கேள்வி:

எங்கள் செல்லம் பப்லுவுக்கு 2 வயது 2 மாதம். வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பிரபலமான ஸ்கூலில் Pre KG அட்மிஷன் போடலாம் என்று யோசிக்கிறோம். அங்கு 20-க்கும் மேற்பட்ட வசதிகள்(Amenities) இருக்காம்! செய்யலாமா?

பதில்

 கல்வி ஆண்டு தொடங்கும் நேரத்தில் சரியான கேள்வி கேட்டீர்கள் பப்லு அம்மா! 20-க்கும் மேற்பட்ட வசதிகளா? 2 வயது முடிந்த குழந்தைக்கா?!

 சுத்தமான கழிவறை, சாப்பிடும் இடம், தூங்கும் இடம், மாசற்ற குடிநீர், நல்ல காற்றோட்டம், குழந்தைக்கு பாதுகாப்பான (Child Friendly)விளையாடும் இடம், விளையாட்டு சாதனங்கள், சிறு குழந்தைக்கு பாதுகாப்பான சூழல், குழந்தைக்கு நண்பர்களாக இருக்கும் ஆசிரியர்கள்,உதவியாளர்கள் இவ்வளவுதானே தேவை?

 வேறு என்ன 20-க்கும் மேற்பட்ட வசதிகள்? JEE, NEET, GATE போன்ற பயிற்சி வகுப்புகளா? அவர்களே சாப்பாடு மற்றும் தின்பண்டங்கள் தருகிறார்களா? நீச்சல் குளம் இருக்கா? அடுப்பு மாடி குடியிருப்புகளில் இருப்பது போல் வசதிகள் என்று விளம்பரமா? யோசனையா இருக்கே!

 தாயும், தந்தையும் வேலைக்குப் போகும் குடும்பத்தில் குழந்தையை தனியாக பகல் முழுவதும் வீட்டு உதவியாளரிடம் விட்டுச் செல்வது சரி இல்லை. புரிகிறது. மற்ற குழந்தைகளுடன் பழகி, மனம் விட்டு ஆடி, பாடி, கூடி விளையாடி மகிழ்வாக இருப்பது குழந்தையின் மனம் மற்றும் உணர்வுகளின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. ஆனால் கண்களும் கைகளும் இணைந்து செயல்படுவது(Hand Eye Co-ordination), கண்களும் வாயும் இணைந்து செயல்படுவது(Hand Mouth Co-Ordination) ஆகியவைகூட சரியாக வளர்ச்சி அடையாத சிறு குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பது சரியில்லையே!

 ஒரு படத்தைப் பார்த்து வரையக் கூட  கண்களும், கையும் இணைந்து செயல்பட வேண்டும். ஆசிரியர் வரைவதைப் பார்த்து, மனதில் நிறுத்தி விரல்களால் எழுதுகோலைப்(பென்சில், கலர் பென்சில்) பிடித்து வரைய வேண்டும்.

 உங்கள் குழந்தைக்கு இந்த செயல்பாடு நன்கு ஏற்பட்டுள்ளதா என்று கவனிக்கவும். ஓரிடத்தில் உட்காரச் சொன்னால் சிறிது நேரமாவது நிலையாக உட்கார வேண்டும். அதிக சத்தம் போடக்கூடாது என்று சொன்னால் அதை புரிந்து கொள்ள வேண்டும். இதெல்லாம் மூன்று வயதிற்கு மேல் LKG- ல் சேர்ப்பதற்கான நிலைப்பாடுகள். உங்கள் குழந்தையை இன்னும் 5-6 மாதங்கள் சென்றபின்பு சேர்க்கலாமே!  அப்போதும் கீழ்க்கண்டவற்றை கவனித்து சேருங்கள் தோழி!

  1. எழுத வைக்கக் கூடாது
  2.  ஒப்பிக்க வைக்கக் கூடாது
  3.  எந்த விதமான  தண்டனையும் கூடாது( கண்களை உருட்டி பார்ப்பது கூட இருக்கக் கூடாது)
  4.  சாக்பீஸ் பயன்படுத்தக் கூடாது
  5. குழந்தைகளை விளையாட விட வேண்டும்
  6.  வீட்டிற்கு அருகிலேயே பள்ளி இருக்க வேண்டும்
  7. தண்ணீர் குடிப்பதை, தின்பண்டங்கள் சாப்பிடுவதை தடுக்கக் கூடாது. உதவ வேண்டும்.
  8.  சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க உதவ வேண்டும்
  9.  ஓரிரு நாட்கள் வரவில்லை என்றால் அதனை பொருட்படுத்தக் கூடாது
  10. காய்ச்சல்,சளி.இருமல் என்று சிறு பிரச்சினைகள் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப கட்டாயப்படுத்தக்கூடாது.
  11.  ஆசிரியையும், உதவியாளர்களும் ஒவ்வொரு குழந்தையின் மீதும் கவனம் செலுத்தி நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்

 பப்லுக்கு 3 வயது முடியட்டும். அப்போது மேற்சொன்ன எல்லாம் இருக்கும் பள்ளியில் சேர்க்கலாமே.

 அதுவரை அம்மா, அப்பாவுடனும், மற்ற குழந்தைகளுடனும் மகிழ்ச்சியாக உங்கள் குழந்தை இருக்கட்டுமே!

கேள்வி:

4-வயதாகும் என் மகளை அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளுடன் விளையாட விட்டால் கண்டதையும் பேசக் கற்றுக் கொள்கிறாள்! என்ன செய்யலாம்?

பதில்:

 உங்கள் கேள்வியில் ஒரு வார்த்தையை மாற்ற பர்மிஷன் உண்டா தோழி? குழந்தை கண்டதைப் பேசவில்லை. கேட்டதை பேசுகிறது. ஆமாம்! பேச்சு மொழியும் வளர்ச்சி அடையும் காலம் உங்கள் மகளுக்கு. அவள் கேட்டவற்றை திருப்பிப் பேசுகிறாள். இப்படித்தான் குழந்தை பேச கற்றுக் கொள்கிறது. தன் மாமியாரை அத்தை என்று தனது அம்மா அழைத்ததைக் கேட்ட குழந்தை  அப்பத்தாவையும் அப்படியே கூப்பிடும். பாட்டி, அப்பத்தா அல்லது அப்பாயி என்று நாம்தான் பழக்க வேண்டும் இதுதான். இயற்கை நியதி!

 வீட்டுக்கு வரும் உதவியாளர்களிடம் நாம் மரியாதையுடன் பேசினால் குழந்தையும் அப்படி பேசும். நாம் “வாடி தனம்” என்றால் குழந்தையும் அதைத்தானே கற்றுக் கொள்ளும். Moral of the Story அல்லது Take Home Message என்ன தெரியுமா? குழந்தைகளுடன் இருக்கும்போது நாம் மிகவும் நிதானமாக மரியாதையான(Respectful) வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை நமக்கு மறைமுகமாக சொல்லிக் கொடுக்கும் தகப்பன் சாமிகள்தான் குழந்தைகள். நமது கோபத்தையோ, வெறுப்பையோ சத்தமாக பேசி வெளிப்படுத்துகிறோம் அல்லவா! சண்டை என்று வரும்போது அப்படித்தானே செய்கிறோம்? அதை பார்க்கும், கேட்கும் குழந்தை தனது கோபத்தையும் கத்திப் பேசி அல்லது பெரிதாக அழுது ஆர்ப்பாட்டம் செய்து வெளிப்படுத்தலாம் என்று  தெரிந்து கொள்கிறது.

 கணவர் அல்லது மாமியாரிடம் சண்டை போடும் போது இந்த அடிப்படை உண்மையை மனதில் இருத்திக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் அனைவரும் இந்த விஷயத்தில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

 நமது குடும்பப் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ற பண்பான பேச்சு வார்த்தைகளை வீட்டில் உள்ள அனைவரும் பயன்படுத்தினால் மிக அழகாக குழந்தையும் அதே மொழியை பயன்படுத்தும்.

 தவறான அல்லது நாகரிகமற்ற வார்த்தைகளை குழந்தைகள் பயன்படுத்தினால் முதல் ரியாக்ஷன் கோபம்…. சரிதானே அம்மா! கோபமும், வெறுப்பும் தேவையில்லை. அந்த வார்த்தைகளை நாம் எப்போதாவது பயன்படுத்தி விடுகிறோமா என்று கவனித்துப்  பேச வேண்டும்.

 குழந்தையிடம் எடுத்துச் சொல்லி “இந்த குறிப்பிட்ட சொல்லை நாங்கள் யாரும் பேசவில்லையே. அப்போ நீயும் அப்படி பேசக்கூடாது. இவை மற்றவர்களை புண்படுத்த கூடும்” என்று மிகவும் தெளிவாகப் புரிய வைக்க வேண்டும்.

 உங்கள் வாண்டும் மிக புத்திசாலி தானே! “நான் விளையாட போன போது மலர்விழி பேசினாளே, மஹத் பேசினானே” என்று உங்களை மடக்கும். இந்தக் கேள்விதான் கயிறு மேல் நடக்கும் வித்தையை உங்களுக்கு கற்றுத் தருகிறது. எதேச்சையாக கூட மலர்விழியோ, மஹத்தோ தவறாக பேசினார்கள் என்று சொல்லிவிட கூடாதும்மா! மறுநாள் “நீங்கள் தப்புன்னு எங்க அம்மா சொன்னாங்க”ன்னு Loud Speaker வைத்து உங்கள் செல்லம் போட்டுக் கொடுத்து விடும். அத்தோடு மற்றவர்களைக் குற்றம் கண்டுபிடிப்பதையும் குழந்தை கற்றுக் கொள்வாள்! ஆபத்து தானே! கவனம் தேவை!

 குழந்தை தேவையற்ற சொற்களை சொல்லும்போது ஒவ்வொரு முறையும் மிகவும் மென்மையாகத் திருத்த வேண்டும். திருப்பித் திருப்பி கடுமையாக சொல்லிக் கொண்டே இருந்தாலும் அந்த வார்த்தை நமக்கு பிடிக்கவில்லை என்று புரிந்து கொண்டு வேண்டுமென்றே குழந்தை சொல்லும். மிகவும் நிதானமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!

படைப்பாளர்

மரு. நா. கங்கா

நா.கங்கா அவர்கள் 30 வருடம் அனுபவம் பெற்ற குழந்தை மருத்துவர். குழந்தை மருத்துவம் மற்றும் பதின்பருவத்தினர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான உணவு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற உணவு ஆலோசகர். குழந்தை வளர்ப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்திய குழந்தை மருத்துவர் சங்கத்தின் “சிறந்த குழந்தை மருத்துவர்” விருது பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார். வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.