மொழி, இனம், உணவு, பண்பாடு, மதம், ஜாதி என பலவற்றை உள்ளடக்கி, ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது. வேற்றுமையில் ஒற்றுமை எனத் திகழும் நாடு என்ற பெயரும் இந்தியாவுக்கு உள்ளது. ஆனால் அது எவ்வளவு உண்மை என்பது இங்கு வாழும் மக்களுக்கு மட்டுமே புலப்படும்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பாலின சமத்துவத்தை சீர்படுத்தும் விதமாக பல சொற்றொடர்களை மாற்றி அமைத்துள்ளது இந்திய உச்சநீதிமன்றம். ஒரு நீதிபதியாக தான் உபயோகம் செய்யும் சொற்களில், தான் சொல்ல நினைக்கும் விடயத்தை மட்டும் மக்களிடம் கொண்டு சேர்க்காமல், இந்த சமூகத்தின் மீதான நீதிமன்றத்தின் பார்வையையும் அந்த சொற்கள் கடத்துகின்றன. பாலின சமத்துவத்தை நிலைநாட்ட இந்திய சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.

கற்புடைய பெண், அறமுள்ள பெண், வேசி, இந்தியப் பெண், மேற்கத்திய பெண், மயக்குபவள், பரத்தையர், தளர்வான ஒழுக்கம் கொண்ட பெண், நல்லொழுக்கம் இல்லாத பெண், விபச்சாரம் செய்யும் பெண், விரும்பத்தகாத பெண் போன்ற சொற்களை மாற்றி, ‘பெண்’ என்னும் சொல்லை மட்டுமே பயன்படுத்தும்படி உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இது மட்டும் அல்லாமல் பல சொற்றொடர்களை மாற்றி பாலின சமத்துவத்தை மேம்படுத்த முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. ‘விபச்சாரி’ (prostitute)* என்ற சொல்லுக்கு பதிலாகப் பாலியல் தொழிலாளர், house wife (இல்லத்தரசி) என்ற சொல்லுக்கு பதில் ‘home maker’ என்ற மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பாலியல் வன்முறையால் பாத்திக்கப்பட்ட பெண்ணோ, ஆணோ தங்களை பாதிக்கப்பட்டவர் (victim) அல்லது உயிர் பிழைத்தவர் (survivor) என்று தங்களின் விருப்பப்படி அடையாளப்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

*இந்த சொல் பயன்பாட்டில் பதிப்பகத்துக்கோ எழுத்தாளருக்கோ உடன்பாடில்லை, உச்சநீதிமன்ற கையேட்டில் உள்ள சொல் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சமூகத்தில் மரபுசார் பாலின சமத்துவமற்ற சொற்றொடர்களை மக்கள் பெரிதும் பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்களை அவமதிக்கும் வார்த்தைகள் அதிகம் உள்ளன. பெண்களை ஏளனம் செய்யும் சொற்கள் இந்திய சட்டங்களில் எளிதாக இடம்பெற்றுள்ளன.

அதை மாற்றும் முன்னெடுப்பே கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட பாலின வேறுபாட்டு சொற்கள் சீர் செய்யப்பட்டக் கையேடு.

சட்டநூலில் சொல் பயன்பாட்டு மாறுதல்கள் ஏற்பட்டால் சமூகம் சீரடைந்துவிடுமா என்ற கேள்வி நமக்குள் எழும். சொற்களின் முக்கியத்துவம், தொடர்பியல் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கு எளிதாகப் புலப்படும்.

பிரபல எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான அருந்ததி ராய் கூறுவது, “கவனக் குறைவான சொல் தேர்வு, நம்மை அடுத்தவரிடம் இருந்து வேறுபடுத்துகிறது.” சாதாரணமாக இரு மனிதர்களிடையே நிகழும் உரையாடலில் ‘நான்’ என்ற சொல்லுக்கு பதிலாக ‘நாம்’ என்ற சொல்லை பயன்படுத்தும்போது இருவரிடையே உறவு வலிமையடைகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இவ்வாறு இருக்கையில், இந்திய சட்டத்தில் பரத்தையர்*, வேசி* என்ற சொற்களைப் பயன்படுத்துவதால் எவ்வளவு முரண்பாட்டை ஏற்படுத்தியிருக்கக் கூடும்? ‘ஸ்டீரியோடைப்’ செய்தல் பல நூற்றாண்டுகளாக நம்மிடையே நிகழ்ந்து வருகிறது. ஆண்கள் உடல் பலம் மிக்கவர்கள்; பெண்கள் மென்மையானவர்கள், அன்புள்ளம் கொண்டவர்கள், நிர்வாக வேலைகளை திறம்பட செய்ய கூடியவர்கள் என்றெல்லாம் கூறுவது ஸ்டீரியோடைப் தான்.

ஸ்டீரியோடைப் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. மக்கள் தங்களது உடை, உணவு, வாழ்க்கை முறை என அனைத்தையும் காலத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும்போது, ஏன் தங்கள் எண்ணங்களை மட்டும் மாற்ற எத்தனிப்பது இல்லை?

பல நீதிபதிகள் தங்கள் நிலையை உணராமல், பெண்கள் மீதான  வெறுப்பு கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். ‘மனைவி – நோக்கத்தில் அமைச்சராகவும், கடமையில் அடிமையாகவும், தோற்றத்தில் லட்சுமியாகவும், பொறுமையில் பூமியாகவும், அன்பில் தாயாகவும், படுக்கையில் விபச்சாரியாகவும் இருக்க வேண்டும்’ என்று கூறுவது, ‘குழந்தையின் ஆடைகளை கழற்றாமல் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டால் அது பாலியல் வன்கொடுமை என கருதப்படமாட்டாது’ என்று கூறுவது என சொற்களால் பெரும் சிக்கலை நீதிபதிகள் உருவாக்குகின்றனர். வன்புணர்வுக்கு உள்ளானவர் கையில் இருந்து ராக்கி வாங்கிக் கட்டிக் கொண்டு நிபந்தனை ஜாமீனில் செல்லச் சொல்வது போன்ற தீர்ப்புகளையும் வழங்கியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 2021ம் ஆண்டு அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘பெண்கள் மீதான வெறுப்பு கருத்துகளைத் தவிர்க்க வேண்டும்’ என்று கூறியிருந்த நிலையில், இன்றளவும் அதில் எவ்வித மாறுதலும் ஏற்படவில்லை.

தற்போது வந்துள்ள கையேடு, இதில் மாற்றம் ஏற்படுத்தும் என்ற எண்ணத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர் பாலின சமத்துவ செயற்பாட்டாளர்கள்.

Source: The Handbook on Combating Gender Stereotypes

அத்துடன் இந்த கையேடு CC BY-NC-ND உரிமம் பெற்றது. அதாவது இந்தத் தரவுகளைப் பயன்படுத்தும் போது இயற்றியவரைப் பற்றி குறிப்பிட வேண்டும், வணிகம் சாராத பணிகளுக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும், திருத்தம் செய்தல் கூடாது போன்றவை அதன் விதிமுறைகள் ஆகும்.

Source: The Handbook on Combating Gender Stereotypes

நிஜ உலகில் கைப்பாவைகளைப் போன்று வாழும் பெண்கள், தங்கள் நிலை அறிந்து, தங்களுக்கான வாழ்க்கை, சுயமரியாதை, விருப்பு வெறுப்புக் கொண்டு வாழ இன்னும் எத்தனைக் கையேடுகள் தேவைப்படும் என்று தெரியவில்லை.

படைப்பாளர்

பிரியங்கா சிவமணி

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையின் முனைவர் பட்ட மாணவி. சினிமா, பெண்ணியம் ஆகியவற்றின்மேல் ஆர்வம் கொண்டவர். பாலின அரசியல் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். சக மனிதரை சமமாக நடத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பவர். கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய் என்னும் கூற்றை பின்பற்றுபவர்.