விடுதியில், நாள்தோறும் காலை ஐந்து முப்பது மணிக்கு எழும்ப வேண்டும். காலை 5:45க்கு காலை ஜெபம். Almighty god my loving father என்று ஆரம்பிக்கும். ஆறு மணிக்குத் திருப்பலி. அதற்குச் சென்றே ஆக வேண்டும். இல்லாவிட்டால் ஜஸ்டின் அக்கா வார்டனிடம் சொல்லிக் கொடுத்து விடுவார்கள்
வழிபாடு நடைபெறும் சிற்றாலயம், மிக அழகாகக் கண்ணாடி வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். மேற்கூரையில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். பீடம் எளிமையானது. பீடத்தின் இரு பக்கமும் சிறு பிரிவுகள் உண்டு. இடப்பக்க பிரிவில் அருள் சகோதரிகள் அமர்ந்திருப்பர். நடுப்பகுதி மாணவிகளுக்கு. நடுப்பகுதி தண்ணீர்த் தொட்டி அமைப்பில் அழகாக இருக்கும். கோபுரங்கள் எதுவும் கிடையாது.
ஒவ்வொரு விடுதிக்கும் இரண்டு கிணறுகள் உண்டு. தண்ணீர் மிகவும் உப்பாக இருக்கும். தூத்துக்குடி மிகவும் வறண்ட பகுதி. கிணற்றை ஆழப் படுத்தினால், கடல் நீர் உள்ளே வந்துவிடும். எனவே தண்ணீர்த் தட்டுப்பாடு. காலை ஏழு மணிக்குக் குளிக்கும் நீரைத் திறந்து விட்டால் எட்டு முப்பதுக்கு அடைத்து விடுவார்கள். தண்ணீரும் கொஞ்சமாகத்தான் வரும். சிலநாள்கள் சோப் போட்டுக் கொண்டிருக்கும் போதே, கிணற்றில் நீரின்றி தண்ணீர் நின்றுவிடும். அதனால் வாளி நிறைந்த பின் தான் குளிக்கவே தொடங்குவோம். பாதி மாணவிகள் திங்கள், புதன், வெள்ளியும் அடுத்த பாதி மாணவிகள் செவ்வாய்,வியாழன், சனியும் தான் குளிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் எட்டு மணியிலிருந்து 11 மணி வரை தண்ணீர் வரும்.
கத்தோலிக்கர் அல்லாதவர்களின் விடுதியில் திருப்பலிக்குச் செல்லவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை என்பதால், காலை எழுப்புவதில் சட்டதிட்டங்கள் எதுவுமில்லை. ஆனால், காலை சீக்கிரம் எழுந்தால் குளிக்க வசதியாக இருக்கும் என்று அவர்களும் முடிந்தவரை விடியற்காலை எழுந்து கொள்ளவே முயல்வார்கள்.
நான் பி யூசி படிக்கும் போது இருந்த வார்டன் மிகவும் மென்மையானவர்கள். சத்தமாகக் கூட பேச மாட்டார்கள். அவர்கள் கைகள் மெத்து மெத்து என்று இருக்கும். சற்றே குண்டாக இருப்பார்கள். அவர்கள்தான் மாணவிகளுக்கு வரும் கடிதங்களைக் கொடுப்பார்கள். கடிதங்களைக் கையில் வைத்துக்கொண்டு பெயர் வாசிக்கும்போது நமது பெயர் அடுத்ததாக வராதா என்று ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்போம். நமது பெயரை வாசித்ததும் ஒரு மகிழ்ச்சி வரும் பாருங்கள்; அதனை அனுபவித்தால்தான் புரியும். தற்போது மணிக்கணக்கில் வீடியோ கால் பண்ணிப் பேசினாலும் அதற்கு ஈடாகாது. பலரின் பெற்றோருக்கு அப்போது எழுதப் படிக்கத் தெரியாது. அதனால் பலருக்குக் கடிதம் வருவதுகூட அரிது தான்.
கடிதங்களைத் திறந்து பார்த்து விட்டுத் தான் தருவார்கள். நாம் கடிதத்தை ஒட்டாமல்தான் போஸ்ட் பண்ணக் கொடுக்க வேண்டும். அதையும் அவர்கள் படிப்பதில்லை. எல்லாம் ஒரு நம்பிக்கைதான்.
தூத்துக்குடி பனிமயமாதா கோவில், எங்கள் ஊர் (கள்ளிகுளம்) பனிமயமாதா கோவில் இரண்டிலும் ஒரே நாள் தான் திருவிழா. அதனால் அங்கு விடுமுறை விடும்போது, நான் ஊர் சென்று விடுவேன். முதலாமாண்டு என் தோழிகள் இருவர் என்னுடன் வந்தது, நாங்கள் போய்வந்தபின் தான் வார்டனுக்குத் தெரிந்தது. பெற்றோரை வரச் சொல்லிவிட்டார்கள்.
நாங்கள் மூவரும், கடிதம் மூலம் எங்களது பெற்றோருக்குத் தெரிவித்திருந்தோம். எங்கள் கடிதத்தைப் படித்திருந்தால், நாங்கள் எனது ஊர்த் திருவிழாவுக்குச் செல்வது முன்பே தெரிந்திருக்கும். பின் பெற்றோரை வரச் சொல்லிவிட்டார்கள். என் அம்மா தன்னால் அவ்வளவு தூரம் வர இயலாது என கடிதம் போட்டார்கள். அவர்கள் இருவருக்கும் பெற்றோர் வந்தார்கள். அப்போதுதான் எந்தக் கடிதத்தையும் வாசிப்பதில்லை; எங்களை நம்பித்தான் எல்லாம் செய்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. கண்காணிப்பது போலக் காட்டியிருக்கிறார்களே தவிர, உண்மையில் எங்களைச் சுதந்தரமாகவே வாழ விட்டிருக்கிறார்கள்.
வெகு சிலர், வார்டனுக்குத் தெரியாமல், டே ஸ்காலர் மாணவிகளிடம் கடிதத்தை போஸ்ட் செய்யக் கொடுப்பதுவும் உண்டு. எங்கும் விதிவிலக்குகள் எனது இருக்கும் தானே?
காலை ஏழு முப்பது மணிக்குச் சாப்பாடு ஆயத்தமாகிவிடும். சாப்பிட்டுவிட்டுக் கல்லூரிக்குக் கிளம்பி விடுவோம். மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை கல்லூரி வளாகத்திற்குள் எங்கும் இருக்கலாம்; எதுவும் பேசலாம். அந்த நேரம், நாங்கள் நூலகம் போவதுண்டு. எந்தத் தகவல் என்றாலும், நூல் நிலையம் சென்றுதான் பெற முடியும் என இருந்த காலக்கட்டம் அது. மாலை ஆறு மணிக்கு நூலகத்தை மூடி விடுவார்கள். ஆறு மணிக்கு அட்டெண்டன்ஸ் எடுப்பார்கள். அதனால், அனைவரும் வார்டன் அறை முன்பு வந்தாக வேண்டும்.
6:00 மணி முதல் 7:00 மணி வரை நமது அறையில் அமைதியாக இருந்த படி, படிக்கவோ, எழுதவோ செய்யலாம். பாடம் தொடர்பான விளக்கங்களை மற்றவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம். 7:00 மணிக்குச் சாப்பாட்டுக்கு மணி அடிக்கும்; எப்படா மணி அடிக்கும் என்று காத்திருப்போம்.
ஏழு மணியானதும் சாப்பிடச் செல்வோம். பின்னர் எட்டு மணி வரை ரெக்ரியேஷன்( Recreation). அதாவது விருப்பம் போல மணலில் அமர்ந்து கொண்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக அமர்ந்து கொண்டு முக மலர்ச்சியோடும், சிரிப்பு ஒலிகளோடு எல்லோரும் பேசுவதைப் பார்ப்பது, நாமும் பேசுவது என்று அது ஒரு அலாதியான மகிழ்வான நேரம். விடுதி வாழ்க்கையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலேயே அந்த நாற்பது நிமிடங்கள் மனம் விட்டுப் பேசிச் சிரித்தது ஒரு பெரிய வரப்பிரசாதம். அவரவர் வகுப்பில் நடந்தவை; வீட்டுக்கதை, ஊர்க்கதை, உலகக் கதை என எந்த வரைமுறையுமில்லாமல் பேசுவோம். எட்டு மணி ஆனதும் மணி அடிக்கும். எழும்பிச் செல்ல மனமில்லாமல் எழுந்து படிக்கச் செல்வோம்.
பியூசி படிக்கும் மாணவிகள் ஒரே ஹாலில் பெஞ்ச் – டெஸ்க் போட்டிருக்கும். அதில் உட்கார்ந்து படிக்க வேண்டும். பட்டப் படிப்பு படிக்கும் மாணவிகள் அவரவர் அறையில் உட்கார்ந்து அமைதியாகப் படிக்க வேண்டும். ஒரு சின்ன சத்தம்கூட கேட்கக்கூடாது. பத்து மணி ஆனதும் பழையபடி மணி அடிக்கும். கழிப்பறை போய்விட்டு ஐந்து நிமிடங்களில் விளக்குகளை அணைத்தாக வேண்டும். மறுநாள் செமஸ்டர் தேர்வு இருந்தாலும்கூட விளக்குகளை அணைத்துவிட்டுத் தூங்க வேண்டியதுதான். காலை ஐந்து மணிக்குத்தான் பழையபடி விளக்குகளைப் போட வேண்டும். செமஸ்டர், இன்டர்னல் தேர்வின் போது சிலர், ஜஸ்டின் அக்கா உறங்கிய பின் வாசல்களில் அமர்ந்து வராண்டா விடிவிளக்கின் ஒளியில் படிப்பார்கள்.
விடுதியில் சேரும்போது இரண்டு ‘விசிட்டர்ஸ்’ பெயரைக் குறித்துக் கொள்வார்கள். அவர்கள் மட்டும்தான் விசிட்டர்ஸ் டே அன்று பார்க்க வர முடியும். மாதத்தில் ஒரு ஞாயிறு; பெரும்பாலும் இரண்டாவது ஞாயிறு விசிட்டர்ஸ் டே. ஒரு வாரம், பத்து நாட்களுக்கு முன் அறிவித்து விடுவார்கள். அப்போதுதான் கடிதம் மூலம் வீட்டிற்குத் தெரிவிக்க இயலும். பலரும் பெற்றோரை எதிர்பார்த்து ஜன்னல் வழியே பார்த்தபடியே இருப்பார்கள். பெற்றோர் அன்று வருவார்களா மாட்டார்களா என்று பெரும்பாலும் எங்களுக்குத் தெரியாது.
விசிட்டர்ஸ் வரவேற்பு அறையுடன் நின்று விட வேண்டும். செக்யூரிட்டி வந்து யாருக்கு விசிட்டர்ஸ் வந்திருக்கிறார்கள் என்று ரிசப்ஷனில் ஜஸ்டின் அக்காவிடம் கூறுவார். ஜன்னல் வழியே பார்த்தால் செக்யூரிட்டி வருவது தான் தெரியும். இது நமக்கான தகவலாக இருக்குமோ என்று ஆவலோடு காத்திருப்போம். காத்திருந்து ஏமாற்றத்தால் அழக்கூடிய மாணவிகளும் உண்டு.
அந்தக் காலத்தில் போக்குவரவு வசதி குறைவு என்பதால் தூத்துக்குடிக்கு அருகில் உள்ள ஊர்களில் வசிப்பவர்களே பெரும்பாலும் பார்க்க வருவார்கள். அதிலும் பெரும்பாலும் அப்பாக்களே வருவார்கள். விசிட்டர்ஸ் வந்தவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்படுவார்கள். அவர்கள் அறையில் உள்ளவர்களுக்கு அன்று ஏதாவது தின்பண்டங்கள் கிடைக்கும். எனது அப்பா ஒரு முறையும், அம்மா ஒரு முறையும் வந்துள்ளார்கள்.
தொடரும்…
படைப்பாளர்

பொன் ஜெய இளங்கொடி
MSc. Chemistry. MSc. Psychology. B.Ed. PGDGC. வயது 62. கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். இவர் PUC மற்றும் BSc. புனித மரியன்னை கல்லூரி, தூத்துக்குடியில் 1978 முதல் 1982 வரை படித்தவர். அப்போது அவர் பெற்ற அனுபவங்களை இந்தத் தொடரில் எழுதியுள்ளார். இது இவரின் முதல் முயற்சி.
மிகவும் அருமையாக இருந்தது. நானே விடுதியில் தங்கியிருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. எழுத்து நடை நன்றாக இருக்கிறது. அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்
நன்றி
படைப்பாளரின் விவரிக்கும் பாங்கு கட்டுரையைப் படிக்கும் போது நமக்கும் இப்படி ஒரு விடுதி அனனுபவம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தை தோன்ற வைக்கிறது.
ரொம்ப அருமை. பழைய நினைவுகள் படிக்க படிக்க இனிக்கிறது.