அகல்யா முகத்தைக் கழுவித் துடைத்துக் கொண்டு வந்து கண்ணாடி முன்பு நின்றாள். என்றும் இல்லாமல் அன்று அதிக நேரம் கண்ணாடியை உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். கன்னங்களைத் தொட்டுப் பார்த்தாள். பத்து நாள் சாப்பிடாதது போல ஒட்டிப் போயிருந்தன. கண்களுக்குக் கீழே அடர்த்தியாகக் கருவளையம். இதெல்லாம் போதாது என்று முன்முடியில் ஒன்றிரண்டு நரை.
அடுத்த மாதம் பிறந்தால் முப்பத்து நான்கு முடிந்து முப்பத்தைந்து என்று மூளை வேறு சமயம் சந்தர்ப்பம் பார்க்காமல் வயதை நினைவுபடுத்தியது.
‘முப்பதைஞ்சு என்ன அவ்வளவு பெரிய வயசா?’ என்று தன்னைத்தானே கேட்டு, மனதைச் சமாதானப்படுத்திக் கொள்ள முயன்றாலும் என்னவோ உள்ளூர முரண்டு பிடித்தது.
நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று வந்ததிலிருந்துதான் இப்படி எல்லாம் யோசிக்கத் தோன்றுகிறது. முக்கியமாக சந்துருவை பார்த்ததிலிருந்து…
அவனைப் பார்த்துத் தொலைக்காமல் இருந்திருக்கலாம். அவனுக்கு இந்த மாவட்டத்திற்கு மாற்றலாகாமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த ‘லாம்’கள் எதுவும் அவள் கையில் இல்லையே.
‘இப்போ அவனை பார்த்ததால என்னவாகிடுச்சு. அவன் வேலை வேற, என் வேலை வேற, அந்த லேடியோட டெத் ரிவியூக்காக பார்த்தோம். இல்லனா நான் எதுக்கு அவனைப் பார்க்கப் போறேன்? அவன் எதற்கு என்னைப் பார்க்க போறான்? எல்லாம் சரிதான், ஆனா அவனை பார்த்துட்டு வந்து நான் ஏன் இவ்வளவு டென்ஷ்னாகுறேன்? எப்பவும் இருக்கற அதே மூஞ்சிதானே இப்பவும் இருக்கு’ என்று கண்ணாடி பார்த்துச் சொல்லிக் கொண்டாள். ஆனால் மனதின் அலைப்புறுதல் குறையவே இல்லை.
இரண்டு நாள்கள் முன்பு மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டதாகத் தகவல் கிடைத்தபோது அகல்யாவிற்கு கொஞ்சம் பதற்றமாக இருந்தது. அதுவும் பலகையில் ‘சந்திரசேகர்’ என்ற பெயரை பார்த்த போதும் கூட அது சந்துரு என்று அவள் நினைக்கவில்லை.
“புதுசா வந்த கலெக்டர் சார் உங்களுக்கு தெரிஞ்சவரா மேடம்?” என்று காதோடு ரகசியமாக தேவிகா கேட்க, “ஷ்ஷ் சும்மா இரு” என்று அடக்கினாள் .
ஆனால் அதற்கு பிறகும் அவள் விடவில்லை. “ஆமா… உங்களுக்கு எப்படி கலெக்டரை தெரியும்?” என்று கிளம்பும் வரை துருவி கொண்டே வந்தாள்.
அந்த கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொல்ல முடியாது. பதினைந்து வருட நினைவுகள் அதில் புதைந்திருக்கின்றன.
“மேடம்…”
“நீ போ… நான் சாயந்தரமா வரேன்” என்று அவள் கிளம்பி காரில் தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். பத்துப் பதினைந்து வருடம் பின்னோக்கி நகர்ந்த தன் நினைவுகளை இழுத்து பிடிக்க அவள் என்ன பிரயத்தனப்பட்டும் முடியவில்லை.
சந்திரசேகர் குடும்பம் அவர்கள் வீட்டின் எதிரே குடியிருந்தார்கள். ‘சந்துரு’ அப்படிதான் பள்ளியில் அவனை அழைப்பார்கள்.
படிப்பு, விளையாட்டு எல்லாவற்றிலும் சந்துருதான் முதலிடம். ஆசிரியர்கள், மாணவர்கள் என்று எல்லோருமே அவனை ஹீரோ பிம்பமாகப் பார்த்தார்கள். அவளுமே அதற்கு விதிவிலக்கில்லை.
பதின்ம வயதில் அவன் மீது ஏற்பட்ட அந்த ஈர்ப்பு நாளுக்கு நாள் அவளுக்கு அதிகரித்துக் கொண்டே போனது. அதுவும் அவன் எதிர் வீடு என்பதால், அவனை அவள் தினமும் பார்க்க நேரிடும்.
அவனோ பள்ளி முடித்து கல்லூரியிலும் சேர்ந்துவிட்டான். அவள் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். எல்லாப் பாடத்திலும் தொண்ணூறு, எண்பது என்று எடுத்தாலும் கணக்குப் பாடத்தில் மட்டும் எழுபதைத் தாண்டவே மாட்டாள். ஆதலால் அவள் அப்பா சந்துருவிடம் அவளுக்குக் கணக்கு மட்டும் கற்றுத்தரச் சொல்லிக் கேட்டிருந்தார்.
அவளுக்குக் கணக்கு வந்ததோ இல்லையோ, கன்னாபின்னாவென்று அவன் மீது காதல் வந்தது. அதையும் அவனிடம் வெளிப்படையாகச் சொல்லிவிட்டாள்.
‘இந்த வயசுல உனக்கு இதெல்லாம் தேவை இல்ல’ என்று கோபமாகக் கண்டித்தான். மனசாட்சியே இல்லாமல் வயதை வேறு காரணம் காட்டினான். அந்த வயதிற்கே உண்டான தவிப்பும் வேதனையும் அவளை ஆட்கொண்டதில், அடுத்தடுத்து வந்த திருப்புதல் தேர்வுகள் எல்லாவற்றிலும் மிக மோசமாகச் சொதப்பி வைத்தாள்.
சந்துருவிற்கு விஷயம் தெரிய வர, அவளைக் கூப்பிட்டு பக்கம் பக்கமாக அறிவுரை வாசித்தான். எதுவும் அவள் காது வரை கூடப் போகவில்லை.
“நீ பெருசாகி என்னவாக போற?” என்று கேட்டான்.
அவள் மௌனமாக நின்றாள்.
“ஏ அகல்… உன்னைத்தான் கேட்குறேன். பதில் சொல்லு… உன் ஆம்பிஷன் என்ன?”
“டாக்டராகணும்” என்றாள் மெதுவாக.
“கிழிஞ்சுது போ. இவ்வளவு கம்மியா மார்க் எடுத்தா உனக்கு பர்ஸ்ட் க்ரூப்பே கிடைக்காது. அப்புறம் டாக்டர் எங்க, நர்ஸா கூட ஆக முடியாது” என்று சொல்லிச் சிரிக்க, அவளுக்கு கோபமேறியது.
“அப்படி எல்லாம் இல்ல. நான் நல்ல மார்க் எடுத்து டாக்டராவேன்” என்று வீம்பாகச் சொன்னவள், அவன் மீதிருந்த கடுப்பை எல்லாம் படிப்பின் மீது காட்டினாள். பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றாள்.
“கங்கிராட்ஸ் அகல். அப்புறம் சாரி, உன்னைச் சும்மா உசுப்பி விடத்தான் அப்படிச் சொன்னேன். நீ நல்லா படிக்குற பொண்ணு, என்னால உன் மார்க் குறைஞ்சுர கூடாதுன்னுதான் சொன்னேன்” என்று சந்துரு உரைக்கவும், அவன் மீது இன்னும் அவளுக்குக் காதல் பெருகியது.
வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல் அவன் அவளுக்குச் சில புத்தகங்களைப் பரிசாக வழங்கினான். அவன் மீதான ஈர்ப்பு காதலிலிருந்து, நட்பு என்ற நிலைக்கு நகர்ந்தது. அவளுக்குப் பாட சம்பந்தப்பட்ட சந்தேகங்களை எல்லாம் அவன் தீர்த்து வைத்தான்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அவள் அவர்கள் மாவட்டத்தில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றாள். சென்னையிலுள்ள மருத்துவக் கல்லூரியில் அவளுக்கு இடமும் கிடைத்தது.
சந்துரு இம்முறை வாழ்த்துக் கூறிவிட்டு, “இப்பவும் உனக்கு என் மேல லவ் இருக்கா?” என்று கேட்டு வைக்க, அவள் திகைப்புற்றாள்.
‘இல்லை ஆமாம்’ என்று எந்த பதிலும் கூறாமல் அவள் நிற்க, “நானும் உன்னை லவ் பண்றேன் அகல். கொஞ்ச நாளா உன்னைத் தவிர வேற எதைப் பத்தியும் யோசிக்க முடியல” என்றான்.
அவளுக்கு அந்த நொடி ஏதோ மேகத்தில் மிதப்பது போல இருந்தது. ஒரு பக்கம் அவள் கனவுகள் வளர்ந்தன. மறுபுறம் அவர்கள் காதலும் வளர்ந்தது.
அவள் பயிற்சி மருத்துவராக இருந்த சமயத்தில் சந்துருவும் யூ பி எஸ் சி எழுதி தேர்ச்சி பெற்றிருந்தான். அவனுடைய பயிற்சிக் காலம் முடிந்து திரும்பி வந்ததும் அவனுக்குப் பணி நியமன ஆணையும் வந்திருந்தது. கூடவே அவர்கள் வீட்டிலும் கல்யாணப் பேச்சை ஆரம்பித்தார்கள்.
“எங்க அப்பா அம்மா நாளைக்கு உங்க வீட்டுல வந்து பேசுறன்னு சொன்னாங்க”
“நான் இப்பதான் பிஜிக்கு அப்ளை பண்ணி இருக்கேன்” என்று அவள் தயக்கத்துடன் சொல்ல, “அதனால் என்ன அகல்? நீ படி. நான் என்ன, உன்னைப் படிக்க வேணாம்னா சொல்ல போறேன்?” என்றாள்.
“இல்ல கல்யாணம் முடிச்சுட்டு படிக்குறதுனா..?”
“என்ன புதுசா சொல்ற? கல்யாணம் முடிச்சுட்டு யாரும் மேல படிக்குறது இல்லையா என்ன?”
“என் பிரண்டு சீதா கல்யாணம் முடிச்ச பிறகு படிக்க முடியாம கோர்ஸ் டிஸ்கன்டின்யூ பண்ணிட்டா” என்று கவலையுடன் கூறினாள்.
“உன் பிரண்டுக்கு படிக்கணும்னு ஆர்வம் இருந்திருக்காது. அதான்” என்றவன் சொன்னதைக் கேட்டு அகல்யா கோபமானாள்.
“அவளை பத்தி உங்களுக்கு தெரியுமா. அவ என்னை விட நல்லா படிக்குற ஸ்டூண்ட். அவங்க வீட்டுல அவளை கம்பெல் பண்ணி கல்யாண பண்ணி வைச்சுட்டாங்க. அதுக்கு அப்புறம் பிரகனன்ட்டாகி அது அபாஷனாகி. உங்களுக்குப் புரியாது, அவ இப்போ என்ன மாதிரியான மனநிலைல இருக்கானு நான் சொன்னாலும் உங்களுக்குப் புரியாது” என்று அவள் பொரிந்து தள்ள, சந்துருவின் முகம் மாறியது.
அவன் அமைதியாக நிற்க. “சாரி, பிரண்டு பத்தி சொன்னதும் ஏதோ கோபத்துல கத்திட்டேன்” என்றாள்.
“பரவாயில்ல விடு” என்று அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டவன் நிதானமாக, “உன் பிரண்டுக்கு நடந்த மாதிரி எல்லோருக்கும் நடக்காது அகல், எங்க வீட்டுல உன்னை அபப்டி எல்லாம் ட்ரீட் பண்ண மாட்டாங்க. எல்லாத்துக்கும் மேல என்னை உனக்கு தெரியாதா. ஸ்கூல் டேஸ்ல என்னை லவ் பண்றேனு சொன்ன ஆளு நீ. அப்போ நான்தான் உன்கிட்ட படிப்பு முக்கியம்னு சொன்னேன். நினைவு இருக்கா? நான் உனக்கு எப்பவும் சப்போர்டாதான் இருந்திருக்கேன். இனிமேயும் அப்படிதான் இருப்பேன்” என்று நீளமாகப் பேசினான்.
அமைதியாகக் கேட்டிருந்தவள், “அப்போ நான் பிஜி முடிச்சுட்டு கல்யாணம் பண்ணிக்குறேன். அதுக்கு சப்போட்டா இருங்க” என்று அதையே சொல்ல, அவன் சீற்றமானான்.
“உனக்கு என் மேல இருக்க இன்டிரஸ்ட் போயிடுச்சுனா அதை நீ வெளிப்படையா சொல்லிடு. இப்படி சுத்தி வளைச்சு படிப்பை காரணம் காட்டாதே”
“என்ன பேசுறீங்க? நீங்க மட்டும் உங்க பேஷனை அடைஞ்ச பிறகு கல்யாணம் பண்ணிக்கலாம். அதுவே நான் அப்படி யோசிச்சா, காரணம் சொல்றேனா?” என்று அவளும் பதிலுக்கு பொரிந்தாள். இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றியது.
“நம்ம கல்யாணத்தை பத்தி பேசலாம்னு எவ்வளவு ஆசையா வந்தேன். எல்லாத்தையும் கெடுத்துட்ட” என்று சொல்லிவிட்டுப் போனவன்தான். அதற்கு பிறகு அவனும் இறங்கி வரவில்லை. அவளும் தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்கவில்லை.
மெது மெதுவாக அவர்கள் உறவு தடம் தெரியாமல் அழிந்து போனது. அவள் மேற்படிப்பிற்காகக் கேரளா சென்றபோது, சந்துருவிற்கு திருமணம் முடிந்திருந்தது. படிப்பு முடித்து வந்ததும் அவளையும் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி நச்சரித்தார்கள்.
வேறு வழி இல்லாமல் ஒப்புக் கொண்டாள். மருத்துவர் மாப்பிள்ளையாகப் பார்த்து நிச்சயதார்த்தம் எல்லாம் முடிந்தது. அதேசமயம் சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராக அவளுக்குப் பணி நியமனம் வந்தது.
“ஏதோ ஒரு கிராமத்துல போய் வேலை செய்றதுக்கு நீ என் கிளினிக்லயே பிராக்டீஸ் பண்ணு” என்றான் அந்த மாப்பிள்ளை. அவள் முடியாது என்று மறுத்ததில், திருமணம் நின்று போனது. அது ஒன்றும் அவ்வளவு பெரிதாக அவளை பாதிக்கவில்லை. அந்த திருமணம் நடந்திருந்தால்தான் அவளுக்குப் பாதிப்பு என்று தோன்றியது.
ஆனால் அவள் பெற்றோர்கள் மனநிலை நேருக்கு மாறாக இருந்தது. திருமணம் நின்று போனதை அவர்களால் தாங்கவே முடியவில்லை. அது அவளுடைய தப்பு என்று குத்திக் காட்டிக் கொண்டே இருந்தார்கள். அவள் அதுதான் சாக்கு என்று சொல்லாமல் கொள்ளாமல் தனக்குப் பணி நியமனம் வந்த கிராமத்திற்குக் கிளம்பி வந்துவிட்டாள்.
ஒரு வருடத்திற்கு எந்த தொல்லையும் இல்லாமல் இருந்தாள். இந்த நிலையில் தம்பி தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளக் கேட்டதால், மீண்டும் அவள் கல்யாணப் பேச்சை ஆரம்பித்தார்கள்.
“தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்குறதா இருந்தா பண்ணி வையுங்க. ஏன் என் உயிரை எடுக்குறீங்க? நான் இப்போதைக்கு கல்யாணம் பண்ணிகுறதா இல்ல” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட, அவள் தம்பியின் திருமணமும் முடிந்தது.
அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள். ஒவ்வொரு முறை ஏதாவது விசேஷத்திற்கு அழைக்கும் போதெல்லாம் திருமணப் பேச்சை எடுப்பார்கள். அவளும் பிடிவாதமாக மறுத்துவிடுவாள். இடையில் அப்பாவின் மரணம்.
“உன்னை பத்தி நினைச்சு கவலைப்பட்டுதான் அப்பாவுக்கு உடம்பு முடியாமலே போயிடுச்சு” – எழுபது வயதில் அவர் உடல் நிலை முடியாமல் இறந்து போனதற்கு அவளைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றினார்கள். அவள் அதற்கும் மசியவில்லை என்றதும், ‘அன்பு இல்லை, பெத்தவங்க மேல துளி கூட அக்கறை இல்லை, சரியான சுயநலவாதி’ என்று முத்திரை குத்திவிட்டார்கள்.
அது உண்மையாகக்கூட இருக்கலாம். தினந்தோறும் பிரசவ வேதனையில் இந்தப் பெண்கள் அவதியுறுவதைப் பார்க்கும்போது, குடும்பம், குழந்தையின் மீதிருந்த விருப்பம், ஆசை எல்லாம் மொத்தமாக அற்றுப் போய்விட்டன. அதுவும் பிள்ளை பெறும் இயந்திரங்கமாகத்தான் இந்தச் சமூகம் பெண்ணுடலை பாவிக்கிறது. இங்கே பெற்றாலும் பிரச்னை பெறாவிட்டாலும் பிரச்னை.
‘நமக்கு இந்த பிரச்னையே வேண்டாம்டா சாமி’ என்று முடிவுக்கு வந்துவிட்டாள். ஆனால் நேற்று எதிர்பாராமல் சந்துருவை பார்த்தபோது மனதில் ஏதோ ஒன்று உடைந்தது. பதின்ம வயது அகல்யா எட்டிப் பார்த்தாள்.
அதுவும் அவன் பார்க்க அப்படியே இருந்தான். என்ன காதோரம் சிறு நரை மட்டும். மற்றபடி உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தான்.
“அகல், நீயா..?” என்று அவளைப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் புன்னகை செய்தான்.
அதன் பின்பு ஏதோ முக்கியமான வேலை வந்துவிட்டது என்று கிளம்பத் தயாரானவன், “உன்னோட நம்பரை கொடுத்துட்டு போ, நாம அப்புறமா பேசுவோம்” என்று அவள் தோள் தட்டி கூறிவிட்டு, அங்கிருந்து அகன்றான்.
‘சந்துருவைத் திருமணம் செய்திருந்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருந்திருக்குமோ?’
தங்குதடையில்லாமல் அமைதியாகச் சுழன்று கொண்டிருந்த அவள் உலகம், ஒரு நொடி அசையாமல் நின்று போனது.
தொடரும்…
செயற்கை நுண்ணறிவு படங்கள்: மோனிஷா
படைப்பாளர்

மோனிஷா
தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இணையத்தில் 27 நாவல்களை இதுவரை எழுதியுள்ளார். அவற்றில் இருபது நாவல்கள், புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பெண்ணியம், சூழலியல் விழிப்புணர்வு இரண்டும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன. சிறார் எழுத்திலும் தற்போது ஈடுபட்டுள்ளார். இவரின் ‘ஒரே ஒரு காட்டில்’ சிறார் நூலை ஹெர் ஸ்டோரீஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.