சந்துருவைச் சந்தித்துவிட்டு வந்த சில வாரங்களுக்குப் பிறகு அவனே அகல்யாவை செல்பேசியில் அழைத்துப் பேசினான். அப்போதுதான் அவனுடைய திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது பற்றிக் கூறினான்.
சந்துருவின் முன்னாள் மனைவியும் ஆட்சியர்தான். ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்கு ஒத்துப் போகவில்லை. நிறைய பிரச்னைகள், சண்டைகள். இதனால் இருவரும் பரஸ்பரச் சம்மதத்துடன் பேசி விவகாரத்துப் பெற்றுக் கொண்டனர்.
இதெல்லாம் அவளிடம் சந்துரு சொன்ன தகவல். அதற்கு மேல் அவளும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் அதன்பிறகு, தொடர்ந்து ஏதோ ஒரு காரணம் சொல்லி அவளை அழைத்துப் பேசினான்.
அகல்யாவிற்கும் அவனிடம் பேசுவது பிடித்திருந்தது. அது ஒரு வித கிளர்ச்சியான உணர்வைத் தந்தது. எவ்வளவு வேலைகள் இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பேசிக் கொண்டனர். ஆனால் நேரில் சந்திக்க இருவருக்கும் நேரமும் சூழலும் ஒத்துவரவில்லை.
முந்தைய மாதம் சுகாதார நிலையத்தில் இன்னும் ஒரு மருத்துவர் பணியமர்த்தப்பட, அகல்யாவின் வேலைப் பளு ஓரளவு குறைந்திருந்தது. அதிலிருந்து இருவரும் பொது இடங்களில் சந்திக்கத் தொடங்கினர்.
அப்படியான சந்திப்பின்போது ஒரு முறை, “நம்ம காதலை பத்தியும் என்னைப் பத்தியும் எப்பயாச்சும் நினைச்சு பார்ப்பியா?” என்று கேட்டான் சந்துரு.
“யோசிக்காம இருக்க முடியுமா?” என்றாள்.
“மிஸ் பண்ணி இருக்கியா?” என்கிற கேள்விக்கு அவள் பதில் சொல்லவில்லை.
“நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணி இருக்கேன். நீ படிச்சுட்டு வர வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணி இருக்கலாமேனு யோசிச்சு இருக்கேன்”
“நானும் நீங்க சொன்ன மாதிரி கல்யாணம் பண்ணிட்டு படிச்சு இருக்கலாமேனு யோசிச்சது உண்டுதான்.”
“அப்படியே நம்ம கல்யாணம் பண்ணி இருந்தாலும் பிரயோஜனம் இருந்திருக்காது, அகல். எனக்கு போஸ்டிங் இந்தியாவுல எங்க வேணா போட்டிருப்பாங்க. ஸோ, கல்யாணத்துக்கு அப்புறமும் நம்ம பிரிஞ்சிருக்க வேண்டிதான் இருந்திருக்கும்”
“இந்தத் தெளிவு எல்லாம் நமக்கு அப்பவே இல்லயே. என்ன சொல்ல? நம்ம வயசு அப்படி”
“என் ஈகோவும் ஒரு காரணம். நான் சொன்னதை நீ கேட்கலங்குற கோபத்துல, வீட்டுல உடனே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டேன். ஐ’ம் சாரி அகல்”
“ப்ச் விடுங்க சந்துரு. பழச எல்லாம் பேசி இப்போ என்னவாகப் போகுது”
அன்று அவர்களின் உரையாடல் அப்படியே நின்றுவிட்டது.
அந்த வாரக் கடைசியில் சந்துருவின் பிறந்த நாள் வந்தது. அகல்யா அவனை அழைத்து வாழ்த்துக் கூறினாள்.
“நம்ம நேர்ல சந்திக்கலாமா?” என்று அவன் கேட்க, எதார்த்தமாக வீட்டிற்கு அழைத்துவிட்டாள். அவனும் வருவதாகச் சொல்லிவிட்டான்.
இரவு உணவுக்குத் தன் பணியாளிடம் அவனுக்கு பிடித்தமான உணவுகளைச் சமைக்கச் சொன்னாள். அவளிடமிருந்த இளம்பச்சை நிற குர்தி ஒன்றை அணிந்தாள். மிதமாக ஒப்பனை செய்து கண்ணாடியில் பார்த்தபோது அவளுக்கே அவள் தோற்றம் புதிதாகத் தெரிந்தது. மனம் மீண்டும் பதின்ம வயதுக் காலத்திற்குள் பிரவேசித்தது.
ஆனால் மாலையே வந்துவிடுவதாகச் சொன்னவன் இரவு எட்டு மணிக்குப் பிறகும் வரவில்லை. செல்பேசிக்கு அழைத்தும் எடுக்கவில்லை. குறுந்தகவலுக்கும் பதிலில்லை. நேரத்தைப் பார்த்து அவள் கண்கள் பூத்துப் போனதுதான் மிச்சம் .

‘இன்றும் தனிமையில் உண்ண வேண்டுமா?’ என்கிற கடுப்பில் சமைத்த உணவுகளை அப்படியே குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிட்டுப் படுக்கச் செல்ல, கதவு தட்டும் சத்தம்!
கடிகாரத்தைப் பார்த்தாள். மணி எட்டே முக்கால்.
‘இவ்வளவு லேட்டாகிடுச்சு’ என்று தயங்கியபடி கதவைத் திறக்க, சந்துரு நின்றிருந்தான்.
“சாரி! உன்னை ரொம்ப நேரம் வெயிட் பண்ண வைச்சுட்டேன். நான் போன இடத்துல சிக்னலே இல்ல. ரிப்ளை பண்ணவும் முடியல” என்று அவன் சொன்னதைக் கேட்டவளுக்கு இந்நேரத்தில் அவன் வந்து நிற்பதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.
ஒரு பக்கம் உற்சாகம். மறுபக்கம் பதற்றம் என இரண்டுங்கெட்டான் நிலை.
“கோபமா அகல்! உள்ள கூப்பிட மாட்டியா?” என்று அவன் மிதமான புன்னகையுடன் கேட்க, அவள் பதற்றம் கொஞ்சம் நீங்கியது.
அவளும் பதிலுக்கு புன்னகை செய்து, “ச்சே ச்சே… கோபம் எல்லாம் இல்ல. உங்க வேலை எப்படின்னு எனக்குத் தெரியாதா? உள்ளே வாங்க” என்று அழைத்தாள்.
“நல்லா பசில வந்திருக்கேன், டின்னர் ரெடியா?”
“நீங்க வரமாட்டீங்கனு நினைச்சு இப்பதான் சாப்பாடு எல்லாம் பிர்ட்ஜ்ல வைக்கலாம்னு நினைச்சேன்”
“அதெப்படி நான் வரமாட்டேனு நினைச்ச?”
“இல்ல ரொம்ப லேட்டாயிடவும்…”
“அது சரி இப்போ எனக்கு சாப்பாடு இருக்கா இல்லையா?”
“இருக்கு இருக்கு… ஆனா எல்லாம் ஆறிடுச்சு. ஒரு டூ மினிட்ஸ் இருங்க. சூடு பண்ணிடுறேன்”
“அதெல்லாம் பரவாயில்ல”
“இருக்கட்டும். சூடு பண்ணி எடுத்துட்டு வரேன்”
அவள் உணவுகளைச் சூடு செய்து எடுத்து வரவும் இருவருமாகச் சிரித்துப் பேசியபடி உண்டனர்.
“சாப்பாடு எல்லாம் சூப்பர்” என்று பாராட்டிக் கொண்டே அவன் உண்ண, “இந்த கிரெடிட் எல்லாம் என் குக்குக்குதான்” என்றாள்.
“ஏன் நீ சமைக்க மாட்டியா?”
“காபி, பிரட் ஆம்லேட், ஜுஸ் அவ்வளவுதான் எனக்கு தெரிஞ்ச அதிகப்படியான சமையலே”
அவள் சொல்வதை எல்லாம் அவன் நகைப்புடன் கேட்டுக் கொண்டிருக்க, “இன்னும் கொஞ்சம் போட்டுக்கோங்க” என்று அவனுக்குப் பரிமாறினாள்.

“போதும் அகல், நைட் பெரும்பாலும் டயட்தான், இன்னைக்கு இவ்வளவு சாப்பிட்டதே பெரிய விஷயம்” என்று எழுந்து கை கழுவிக் கொண்டான்.
அகல்யா பாத்திரங்களை எடுத்து வைத்து விட்டு வர, சந்துரு அலமாரியில் இருந்த அவளின் படமொன்றைக் கையிலெடுத்துப் பார்த்திருந்தான்.
“இது என் தம்பி கல்யாணத்துல எடுத்தது”
“ஓ! ஆனா இந்த போட்டோல நீதான் கல்யாணப் பொண்ணு மாதிரி இருக்க” அவன் சொன்னதைக் கேட்டதும் அவள் இதழ்கள் விரிந்தன.
“ஆமா நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்க அகல்?” என்று அவன் மேலும் கேட்க, “என்னவோ செட் ஆகல” என்று அவள் அலட்சியமாகத் தோள்களை குலுக்கினாள்.
“ஏன் அப்படி?” என்று விடாமல் அவனும் தன் கேள்வியைத் தொடர்ந்தான்.
“வீட்டுல ஒரு டாக்டர் மாப்பிளையை பார்த்து முடிவு பண்ணாங்க, எங்கேஜ்மென்ட் எல்லாம் கூட நடந்துச்சு, என்னவோ அந்த பெர்ஸனுக்கும் எனக்கும் ஒத்து போகல. இதைச் சொல்லி நான் கல்யாணத்தை நிறுத்திட்டேன்னு, எங்க அம்மா இன்னைக்கு வரைக்கும் என்னை குத்திக்காட்டிக்கிட்டே இருக்காங்க. இதனாலேயே நான் வீட்டு பக்கம் போறதயே நிறுத்திட்டேன்”
அவள் சொன்னதை கேட்டு அவன் புன்னகைச் செய்யவும், “என்ன? என் கல்யாணம் நின்னது உங்களுக்குச் சிரிப்பா இருக்கா?” என்று கேட்டு முறைத்தாள்.
“பின்ன, உனக்கு கல்யாணம் நடந்திருந்தா, நான் திரும்பவும் உன்னை இப்படிப் பார்க்கவும் பேசவும் எனக்கு வாய்ப்பு கிடைச்சு இருக்குமா அகல்?” என்று சொன்னவனின் விழிகள் அவளை ஆழ்ந்து அளவெடுத்தன.
அந்தப் பார்வையின் பொருளுணர்ந்தவள், “ரொம்ப லேட்டாகிடுச்சு இல்ல, நீங்க கிளம்ப வேண்டாமா” என்று நாசூக்காக அந்தப் பேச்சை முடிக்க பார்த்தாள். ஆனால் அவன் விடவில்லை.
“நான் உன்னை விட்டு கொடுத்திருக்கக் கூடாது அகல்” என்றபடி அவள் கைகளைப் பற்றினான்.
அவள் திகைப்பில் நிற்க, அவன் கைகள் அவள் கையை விடுத்து, கன்னங்களுக்கு இடம்பெயர்ந்தன. அந்தக் கணம் நல்லபாம்பாக அவளுக்குள் சுருண்டிருந்த உணர்வுகள் எல்லாம் படமெடுத்து நின்றன.
எப்போதுமே தன் உடலைப் பொத்திப் பாதுகாத்துக் கொள்ள அவள் விரும்பியதில்லை. அதேநேரம் யாரும் இவ்விதமாக அவளைச் சஞ்சலப்படுத்தியதும் இல்லை.
சந்துருவின் தொடுகையை அவள் அமைதியாக அனுமதிக்க, அவனும் தயக்கமின்றி முன்னேறினான்.
இருவரும் தங்களை மறந்து ஒருவருக்குள் ஒருவர் மூழ்கி இருந்தனர் என்றெல்லாம் சொல்ல முடியாது. அறிந்தே இணைந்தனர். உணர்வுப்பூர்வமாக கலந்தனர்.
அகல்யா விழித்த போது சந்துரு அவள் அருகே படுத்திருந்தான். அவள் எழுந்து குளித்து உடைமாற்றிக் கொண்டாள். அவன் அப்போதும் எழவில்லை.
எப்படி அவனை எழுப்புவது என்று சங்கடமாக யோசித்தவள் பின்னர் அவன் அருகே அமர்ந்து, “சந்துரு எழுந்திரு” என்று தொட்டு உலுக்கினாள்.
உடலை வளைத்து நெளித்தவன் விழிகளைத் திறந்து அவளைப் பார்த்த கணமே, “அகல்” என்று மயக்கத்துடன் மீண்டும் அருகே இழுத்து அணைத்தான்.
“சந்துரு விடுங்க. கிளம்பணும், டைமாகிடுச்சு” என்று அவசரமாக நகர்ந்தாள்.
அவளை ஏற இறங்கப் பார்த்தவன் அதன் பின் எதுவும் பேசாமல் எழுந்து உடைகளை மாற்றிக் கொண்டான். அவனுக்கும் சேர்த்து காபி தயாரித்து எடுத்து வந்து கொடுக்க, “தேங்க்ஸ்” என்றான்.
அவன் குடித்துக் கொண்டிருக்கும் போதே பதற்றமாக, “இன்னும் கொஞ்சம் நேரத்துல என் சர்வன்ட் வந்துருவாங்க” என்றாள்.
“ஓகே ஓகே நான் கிளம்பிடுறேன்” என்று வாசல் வரை சென்றவன், வழியனுப்ப நின்றவளைச் சட்டென்று அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான்.
“விடுங்க சந்துரு”
“சரி சரி விட்டுட்டேன்” என்று விலகியவன், “நீ நம்ம கல்யாணத்தை பத்தி உங்க வீட்டுல பேசு, நான் என் வீட்டுல பேசுறேன்” என்று சொல்லிவிட்டு, தன் காரில் கிளம்பினான்.
பெருமூச்சுடன் சோபாவில் வந்து அமர்ந்தவளுக்கு அவன் கடைசியாகச் சொன்ன ‘கல்யாணம்’ என்ற சொல் ஒருவிதக் கலக்கத்தைத் தோற்றுவித்தது.
அவன் அணைப்பில் கிடந்த வரை மனதில் தோன்றாத எண்ணங்கள் எல்லாம் இப்போது ஒவ்வொன்றாக எட்டிப் பார்த்தன.
தொடரும்…
செயற்கை நுண்ணறிவுப் படங்கள்: மோனிஷா
படைப்பாளர்

மோனிஷா
தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இணையத்தில் 27 நாவல்களை இதுவரை எழுதியுள்ளார். அவற்றில் இருபது நாவல்கள், புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பெண்ணியம், சூழலியல் விழிப்புணர்வு இரண்டும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன. சிறார் எழுத்திலும் தற்போது ஈடுபட்டுள்ளார். இவரின் ‘ஒரே ஒரு காட்டில்’ சிறார் நூலை ஹெர் ஸ்டோரீஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.