- ‘இவைகள் பக்கத்தில் கள் சேர்க்க கூடாது’ என்பது சரியா அல்லது இவற்றின் பக்கத்தில் சரியா?
இவற்றின் பக்கத்தில் என்பது சரி. ‘இவை’ போன்றவற்றின் பக்கத்தில் என்றும் எழுதலாம்.
2. ஆயிரம் கப்பல் வந்தது என்பது சரியா அல்லது வந்தன என்று போடவேண்டுமா?
ஆயிரம் கப்பல் வந்தன என்பது சரி.
3. ‘அத்தனை’ என்ற சொல்லுக்கு பதிலாக ‘அத்துணை’ என்று உபயோகப்படுத்துவது சரியா ?
அத்தனை என்ற சொல்லுக்குப் பதிலாக அத்துணை என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது
4. விநாடி, வினாடி எது சரி?
விநாடி = வி + நொடி.
காலத்தைக் குறிக்கும் சொல்.
வினாடி – இச்சொல்லையும் காலத்தைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர். இரண்டையும் பயன்படுத்தலாம்.
புதிர் விளையாட்டை வினாடி வினா என்று அழைப்பர்.கேட்கும் வினாவுக்குக் குறித்த காலத்தில் பதிலளிக்க வேண்டும் என்பதால் இப்பெயர் வந்திருக்க வேண்டும்.
5. பல நாள் சில நாள் பலநாள்கள் சிலநாட்கள் எது சரி?
பல நாள், சில நாள் சரி.
நாட்கள் என்றால் நாட்பட்ட கள் (பழைய கள்) எனப் பொருள்.
6. ஆதிநீடல் புணர்ச்சி விதி பற்றி தெளிவாக ஒரு பதிவு எழுதமுடியுமா?
மை ஈற்றுப் பண்புப் பெயர் புணர்ச்சியில் எழுத்துகள் அடையும் மாற்றங்களில் ஒன்றுதான் ஆதிநீடல்.
புணர்ச்சியில் முதல் சொல் நீண்டு ஒலிப்பது போல் அடையும் (குறில் நெடிலாக ஒலிப்பது) மாற்றம் தான் ஆதிநீடல்.
பண்புப் பெயர் புணர்ச்சி நான்கின் அடிப்படையில் அமையும். அவை,
நிறம்
குணம்
அளவு
வடிவம்
செம்மை + ஆ
சேதா
மும்மை + வழி
மூவழி
பெருமை + ஊர்
பேரூர்
முதுமை + ஊர்
மூதூர்
பண்புப் பெயர் புணர்ச்சி பொருள் தெளிவுக்கும் ஓசை நயத்திற்கும் துணை செய்யும்.
ஆனால், செய்யுளில் முதல் எழுத்து நீண்டு ஒலிக்கும் எழுத்துகள் எல்லாம் பண்புப் பெயர் புணர்ச்சியில் இணைத்துப் பார்க்கக் கூடாது.
சான்று – நீழல் (ஈசன் எந்தன் இணையடி நீழலே)
7. ‘என்று’ என்ற சொல்லின் அதிகப்படியான உபயோகத்தை எப்படி குறைப்பது?
அதே பொருள் தரும் வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்தலாம்.
உதாரணத்திற்கு,
நாளை வருவேன் என்று கூறினான்.
நாளை வருவேன் எனக் கூறினான்.
நாளை வருவேன் என்றான்.
8. //உடை வாங்குவதிலிருந்து அலைபேசி வாங்குவது வரை, வீடு வாங்குவதிலிருந்து வேலை தேடுவது வரை ஒரு மனிதனின் செயல்களில் பெரும்பாலானவற்றை சுற்றியுள்ளவர்களே தீர்மானிக்கிறார்கள்// இந்த வாக்கியத்தில் உள்ள பிழைகளைச் சுட்டுக
//உடை வாங்குவதிலிருந்து அலைபேசி வாங்குவது வரை, வீடு வாங்குவதிலிருந்து வேலை தேடுவது வரை மனிதர்களின் செயல்களில் பெரும்பாலானவற்றைச் சுற்றியுள்ளவர்களே தீர்மானிக்கிறார்கள்.// வற்றுச் சாரியை யுடன் இரண்டாம் வேற்றுமை உருபான ஐ வெளிப்படையாக வருவதால் ஒற்று மிகும்.
கேள்வி பதில் பகுதி – பதில்கள் தருபவர்

முனைவர் கு.சுந்தரமூர்த்தி
சென்னைப் புதுக்கல்லூரித் முதுகலைத் தமிழாய்வுத் துறையில்
உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். ஆய்வு நெறியாளர் ஆவார்.