பெண்களின் வாக்குரிமை செயல்வாதம்
இலங்கையில் பெண்ணிய வரலாறு என்பது மிகவும் சமீபத்திய சிந்தனை, பெரியாரை இலங்கையர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் கருத்துகள் நிலவுகின்றன. இதற்கு மிக முக்கியமான காரணம், இலங்கையில் பெண்களின் செயல்வாதம் பற்றிய தகவல்கள் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்பதே.
பெண்கள் தனியாகவே, குழுவாகவோ, அமைப்பாகவோ தம்மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக இயங்குபவர்கள். ஒடுக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சியும் போராட்டங்களும் வெவ்வேறு வடிவங்கள் கொண்டவை. அவை பாடல்களாகவோ, நாவல்களாகவோ உரைகளாகவோ பதாகை ஏந்திய நடைப்பயணங்களாகவோ இருக்கலாம். இலங்கையில் பெண்ணிய போராட்டங்கள் காலனியத்துவத்திற்கு எதிரான சுதந்திர போராட்டங்கள், சாதியத்திற்கு எதிரான கிளர்ச்சிகள், தொழிற்சங்க போராட்டங்கள் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்து செயற்பட்டிருந்தன.
இதன் அடிப்படையில், இலங்கையில் பெண்ணிய இயக்கங்களும் செயற்பாடுகளும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தீவிரமாக இருந்தன. பெண்கள், இடதுசாரிய இயக்கங்கள், சமூக நலன்புரி செயற்பாடுகள், வாக்குரிமைக்கான பெண்ணிய செயற்பாடுகள் ஆகியவற்றில் பங்கேற்று இருந்தனர்.
எழுத்தாளர்களாகவும் பத்திரிகையாளர்களாகவும் பெண்கள் பரிணமித்தனர். இலங்கையில் மட்டுமல்ல, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பெண்ணிய இயக்கங்கள் உருவாகி இருந்தன.
போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இலங்கையின் கரையோர பகுதிகளைக் கைப்பற்றியபோதும், மத்தியில் உள்ள கண்டி இராச்சியத்தை கைப்பற்ற முடியவில்லை. ஆங்கிலேயரே 1815இல் கண்டியையும் கைப்பற்றி, முதன் முதலாக முழு இலங்கையையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தனர். 1825 இல் பிரித்தானியாவில் நடந்த ஆட்சி மாற்றங்கள் நிமித்தம் இலங்கையிலும் தமது தாராளவாத கொள்கைகளை அமுல்படுத்த வந்தனர்.
1833 இல் இலங்கையில் ஒரு பொதுவான நிர்வாக முறையினையும் சட்ட அடிப்படையிலான ஆட்சியையும் தாராண்மை ஜனநாயக அரச முறையினையும் உருவாக்கும் பொருட்டு, கோல்புறூக் அரசியல் சீர்திருத்த யாப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் பின்னர் குறூமக்கலம் அரசியல் சீர்திருத்தமும் அதன் பின்னர் மானிங் அரசியல் திட்டமும் முறையே 1910 மற்றும் 1921 ஆம் ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்தன.
இக்காலகட்டங்களில் நடந்தேறிய பல அரசியல் நிகழ்வுகளின் பிரகாரம், 1919இல் இலங்கையின் தேசிய இயக்கமாக இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டதோடு, அதன் தலைவராக சேர். பொன்னம்பலம் இராமநாதன் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். இதன் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக பல யாப்பு சீர் திருத்தங்கள் கோரப்பட்டு வந்த வேளை, 1927இல் பிரித்தானியாவின் டொனமூர் குழுவினர் இலங்கையில் பல இடங்களில் 34 தடவைகள் கூடி, 141 பேர்களின் சாட்சியங்களை பெற்றுக் கொண்டனர்.
முதலாம் அலை பெண்ணிய இயக்கங்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் 19ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டிலும் முற்பகுதியிலும் வீறு கொண்டு எழுச்சியுற்றிருந்தன. மார்க்சியத்தின் தாக்கமும் லெனின் தலைமையிலான 1917 ரஷ்ய புரட்சியும் பின்புலமாக இருந்தமை, பிரித்தானிய அரசு இலங்கைப் பெண்களின் வாக்குரிமை போராட்டங்களை செவி மடுப்பதற்கு ஏதுவாக இருந்தது. 1928இல் பிரித்தானியாவில் பெண்கள் வாக்குரிமையை வென்றெடுக்கின்றனர்.
இலங்கையில் 1927/28 இல் பெண்கள் வாக்குரிமை சங்கம் ஆரம்பிக்கப்படுகிறது. பெண்கள் வாக்குரிமை பெறுவதன் மூலம் சுகாதாரம், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நலம் பேணல், வீடமைப்பு போன்ற துறைகளில் விருத்தி காணலாம் என அச்சங்கம் வாதிட்டது. இதன் பின்னர் 1931 இல் டொனமூர் அரசியல் திட்டம் சர்வசன வாக்குரிமையோடு அமுலுக்கு வருகிறது.
1947 சோல்பரி அரசியல் யாப்பு நடைமுறைக்கு வரும் வரை டொனமுர் யாப்பே அமுலில் இருந்தது. இலங்கையில், டொனமூர் ஆணைக்குழவின் மக்கள் பேரவைக் கூட்டம் 1931ஆம் ஆண்டு யூலை மாதம் 07ஆம் திகதி நடத்தப்பட்ட போது 141ஆவது சாட்சியமாக ‘பெண்களின் வாக்குரிமைக்கான சங்கத்தின்’ (Women’s Franchise Union) திருமதி நல்லம்மா சத்யவாகீஸ்வர ஐயர், திருமதி ஸ்ரீ பத்மநாதன், திருமதி ஈ.ஆர். தம்பிமுத்து ஆகிய தமிழ்ப் பெண்களும் அடங்கலாக சங்கத்தின் உறுப்பினர்கள் அளித்த சாட்சியத்தின் மூலம், 1931இல் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும். வாக்குரிமை சங்கத்தின் செயலாளர் அக்னஸ் டி சில்வாவின் (Agnes De Silva) பங்கும் மிக முக்கியமானது.

நல்லம்மா அவர்கள் சிலோன் தமிழ் பெண்கள் சங்கத்தில் (Ceylon Tamil Women’s union) செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நல்லம்மா வில்லியம் முருகேசு எனும் பெண்மணி இளம் வயதிலேயே கல்வியில் சிறந்து விளங்கி 1897 ல் ராணி புலமைப்பரிசிலை பெற்ற முதலாவது மாணவியாக திகழ்ந்தவர். சென்னையிலும் ஸ்கொட்லாந்திலும் மருத்துவ படிப்புகளை மேற்கொண்ட அவர் மருத்துவருக்குரிய முழு தகைமைகளையும் கொண்ட முதலாவது இலங்கையின் பெண் வைத்தியர் என்ற பெருமையோடு 1911இல் இலங்கைக்கு திரும்பினார்.

பின்னர் கொழும்பில் நவீன வைத்தியசாலையொன்றை நிறுவி பெண்கள், குழந்தைகளுக்கான திறமையான வைத்தியராக போற்றப்பட்டார். 1921 இல் சத்தியவாகீஸ்வர ஐயரை மணம் புரிந்த பின்னரும் தொழிலில் கவனம் செலுத்தி வந்தார்.
1931 இல் இலங்கைப் பெண்களுக்கு கிடைத்த வாக்குரிமை எளிதாக பெறப்பட்ட விடயமல்ல. பிரித்தானியா, கனடா, அமெரிக்கா நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, நோர்வே, பர்மா, இந்தியா போன்ற பெரிய நாடுகளில் 1920 களில் பெண்களுக்கான வாக்குரிமை என்பது ஏற்றுக் கொள்ளபட்ட கருத்தியலாக இருந்தது. பெண்களுக்கான வாக்குரிமை முதன்முதலாக 1893இல் நியூசிலாந்தில் வழங்கப்படுகிறது. ஜெமைக்கா, போலந்து, பின்லாந்து, டென்மார்க், பலஸ்தீன் போன்ற சிறிய தேசங்களும் பெண்களுக்கு வாக்குரிமையை வழங்கி யிருந்தன என டொனமூர் மக்கள் பேரவைக்கு வழங்கப்பட்ட சாட்சியாக அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய பெண்களுக்கு நன்மை தரக் கூடிய விடயங்கள் கீழைத்தேய பெண்களுக்கு நன்மை பயக்காது என ஆண்களின் வாதத்தை முறியடித்து, பேசிய இலங்கை பெண்கள் இந்தியாவையும் பர்மாவையும் முன்னுதாரணமாக வைத்திருந்தனர். ஆனால் பெண்களின் அரசியல் உரிமைகளுக்கு ஆதரவாக ஒரு சில ஆண்கள் இருந்தனர் எனவும் சுட்டிக் காட்டப்படுகிறது. இதே மாதிரியான சிந்தனை ஓட்டங்களோடுதான் ஏறத்தாழ 125 வருடங்களுக்கு பின்னரும் இலங்கை சமூகம் தற்போதும் இருப்பதை, சமூக வலைத்தளங்களிலும் உரைகளிலும் காணக்கூடியதாக உள்ளது.
பெண்களின் உரிமைகளுக்கான போராட்டங்களின் நீண்ட வரலாறு பல்வேறு நாடுகளில் காலம்காலமாக நடந்து வருவது. இவை மேலைத்தேய நாடுகளுக்கு மட்டும் உரிய போராட்டங்கள் அல்ல, மத்திய கிழக்கு, ஆபிரிக்க, தென்னாசிய நாடுகளில் உக்கிரமாக நடந்த கடுமையான பெண்ணிய போராட்டங்களின் வரலாறுகள் உண்டு. இவற்றை முறையாக அறியாதவர்கள், பெண்ணியம் என்பது மேலைத்தேய கலாச்சாரத்திலிருந்து கடன் வாங்கிய கோட்பாடாக சித்தரிக்கின்றனர். இவர்களை பொறுத்த வரையில் அந்த ‘மேலைத்தேய பெண்ணியம்’ தமிழர்களுக்கு பொருந்தாது எனவும், ‘மேலைத்தேய பெண்ணியத்தை’எமக்குள் நுழைத்து ‘கலாச்சார சீர்கேடு’ செய்கிறார்கள் என்று கூறுவதும் உண்டு.

1927 இல் இந்தியப் பெண்களுக்கு கிடைக்கப் பெற்ற வாக்குரிமையும் தேர்தல்களில் அப்பெண்கள் காட்டிய ஈடுபாடு பற்றியும் விதந்துரைத்த இலங்கையின் வாக்குரிமை சங்க பெண்கள், இலங்கையின் எழுத்தறிவு வீதம், இந்தியாவை விட அதிகம் என்ற தரவுகளையும் சுட்டிக்காட்டி அபாரமாக வாதிட்டனர். 1921இல் எழுத்தறிவு வீதம் இலங்கையில் 21% ஆக இருந்த போது இந்தியாவில் 2% ஆகவே இருந்தது. இந்தியாவில் தேர்தலில் பங்கெடுத்த பெண்களை பற்றி விளக்கி கூறிய இலங்கைப் பெண்கள், வாக்குரிமையை வழங்கும் பட்சத்திலேயே அரசியல் பற்றிய அறிவூட்டலை பெண்கள் பெற வாய்ப்புகள் உருவாகும் என சாதுரியமாக உரைத்தனர்.
அக்காலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படத் தேவையில்லை என்றும் அவர்களுக்கு அரசியலில் நாட்டம் இல்லை எனவும் வாதிட்ட ஆண்களில் அன்றைய இலங்கை தேசிய காங்கிரஸின் தலைவர் பொன்னம்பலம் இராமநாதனும் ஒருவர். ‘பெண்கள் சுதந்திர கருத்து உடையவர்களாக இருப்பின் கணவரோடு முரண்பட நேரிடும், அது குடும்ப நல்லிணக்கத்தை குலைத்து விடும்’ என பொன். இராமநாதன் கூறினார் என பெண்ணியலாளர் சித்ரலேகா மௌனகுரு, ‘இலங்கையில் தமிழ் பேசும் பெண்களிடையே பெண்நிலை இயக்கம்’ என்ற கட்டுரையில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதையொத்த கருத்துக்களை மேலும் பல பெண் எழுத்தாளர்கள், ஒரு சில ஆண் எழுத்தாளர்களும் பதிவிட்டுள்ளமை, குறிப்பிடத்தக்கது.
தொடரும்…
படைப்பாளர்
அஞ்சனா

பத்திரிகைத் துறையில் பட்டயப் படிப்பு முடித்து ஊடகவியலாளராக இலங்கையிலும், இங்கிலாந்து சட்டத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது கணக்கியல் துறையில் பணியாற்றிவரும் இவர், MSc. Public Policy பயின்று வருகிறார். லண்டனில் புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.