கல்யாண விருந்திற்குச் செல்லத் தயாரானேன்.

குழந்தை பிறந்து ஐந்தாவது மாதத்தில் திருமண விழாவில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

நேற்றைய வரவேற்பில் அத்தையும் மாமாவும் கலந்து கொண்டாயிற்று. நெருங்கிய சொந்தம் என்பதால் காலையில் திருமண விழாவில் நாங்கள் கலந்து கொள்ளத் தயாரானோம்.

“நைட்தான் நாங்க போய்ட்டு வந்துட்டோம்ல, காலைல நீங்க எட்டிப் பாத்துட்டு வந்துடுங்க. அதான் புள்ளைய கோயிலுக்கு எடுத்துட்டுப் போய்ட்டு வந்துட்டோம்ல. நெருங்குன சொந்தம் விஷேசம்னா போய்ட்டு வர்றது பரவால்லதான.. நீயும் நாலு பேரு பாத்து பேசுனா மாதிரி இருக்கும்.”

குழந்தை பிறந்த பிறகு இப்படியெல்லாம் வாய்ப்பு கிடைக்க சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் போல. 

ஏற்கெனவே இரண்டு, மூன்று முறை வெளியில் சென்றதும் அவசர அவசரமாக வீடு வந்ததும்தான் நிகழந்துள்ளன.

ஐந்து மணிக்கே எழுந்து குளித்து முடித்து தயாரானேன்.

சேலை கட்டிக்கொள்வது மகிழ்ச்சியாக இருந்தது. 

என்னதான் மெனக்கெட்டுத் தயாரானாலும் நான் ஒரு பால் கொடுக்கும் தாய் என்று உணர்த்துகிற ஏதோ ஒரு களைப்பு என் உடலிலும் முகத்திலும் தெரிந்தது.

அவள் அருகே சென்று பார்த்தேன். தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். பால் கொடுத்து விட்டுச் சென்றால் பரவாயில்லை என நினைத்தேன்.

தூங்கி எழுந்தால் குடிப்பதற்குத் தாய்ப்பால் எடுத்து வைத்தேன். பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்து பால் எடுத்து வைத்துவிட்டுக் கிளம்பினேன்.

 மண்டபத்திற்குச் செல்ல கால் மணி நேரம் ஆனது. 

முகூர்த்தத்தைப் பார்த்துக் கொண்டே சுற்றி உள்ள மனித முகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்படி எனக்கு என்ன யோசனையோ தெரியவில்லை. இவர்களுக்கெல்லாம் வீட்டிற்குச் செல்ல வேண்டிய அவசரம் இல்லையோ என்கிற ஏக்கத்தில் பார்த்தேனோ என்னவோ. ஒவ்வொருவரையும் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். தெரிந்த முகங்களை கண்டு நலம் விசாரித்துக் கொண்டிருந்தோம்.

நேற்றைய வரவேற்பில் அத்தையும் மாமாவும் பரிசு கொடுத்துவிட, எங்களுக்கு அந்த வேலையும் இல்லை.

அரைமணி நேரம் அமர்ந்து விட்டு, சாப்பிடச் சென்றோம். உணவுக் கூடத்தில் என் இருக்கையில் அமரும் முன் மற்றவர் இலைகளைப் பார்த்து என்னென்ன உணவு வகைகளை வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்தேன்.

பாலூட்டும் தாய்மாரின் பசி என்றால் சும்மாவா… இது சாப்பிட மாட்டோமோ அது சாப்பிட மாட்டோமோ என ஏங்கிய மனதிற்கு இத்தனையும் ஒரு சேரப் பார்த்ததில் மகிழ்ச்சி.

ஆர்வத்துடன் சாப்பிட அமர்ந்தேன் விருந்துணவை. இலை போட்டுத் தண்ணீர் தெளித்து கேசரி வைத்தார்கள். வைத்தவர்கள் அடுத்த இலைக்குச் செல்லும் முன் பாதி கேசரியை விழுங்கினேன். மீதியை எடுத்து வாயில் வைக்கப் போகும்பொழுது வீட்டில் இருந்து அழைப்பு.

“பாப்பா எழுந்திரிச்சிட்டா.. எடுத்து வெச்ச பாலைக் குடுத்தா குடிக்கவே மாட்டிங்கிறா.. அழுதுட்டே இருக்கா.. நீங்க வர இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்?” மறுமுனையில் என் அத்தை.

இலையில் இட்லியும் சட்னியும் வைக்கப் பட்டிருந்தன. சாம்பார் வரும் வரை காத்திருக்காமல் ஓர் இட்லியைச் சட்னியைத் தொட்டு உண்டுவிட்டு எழுந்து, வீட்டிற்கு வேகமாகக் கிளம்பினோம்.

நாங்கள் உள்ளே நுழையும் பொழுது அழுது கொண்டுதான் இருந்தாள். தூக்கி வைத்து சமாதானம் செய்துவிட்டு, பால் கொடுத்தேன்.

உன்னை விட்டு வெளியில் சென்று வர நீ எனக்குக் கொடுத்தது ஒரு மணி நேரம்தானா!

பாவம் என் குழந்தை அவளும் என்ன செய்வாள்? அவளுக்குத் தூங்கி எழுந்ததும் நான் வேண்டும். இத்தனை நாளும் அப்படித்தானே இருந்தாள், திடீரென்று அதை எப்படி மாற்றுவது? அவளும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டாள் அல்லவா!

இதைப் புரிந்துகொண்ட என் மனம் யாராவது விசேஷம் என அழைத்தால்… “அப்படியா, சந்தோஷம். பாப்பாக்கு இப்போதான் அஞ்சு மாசம் விட்டுட்டு வர முடியாது அடுத்த முறை வரேன்” என்று சொல்ல முடிந்தது.

வந்த அழைப்புகள் எல்லாவற்றிற்கும் இதுதான் பதில். என்னால் இப்பொழுது எங்கும் வர முடியாது.

இரண்டு மாதங்கள் ஓடின.

“என்னோட பையனுக்குக் காது குத்து  வெச்சிருக்கேன்.. கண்டிப்பா வரணும்”

“இல்லடி பாப்பாவ விட்டுட்டு வர முடியாது.. இன்னொரு நாள் வீட்டுக்கு வரேன்.”

“மண்டபம் உங்க வீட்டுப் பக்கத்துலதான். கொஞ்ச நேரம் வந்துட்டு போடி.”

மீண்டும் எனக்குள் ஆசை எழுந்தது.

வீட்டில் மெல்ல இது பற்றிக் கூறினேன்.

ஒரு மணி நேரம் சென்று வர அனுமதி பெற்றேன்.

அன்று வேகமாகத் தயாராகி கிளம்பிச் சென்றேன். வேக வேகமாக என் தோழியைச் சந்தித்தேன். முதல் பந்தியில் அமர்ந்தேன். வேக வேகமாகச் சாப்பிட்டேன். ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கும் வந்துவிட்டேன்.

அடுத்த நாள் ஒளிப்படங்களைப் பகிர்ந்தாள் தோழி. 

ஒரு படத்திலும் நான் இல்லை. கல்லூரித் தோழிகள் பலர் வந்துள்ளனர். அவர்களிடம் நான் சரியாகக்கூடப் பேசவில்லை.

அங்கே சென்றும் வீட்டில் குழந்தையை விட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்கிற படபடப்பு இருந்தது.

இதற்காகவே பெரும்பாலும் எங்கும் செல்வதில்லை.

முதல் சில மாதங்கள் குழந்தையை நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என மனம் சொல்லும்.

எனினும் வீட்டில் இருப்பதில் ஏற்படும் வெறுமையினால் வெளியில் செல்லத் துடிக்கும் இன்னொரு மனம்.

போவதா, வேண்டாமா என்பதிலும் தெளிவில்லாமல் இருக்கும்.

வருகிறேன் என்று சொல்லிவிட்டு, கடைசியில் போக முடியாத சூழல் ஏற்படும்.

சில நேரம் வீட்டிலேயே பேசாமல் படுத்து உறங்கலாம் எனத் தோன்றும் அளவிற்கு முந்தைய நாள் தூக்கமின்மை வருத்தும்.

இப்படித்தான் மாதங்கள் சென்றன.

“நாளைக்குப் படத்துக்குப் போலாமா?”

வெகு நாட்கள் ஆயிற்று திரையரங்கின் சூழலை அனுபவித்து.

என் கணவர் அவர் பிறந்தநாளிற்குத் திரையரங்கத்திற்கு அழைத்ததும் பரவசமானது. ஆனால் யதார்த்தம் அச்சுறுத்தியது.

மூன்று மணி நேரம் திரைப்படம். போக வர எப்படியும் நான்கு மணி நேரம் ஆகும். எப்படி அவள் இருப்பாள்?

பிறந்தநாள் என்றதால் வீட்டார்கள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் என்னால்தான் நிம்மதியாகக் கிளம்ப முடியவில்லை.

எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி. படத்திற்குப் போவதற்காகக் குழந்தையை அப்படியே விட்டுவிட்டு ஓடி விட்டாளே என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? அதனால் அவளுக்கு உணவு ஊட்டி விட்டு, குளிக்க வைத்து, தூங்க வைத்துவிட்டு வருவதற்குள் மதிய காட்சியிலும் கால் மணி நேரத் திரைப்படம் ஓடி விட்டது. இடைவேளையில் அவள் என்ன செய்கிறாள் என்பதை கேட்டறிந்தேன்.

இரண்டாம் பகுதியில் என் நினைவெல்லாம் அவளாகிப் போனாள். அவளைக் காணத் துடித்தது மனம். திரைப்படம் முடிந்ததும் அடித்துப் பிடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

வீட்டிற்கு வந்ததும் என்னைப் பார்த்த என் மகள் தாவிக் கொண்டு ஓடிவந்தாள் அவளைத் தூக்கச் சொல்லி. என் கண்கள் கலங்கியே விட்டன.

எப்படியோ நான் சமாதானம் ஆகி அவளைச் சமாதானம் செய்து இயல்பு நிலைக்குத் திரும்பினோம்.

“எங்கயாவது கூட்டிட்டுப் போன்னு சொல்ல வேண்டியது.. கூட்டிட்டு போனா எப்போ வீட்டுக்கு போவோம்னு டென்சன் ஆக வேண்டியது” என்றார் என் கணவர்.

எல்லாம் புரிகிறதுதான். ஆனால் என்ன செய்வது? இரண்டு யோசனைகள்தான் எதிலும்.

ஒருவேளை குழந்தையையும் உடன் அழைத்துச் சென்று வந்தால் வெளிச் சூழலை மகிழ்வாக அனுபவிக்க முடியுமோ… 

(தொடரும்)

படைப்பாளர்:

ரேவதி பாலாஜி

சேலம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். தற்சமயம் ஈரோட்டில் வங்கிப் பணியாற்றி வருகிறேன். சிறு வயதில் இருந்தே தமிழ் மீதும் புத்தக வாசிப்பின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக வாழ்க்கை ஏற்படுத்துகிற தாக்கங்களைக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் பதிவு செய்து வருகிறேன். மைவிகடன் இணைய தளத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். கடந்து ஆண்டு சஹானா இணைய இதழ் நடத்திய நாவல் 2023-24 போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளேன். அதில் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்கிற தலைப்பில் நான் எழுதிய நாவல் புத்தகமாகவும் வெளிவர உள்ளது.