வன்முறை நிகழ்வுகளை நாம் தினமும் பார்க்கிறோம். அதைப் பற்றிப் படிக்கிறோம். வன்முறை என்பது எப்போதும் உயிரைப் பறிப்பதாக இருக்க வேண்டியதில்லை. உடல் மீது மட்டும் நிகழ்த்தப்படுவதாகவும் இருக்க வேண்டியதில்லை. சிறிய சிறிய வழிகளில் அடக்குமுறையைக் காட்டுவதும் வன்முறையே. மாதவிலக்கான மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமரவைத்து தேர்வு எழுத வைக்கிறார்கள். இந்த வன்முறையை ஏன் ஒரு சமுதாயத்தால் கேள்வி கேட்டு, தட்டிக் கேட்க முடியவில்லை?

சமூகத்தில் வன்முறையைக் குறைப்பது என்பது ஒரு கலாச்சாரத்தை மாற்றுவது. அந்த மாற்றம் பல சிறிய நடவடிக்கைகளின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். இவையே பச்சைப் புள்ளிகள். வானியல் ஆய்வாளர்களின் பட்டாம்பூச்சி விளைவு கோட்பாட்டை நாம் அறிவோம். பிரேசில் நாட்டில் ஒரு பட்டாம்பூச்சியின் இறக்கை அசைவு டெக்சாஸில் சூறாவளியை உருவாக்கலாம் என்பது. அதேபோல் ஒவ்வொரு பச்சைப் புள்ளியும் காலத்தின் ஒரு சிறிய புள்ளியாகத் தோன்றலாம். வரைபடத்தில் ஒரு சிறிய புள்ளியாகத் தெரியலாம். ஆனால், அதன் தாக்கம் மிகப் பரந்த அளவில் பரவக்கூடும். ஒருவரின் பழக்கவழக்கத்தில் ஏற்படும் சிறிய மாற்றம்கூடப் பெரிய விளைவை உண்டாக்கும். அவரது தேர்வில், விருப்பத்தில், அவரது சொற்களில் வரும் மாற்றம் வன்முறையை எதிர்க்கும் ஒரு பெரிய அலையை உருவாக்கும் ஆற்றல் கொண்டது.

இதில் இரண்டு வகை உண்டு. சில செயல்முன்னெடுப்பு பச்சைப் புள்ளிகள். சில எதிர்வினைக்கான பச்சைப் புள்ளிகள். செயல்முன்னெடுப்பு பச்சைப் புள்ளிகள் என்றால் என்ன? நம் வாழ்க்கையில் நெருக்கமானவர்களிடம் உரையாடுவது. வன்முறையை எதிர்ப்பதும் தடுப்பதும் உங்களுக்கு ஏன் முக்கியம் என்று சொல்வது. அதற்கான உங்கள் தேர்வுகள் என்ன என்பதைப் பகிர்வது. உங்கள் நிலைப்பாடுகள் என்ன என்பதை விளக்குவது.

இது ராணி தன் தோழி மீராவிடம் சொல்வது போல் இருக்கலாம். ’நம் பகுதியில் இந்த வார இறுதியில் பார்ட்டி நடக்கிறது. அங்கே எப்போதும் அதிக அளவில் போதைப்பொருள் பயன்படுத்துவார்கள். வன்முறையும் நடக்கும் வாய்ப்பு உண்டு. கவனமாக இரு. போகாமல் இருப்பதே நல்லது.’ இது காலத்தின் ஒரு சிறிய பகுதியில் நடக்கும் உரையாடல். அந்த நேரத்துக்கான அறிவுரை. ஆனால், அது எதிர்காலத்தில் வன்முறையைத் தடுக்கும் செயலாக மாறக்கூடும்.

எதிர்வினை பச்சைப் புள்ளிகள் என்பது என்ன? வன்முறையான சூழலில் நீங்கள் செய்யும் உடனடி எதிர்வினைகள். சுமித்ரா ஒரு பார்ட்டியில் ஆபத்தான சூழல் இருப்பதை அறிந்தாள். அங்கு ஒரு பெண் சிக்கியிருந்தாள். சுமித்ரா அவளைக் காப்பாற்ற அங்கே சென்றாள். அந்தப் பெண்ணை அங்கிருந்து காப்பாற்றினாள். அவளை வீட்டில் பாதுகாப்பாகச் சேர்த்துவிட்டு, தன் வீடு திரும்பினாள். இது ஒரு எதிர்வினை பச்சைப் புள்ளி.

அல்லது வேறு ஒரு சூழ்நிலையை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த பார்ட்டியைப் பற்றிக் கேள்விப்பட்டீர்கள். உங்களுக்குச் செல்ல விருப்பமில்லை. வேறு ஒரு தோழிக்குத் தொலைபேசிகிறீர்கள். ’அந்தப் பெண் மீது கவனமாக இரு. அவளைப் பாதுகாப்பாகச் சரியான நேரத்தில் வீட்டில் விடு. அதை உறுதிப்படுத்து’ என்று சொல்கிறீர்கள். இதுவும் ஒரு எதிர்வினை பச்சைப் புள்ளியே.

ஒவ்வொரு வருடமும் சிவப்புப் புள்ளிகளை அழித்து புதிய பச்சைப் புள்ளிகளை உருவாக்க முடியாது. பழைய வலி நிறைந்த நினைவுகளை மறக்க நினைக்கிறோம். ஆனால், தேர்ந்தெடுத்து வருத்தமான நினைவுகளை மட்டும் அழிக்க முடியாது. அவை தொடர்ந்து இருக்கும். எனவேதான் எதிர்காலத்தில் சிவப்புப் புள்ளிகள் உருவாகாமல் தடுக்க வேண்டும்.

பொள்ளாச்சி வன்முறையை எடுத்துக்கொள்ளுங்கள். குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துவிட்டது. ஆனால், அதனால் மட்டுமே பாதிக்கப்பட்ட பெண்கள் குணமாகிவிடப் போவதில்லை. அந்தக் குடும்பங்களும் அந்தப் பெண்களும் மீள்வதற்கு ஆண்டுகள் ஆகலாம். அதற்காக இந்தச் சமூகம் என்ன செய்யப்போகிறது?

இங்குதான் பட்டாம்பூச்சி விளைவின் நேர்மறையான சக்தியை நாம் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு நபரும் தங்கள் சிறிய சிறிய நேர்மறையான செயல்களின் மூலம் பங்களிக்க முடியும். ஒவ்வொரு பச்சைப் புள்ளியின் மூலம் பெரிய சமூக மாற்றத்தை உருவாக்க முடியும். ராணியின் ஓர் எச்சரிக்கை வார்த்தை மீராவின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. சுமித்ராவின் உடனடி உதவி, ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் காப்பாற்றுகிறது. இப்படி ஒவ்வொரு பச்சைப் புள்ளியும் அதன் சுற்றுப்புறத்தில் நேர்மறையான அலைகளை உருவாக்குகிறது.

இது ஒரு நாளில் நடக்கும் மாற்றம் அல்ல. இது தொடர்ச்சியான கூட்டு முயற்சியின் பலன். ஒவ்வொரு பச்சைப் புள்ளியும் சேர்ந்து ஒரு பெரிய சக்தியை உருவாக்குகிறது. பட்டாம்பூச்சியின் சிறிய இறக்கை அசைவு போல், இந்தச் சிறிய செயல்கள் ஒரு வன்முறையற்ற, பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

இதைவிட்டு, ஆண்கள் இப்படித்தான் இருப்பார்கள், பெண்கள் குறித்த நேரத்தில் வீட்டுக்கு வரவேண்டும், சரியாக ஆடையணிய வேண்டும் என்று பழைய சித்தாந்தங்களைப் பேசிக்கொண்டிருந்தால், நம்மைப் பாதுகாக்கப் பலர் இருக்கிறார்கள் என்கிற நினைப்பே மேலும் தவறுகள் செய்யத் தூண்டும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வன்முறை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் தவறு என்பது போதிக்கப்பட வேண்டும். அனுமதிக்கப்படவே கூடாது எந்தச் சூழ்நிலையிலும்.

(தொடரும்)

படைப்பாளர்:

பத்மா அர்விந்த்

மருத்துவத்தில் முனைவர் பட்டமும் நிர்வாகவியலில் மேலாண்மை பட்டமும் பெற்றவர். அமெரிக்க மத்திய மாநில அரசின் மனிதவள மற்றும் உடல்நலத் துறையின் கொள்கை மாற்ற ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். அமெரிக்க அரசியல் குறித்து மெட்ராஸ் பேப்பர் வார இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘கனவுகள் மின்னும் தேசம்’ எனும் புத்தகம் ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறது.