எதிர்பாராதது 1954ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். சரவணபவ யூனிட்டி பிக்சர்ஸ் தயாரித்த இந்தத் திரைப்படத்திற்கு, ஸ்ரீதர் கதை வசனம் எழுதியிருக்கிறார். இது அவருக்கு இரண்டாவது திரைப்படம். இத்திரைப்படம் 1954ஆம் ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசியத் திரைப்பட விருதை வென்றது.

பிற்காலத்தில் மலையாளத்தில் நித்யகன்யகா (1963), தெலுங்கில் இளவேல்பு (1956) மற்றும் இந்தியில் சாரதா (1957) என இக்கதை மறுதயாரிப்பு செய்யப்பட்டது.

வி.நாகய்யா

சிவாஜி கணேசன்

எஸ்.வி. சஹஸ்ரநாமம்

நண்பர் ராமசாமி

பத்மினி

எஸ்.வரலட்சுமி

குழந்தை சரஸ்வதி

அங்கமுத்து

போன்றோர் நடித்துள்ளனர். மேலும் கே.துரைசாமி, அசோகன், நாராயணசாமி, எம்.ஆர்.சந்தானம், என்.எஸ்.பொன்னுசாமி, டி.கே.ராமசாமி சண்முகம், என். சங்கரமூர்த்தி, ஸ்டண்ட் கிருஷ்ணன், கே.என். வெங்கடராமன், பீர் கண்ணு, பலராமன், டி.எஸ். வெங்கட், ஹரிஹர பாகவதர், சங்கர், சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி, கமலா, ராஜேஸ்வரி, கனகாம்புஜம், சந்திரகலா எனப் பலரும் நடித்துள்ளார்கள். 

தயாபரர் ஒரு பணக்காரர். மனைவியை இழந்தவர். அவரது மகன் சுந்தர் சென்னையில் கல்லூரியில் படிக்கிறார். சுமதி தன் தந்தையுடன் வசிக்கும் வீட்டில், சுந்தர் வாடகைக்கு இருப்பவர். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் விரும்பத் தொடங்க, சுமதியின் தந்தை அவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறார். 

சுமதியின் மூத்த சகோதரர் டாக்டர் கோபு. தன்னுடன் படித்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர். வந்த பெண்ணிற்கு இந்தக் குடும்பத்தினரைப் பிடிக்கவில்லை. மனைவியின் பேச்சைக் கேட்டு வீட்டை விட்டு மட்டுமல்லாமல், ஊரை விட்டும் வெளியேறி, இருவரும் பெங்களூரில் வசிக்கிறார்கள். கோபு பந்தயத்திற்கும் மனைவி ஆடம்பரத்திற்கும் அடிமையாகிறார்கள். ஒரு காலகட்டத்தில் கோபு கடன் சுமை தாங்காமல், ஊரைவிட்டு ஓடிவிடுகிறார்.

இதற்கிடையில், மாநிலத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சுந்தருக்கு, அமெரிக்காவில் உயர் படிப்புக்கான இரண்டு ஆண்டு உதவித்தொகை கிடைக்க, இவர் வெளிநாடு புறப்படுகிறார். ஆனால் அவர் சென்ற வானூர்தி விபத்துக்குள்ளாகி, அனைவரும் இறந்து விட்டதாகச் செய்தி வருகிறது. 

ஆனால், விபத்திலிருந்து சுந்தர் உயிர் பிழைக்கிறார்; கண்பார்வை பறிபோகிறது. பார்வை இழந்த சுந்தருக்குக் காட்டுப் பகுதியில் உள்ள பழங்குடி குடும்பம் சிகிச்சை அளிக்கிறது. அக்குடும்பம் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறது. அங்கு இருக்கும் ஆஷா என்னும் சிறுமி அவருடன் மிகவும் அன்பாக இருக்கிறார். ஆஷாவாக வரும், ‘சச்சு’ மனத்தைக் கொள்ளை கொண்டு போகிறார். (இரண்டும் வேறு வேறு நாட்கள் அதாவது மாதக்கணக்கில் சிகிச்சை முடிந்தபின் காட்சிப்படுத்தப் பட்ட காட்சிகள். ஆனால் ஆடை மாறவில்லை என்பது இந்த இரு படங்களையும் பார்த்தபின் தான் தெரிந்தது. இது பெரும்பிழையில்லை.)

தயாபரரின் நண்பர், மறுமணம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். அவர் சம்மதிக்க அந்த நண்பர், சுமதியை வந்து கேட்கிறார். சுமதியின் தந்தை மறுத்தாலும் சுமதி சம்மதிக்கத் திருமணம் நடக்கிறது. சுமதியின் அப்பா, அந்த வருத்தத்தில் திருமணம் முடிந்த அன்றே இறந்து விடுகிறார். சுந்தருக்கும் சுமதிக்கும் காதல் இருந்ததை, சுமதியிடம் இருந்த சுந்தரின் போட்டோ தயாபரருக்குச் சொல்லிவிடுகிறது. அவர் தனது சொத்து முழுவதையும் சுமதியின் பெயரில் எழுதி வைத்து விட்டுத் திருச்செந்தூர், திருப்பதி, பண்டரிபுரம் எனக் கோவில் கோவிலாகச் சுற்றுகிறார். 

ஊர் செல்லவேண்டும் என நினைத்துக் காட்டிலிருந்து வந்த சுந்தர், இப்படிக் கண் தெரியாமல் சென்று அப்பாவைத் துயரப் படுத்தக்கூடாது என பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோயிலில் பிச்சை எடுக்கிறார். இதைப் பார்த்த தயாபரன், மகனை அழைத்துச் செல்கிறார். 

இதற்கிடையில் கோபு, திருந்திய மனிதனாகச் சுமதியின் வீட்டிற்கு வந்துத் தனது மருத்துவப் பணியைத் தொடங்குகிறார். சுந்தர் தன் தந்தையைச் சுமதியின் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொள்கிறார். தயாபரர் அவரைத் தனியாகச் சுமதியிடம் அனுப்பி வைக்கிறார். சுமதிக்குத் திருமணம் ஆகி விட்டது எனத் தெரிய வருகிறது. இருவரும் நண்பர்களாக அடிக்கடி சந்திக்கிறார்கள். 

ஒரு காலகட்டத்தில் கணவர் விலகிச் சென்றுவிட்டதால், மறுமணம் செய்து கொள்ளலாம் என்கிறார் சுந்தர். ஆனால் சுமதி, தன் கணவர் எங்கோ இருக்கிறார், என மறுக்கிறார். இதைச் சுந்தர் அப்பாவிடம் போய்ச்சொல்ல அப்பா, தான் இறந்து விட்டதாக ஒரு தகவலைத் தெரிவிக்கச் செய்கிறார். ஒரு மழை இரவில், சுந்தர், சுமதியின் கையைப் பிடித்து, அவளது கணவன் இறந்துவிட்டதால், அவனைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதம் பெற முயல்கிறார். அப்போதும் சுமதி நிராகரித்து விடுகிறார். 

கோபு, சுந்தரின் கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து மீண்டும் பார்வை கொடுக்கிறார். இங்கு வீட்டில் அப்பாவின் படம் மாலை போட்டு இருக்கிறது. சுந்தர் உண்மை அறிந்து அப்பாவிடம் செல்ல, இப்போது அப்பாவோ உண்மையிலேயே இறந்து விட்டார். சுந்தர் சுமதியைத் தாயாக ஏற்றுக் கொள்கிறார். படிப்பைத் தொடர மீண்டும் வெளிநாடு செல்கிறார்.

திரைப்படத்திற்கு சி.என். பாண்டுரங்கன் இசையமைத்துள்ளார். பாடல்களை, பாபநாசம் சிவன், கனகசுரபி, கே.பி. காமக்ஷிசுந்தரம்,  கே.எஸ். கோபாலகிருஷ்ணன்  பாடல்களை எழுதியுள்ளார்கள். PG கிருஷ்ணவேணி (ஜிக்கி), P லீலா, ஜெயலட்சுமி (ராதா), P லீலா, A. M. ராஜா, செல்லமுத்து பாடல்களைப் பாடியுள்ளார்கள். 

வயதானவர்கள் இளம் பெண்ணை மணந்துகொள்ளும் வழக்கம் இயல்பாக இருந்ததாகவே இப்படத்தின் மூலம் உணர முடிகிறது. ஆனாலும் வயதானவர், தான் செய்த தவறை நினைத்து, அதற்குப் பரிகாரம் செய்யும்விதமாக தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது, அழித்துக் கொள்வது என நாகையா மிகவும் இயல்பாக அப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். 

எதிர்பாராதது என்ற பெயர் “சிற்பி செதுக்காத பொற்சிலையே” பாடல் மூலம் தான் என் உள்ளத்துள் நுழைந்திருந்தது. PG கிருஷ்ணவேணி (ஜிக்கி) பாடிய ஒரு பாடலும் A. M. ராஜா பாடிய பாடல் ஒன்றுமாக இரண்டு பாடல்கள் உண்டு. கே. பி. காமாட்சிசுந்தரம் எழுதிய இரண்டு பாடல்களுமே கேட்க மிகமிக இனிமையாக இருக்கும். 

சிற்பி செதுக்காத பொற்சிலையே

எந்தன் சித்தத்தை நீ அறியாயோ

அற்ப செயலுக்கு இப்படியும் மன

அவஸ்தை பட விடுவாயோ

கற்பனைக்கெட்டாத அற்புதங்கள் தன்னை

காண்பதும் உன் செயலாலே

கற்கண்டு பாகும் கனிரசம் தேனும்

கசந்திடும் உன் மொழியாலே

கே.எஸ். கோபாலகிருஷ்ணன் எழுதி, ஏ.எம். ராஜா & ஜிக்கி இணைந்து பாடிய பாடல். இதுவும் பிரபலமான, இனிமையான பாடல்.

காதல் வாழ்வில் நானே கனியாத காயாகி போனேன்

எழில் போன உடல் ஆனதாலே

ஏற்பாயோ நீயே முன் போலே

சுழல் போல துயர் சூழ்ந்த போதும்

நிழல் போல உனை நாடுவேனே

என் காதல் இன்ப ஓடம்

கரை சேர போகும் நேரம்

விதியான பேய் காற்றினாலே

வீணானதய்யோ இந் நாளே

நீராக உடல் வெந்த போதும் 

நினைவால் என் உயிர் வாழும் நாளும் 

வேறாக நாம் வாழ்ந்த போதும்

விலகாது நம் ஜீவன் கூடும் 

பாடலை இயற்றியவர் கனகசுரபி; பாடியவர் ஜிக்கி.

கண்ணான காதலர், காலேஜ் மாணவர் 

எந்நாளும் பிரியாத கண்ணாட்டி ஆக 

பெண் உன்னைத் தேடி வாராராடி -இதோ 

கனியைத் தேடும் அணிலைப் போலெ 

கரை காணாத அன்போடு நாடுவார் -உன் 

கன்னத்தைக் கிள்ளிவிட்டு ஓடுவார்.

மனம் நாணியே முகம் கோணினால் 

மணமாலை சூட்டி லாலி பாடுவார் -சுப 

சின்னஞ்சிறிய கன்னி உன்னை 

சீமாட்டி ஆக்கிவிடப் போகிறார்- உனக்கு 

சிங்கார வாழ்வு தரப் போகிறார்.

புது வாழ்விலே தடுமாறினால் 

என்ன செய்வார் தெரியுமா? 

மடப்பேதை என்றே தள்ளிவிடுவார் -உனைத் 

கனகசுரபி எழுதி, பி. லீலா பாடிய பாடல்.

மதுராபுரி ஆளும் மகராணியே -தென் 

மலையத்துவஜன் செய்த மகத்தான தவத்தாலே 

மகவாகி உடல் தாங்கி ஜெகம் வாழ வந்தவளே 

செந்தமிழால் வைகை திருநதி புகழ் பாட 

தேவரெல்லாம் உனது திருவடி துணை நாட 

சுந்தர பாண்டியன் உன் சுடர் விழிதனைக் கண்டு 

சொக்கித் திருவிளையாடல் திக்கெட்டிலும் புரிந்தே வர 

கனகசுரபி எழுதி, (ராதா) ஜெயலட்சுமி பாடிய பாடல்.

ஜெகம் ஏழும் நீயே அம்மா – இந்த 

பெற்ற தாயின்றி உயிர் ஏதம்மா

பகலேது இரவேது படைக்கின்ற தொழில் ஏது 

பாராளும் அன்னை பராசக்தி  இல்லாது 

உலகெங்கும் உனதாணை விளையாடுதே,

ஒளி  வீசும் நிலவில் உன் களை வீசுதே ,

அலைகடல் உன் பாத புகழ்  பாடுதே ,

உன் அருள் வெள்ளம் தனில் –  ஏழை 

என் உள்ளம் நீந்துதே .

கனகசுரபி எழுதி, வி. நாகய்யா பாடிய பாடல்.

திருமுருகா என்று ஒருதரம் சொன்னால் 

உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர் 

சிறுமதியால் உள்ளம் இருண்டிடும் வேளையில் 

அருளொளி வீசும் ஆண்டவன் நீயே 

அப்பனும் பிள்ளையும் நீதானய்யா 

அடிப்பதும் அணைப்பதும் உன் கைதானய்யா 

கற்பனை வாழ்னிவில் கதி இனி ஏது?

கருணாநிதியே கதிர்வடிவேலா. 

https://www.youtube.com/watch?v=shpnCZkSvNY&list=WL&index=51

கனகசுரபி எழுதி ஜிக்கி மற்றும் ஏ.எம்.ராஜா பாடிய பாடல்.

வந்தது வசந்தம் -2

வந்தது எந்தன் வானவினிலே-2

வந்தது வசந்தம் -2

வந்தது நம் வானவினிலே-2

அந்தர மாளிகை தேடி -என் 

சுந்தரன் வந்ததினாலே 

தென்றலில் மோதும் தீங்குயில் போலே 

சிந்தை பாடுதே -எந்தன் 

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதி, கே.ஆர்.செல்லமுத்து பாடிய பாடல் 

காம்பவுண்டர் வேலையிலே 

கல்தா கொடுத்ததாலே 

பலகார தள்ளுவண்டி 

தள்ளிவந்தேன் இந்த நாளே 

தின்னு பார்த்து தீர்வு சொல்லுங்க -நீங்க 

கத்தரிக்கா பஜ்ஜி முதல் 

காரம் இனிப்பு எல்லாத்தையும் 

தின்னு தின்னு பார்த்து தீர்வு சொல்லுங்க

திருப்தி இல்லன்னா 

திரும்ப காச வாங்கிப்புடுங்க -நீங்க 

உண்ணுவோர்க்கு நோய்கள் வராது- இத 

உண்ணுவோர்க்கு நோய்கள் வராது

சுகாதார முறைய உத்து பார்த்து 

செய்த வடையிது -பசு 

வெண்ணை காய்ச்சி பார்த்து செய்தது பால் 

கோவா முதல் பருப்பு குஞ்சா லாடும் இருக்குது 

வாங்க தம்பிகளா சரக்கப் பாருங்க 

புத்தம் புதுசா கமகமன்னு இருக்குது 

இத விட்டுட்டு 

சாலையோரம் சாலையோரம் 

சரிஞ்சுபோன பிளாட்டுப்பாரம் 

சரக்குகள வாங்காதீங்க தம்பிகளா 

தூக்கித் திரியும் வாங்காதீங்க தம்பிகளா -அந்த 

சரக்குக்குள்ள பலதும் இருக்கும் தம்பிகளா -அதனால் 

காலை மாலை டாகடர் வீடு தேடி 

ஊசி போடாதீங்க தம்பிகளா -நீங்க 

அந்த வேதனை எல்லாமே 

இதிலே ஏதும் இல்லீங்க -ஆயுர் 

வேத முறையாலே நளபாகம் செய்த பட்சணத்த  

வாங்க தாத்தா முறுக்கான முறுக்கு இருக்கு சாப்பிடறீங்களா 

அட பல்லு இல்லையப்பா 

பல்லு இல்லையா? அப்டீன்னா 

ஊறப்போட்ட உளுந்துவட வேணுமா? -தாத்தா 

காரங்கடுகு இஞ்சியப்போட்டு 

கறிவேப்பில கிள்ளிப்போட்டு

கட்டித்தயிரு தண்ணிய உட்டு 

காலை முதல் மாலை வரை- ஊறப்போட்ட 

தொடரும்…

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.