அய்யா அவைகுண்டர் திருவிதாங்கூர் அரசால் கைது செய்யப்பட்ட நிகழ்வு நடைபெற்றது, 1842ஆம் ஆண்டுக்குப் பிறகு என்று Rev George Pettitt எழுதிய The Tinnevelly Mission புத்தகம் குறிப்பிடுகின்றது.1* ஆனால் அகிலத்திரட்டு அம்மானையின் கூற்றுப்படி இந்த ஆண்டுக் கணக்கு தவறாகும்.

அகிலத்திரட்டு அம்மானை கொல்லம் ஆண்டு 1008, மாசி மாதம் 20ஆம் தேதியன்று முத்துக்குட்டி விஞ்சை பெற்று அய்யா வைகுண்டரானார் என்று உரைக்கின்றது. அதாவது, 1833ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி முத்துக்குட்டி விஞ்சை பெற்று அய்யா வைகுண்டர் என்று தன் பெயரை மாற்றிக் கொண்ட நிகழ்வை அகிலத்திரட்டு அம்மானையில் அறிய முடிகின்றது. அதன் பிறகு, அய்யா வைகுண்டர் தவம் இருக்கத் தொடங்குகிறார். ஆறு ஆண்டுகள் இந்தத் தவம் தொடர்ந்தது.

‘முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே

தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே

மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும்

நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்

இப்படியே மூவிரண்டு ஆறு வருசமதாய்

எப்படியும் நீ தவசு இருக்க வரும் என்மகனே

ஓராறு ஆண்டு உற்ற தவமே இருந்து

பாராரும் காணப் பார் கண்டு கண்டிரு நீ‘ 2*

என்ற அகிலத்திரட்டு வரிகளில் அய்யா வைகுண்டர் ஆறு ஆண்டுகள் தவமிருக்க வேண்டும் என்று நாராயணர் விஞ்சை (அறிவுரை) வழங்கும் வரிகளைக் கவனிக்க.

‘சொந்த திருமாலுக்கு சுவாமி உரைத்தபடி

ஆறாண்டு சென்று அதிக தவமதுதான்

கூண்டாய் முடித்து குருநாதக் கண்மணியும்‘ 3* என்ற அகிலத்திரட்டு அம்மானையின் வரிகளையும் நோக்குக.

ஆக, 1833ஆம் ஆண்டு விஞ்சை பெற்ற பிறகு ஆறாண்டு தவம் முடித்தபோது, நடப்பு ஆண்டு பொ.ஆ.1839. இந்த ஆறாண்டு தவத்தை முடிப்பதற்கு முன்னரே, (சாதிக்கான தவசில் இருக்கும் போது)அய்யா வைகுண்டர் திருவிதாங்கூர் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார் என்றுரைக்கின்றது அகிலத்திரட்டு அம்மானை. எனில் 1839ஆம் ஆண்டுக்கு முன்பே அய்யா வைகுண்டர் கைது செய்யப்பட்டார் என்பதே சரியாக இருக்க முடியும்.

‘அய்யா வைகுண்டர் 1837 டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டு, 110 நாள்களுக்குப் பிறகு, 1838ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டார்’ என்று ‘இறைவனின் வைகுண்ட அவதாரம்’ நூலில் பொறிஞர் ஆ. கிருஷ்ணமணி குறிப்பிடுகிறார்.

அய்யா வைகுண்டர் நிபந்தனைக் கடிதத்தில் கையொப்பம் இட்டாரா?

‘மன்னன்  கலி உரைத்த வாக்கின் படி எழுதி

ஒப்பமிட சொன்னார் உலகளந்த பெம்மானை

செப்பமுட நாரணரும் சிரித்து மனம் மகிழ்ந்து

நம்மாலே சொல்லி நகட்டப் படாது எனவே

சும்மா அவன் வாயால் தானுரைத்தே சுமந்தான்

இதல்லோ நல்ல இயல் காரியம் எனவே

அது அல்லா (அதல்லா) என்று அரிமால் அகம் மகிழ்ந்து

கைச்சீட்டை வாங்கி கைக்கொண்டுதான் கீறி

வச்சிக்கோ என்று மண்ணில் மிகப் போட்டார்

கீறி விட்ட ஓலைதனை கெடு நீசன்தான் எடுத்து

மாறிக் கொருத்து வைத்தான் காணம்மானை

உன் இல்லிடத்தில் உடனே நீ போ எனவே

குன்றுடைய நீசன் கூறினான் அம்மானை

அப்போது மாயவனார் அகட்டு என உறுக்கி

இப்போது நீ நினைத்த லெக்கதிலே போவேனோ

தெய்வ நினைத்த தெய்தி உண்டு அவ்வேளை

போவேன் என சொல்லி பெரியோன் அகமகிழ்ந்து

நல்லவரே மக்காள் நாம் நினைத்த தெய்தி அது

வல்லவரே வரும் மாசி பத்தொன்பதிலே

கிழக்கு நாம் போவோம் கீணமதாய் நீங்களெல்லாம்

விளக்கு ஒளி போலே வீரத்தனமாய் இருங்கோ

என்றுரைக்க4*

என்ற அகிலத்திரட்டின் வரிகள்தான் அய்யா வைகுண்டர் நிபந்தனைக் கடிதம் கொடுத்தாரா என்பதைக் கண்டறிய அகிலத்திரட்டு அம்மானையில் இருக்கும் ஒரே சான்றாகும். மேற்சொன்ன அகிலத்திரட்டு அம்மானையின் வரிகளுக்கு மிகவும் நுணுக்கமாகப் பொருள் அறிய வேண்டியதன் அவசியம் உள்ளது. எனவே இந்த அத்தியாயம் முழுமையும் இவ்வரிகளுக்கான அர்த்தம் காணும்  ஆய்வே.

மேற்சொன்ன அகிலத்திரட்டு வரிகளில் ‘மன்னன் கலி’ என்று குறிப்பிடப்படுவது திருவிதாங்கூர் அரசனையே ஆகும். அப்போது திருவிதாங்கூர் அரசின் அரசராக இருந்தவர் சுவாதித் திருநாள் மகாராஜா (1829 – 1847) ஆவார். அய்யா வைகுண்டர் கைது செய்யப்பட்ட போது சுவாதித் திருநாள் மகாராஜாவுக்கு 24 முதல் 26 வயதுக்குள் இருக்கலாம்.5*

கடந்த அத்தியாயத்தில் நாம் பொருள் அறிந்த அகிலத்திரட்டு அம்மானை வரிகளின் தொடர்ச்சியாக வருகின்ற, மேற்சொன்ன4* இவ்வரிகளில் முக்கியமாக ஆராய வேண்டிய வரிகள்,

கைச்சீட்டை வாங்கி கைக்கொண்டுதான் கீறி

வச்சிக்கோ என்று மண்ணில் மிகப் போட்டார்

கீறி விட்ட ஓலைதனை கெடு நீசன்தான் எடுத்து

மாறிக் கொருத்து வைத்தான் காணம்மானை’ என்ற வரிகளாகும்.

இதில் ‘கைக்கொண்டுதான் கீறி’ என்ற வார்த்தைகளுக்கு, ‘அய்யா வைகுண்டர் நிபந்தனைக் கடிதத்தில் கையொப்பம் இட்டுக் கொடுத்தார்’ என்று பொருள் எழுதி இருக்கிறார் நா.விவேகானந்தன். ஆ. அரிசுந்தர மணி முதலான எழுத்தாளர்களும் அய்யா வைகுண்டர் நிபந்தனைக் கடிதத்தில் ஒப்பம் இட்டதாகவே எழுதியிருக்கிறார்கள்.6* என் அறிவுக்கு இது ஏற்புடையதாக இல்லை.

கீறுதல் = வெட்டுதல், கீறி = கையால் வெட்டிக் கிழித்து என்பதல்லவா சரியான பொருள்.

‘கைச்சீட்டை வாங்கி கைக்கொண்டுதான் கீறி

வச்சிக்கோ என்று மண்ணில் மிகப் போட்டார்‘ என்ற வரிகளில், ‘எழுத்தாணி கொண்டு கீறி’ என்று அம்மானை வரி இருக்குமாயின், நா.விவேகானந்தன் சொன்ன பொருள் சரியாக இருக்கலாம். ‘கைக்கொண்டு கீறி’ என்ற பதத்துக்கு ‘கையால் கிழித்து’ என்ற பொருளே சரியானதாக இருக்கும்.

மேலும் ‘வச்சிக்கோ என்று மண்ணில் மிகப்போட்டார்’ என்ற வரியில் ‘மிக’ப்போட்டார் என்றிருப்பதை கவனிக்க. ‘மிக’ என்பதை வேகமாக என்று பொருள் கொள்ளுவோமானால், ‘வீசினார்’ என்ற பொருள் எளிதாகக் கிடைத்துவிடும்.

பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்த சாதிய வேறுபாட்டின் ஒரு முக்கிய விதி தாழ்த்தப்பட்ட அவர்ணர் என்று உயர்சாதியினரால் கருதப்பட்ட ஒருவரின் கைத்தொட்ட பொருள்கள் எதையும் உயர் சாதியாகத் தங்களைக் கருதிக் கொண்டவர்கள் தொடக்கூடாது என்பதாகும். அதனால்தான் அய்யா வைகுண்டரின் கைத்தொட்ட ஓலையை, அய்யா வைகுண்டர் அரசர் கையில் கொடுக்காமல் மண்ணில் போட்டார் என்று உரை எழுதி இருக்கிறார் நா. விவேகானந்தன்.

மன்னரிடம் ஒரு கைதி நேரடியாக ஓலையை கொடுப்பாரா? அய்யா வைகுண்டர் ஓலையை அரண்மனை சேவகரிடம்தானே கொடுத்திருக்க வேண்டும்? அரண்மனை சேவகரிடம் கொடுக்கவும் தீட்டுக் கழிக்க வேண்டுமோ? திருவிதாங்கூர் அரண்மனையில் உயர்சாதியினர் அரண்மனை சேவகர்களாகப் பணிபுரிந்தார்களா என்ன?

‘கீறி விட்ட ஓலைதனை கெடு நீசன்தான் எடுத்து

மாறிக் கொருத்து வைத்தான் காணம்மானை’ என்ற வரிகளுக்கு ‘அரண்மனை சேவகர், அய்யா வைகுண்டர் மண்ணில் போட்ட ஓலையை எடுத்து சாதித் தீட்டுக் கழித்து அரசரிடம் கொடுத்தான்’ என்றும் பொருள் எழுதியுள்ளார் நா. விவேகானந்தன்.7*

அப்படியே தீட்டுக் கழிப்பதாக இருந்தாலும், ‘அவர்ணர்கள் தாங்கள் கைத்தொட்ட பொருள்களை தண்ணீரில் போடுவார்கள், அதைக் கழுவி உயர்சாதியினர் பயன்படுத்திக் கொள்வார்கள்’ என்ற கொடிய வழக்கம்தான் அக்காலகட்டத்தில் இருந்தது. மண்ணில் போட்டு தீட்டுக் கழிக்கும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை.

‘கீறி விட்ட ஓலைதனை கெடு நீசன்தான் எடுத்து

மாறிக் கொருத்து வைத்தான் காணம்மானை’ என்ற வரிகளில் ‘சாதிய தீட்டு கழித்தல்’ என்ற பொருள் படும்படியான வார்த்தை எதுவும் இல்லை என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும். ‘கீறிய ஓலையை கேடு பிடித்த நீசன் எடுத்து, பிறகு, கொருத்து வைத்தான்’, என்ற பொருள் மட்டுமே இவ்வரிகளில் உள்ளது.

நாஞ்சில் நாட்டு மக்களின் பேச்சு வழக்கில் ‘பிறகு’, ‘அடுத்து’, ‘அப்புறம்’ என்று சொல்வதற்கு, ‘மாறி’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் வழக்கம் உண்டு. அகிலத்திரட்டு அம்மானை முழுக்க முழுக்க  நாஞ்சில் நாட்டு மக்களின் பேச்சு வழக்குச் சொற்களால் எழுதப்பட்ட நூல் என்பதை இங்கு நினைவு கூர்கிறேன். எனவே ‘மாறி கொருத்து’ என்று மேற்சொன்ன அகிலத்திரட்டு வரிகளில் வரும் வார்த்தைகள், ‘பிறகு கொருத்து’ என்றே பொருள் தரும்.

‘கொருத்து’ என்ற சொல்லுக்கும் நாஞ்சில் நாட்டு பேச்சு வழக்கு மொழியில் ‘தைத்து’ ‘நூலில் கோத்து’ போன்ற பொருள்களே வழங்கப் பெறுகின்றன. அன்றி, ‘தீட்டுக் கழித்து’ என்ற அர்த்தத்திற்கு இடமில்லை. திருவனந்தபுரத்து அரண்மனையில், அன்றாட அரசாணைகள் எழுதப்பட்ட ‘ராயல் நீட்டோலைகள்’ எனப்படும் அரசுக் குறிப்புச் சீட்டுகள் அரசாங்கத்தால் ஓலைச் சுவடிகளாகப் பாதுகாக்கப்படும் வழக்கம் இருந்தது என்பதை இங்கு பொருத்திப் பார்க்க.8* அத்துடன் கிழிந்த ஓலைகளை நூலால் தைத்து பாதுகாக்கும் வழக்கமும் உண்டு. ‘கொருத்து’ என்ற வார்த்தைக்கு இவ்விரண்டில் ஒரு பொருள் இருக்கலாமே தவிர தீட்டுக் கழித்தல் என்ற பொருள் எப்படி இருக்க முடியும்?

எனவே ‘கிழிந்த ஓலையை அரசன் எடுத்து நூலில் கோத்து அல்லது தைத்து  வைத்தான்’ என்பதே அவ்வரிக்கான பொருத்தமான பொருளாகும்.

இவ்விடத்தில் ஒரு வாசகியாக எனக்கு இரண்டு ஐயங்கள் எழுகின்றன. அவை என்னவென்றால், அய்யா வைகுண்டர் கையொப்பம் இடாத ஓலையை அரசன் ஏன் நூலில் கோத்து பத்திரப்படுத்த வேண்டும்?

உன் இல்லிடத்தில் உடனே நீ போ எனவே

குன்றுடைய நீசன் கூறினான் அம்மானை‘ என்ற வரிகளைப் பாருங்கள். அரசன் சொன்னபடி எழுதிக் கொடுக்காத அய்யா வைகுண்டரைப் பார்த்து, உன் வீட்டுக்கு உடனே போ என்று அரசர் சொல்வாரா?

இந்த ஐயங்களுக்கான தீர்வைக் காண,

‘கீறி விட்ட ஓலைதனை கெடு நீசன்தான் எடுத்து

மாறிக் கொருத்து வைத்தான் காணம்மானை’ என்ற வரிகளோடு

‘உன் இல்லிடத்தில் உடனே நீ போ எனவே

குன்றுடைய நீசன் கூறினான் அம்மானை’ என்ற வரிகளையும் இணைத்துப் பொருள் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

‘அய்யா வைகுண்டர் தன் கையால் கிழித்த ஓலையை எடுத்து நூலில் கோத்து வைத்த அரசர், இதில் கையொப்பம் இட்டுக் கொடுத்து விட்டு நீ உன் இடத்துக்கு உடனே போ என்று சொன்னார்’, என்று பொருள் காண்பதே பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

‘அப்போது மாயவனார் அகட்டு என உறுக்கி

இப்போது நீ நினைத்த லெக்கதிலே போவேனோ

தெய்வ நினைத்த தெய்தி உண்டு அவ்வேளை

போவேன் என சொல்லி பெரியோன் அகமகிழ்ந்து’ என்ற அடுத்தடுத்த அகிலத்திரட்டு அம்மானை வரிகளை நோக்குக.

நா. விவேகானந்தன் உரை எழுதியதுபோல், அய்யா வைகுண்டர் நிபந்தனைக் கடிதம் எழுதிக் கொடுத்திருந்தால், நீ சொன்ன தேதியில் நான் போக மாட்டேன், தெய்வம் சொன்ன தேதியில்தான் போவேன் என்று அய்யா வைகுண்டரே திமிராகப் பேசியிருப்பாரா? நிபந்தனைக் கடிதம் எழுதிக் கொடுத்த ஒருவர், உடனடியாகத் தன் வீட்டுக்கு செல்லத்தானே நினைப்பார்?

ஆக மொத்தத்தில் நா. விவேகானந்தன் அவர்கள் எழுதியுள்ள, இந்த உரையானது, ‘அய்யா வைகுண்டர் கைது நிகழ்வு’ நடைபெற்ற காலத்தின் சூழலுக்கு ஒவ்வாததாகவும், அகிலத்திரட்டு வரிகளுக்கு சற்றும் பொருந்தாததாகவும் உள்ளது.

அதாவது கைச்சீட்டு ஓலையை கீறிய பிறகு, அய்யா வைகுண்டர் உடனடியாக விடுதலை செய்யப்படவில்லை. ஆக, ‘கீறி’ என்ற சொல்லுக்கு ‘கிழித்து’ என்பதே பொருள். எனவே அய்யா வைகுண்டர் நிபந்தனைக் கடிதம் எழுதிக் கொடுக்காமல், துணிவுடன் இருந்தார் என்பதே என் முடிவு.

நிபந்தனைக் கடிதம் கொடுக்க மறுத்த வைகுண்டர், அடுத்து வரும் வரிகளில் மக்களை நோக்கி பேசுவதாக அகிலத்திரட்டு அம்மானை கூறுகின்றது. கீழ்க்காணும் அகிலத்திரட்டு அம்மானை வரிகளைக் கவனிக்க.

‘நல்லவரே மக்காள் நாம் நினைத்த தெய்தி அது

வல்லவரே வரும் மாசி பத்தொன்பதிலே

கிழக்கு நாம் போவோம் கீணமதாய் நீங்களெல்லாம்

விளக்கு ஒளி போலே வீரத்தனமாய் இருங்கோ

என்றுரைக்க‘ என்ற வரிகளின் பொருள் பின்வருமாறு;

‘நல்லவரே மக்காள், நாம் நினைத்த தேதியில் கிழக்கு நோக்கி போவோம். (அய்யா வைகுண்டர் சிறை வைக்கப்பட்ட திருவனந்தபுரம், கன்னியாகுமரியில் இருந்து மேற்கு திசையில் உள்ளது) சர்வாதிகாரத்துக்குக் கேடாக (கீணமதாய்) நீங்களெல்லாம் விளக்கின் ஒளியைப் போல வீரமுடன் இருங்கள்’, என்று நிபந்தனைக் கடிதம் கொடுக்க மறுத்த பிறகு, அய்யா வைகுண்டர் மக்களைப் பார்த்துப் பேசுவதாக சொல்கிறது அகிலத்திரட்டு அம்மானை.

அதாவது, அரசர் அய்யா வைகுண்டரிடம் நிபந்தனைக் கடிதம் எழுதிக் கேட்டபோது மக்கள் கூட்டம் ஒன்று அய்யா வைகுண்டரின் விடுதலைக்கான கோரிக்கையுடன் அரண்மனை வாசலிலோ, அல்லது அரண்மனைக்கு அருகிலோ நின்றிருக்க வேண்டும் என்பதை அகிலத்திரட்டு அம்மானையின் இவ்வரிகளின் மூலம் அறியலாம். மக்கள் கூட்டம் ஒன்று அரசாங்கத்திடம், ஒரு தனி நபரின் அல்லது தங்களது தலைவரின் விடுதலைக்காகக் கோரிக்கை வைப்பதை போராட்டம் என்றழைப்பர். அந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து அவர்களின் தலைவர் ‘வீரமுடன் இருங்கள்’ என்று பேசுவதை, புரட்சி என்பர்.

இத்தனை விளக்கங்களையும் உள்வாங்கிக் கொண்ட பிறகு, 4*ல் சொன்ன அகிலத்திரட்டு வரிகளுக்கான பொருளைக் காண்போம்:

மன்னன் கலி (திருவிதாங்கூர் அரசர்) உரைத்த வாக்கின்படி, பூவண்டர் எழுதி, அதில் அய்யா வைகுண்டரைக் கையொப்பம் இடச் சொன்னார் பூவண்டர். நாராயணரும் (அய்யா வைகுண்டரும்) சிரித்து மனம் மகிழ்ந்து, நாமாகவே நம் வாயால் சொல்லி நேரத்தைக் கடத்தக் கூடாது என நினைத்தார். இதல்லவா நல்ல காரியம் என்று சும்மா, அவன் (அரசன்) வாயால்தானே உரைத்து பாவத்தை சுமந்தான். “அதல்லா” என்று மறுத்து உரைத்து மனம் மகிழ்ந்த அரிமால் (அய்யா வைகுண்டர்), கைச்சீட்டை வாங்கி, கைக்கொண்டு கிழித்து, ‘வச்சுக்கோ’ என்று  மண்ணில் வீசினார். கிழிந்த ஓலைதனை கெடுநீசன் (சேவகர்) எடுத்து, பிறகு நூலில் தைத்து அல்லது கோத்து வைத்தான். “இந்த ஓலையில் கையொப்பம் இட்டுக் கொடுத்து விட்டு, உன் இல்லிடத்துக்கு உடனே போ” என்று அரசர் அய்யா வைகுண்டரை நோக்கி சொல்ல, அப்போது மாயவனார் (அய்யா வைகுண்டர்) அரசவையில் பயத்தைப் பரப்பி, “நீ நினைத்த தேதியில் நான் போவேனோ? தெய்வம் சொன்ன தேதியில் போவேன்” என்று துணிவாக அரசரிடம் சொன்னார். உடனே, அகமகிழ்வோடு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, “நல்லவரே மக்காள்! நாம் நினைத்த தேதியது வல்லவர் வருகின்ற மாசி பத்தொன்பதிலே, கிழக்கு திசை நோக்கி நாம் போவோம். நீங்களெல்லாம் விளக்கு ஒளியைப் போல வீரமுடன் இருங்கள்!” என்று சொன்னார்.

இது முழுக்க முழுக்க எனது புரிதலும் உரையும் ஆகும். இவ்வரிகளில் அய்யா வைகுண்டர் மனமகிழ்ந்து இருப்பதற்கு காரணம், மக்களின் போராட்டத்தைக் கண்ட மன்னர், நிபந்தனை விடுதலைக்கு ஒப்புக் கொண்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

நகட்டப் படாது = நேரத்தைக் கடத்தக்கூடாது என்ற பொருளில் வரும் நாஞ்சில் நாட்டு பேச்சு வழக்குச் சொல், மாறி = பிறகு, கொருத்து = தைத்து, கோத்து. அகட்டி = பரப்பி, உறுக்கி = பயமுறுத்தி. அதல்லா = அது அல்ல என்ற பொருள் தரும் மலையாளச் சொல், கீணம் =  கேடு.

இன்னொரு முக்கிய குறிப்பு: கூடி நின்ற மக்களைப் பார்த்து அய்யா வைகுண்டர் ‘நல்லவரே மக்காள்’ என்றுதான் அழைத்தார். ‘நல்லவரே சான்றோர்’ என்று அழைக்கவில்லை. எனவே அய்யா வைகுண்டரின் விடுதலைக்காக கூடிய மக்கள் கூட்டத்தில் சாதி மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் இருந்தார்கள் என்பதும் தெளிவு.

அய்யா வைகுண்டர் ஒரு பொதுவுடைமைத் தலைவர்.

தொடரும்…

படைப்பாளர்

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.

தரவுகள்:

  1. THE TINNEVELY MISSION OF THE CHURCH MISSIONARY SOCIETY, REV.GEORGE PETTITT, 1850, PAGE NO: 288
  2. பொ.முத்துக்குட்டி சாமியவர்களால் இயற்றப்பட்டு, தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, 1963 ஆம் ஆண்டு, பக்கம் எண் – 199, 200.
  3. பொ.முத்துக்குட்டி சாமியவர்களால் இயற்றப்பட்டு, தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, 1963 ஆம் ஆண்டு, பக்கம் எண் – 284.
  4. பொ.முத்துக்குட்டி சாமியவர்களால் இயற்றப்பட்டு, தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, 1963 ஆம் ஆண்டு, பக்கம் எண் – 274,275.
  5. THE TRAVANCORE STATE MANUAL, V,NAGAM AIYA, IN THREE VOLUMES, VOL:I, FIRST EDITION:1906, REPRINT 1989, PAGE NO: 482
  6. அகிலத்திரட்டு அம்மானை பாராயண உரை, உரை ஆசிரியர்: ஆ. அரிசுந்தர மணி, அய்யா வைகுண்டர் நற்பணி மன்றம், அம்பலப்பதி. மூன்றாம் பதிப்பு 2016. பக்கம் எண் – 548.
  7. நா.விவேகானந்தன் எழுதிய ‘அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும்’ பாகம் 2, இரண்டாம் பதிப்பு, 2006, பக்கம் எண் – 234, 235.
  8. தடி வீர சாமி கதை & வன்னிராயன் கதை, முனைவர். சூ.நிர்மலா தேவி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், முதல் பதிப்பு, 1996, பக்கம் எண் – 23.