வன்முறைகளைத் தடுக்கத் துணிவதில்லை, ஆனால் காணொளிகளாக எடுத்துப் பரப்பும் அளவுக்கு மனம் ஏன் உணர்ச்சியற்றுப் போகிறது?

ஒரு சிறுமி கருவுற்றிருக்கிறாள். அது யாரோ அவளை வன்புணர்ந்ததால் நடந்திருக்கிறது. அவளுக்குத் தேவை மருத்துவ உதவியும், பெற்றோரின் அன்பும் அரவணைப்பும். ஊராரின் அவமானச் சொல்லுக்கு அஞ்சி அன்னை தற்கொலை செய்துகொள்கிறார். தன் பிள்ளைகளைவிட ஊராரின் சொல் அத்தனை பெரிதா? காலம் எதையும் மறக்கடிக்கச் செய்யாதா? மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவனும் தற்கொலை செய்துகொள்கிறார். இரண்டு பிள்ளைகளின் நிலையைச் சற்றேனும் நினைத்துப் பார்த்திருந்தால் இப்படிச் செய்திருப்பார்களா? அந்தச் சிறுமி இனி வாழ்நாள் முழுவதும் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? எத்தனை மனநல ஆலோசனை கொடுத்தாலும் பெற்றோரின் அன்பு திரும்ப வருமா? இது கொடிய வன்முறை அல்லவா?

கலாச்சார மாற்றமல்ல, வேறு என்ன?

இது போன்ற வன்முறைகள் அதிகம் நிகழ்வதைக் கலாச்சார மாற்றம் என்று சொல்லிவிட முடியாது. முன்னெப்போதையும்விட நிறைய பெண்கள் படிக்கிறார்கள். பேருந்தில் ஏறிச் செல்லவே அனுமதி மறுக்கப்பட்ட காலம் ஒன்று உண்டு. இன்றோ அமெரிக்க நாட்டின் துணை அதிபராகக்கூட பெண் இருந்தார். பிரதிநிதிகள் சபை சபாநாயகராகப் பெண், இந்தியாவின் பிரதமராக, பெப்சியின் தலைமைப் பொறுப்பில், விண்வெளியில் சாகசம் செய்யாத துறைகளே இல்லை. ஆனாலும் பெண்களுக்கு எதிராக, சிறுவர்களுக்கு எதிராக வன்முறைகள் ஏன் அதிகரிக்கின்றன?

ஆடை காரணமா?

சிந்தித்துப் பார்ப்போமா? இதைக் கலாச்சார மாற்றத்தில் அடக்கிவிட முடியாது.

வீட்டிற்குச் சென்று கண்ணாடியின் முன் நின்றுகொண்டு இப்போது நீங்கள் அணிந்திருக்கும் ஆடையைப் பாருங்கள். இதில் கண்ணியக்குறைவு எது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? அப்படியே நீங்கள் மூன்றாம் வகுப்பில் எடுத்துக்கொண்ட ஒளிப்படம் இருந்தால் அதில் அணிந்துகொண்ட ஆடை, அல்லது 12ஆம் வகுப்பில் அணிந்துகொண்ட ஆடையையும் பாருங்கள். அப்போதெல்லாம் உங்களை யாரேனும் கேலி செய்யாமல் இருந்தார்களா? கேலியோ பாலியல் சீண்டல்களோ இருந்ததென்றால், ஆடை காரணம் அல்லதானே?

இந்தச் சிறுமிக்கும் ஆடையோ அவள் பள்ளிக்குச் சென்ற நேரமோ காரணம் அல்லதானே? பின் அவள் காரணம் இல்லை. பின் அவள் பெற்றோரைச் சாட அக்கம் பக்கத்தினருக்கு என்னதான் காரணம் இருக்க முடியும்? அந்த நாலுபேர்தான் யார்?

கலாச்சார மாற்றங்கள் எப்படி உருவாகின்றன?

பாப் அல்லது குமார் என்று ஒருவரை எடுத்துக்கொள்வோம். அவர் பூங்காவில் நடந்து செல்லும்போது எதிர்பாராதவிதமாக ஒரு ரப்பர் பாண்டை மிதிக்க நேரிடுகிறது. அதைக் கையில் அணிகிறார். அந்த நிறத்தால் கவரப்பட்டு பலரும் அது என்ன என்று கேட்க, அது ரப்பர் வளையல் என்று கூறுகிறார். அது போல 20 பேர் அணிய, பிறகு 200 பேர் அணிகிறார்கள். அதை ஓர் உடல்நல வளையலாக, பல வண்ண நிற ரப்பர் வளையலாக லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் விற்பனை செய்ய, 200 லட்சம் பேர் அணிய அது கலாச்சாரமாக மாறுகிறது. ஒவ்வொரு திறனைக் கடக்க ஒவ்வொரு நிற வளையல் என லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் இணையதளம் ஊக்குவிக்க ஆரம்பித்தது. உடல்நலத்திற்கு உடல்நலப் பயிற்சி, கலாச்சார மாற்றம். பிறகு நட்பு வளையல்கள், பிறகு அதே போல ஏகப்பட்ட வளையல்கள். அது ஒரு வியாபாரமாகவே மாறிவிட்டது.

வன்முறை எப்படிப் பரவுகிறது?

நீங்கள் திரைப்படங்கள் பார்ப்பதுண்டா? ஏதோ ஒரு சிவப்புப் புள்ளி காட்டி, அது ஒரு தொற்று நோய்க் கிருமியாக ஏதோ ஓர் ஊரில் இருப்பதும், அது திடீரென 100, 1000, 10000 ஆக பெருகுவது போலவும், பல முகமூடி அணிந்த அறிவியலாளர்கள் கவலையோடு அங்குமிங்கும் பரபரப்பாக அதை அழிப்பது போல ஆய்வு செய்வதாகவும் கண்டதில்லையா?

இல்லை, ஒரு தீவிரவாதம் பரவுவதைப் போல, அதை அழிக்க முயல்பவர்கள் அதிபருடன் பேசுவது போலவும் அதை அழிக்காவிட்டால், அகில உலகமே அழிந்துவிடும் என்று பேசுவது போன்ற காட்சிகளைக் கண்டதில்லையா? இப்போது வன்முறைகள் அந்த சிவப்புப் புள்ளிகள் போலத்தான் பரவுகின்றன.

கடந்த காலத்தில் கோவிட் தொற்றுகூட அப்படித்தான் பரவியது. ஆனால், அதற்கான தடுப்பூசியும், அதற்கான முகாம்களும் அதைத் தடுத்தன.

வண்ணத்துப்பூச்சி விளைவு – நல்ல செயல்களின் அலைகள்

இயற்கையில் ஒரு சிறிய வண்ணத்துப்பூச்சி அமேசான் காட்டில் இறக்கை அசைத்தால், அந்தச் சிறிய காற்று அலைகள் தொடர்ச்சியாகப் பெருகி, வாரங்கள் கழித்து ஜப்பானில் ஒரு சூறாவளியாக மாறலாம் என்பது அறிவியல் உண்மை. இதைத்தான் ’வண்ணத்துப்பூச்சி விளைவு’ என்கிறார்கள். இது வெறும் கற்பனை அல்ல, அறிவியல் பூர்வமான காரண-விளைவு தொடர்பு.

சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன், இளம் பெண் ஒருவர் மேல்நிலைப் பள்ளியில் பாலியல் கல்வி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கினார். ஆரம்பத்தில் ஒரு பள்ளியில் மட்டுமே அவர் பேசினார். அப்போது பலர், ’இதெல்லாம் நம் கலாச்சாரத்துக்கு ஒத்து வராது’ என எதிர்த்தனர். ஆனால், அவர் தளரவில்லை. ஒரு மாணவி, அவரிடம் வந்து, ’எனக்கு ஒரு பிரச்னை, ஆனால் யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை’ என்று தனிப்பட்ட முறையில் உதவி கேட்டாள். அந்தச் சிறுமிக்கு உதவி செய்த பின், அவர் இப்படி எத்தனை பேர் இருப்பார்கள் என்று யோசித்தார்.

அவர் அமைத்த ’பாதுகாப்பான கல்வி’ என்கிற அமைப்பு இன்று தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட பள்ளிகளில் செயல்படுகிறது. ஒரு சிறு செயல், ஆயிரக்கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றியது. இது வண்ணத்துப்பூச்சி சிறகடிப்பதைப் போல, சிறிய செயல் பெரிய மாற்றத்தை உருவாக்கியது.

தீர்வு என்ன?

அது போல வன்முறைகளைத் தடுக்கும் நிகழ்ச்சிகளும் செயல்களும் பரவ வேண்டும். ஒவ்வொரு சிவப்புப் புள்ளிக்கும் எதிராக ஒரு சின்ன பச்சைப் புள்ளி நிகழ்வும் நடக்குமானால், அது எத்தனை சிறியதாக இருந்தாலும் நாளடைவில் வன்முறை நிகழ்வுகள் குறையும்.

கேரளாவில் நடந்த ஒரு சம்பவம் இதற்குச் சிறந்த உதாரணம். ஒரு பேருந்தில் ஒரு பெண்ணைத் தொந்தரவு செய்த ஆணை அருகில் இருந்த இளைஞர் ஒருவர் தட்டிக்கேட்டார். பயணிகள் அனைவரும் மௌனமாக இருந்தனர். ஆனால், இந்த இளைஞரின் செயல் அந்தப் பெண்ணை மட்டுமல்ல, பேருந்திலிருந்த மற்ற பெண்களுக்கும் பாதுகாப்பு உணர்வைக் கொடுத்தது. அடுத்த நாளே, அதே பேருந்தில் இன்னொரு தொந்தரவு நடந்தபோது, மூன்று பேர் கைகளை உயர்த்தி எதிர்த்தனர். இது பச்சைப் புள்ளியின் விரிவாக்கம். இந்தச் சிறிய எதிர்ப்புகளே சமூகத்தின் பேராற்றலாக மாறுகின்றன.

தற்கொலை செய்பவர்களின் செயல்களை ’மானத்தைக் காக்க உயிர்துறந்த வீரர்கள்’ என்று பாராட்ட வேண்டாம். அதற்காக உயிரிழந்தவர்களின் செயல்களைப் பரவச் செய்ய வேண்டாம். சமூக வலைதளங்களில் அநாவசியமாக எழுதிப் பாராட்டாமல் இருந்தாலே போதும். வன்முறையை நிறுத்த வழிப்போக்கராகச் சின்ன செயலாக இருந்தாலும் செய்ய ஆவணச் செய்தால், அல்லது அதற்கான விழிப்புணர்வு ஏற்படச் செய்தால் போதும்.

ஒவ்வொரு சிறிய நல்ல செயலும், வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பைப் போல, பெரிய அலைகளை உருவாக்கும். சிவப்புப் புள்ளிகளுக்கு எதிராகப் பச்சைப் புள்ளிகளை உருவாக்குவோம்.

(தொடரும்)

படைப்பாளர்:

பத்மா அர்விந்த்

மருத்துவத்தில் முனைவர் பட்டமும் நிர்வாகவியலில் மேலாண்மை பட்டமும் பெற்றவர். அமெரிக்க மத்திய மாநில அரசின் மனிதவள மற்றும் உடல்நலத் துறையின் கொள்கை மாற்ற ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். அமெரிக்க அரசியல் குறித்து மெட்ராஸ் பேப்பர் வார இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘கனவுகள் மின்னும் தேசம்’ எனும் புத்தகம் ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறது.