்டமைப்பு இப்போது இருப்பது போலவே பல படிநிலைகளில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகமாகவே இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள்; மாற்றத்தை விரும்பாதவர்கள்; பழமைவாதம் பேசுவார்கள். இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு முன் ஜென்மத்தில் நாம் செய்த பாவம்தான் காரணம். நம் கையில் எதுவும் இல்லை. போராடினாலும் பிரயோஜனம் இல்லை. எனவே, கடவுளைச் சரணாகதி அடைந்து நம் துன்பங்கள் மாற வேண்டி பிரார்த்தனை செய்வதுதான் தீர்வு என்று கூறுவார்கள். பெரும்பான்மையான வலதுசாரிகள் சமூகப்படி நிலையில் மேல் அடுக்குகளில் இருக்கும் முன்னேறிய வகுப்பினராக இருப்பர். எனவே, மேல் நிலையில் இருந்து அனைத்து வகையான செல்வங்கள் மற்றும் சகல செளகர்யங்களையும் தாங்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்கிற மனநிலையில் இருக்கும் முன்னேறிய வகுப்பினர்கள் தீவிர வலதுசாரிகளாக இருக்கிறார்கள்.

எனவே, மக்களைச் சுரண்டிப் பிழைப்பதற்காகப் பல அடையாளங்கள் கற்பித்து சமூக அடுக்குகள் உருவாக்கி மக்களைத் தனித் தனியே பிரித்து அவர்களுக்குள் மேல் கீழ் என்று சண்டை போட வைத்துவிட்டு குளிர்காய்கிறார்கள் முன்னேறிய வகுப்பினர். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், மேல்தட்டு முதலாளிகள் வர்க்கம் தொழிலாளர்களாக இருக்கும் சாமானிய மக்களை ஒன்றிணைத்துப் போரிட விடாமல் தடுக்க சாதி. மதம், மொழி, பாலினம் போன்ற அடையாளங்களுக்குள் வேற்றுமை கற்பித்து தனித் தனியே பிரித்து வைத்திருக்கிறது. இதன் மூலம், வலதுசாரிகள் மக்கள் போராடுவதை விரும்பாதவர்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது. 

இப்படி இருக்கையில், சில நேரம் வலதுசாரிகளும் அடையாள அரசியலை ஆதரிப்பர். ஆனால், தீவிர வலதுசாரிகள் மிகத் தெளிவாக எல்லா மக்களையும் தோழமை நோக்கத்தோடு ஒன்றிணைந்து போராட விடாமல் எப்படி அடையாள அரசியல் செய்ய வைக்க வேண்டும் என்று தெரிந்து செயல்படுவர். உதாரணத்திற்கு, பால்புதுமையினர் உரிமைகளைக் கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களை ஆதரித்து அவர்களோடு சேர்ந்து போராட நினைக்கும் பால்புதுமையினர் அல்லாதவர்களும் இங்கு பலர் உள்ளனர். அப்படித் தோழமையோடு போராடுபவர்களைப் பார்த்து, “நீ ஏன் அவங்களோட (பால்புதுமையினர்) சேர்ந்து போராட்டம்லாம் பண்ணுற; பார்க்குறவங்க உன்னையும் தன்பால் ஈர்ப்பாளர்னு தப்பா நினைச்சிடுவாங்க. அப்புறம் அவங்க படுற கஷ்டம் எல்லாம் நீயும் படுவ. அவங்க மட்டும் அவர்களுக்காகப் போராடிக்கட்டும். நீ அமைதியா இரு” என்று கூறி பயமுறுத்துவார்கள். இது போன்ற பயமுறுத்தும் கதையாடல்கள் தோழமை உணர்வோடு குரல் கொடுக்க நினைக்கும் மக்களை மீண்டும் ஒன்றிணைய விடாமல் தனித் தனியாகவே இருக்க வைக்கிறது.   

அவரவர் பிரச்னைகளை அவரவரே போராடித் தீர்த்துக் கொள்ளட்டும் என்று இருந்தால் சமூக மற்றம் நிகழவே நிகழாது. சுரண்டல் இல்லாத சமுதாயத்தைப் படைக்க அனைவரும் அவரவர் அடையாளங்கள் மத்தியில் கற்பிக்கப்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து அனைத்து மக்களும் சமம்தான் என்கிற எண்ணத்தோடும் தோழமை உணர்வோடும் ஒன்று சேர்ந்து போராடுவதே தீர்வாகும். மனிதனாக ஒன்றிணைவோம் வாரீர்.

(தொடரும்)

படைப்பாளர்:

தீபிகா தீனதயாளன் மேகலா

தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா, தற்போது கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். தான் கற்றுவரும் மானுடவியல் கோட்பாடுகளை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிர பற்று கொண்டவர். இவரது யூடியூப் செய்தி சேனலின் சுட்டி: https://www.youtube.com/channel/UCyNXWPShwgZG4IsyjP7BnAQ