இயற்கை எனும் பொறியாளர் கட்டிய அற்புதமான வீடு இந்த உடல். முன் வாயில், பின் வாயில், சன்னல், தனித்தனி அறைகள் என்று இயற்கை நமது உடலை அற்புதமாக வடிவமைத்திருக்கிறது. ஆனால் இத்தகைய அருமையான உடலை நாம் பேணிக் காக்கிறோமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உடலுக்குப் போதுமான பயிற்சிகள் செய்து நோயின்றி வைத்திருக்க வேண்டிய நாம் வேண்டாத பழக்க வழக்கங்கள், சோம்பேறித்தனம் மற்றும் குப்பை உணவுகள் மூலம் அசுத்தமாக்கி வைத்திருக்கிறோம். உடல் என்பதற்குத்தான் எத்தனை விதமான பெயர்கள்!. மனிதர்கள் சூட்டிக் கொள்ளும் பெயர்கள் தவிர உடல் என்பதற்கே தமிழில் நிறையப் பெயர் உண்டு. உடம்பு, சரீரம், தேகம், மேனி, யாக்கை, காயம், அங்கம், கட்டை, மெய், தலையில்லாத உடல் முண்டமென்றும், இறந்த உடல் சடலமென்றும் சுட்டப்படும். 

மனிதர்களை உருவாக்குவதற்கு முன்பே அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் இயற்கை உண்டாக்கி வைத்து விட்டது. ஆனால், அவற்றின் தேவையைக் கண்டறிந்து உபயோகிக்கும் அறிவு மனிதர்களுக்குப் படிப்படியாகவே வாய்த்தது. ஆனால் இன்னும் பெரும்பாலான மனிதர்கள் தங்கள் உடலைப் பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாமல்தான் இருக்கிறார்கள். ஒருவர் தனது உடல் குறித்து முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

நம் உடலில் இருக்கும் நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர். மொத்த ரத்தம் ஐந்து லிட்டர். அந்த ரத்தம் தினமும் முப்பது கோடி கிலோமீட்டர்கள் பயணிக்கிறது. மூன்று லட்சம் மில்லியன் ரத்த நாளங்கள் உள்ள நுரையீரல் ஒரு நாளில் இருபத்து மூன்றாயிரத்து நாற்பது முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடுகிறது. இந்த மூன்று லட்சம் மில்லியன் ரத்த நாளங்களை ஒன்றிணைத்தால் இரண்டாயிரத்து நானூறு கிலோமீட்டர் தொலைவு இருக்குமாம். பிறரை நேசிக்கும் இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. காதலியையோ, காதலனையோ பார்க்கும் போது எகிறும் இதயத் துடிப்புகள் தனி. எக்கச்சக்கமாகவும், எடக்கு மடக்காகவும், பாசமாக, காதலாக, கோபமாக எல்லாம் பேசும் நாக்கு தான் உடலில் சதை அழுத்தம் அதிகமாக உள்ளபகுதி. அதில் சுமார் மூவாயிரம் சுவை மொட்டுகள் இருக்கின்றன. உடல் எடையில் 14 சதவீதம் எலும்பும், 7 சதவீதம் ரத்தமும் இருக்கிறது.

நம் ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் ஒரு மில்லியன் வடிகட்டிகளைக் கொண்டிருக்கிறது. மனிதக் கண்கள் பச்சை, நீலம், பழுப்பு, சாம்பல், கறுப்பு என்று எந்த விதமான நிறமாக இருந்தாலும் அதன் எடை 24 கிராம். ஆனால், அதற்கு சுமார் 500 விதமான ஒளியைப் பிரித்தறியும் திறன் உண்டு. கண்கள் மட்டும் பிறக்கும் போது இருந்த அளவே இருக்கும். வளராது. கண்களின் தசை ஒரு நாளில் ஒரு லட்சம் முறை அசைகிறது. இதே அளவு அசைவைக் கால்களுக்குக் கொடுக்க வேண்டுமென்றால் நாம் தினமும் சுமார் 80 கிலோ மீட்டர்கள் நடக்க வேண்டும் என்கிறது  ஓர் ஆய்வு. கண் தானத்தில் கறுப்பு விழியை மட்டுமே எடுத்துப் பொருத்துகிறார்கள். கண்ணிமைப் பயிர்களின் ஆயுள் 150 நாட்கள்.

பொதுவாகக் கண்கள் நாளொன்றுக்கு இருபதாயிரம் தடவைகள் சிமிட்டப்படுகின்றன. ஆண்களை விடப் பெண்கள் இரண்டு மடங்கு அதிகமாகக் கண்களைச் சிமிட்டுகிறார்கள். (அதனால்தான் கவிஞர்கள் படபடக்கும் பட்டாம்பூச்சியோடு பெண்ணின் கண்களை ஒப்பிடுகிறார்களோ!) விழிவெண் படலத்தில் ரத்த நாளங்கள் இல்லாததால் அது காற்றில் இருந்து ஆக்சிஜனைப் பெற்றுக் கொள்கிறது.

நாம் போகிற போக்கில் ஓர் அடியை எடுத்து வைக்கிறோம். ஆனால், அதற்கு இருநூறு தசைகள் ஒத்துழைக்க வேண்டும். மனித உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் நீளம் சுமார் ஆறு லட்சம் மைல்கள். இந்த அளவுக்கு நாம் இந்த உலகத்தை இரண்டு முறை சுற்றி வரலாம். 

மனித மூளை 80 சதவீதம் நீரால் ஆனது. பகலை விட இரவில் அதன் செயல்திறன் அதிகமாக இருக்கும். சுவாசிக்கும் ஆக்சிஜனில் 20 சதவீதம் மூளைக்குச் செல்கிறது. நம் மூளையில் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன. ஆனால், நாம் எவ்வளவு சுலபமாக, “உனக்கு மூளையிருக்கா?” என்று ஒருவரைத் திட்டுகிறோம். ஒருவர் 35 வயதை எட்டியது முதல் தினமும் 7 ஆயிரம் நரம்பு செல்கள் இறந்துகொண்டே வருமாம். மூளையில் ஆறு கிராம் அளவு தாமிரம் இருக்கிறது. மூளை மணிக்கு 375 கி.மீ. வேகத்தில் தகவல்களை அனுப்புகிறது.

உடலில் இருக்கும் மின்சாரத்தின் அளவு 25 வாட். 900 பென்சில்களைத் தயாரிக்கும் அளவு கார்பன் ஒவ்வொரு மனித உடலிலும் இருக்கிறது. 

கைரேகை மட்டுமல்ல, நாக்கின் வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். மனித நகங்களில் கெராட்டின் சத்து இருக்கிறது. இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படும். மனித உடலின் மிகப் பெரிய செல் கருமுட்டை. மிகச் சிறிய செல் விந்தணு. ஒரு மனித உடல் தூங்கும் போது 8 மீ.மீ. உயரம் அதிகரிக்கிறது. விழித்து நடக்கையில் பழையபடி உயரம் மாறிவிடுகிறது. இதற்குக் காரணம் உட்காரும் போது, நிற்கும் போது புவியீர்ப்பு விசை அதிகரிப்பதால்தான்.  

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. சிறுகுடல் 750 மீட்டர் நீளமும், பெருங்குடல் 150 மீட்டர் நீளமும் உள்ளவை. ஆனால், சிறுகுடலைவிடப் பெருங்குடல் மூன்று மடங்கு அகலம் அதிகமாக இருக்கிறது. கண்களைத் திறந்தபடி நம்மால் தும்ம இயலாது. தும்மும் அந்த நொடியில் உடலின் மொத்த இயக்கமும் நின்றுவிடுகிறது. உடல் முழுவதும் ஆக்சிஜனைக் கொண்டு சேர்ப்பது ரத்தச் சிவப்பணுக்கள். இவை உடலை ஒருமுறை சுற்றி வர 60 நொடிகள் எடுத்துக் கொள்ளும். காது மடல்கள் இல்லாவிட்டால் சத்தம் நேரடியாகத் தலைக்குள் மோதி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். முத்தம் கொடுப்பதால் பற்சிதைவு ஏற்படாது. ஆனால், உங்களுக்கு உரிமை உள்ளவர்களுக்கு மட்டுமே கொடுங்கள். இல்லாவிட்டால் பற்களை இழக்கும் அபாயமும் உண்டு.

நம் உடலில் இயங்கும் உயிர்க் கடிகாரத்தைப் பற்றி எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறார்கள்? ஒவ்வோர் இரண்டு மணி நேரத்திற்கும் ஓர் உறுப்பு செயல்படுகிறது. அந்த நேரம் கடந்ததும் அது ஓய்வு மேற்கொள்கிறது. விடியற்காலை 3-5 நுரையீரலுக்கான நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். விடிகாலை 5-7 பெருங்குடலுக்கான நேரம். இந்த நேரத்தில் கட்டாயம் காலைக் கடன்களை முடித்துக் கொள்ள வேண்டும். காலை 7-9 வயிற்றுக்கான நேரம். இந்த நேரத்தில் கட்டாயம் சாப்பிட்டே ஆக வேண்டும். ஆனால், கண்ட குப்பை உணவுகளைச் சாப்பிடாமல் வயிற்றுக்கு இதமாக, சத்தான சரிவிகித உணவைச் சாப்பிடலாம். காலையில்  ஓர் அரசியைப் போல் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். அப்போது சாப்பிடும் உணவு நாள் முழுவதும் செயல்படத் தூண்டுவதாக (பொங்கலைத் தின்று போதையேறிக் கிடப்பவர்கள் கவனிக்க..) இருக்க வேண்டும். ஆனால் நிறையப் பேர் குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் நேரமில்லை என்று சொல்லி காலை உணவைத் தவிர்த்து விடுகின்றனர். இது மிகவும் தவறான பழக்கம். குழந்தைகளைச் சீக்கிரம் தூங்க வைத்து, சீக்கிரம் எழ வைக்கும் பழக்கத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் பசியெடுத்து காலை உணவைத் தவறாமல் சாப்பிடுவார்கள்.

காலை 9-11 மண்ணீரலின் நேரம். காலை உணவைச் செரிக்கும் நேரம் இது. இந்தச் சமயத்தில் வேறு எதையும் தின்று, அதன் வேலையை நாம் கெடுக்கக் கூடாது. முற்பகல் 11-1 இதயத்தின் நேரம். இந்த நேரத்தில் அதிகமாகப் பேசுவது, கோபப்படுவது போன்றவை கூடாது. மதியம் 1-3 சிறு குடலின் நேரம். இந்தச் சமயத்தில் மிதமான மதிய உணவை உண்ண வேண்டும். அதாவது  ஓர் இளவரசி போலச் சாப்பிட வேண்டும். பிற்பகல் 3-5 சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க் கழிவுகளை வெளியேற்ற வேண்டும். மாலை 5-7 சிறுநீரகங்களின் நேரம். பரபரப்பில் இருந்து விடுபட்டு அமைதியாக அமர்ந்து இருக்க வேண்டும். முடிந்தால் தியானம் செய்யலாம். இரவு 7-9 இதயத்தைச் சுற்றி இருக்கும் பெரிகார்டியம் என்னும் ஜவ்வுக்கான நேரம். இதயத்தின் இடிதாங்கி இது. இரவு உணவுக்கான சமயமும் இதுதான். 

இரவு 9-11 உறங்குவதற்கான நேரம். நிம்மதியாக உறங்க வேண்டும். மண்டைக்குள் ஆயிரம் பிரச்னைகளைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் அமைதியாக உறங்க வேண்டும். இரவு 11-1 பித்தப்பை நேரம். இந்த நேரத்தில் தூங்காமல் விழித்திருந்தால் பித்தப்பையின் இயக்கத்தில் குறைபாடுகள் ஏற்படும். இரவு 1-3 கல்லீரல் நேரம். இந்த நேரத்தில் நாம் உக்காந்திருக்கவோ, விழித்திருக்கவோ கூடாது. கட்டாயம் உறங்க வேண்டும். உடல் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தத்தைக் கல்லீரல் சுத்தம் செய்யும் நேரம் இது. இந்தப் பணி பாதிக்கப்பட்டால் மறுநாள் நம் உடல் சுறுசுறுப்பில்லாமல் இருக்கும். 

இத்தகைய அற்புதமான, அதிசயமான உடலைத்தான் நாம் எத்தனை விதமாகப் பாழ்படுத்தி விடுகிறோம். மது, சிகரெட், போதை வஸ்துகள், புகையிலை, குப்பை உணவுகள், கெட்ட கொழுப்பு என்று வகைதொகையில்லாமல் உடலில் சேர்ப்பதால் அந்த அழகான மாளிகை கொஞ்சம் கொஞ்சமாகப் பாழடைந்து விடுகிறது. 

நம் இந்தியச் சமூகத்தில் உடலுக்கு முக்கியத்துவம் எத்தனை பேர் கொடுக்கிறோம்?. குறிப்பாகப் பெண்கள். உடலுக்குப் பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று சொன்னால், “அதெல்லாம் எதுக்கு? வீட்டு வேலை செஞ்சாலே போதும். அவருக்குப் புடிக்காது. குழந்தைகளை யார் பாக்குறது?” என்றெல்லாம் விதவிதமாகப் பதில் பேசி தங்கள் இயலாமையை மறைப்பவர்கள் நம் இந்தியப் பெண்கள். உடலைப் பேண வேண்டும் என்று பள்ளிப் பருவத்தில் இருந்து பாடம் படித்தாலும் சோம்பேறித்தனத்தால் நம் உடலை நாமே வீணடித்து விடுகிறோம். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி நன்றாகச் சாப்பிடக் கூடியவர். கடினமாக வேலைகளும் செய்வார். ஆனால் வடை, பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய்ப் பண்டங்கள் அன்றாடம் அவருக்கு வேண்டும். கடையில் வாங்க மாட்டார். உடலுக்கு ஆகாது (?) என்று வீட்டிலேயே தினமும் தயாரிப்பார். மதிய நேரத்தில்கூட வடை வேண்டும் அவருக்கு. உடலைக் கவனிக்காமல் கெட்ட கொழுப்பு எக்கச்சக்கமாகச் சேர்ந்து விட்டது. அது ஒருநாள் அவரை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கொண்டு போட்டது. அங்கிருந்து அவர் திரும்பி வரவேயில்லை.

நம் உடலைப் பற்றி நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். இதில் வெட்கப்படவோ, கூச்சப்படவோ ஏதுமில்லை. குறிப்பாக நம் உடல் உறுப்புகள், அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை அவ்வப்போது சோதித்துக் கொள்ள வேண்டும். நம் உடல் பற்றி நாமே தெரிந்து கொள்ளாவிட்டால் எப்படி? பல வருடங்களுக்கு முன்பு என் தோழியின் தங்கை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளைப் பார்த்து வரச் சென்றிருந்தேன். அவளால் எழுந்து நடக்க இயலாததால் சிறுநீர்ப்பை ஒன்றைப் பொருத்திக் கொண்டிருந்தனர் பயிற்சி செவிலியர். அப்போது தோழியின் சித்தி ஒருவர் செவிலியிடம் ஒரு கேள்வி கேட்டார். “இந்த பேக் வெளியில் தெரியுதே சிஸ்டர்? ஒருவேளை அவ பீரியட்ஸ் ஆயிட்டா அசிங்கமா இருக்கும். அதனால் பேக் வெளியில் தெரியாம வைங்க” என்றதும் அந்தச் செவிலியர்கள் ஒருவரை இன்னொருவர் பார்த்துக் கொண்டனர். நான் அவர்களை வெளியே அனுப்பி விட்டு அந்தப் பெண்மணியிடம், “பெண்களுக்குச் சிறுநீர் வெளியேற ஒரு திறப்பு, மாதவிலக்கு வெளியேற, குழந்தைப் பிறப்புக்கு என்று இன்னொரு திறப்பு இருக்கிறது ஆன்ட்டி. இது பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருக்கவில்லையா?” என்றேன். அவர் ஆச்சரியமாக, “அப்படியா.. இதுநாள் வரை இரண்டும் ஒரே வழியாகத்தான் வெளியேறும் என்று நினைத்திருந்தேனே.. இது பற்றியெல்லாம் பேசக் கூடாது. அங்கே தொடக் கூடாது. பாவம் பிடிக்கும் என்றுதான் சொல்லி வளர்த்தார்கள்” என்றார் அப்பாவியாக. நம் சமுதாயம் பெண்ணுடலின் மீது செலுத்திக் கொண்டிருந்த அதிகாரம் பற்றி அப்போது தான் முழுக்கப் புரிந்தது. தன் சொந்த உடலைத் தொடக்கூட உரிமை மறுக்கப்பட்டிருந்த பெண்களும் நம்மிடையே இருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டேன். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால் பெண்கள்தான் முதலில் முன்வர வேண்டும். அப்போதுதான் நமக்கு அடுத்த தலைமுறையிடம் மாற்றங்கள் ஏற்படும்.மருத்துவரிடம் உடலைக் காட்ட வெட்கப்பட்டுக் கொண்டு நோய் முற்றி இறந்தவர்கள் ஏராளம். அவ்வப்போது நம் உடலை நாமே பரிசோதித்துக் கொண்டால் மார்பகப் புற்றுநோய் முதலானவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்தலாம்.

“பெண்களுக்குத் தனியாக உடற்பயிற்சிகள் எதற்கு? அதுதான் மலைபோல் குவிந்திருக்கும் வீட்டு வேலைகள் இருக்கிறதே.. உதவியாளர்களை நிறுத்தி விட்டு நீயே செய்யலாமே..” என்றெல்லாம் சொல்பவர்கள் கவனத்துக்கு, வீட்டு வேலைகள் என்பவை நம் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றும் ஒரு செயல். அவற்றைப் பெண்தான் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தும் போதுதான் அங்கே பிரச்னைகள் எழுகின்றன. பெண்தான் வீட்டு வேலை செய்ய வேண்டும். ஆண் செய்யக் கூடாது என்கிற பாகுபாட்டை முதலில் களைய வேண்டும். இருவரும் பகிர்ந்து வீட்டு வேலை செய்வது போல, இருவருமே பொருளாதாரத் தேவைகளுக்கும் பணிக்குச் செல்ல வேண்டும் என்பது சட்டப்பூர்வமாகக் கட்டாயமாக்கப்பட வேண்டும். என் தோழியின் உறவினர் குடும்பத்தில் அவர் மகனுக்குத் திருமணம் நடந்தது. ஒருநாள் உறவினர் (பெண்தான்) வேலையில் இருந்து வீட்டுக்கு வரும்போது, குடிநீர் வருகிறதென்று அவரது மகன் அண்டாவை எடுத்துக் கழுவிக் கொண்டிருந்திருக்கிறார். அவரது தாய் உடனே ஓடோடிச் சென்று அந்த அண்டாவைத் தூக்கித் தூர எறிந்து விட்டு, “தயவு செஞ்சு நீங்க தனிக் குடித்தனம் போய்டுங்க.. நீ அவளுக்கு வேலை செஞ்சு தர்றதைப் பார்க்க எனக்குத் தெம்பில்ல..” என்றிருக்கிறார். இப்போது அவர்கள் தனியாகப் போய்விட்டார்கள். ஒன்று  மகனைப் பொறுப்பாக வளர்த்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் மனைவி வந்தபின் அவன் பொறுப்புடன் நடந்து கொண்டதைப் பார்த்து அமைதியாக இருந்திருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் தனக்கு உதவி செய்யாதவன் மனைவிக்குச் செய்வதா என்கிற ஈகோ காரணமாகத்தான் பிரச்னைகள் எழுகின்றன. மகனை லிட்டில் பிரின்ஸாக வளர்க்கும் தாய்மார்கள் இனியாவது மாறிக் கொள்வது அவசியம். பிற்போக்குத்தனமான கருத்துகளைப் பெண்கள் மாற்றிக் கொள்வதோடு ஆண்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும். தேவைப்பட்டால் இடித்துரைக்கவும் தயங்கக் கூடாது.

வீட்டு வேலைகள் செய்யும் பெரும்பாலான பெண்கள் உடல் பருமனாகத்தான் இருக்கிறார்கள். வீட்டு வேலைக்கும் உடல் பருமனுக்கும் இப்போது சம்பந்தம் இருப்பது இல்லை. அம்மி அரைத்தல், உரல் குத்துதல், கிணற்றில் நீரிறைத்தல் என்றெல்லாம் இருந்த காலத்தில் பெண்கள் ஒல்லியாக இருந்தார்கள். மின்சார சாதனங்கள் வந்து சமையலறை வேலைகளை எளிமையாக்கிய பின் குண்டாகி விட்டார்கள் என்று ஒரு மீம் உலவுகிறது. அன்றைக்கு இருந்த உணவு முறைகள்தான் ஒல்லிக்குக் காரணம். அதிகமாக அரிசி சாப்பிடாமல் சிறுதானிய உணவுகள், பழங்கள், இயற்கை விவசாயப் பொருட்கள் என்றுதான் அன்று உண்டார்கள். இப்போது போல அன்று குப்பை உணவுகள், மசாலா உணவுகள், உடலுக்கு ஒத்துக் கொள்ளாத அயல்நாட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்று நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிட்டது இல்லை. பெண்கள் மின்சாதனங்கள் பயன்படுத்துவதால் சமையல் வேலை எளிதாகிவிட்டது என்று சொல்லும் ஆண்கள் தினமும் காலை நேரத்தில் எழுந்து பழங்கால வழக்கப்படி அம்மி அரைத்து எல்லா வேலைகளையும் செய்து உடம்பைக் குறைக்கலாமே.. அது ஏன் பெண்கள் பொதுவெளியில் நடக்கும் போது உங்களுக்கு எரிகிறது ஐயா?.

பெண்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் நல்லெண்ணத்தில் ஹெர் ஸ்டோரீஸ் நூறு நாள் நடைபயிற்சி சேலஞ்ச் வைத்திருக்கிறார்கள். இப்படியாவது பெண்கள் தங்கள் உடல் மீது அக்கறை காட்டவேண்டும் என்பதுதான் அதன் அடிப்படை. எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து இருபத்தி மூன்று நாட்கள் விடாமல் செய்தால் அது வழக்கமாகி விடும் என்பது உளவியல். அந்தவகையில் இந்த நடைப்பயிற்சியைக் கொஞ்சம் தயக்கத்துடன் தான் தொடங்கினேன். இன்றுடன் இருபத்தி ஐந்து நாட்களாகி விட்டது. நூறு நாட்கள் கடந்த பின்னும் நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒருநாள் தாமதித்தாலும், இதர வேலைகள்‌ குறுக்கிட்டாலும் குற்ற உணர்வு எழுகிறது. இந்த சேலஞ்ச் நமக்கு நாமே எப்போதும் சொல்லிக் கொண்டு உடலைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இயற்கை நமக்களித்த அழகானதொரு வீட்டைப் பாழடைந்த மாளிகையாக்கி விடாமல் தினந்தோறும் சுத்தம் செய்து வைத்திருந்தால் நோய்கள், முதுமை போன்றவை அண்டவே அண்டாது. என்றும் இளமையுடன் காட்சி தரலாம்.

சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுத முடியும்?.

படைப்பாளர்:

கனலி என்கிற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ என்கிற நூல்களாக வெளிவந்திருக்கிறது