வன்முறைச் செயல்கள் கணக்கற்றவை. ஒருவரைக் காயப்படுத்துவது அல்லது நோவூட்டுவதைக் கண்ணால் பார்த்தோ அல்லது காதால் கேட்டோ புரிந்துகொள்கிறோம். ஆனால், ஒரு சிலர் நுட்பமான செயல்களால் காயப்படுத்தும் போது அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சில வாரங்களாக, புகழ்பெற்ற, அதிகாரம் பெற்ற ஒரு கவிஞர் மீது பாலியல் புகார் சொன்ன ஒரே காரணத்திற்காக ஒரு பாடகி மீது போடப்பட்ட தடை உத்தரவுகளைப் பற்றிய பேச்சு மேலெழும்பிக் கொண்டிருக்கிறது. பலரும் திரும்பத் திரும்பக் கேட்கும் ஒரே கேள்வி: “ஏன் இந்த அவதூறுகளை அவர் நிரூபிக்கவில்லை? இத்தனை வருடங்களாகியும் அவரால் ஏன் நிரூபிக்க முடியவில்லை?”

அமெரிக்க உதாரணம்

சென்ற வருடம் அமெரிக்காவில் முன்னாள் அதிபர் மீதான ஒரு குற்றச்சாட்டு நிரூபணம் ஆன போதும், இறையாண்மை இடம்கொடுக்கவில்லை என்கிற ஒரே காரணத்திற்காக அவரைத் தேர்தலில் போட்டியிட அனுமதித்தார்கள். அவருக்குச் சிறைத் தண்டனை அளிக்க முடியாது, அவரின் பாதுகாப்புக்குப் பங்கம் வரும், அவருடைய தனிப்பட்ட பாதுகாப்பு வீரர்களையும் சிறையில் போட முடியுமா என்கிற கேள்விகள் வந்தன.

அவர் அந்த வழக்குகள் நடந்தபோது எத்தனை சாட்சியங்களை முடக்கப் பார்த்தார் என்பது முதல், தேர்தலில் வென்றபின் அந்தச் சட்ட வல்லுநர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் என்ன நடந்துகொண்டிருக்கின்றன என்பதும் வரலாறு. அமெரிக்காவிலேயே இப்படி! பில் காஸ்பி வழக்கில் தீர்ப்பு வர எவ்வளவு காலம் தாமதமானது. பாதிக்கப்பட்டவர்கள் ஏன் உடனே சொல்லவில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தானே? அப்படியிருக்கும் போது தமிழ்நாட்டில் இது எப்படிச் சாத்தியம்?

அதிகார மையங்களுக்கு எதிரான நிரூபணம்

பாலியல் சீண்டல்களை, அத்துமீறல்களை எந்த அடிப்படையில் பதவியில் உள்ளவர்களோடு நெருக்கமாக இருப்பவர்களுக்கு எதிராக நிரூபிக்க முடியும்? வளரும் நிலையில் இருக்கும் ஒருவர், சாதாரணப் பணியில் இருப்பவர்களேகூட தங்கள் மேலதிகாரிகளுக்கு எதிராகப் புகார் கொடுத்தால், அவர்களுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படும்.

அப்படி இருக்க, கேளிக்கைத்துறையில் திறமை இருந்தும் எப்படி முன்னேற முடியும்? யாரோ ஒருவர் செய்யும் தவறுகளுக்காக ஓர் அப்பாவிப் பெண் தன் வாழ்க்கையை அழித்துக்கொள்வதுதான் தீர்வா? தனக்குப் பிடித்த தொழிலைச் செய்வதை விட்டுவிட வேண்டியதுதானே என எழுதுவதில் உள்ள வன்முறை புரிகிறதல்லவா?

அதிகாரம் சார்ந்த வன்முறைகள்

“நாங்கள் பெண்கள் மீதான வன்முறையைக் குறைக்க உதவுகிறோம்” என்று சொல்வதை விட, நான் இங்கே அதிகாரம் சார்ந்த வன்முறைகளைப் பற்றிப் பேச வந்திருக்கிறேன். அவை பாலியல், தம்பதியர் சார்ந்த வன்முறைகள், பின்தொடர்தலால் வரும் வன்முறைகள், குழந்தைகள் மீது செலுத்தப்படும் வன்முறைகள் யாவும் அடங்கும்.

நாங்கள் ஆண், பெண், மாற்றுப்பாலினத்தினர் எனப் பலருக்கும் உதவக் காத்திருக்கிறோம். ஆண்கள் ஒரு காரணத்திற்காக எங்களை அணுகினால், பெண்கள் வேறொரு காரணத்திற்காக அணுகுவார்கள் என்று சொல்லலாம். இது அனைவரையும் உள்ளடக்கி வழிகாட்ட ஏதுவாக்கும்.

மொழி பயன்பாட்டில் கவனம்

சில வார்த்தைப் பிரயோகங்களில் கவனம் செலுத்துவது இந்த நுண் அரசியலைத் தடுக்கும். உதவி வேண்டி வருவோரை எளிதில் அணுக வழி செய்யும்.

உதாரணமாக, “நாங்கள் சட்டப்படி உதவி செய்வோம்” என்றால், அஞ்சி விலகிவிடுவோர் பலருண்டு. அதற்காக அவர்கள் தவறு செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்றும் பல நாடுகளில் காவல்துறை அச்சமூட்டுவதாகவே உள்ளது. போடப்படும் பொய்வழக்குகளும் அத்துமீறல்களும் மக்களை, அதிலும் எளிய மக்களை விலகியே வைத்திருக்கின்றன.

அதிலும் அமெரிக்கா மாதிரியான நாடுகளில் சரியான கடவுச்சீட்டு இருந்தாலும்கூட, ஆங்கிலம் சரியாகப் பேசத் தெரியாத, வறுமைக்கோட்டின் கீழே உள்ள மக்கள் அதிகாரிகளைக் கண்டு அஞ்சுவார்கள். எனவே, பேசும் போது, ’சட்டம்’, ’காவல்துறை’ போன்ற சொற்களைத் தவிர்க்க வேண்டும். மேலும் அவர்கள் மிகவும் நேசிப்பவர்கள் அவர்களைக் காயப்படுத்தி இருந்தாலும்கூட, அவர்கள் சிறைக்குச் செல்வதை விரும்ப மாட்டார்கள். எனவே வேறு என்ன தேர்வுகள் இருக்கின்றன என்பதை நிதானமாகக் கலந்து பேசலாம்.

Green Dot கோட்பாட்டின் அடிப்படைகள்

Green Dot கோட்பாடு வன்முறைப் பிரச்னையை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க உதவுகிறது. இது ஒரு வரைபடத்தில் மூன்று வகை புள்ளிகளைக் கொண்டு சமூகத்தின் நிலையை விளக்குகிறது. இந்த அணுகுமுறையின் சிறப்பு என்னவென்றால், இது தனிநபர்களைக் குற்றம் சுமத்துவதில் கவனம் செலுத்தாமல், மாறாகச் சமூக மாற்றத்தில் கவனம் செலுத்துகிறது. ஒவ்வொரு நபரும் தன் சூழலில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்கிற நம்பிக்கையில் இந்தக் கோட்பாடு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு வன்முறை நிகழ்வும் வரைபடத்தில் ஒரு சிவப்புப் புள்ளியாகக் குறிக்கப்படுகிறது. இந்தச் சிவப்புப் புள்ளிகள் நமது சமூகத்தில் எங்கும் பரவியிருக்கின்றன. ஒரு பெண்ணின் மீது பாலியல் அத்துமீறல் நடக்கும் போது அது ஒரு சிவப்புப் புள்ளி. குழந்தைகள் மீதான வன்முறை ஒரு சிவப்புப் புள்ளி. தம்பதியர் இடையேயான வன்முறை ஒரு சிவப்புப் புள்ளி. ஆனால், இந்தச் சிவப்புப் புள்ளிகளுக்கு அடுத்ததாக வரும் கறுப்புப் புள்ளிகள்தான் பிரச்னையை மோசமாக்குகின்றன.

கறுப்புப் புள்ளிகள் என்பது வன்முறையை மூடிமறைக்கும், அனுமதிக்கும், ஊக்குவிக்கும் நடவடிக்கைகள். அந்த நிகழ்வை மறைக்கும் போது, ’அது பெரிய விஷயம் இல்லை’ என்று எடுத்துக் கொள்ளும் போது, ’ஆதாரம் இல்லை’ என்று நிராகரிக்கும் போது அவை கறுப்புப் புள்ளிகளாக மாறுகின்றன. இந்தக் கறுப்புப் புள்ளிகள் சமூகத்தில் வன்முறையை இயல்பானதாக ஆக்குகின்றன.

நமது கேளிக்கைத் துறையில் சிவப்புப் புள்ளிகள் அதிகமாக இருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், அவற்றைச் சுற்றி உருவாகும் கறுப்புப் புள்ளிகள்தான் பிரச்னையை மோசமாக்குகின்றன. ’அவர் பெரிய கலைஞர், இந்தச் சிறிய விஷயங்களைப் பெரிதாக்க வேண்டாம்’ என்கிற கருத்து ஒரு கறுப்புப் புள்ளி. ’அவருடைய கலையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் தனியாகப் பார்க்க வேண்டும்’ என்பதும் கறுப்புப் புள்ளி. பாதிக்கப்பட்ட பாடகியின் மீது தடை உத்தரவு போடுவதும் கறுப்புப் புள்ளியே.

இந்தக் கறுப்புப் புள்ளிகள் அதிகார மையங்களில் மிகவும் பொதுவானவை. ’அவள் ஏன் உடனே சொல்லவில்லை?’ என்கிற கேள்வி ஒரு கறுப்புப் புள்ளி. ’அவள் அங்கே போகவே கூடாது’ என்பதும் கறுப்புப் புள்ளி. புகார் கொடுப்பவர்களின் வேலை வாய்ப்புகளைப் பறிப்பதும், அவர்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதும் கறுப்புப் புள்ளிகள்தான்.

பச்சைப் புள்ளிகளின் சக்தி

பச்சைப் புள்ளிகள் வன்முறையைத் தடுக்கும், குறைக்கும், அல்லது ஒதுக்கும் நடவடிக்கைகள். இவை சிறியதாக இருக்கலாம், ஆனால் மிகவும் சக்தி வாய்ந்தவை. பாதிக்கப்பட்ட ஒருவரிடம் ’உன்னுடைய தவறு இல்லை, நான் உன்னை நம்புகிறேன்’ என்று சொல்வது ஒரு பச்சைப் புள்ளி. அவர்களின் தேர்வுகளை மதிப்பது, அவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை அவர்களே முடிவு செய்ய விடுவது பச்சைப் புள்ளி.

சமூக மட்டத்தில் பச்சைப் புள்ளிகள் இன்னும் முக்கியமானவை. வன்முறையை ஆதரிக்கும் கருத்துகளை எதிர்த்துப் பேசுவது, ’அது வேடிக்கையாக இருந்தது’ என்கிற மன்னிப்புகளை ஏற்க மறுப்பது, நிறுவனங்களில் பாதுகாப்பான புகார் முறைமைகளுக்கு வாதிடுவது போன்றவை பச்சைப் புள்ளிகள். இந்தப் பச்சைப் புள்ளிகள் சமூகத்தில் பண்பாட்டு மாற்றத்தைக் கொண்டு வருகின்றன.

வன்முறை நடக்கும் போது நாம் மூன்று வகையில் தலையிட முடியும். உடனடி தலையீடு என்பது ’இது சரியில்லை’ என்று தெளிவாகச் சொல்வது, பாதிக்கப்பட்டவரைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வது, வன்முறை நடக்கும் போது கவனத்தை வேறிடம் திருப்புவது போன்றவை. மறைமுக தலையீடு என்பது நம்மால் நேரடியாகச் செயல்பட முடியாத போது பிறரின் உதவியைப் பெறுவது. அதிகாரிகளை அழைப்பது, நண்பர்களின் உதவியைப் பெறுவது, நிறுவன கொள்கைகளைப் பயன்படுத்துவது போன்றவை.

தாமத தலையீடு மிகவும் முக்கியமானது. நிகழ்வு நடந்த பிறகு பாதிக்கப்பட்டவரைத் தொடர்புகொள்வது, அவர்களுக்கு மருத்துவ உதவிகள் பெற உடன் செல்வது, நீண்ட கால ஆதரவு வழங்குவது போன்றவை தாமத தலையீட்டின் பகுதிகள். பல நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நீண்ட கால ஆதரவுதான் அதிக உதவியாக இருக்கிறது.

மொழியின் மூலம் பச்சைப் புள்ளிகள் உருவாக்குதல்

நமது மொழி பயன்பாடே ஒரு சக்தி வாய்ந்த பச்சைப் புள்ளியாக இருக்க முடியும். ’சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சொல்வதற்கு பதிலாக ’நீ என்ன செய்ய விரும்புகிறாய்?’ என்று கேட்பது பச்சைப் புள்ளி. ’காவல்துறை’ என்று சொல்வதற்குப் பதிலாக, ’பாதுகாப்பான உதவி’ என்று சொல்வது பச்சைப் புள்ளி. ’கவுன்சிலிங் கொடுக்கிறேன்’ என்பதற்குப் பதிலாக, ’ஒரு நண்பனாகப் பேசலாம்’ என்று சொல்வது பச்சைப் புள்ளி. ’நிரூபணம் காட்டு’ என்பதற்குப் பதிலாக, ’உன் அனுபவம் மதிப்புமிக்கது’ என்று சொல்வது பச்சைப் புள்ளி.

இந்த மொழி மாற்றங்கள் சிறியதாகத் தோன்றலாம், ஆனால், இவை பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அவர்கள் பயம் இல்லாமல் நம்மை அணுக முடிகிறது. அவர்களின் அனுபவம் நம்பப்படுகிறது என்கிற உணர்வு வருகிறது. அவர்களே தங்கள் தேர்வுகளை எடுக்க முடிகிறது.

கதை சொல்லும் முறையும் ஒரு பச்சைப் புள்ளிதான். ’இது செய்யுங்கள், அது செய்யுங்கள்’ என்று பட்டியல் கொடுப்பதற்குப் பதிலாக, ’என் நண்பன் ராம் இப்படி ஒரு சூழ்நிலையில் இருந்தான். நாங்கள் அவனுக்கு இப்படி உதவினோம். அவன் இன்று நன்றாக இருக்கிறான்’ என்று உதாரணங்கள் மூலம் சொல்வது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அவர்களுக்கும் உதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கை வருகிறது.

சமூக மாற்றத்தின் நீண்ட கால நோக்கம்

Green Dot கோட்பாட்டின் நீண்ட கால நோக்கம் மிகவும் விரிவானது. இது வெறும் தனிப்பட்ட உதவிகளைத் தாண்டி, சமூகத்தின் அடிப்படையான மனப்போக்கையே மாற்ற விரும்புகிறது. நிறுவன மட்டத்தில் பல மாற்றங்கள் தேவைப்படுகின்றன. பாதுகாப்பான புகார் அளிக்கும் முறைமைகள், வெளிப்படையான கொள்கைகள் மற்றும் தண்டனைகள், வன்முறை தடுப்புப் பயிற்சி திட்டங்கள் போன்றவை அவசியம். ஆனால், இவற்றைக் காட்டிலும் முக்கியமானது கலாச்சார மாற்றம்.

கேளிக்கைத் துறையில், ’கலைஞரின் தனிப்பட்ட நடத்தையும் அவரின் கலையும் தனித்தனியே பார்க்க முடியாது’ என்கிற விழிப்புணர்வு வர வேண்டும். அதிகாரம் உள்ளவர்களின் பொறுப்புணர்வை வலியுறுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குரலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ’நிரூபணம்’ கேட்பதற்குப் பதிலாக ’நம்பிக்கை’ கொடுக்க வேண்டும்.

இந்த மாற்றம் ஒரே நாளில் நடக்காது. ஆனால், ஒவ்வொரு பச்சைப் புள்ளியும் மற்றொரு பச்சைப் புள்ளியை உருவாக்குகிறது. ஒருவர் வன்முறையை எதிர்த்துப் பேசும் போது, அது அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறது. வன்முறை ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்கிற செய்தி. ஒருவர் பாதிக்கப்பட்டவரை நம்பும் போது, அது அந்த நபருக்கு நம்பிக்கையைத் தருவதோடு, மற்றவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கிறது.

சமூக மாற்றத்தின் இறுதி இலக்கு என்னவென்றால், வன்முறையை எதிர்க்கும் சமூகம், பாதிக்கப்பட்டவர்களை நம்பும் சமூகம், அதிகாரம் கொண்டவர்களைப் பொறுப்புக் கூற வைக்கும் சமூகம் உருவாக்குவதுதான். அப்படிப்பட்ட சமூகத்தில் சிவப்புப் புள்ளிகள் குறைய ஆரம்பிக்கும். கறுப்புப் புள்ளிகள் மறைய ஆரம்பிக்கும். பச்சைப் புள்ளிகள் பெருகும்.

(தொடரும்)

படைப்பாளர்:

பத்மா அர்விந்த்

மருத்துவத்தில் முனைவர் பட்டமும் நிர்வாகவியலில் மேலாண்மை பட்டமும் பெற்றவர். அமெரிக்க மத்திய மாநில அரசின் மனிதவள மற்றும் உடல்நலத் துறையின் கொள்கை மாற்ற ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். அமெரிக்க அரசியல் குறித்து மெட்ராஸ் பேப்பர் வார இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘கனவுகள் மின்னும் தேசம்’ எனும் புத்தகம் ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறது.