பார்வைத்திறனில் குறைபாடு இருந்தாலும் இளமையிலிருந்தே உழைத்துத் தன்னை மட்டுமல்ல பெரிய குடும்பத்தையே கட்டிக்காத்த ஒரு பெண்ணின் கதை இது. அவரின் பெயர் சந்தான லட்சுமி.

சந்தான லட்சுமி அவர்களின் அம்மா சரோஜா; அப்பா மீனாட்சி சுந்தரம். அம்மாவிற்குப் பன்னிரண்டு வயதும், அப்பாவிற்கு இருபத்திரண்டு வயதும் இருக்கும்போது திருமணம் நடைபெற்றிருக்கிறது. அம்மாவுடன் பிறந்தது ஒரே தங்கை. அப்பாவுடன் பிறந்தவர்கள் பத்து பேர். வசதியான வீட்டுப் பெண் வேண்டாம் என அப்பா சொல்ல, அம்மா, நான் அப்படியெல்லாம் நடந்துகொள்ள மாட்டேன் எனச் சொல்லித்தான் திருமணம் நடைபெற்றிருக்கிறது. 

இதைக் கேட்டதும், காதல் திருமணம் என நினைக்கத் தோன்றும். நானும் அதைக் கேள்வியாகக் கேட்டேன். அப்போது அடுத்த கதை வந்தது. அம்மா சரோஜாவின் அப்பா, அம்மாவிற்கு ஆறு வயதாகிய போது இறந்து விட, பாட்டி எதுவும் தெரியாதவராக இருந்திருக்கிறார். உறவினர் ஒருவர், 42 வயது ஆணை இந்தப் பன்னிரண்டு வயதுக் குழந்தைக்கு மாப்பிள்ளை எனக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். குழந்தை மறுத்துவிட்டது. பின் ஒரு திருமண வீட்டில் வருங்கால கணவரைக் காட்டியிருக்கிறார்கள். இவர் சரி எனச் சொல்ல, மாப்பிள்ளையோ, ‘வசதியான பெண்ணும்,  வெந்நீர் தண்ணீரும்  அவசரத்துக்கு உதவாது; வேண்டாம்’ என்று சொல்லியிருக்கிறார். அம்மா ‘பணக்காரப் பெண் போலெல்லாம் நடந்துகொள்ள மாட்டேன்’ எனச் சொல்லியிருக்கிறார். திருமணம் நடைபெற்றிருக்கிறது. 

அப்பாவின் அப்பா பென்ஸன் வாங்கியவர். பதிமூன்று ரூபாய் தான் அவரது வருமானம். அப்பாவுடன் பிறந்தவர்கள் பத்து பேர். வறுமை தாண்டவமாடிய குடும்பம். நிறைய நகை போட்டு, சீர் எல்லாம் கொடுத்துத் தான் அம்மாவிற்குத் திருமணம் செய்திருக்கிறார்கள். திருமணத்தின்போது, அவர் வயதிற்கே வரவில்லை. வயதிற்கு வந்தபின் தான் கணவர் வீடு சென்றிருக்கிறார். அதற்குள் அனைத்துப் பொருட்களும் விலை போய்விட்டன. ஒரு வெள்ளித் தட்டு மட்டும் தான் மீதம் இருந்திருக்கிறது. அடுத்த ஒரு மாதத்தில் அந்தத் தட்டும் போய்விட்டது.

கணவனும் மனைவியும் மிகவும் அன்பாக, ஒற்றுமையாக, எதற்குமே சண்டை போட்டுக் கொள்ளாதவர்களாக இணைந்து வாழ்ந்திருக்கிறார்கள். அப்பா அதிர்ந்து பேசாதவர்; அம்மாவோ நேர்மைக்காகப் போராடுபவர். அதனால் தெருவே அவர்களை மரியாதை கலந்த பயத்துடன் பார்த்திருக்கிறது. பத்து ஆண்டுகளுக்குப் பின் தான் சந்தான லட்சுமி அம்மா பிறந்திருக்கிறாள். அவருக்குப் பின் ஆறு ஆண் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். தற்போது இரண்டு தம்பிகள் மட்டுமே இருக்கிறார்கள். 

சந்தான லட்சுமி அம்மா முதலில் கிராமத்தில் திண்ணைப் பள்ளியில் படித்திருக்கிறார்கள். அப்போது அவர்களின் பார்வைத்திறன் குறித்து யாருக்குமே மாறுபாடாகத் தெரியவில்லை என்கிறார் அவர். உடல்நலமில்லாமல் இருந்த சந்தான லட்சுமி அம்மாவின் சின்னத் தாத்தாவைப் பார்க்க வந்த மருத்துவர் தான் இவருக்குக் கண்பார்வை குறைபாடு இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார். அப்போது சந்தான லட்சுமி அம்மாவின் வயது ஆறு. மருத்துவர், ஒரு நூலைக் கொடுத்து ‘இதைப்படி’ எனச் சொல்லியிருக்கிறார். இவர்களும் படித்திருக்கிறார்கள். தள்ளிவைத்துப் படி’ என அவர் சொன்னதற்கு, ‘நீங்கள் தள்ளி வாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார் குழந்தை சந்தான லட்சுமி அம்மா. அப்போது தான் அவர் பார்வைக்குறைவு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

கிராமத்திலிருந்த பெற்றோர் சாப்பாட்டிற்கே வழியில்லாத நிலையில் அது குறித்து சிந்திக்கும் நிலையிலில்லை. பின் நகரத்திற்குக் குடும்பம் குடிபெயர்ந்திருக்கிறது. அப்போதெல்லாம் பள்ளியில் கொண்டு சேர்ப்பது என்பதெல்லாம் பெரிய ஆர்ப்பாட்டமான நிகழ்வு கிடையாது. வீட்டின் அருகிலிருந்த சாந்தா என்பவர் தான், தான் படித்து வந்த அரசினர் பள்ளிக்குச் சந்தான லட்சுமி அம்மாவை அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போதும் கரும்பலகையில் என்ன எழுதிப் போட்டிருக்கிறார்கள் எனச் சந்தான லட்சுமி அம்மாவிற்குத் தெரியாது. 

கிடைத்த ஆசிரியர்கள் பெற்றோருக்கும் மேல் என்கிறார் சந்தான லட்சுமி அம்மா. என்னுடைய அனைத்து வளர்ச்சிக்கும் பெற்றோரும் ஆசிரியர்களுமே அடித்தளம் என நன்றியுடன் அவர் நினைவுகூருகிறார். 

எடுத்தவுடன் நான்காம் வகுப்பில் (1951) வந்து சேர்ந்திருக்கிறார். ஆனால் ஐந்தாம் வகுப்பிற்கு இவர் கணக்கு சொல்லிக் கொடுப்பாராம். அவ்வளவு அறிவுக்கூர்மையுடன் இருந்திருக்கிறார். அப்போது மிஸ் தாமஸ் என ஒரு ஆசிரியர் ஐந்தாம் வகுப்பு எடுத்திருக்கிறார். அவர் தான் தலைமையாசிரியர். அவர், இவருக்குப் பெரும் அரவணைப்பை வழங்கியிருக்கிறார். இவருக்கு அவர் ஜெபிப்பதுண்டாம். மாத்திரைகள் வாங்கிக் கொடுப்பதுண்டாம். பிற்காலத்தில், சந்தான லட்சுமி அம்மா அதே பள்ளியில் ஆசிரியராக இருந்தபோது, (1961) மிஸ் தாமஸ் நல்லாசிரியர் விருது பெற்ற விழாவில் ‘ இந்த விருதை விடச் சந்தான லட்சுமி என் மாணவி என்பதில் தான் நான் பெருமை கொள்கிறேன்; மகிழ்ச்சியடைகிறேன்’ எனச் சொல்லியிருக்கிறார்கள். அது தனக்குள் கிடைத்த பெரும் அங்கீகாரம் எனச் சந்தான லட்சுமி அம்மா கருதுகிறார்கள். ‘எனக்குப் பெரிய கிரீடத்தை வைத்தது போன்று இருந்தது; சொல்லத் தெரியாத, சொல்லமுடியாத உணர்வு அது’ எனச் சொல்கிறார்கள்.

கரும்பலகையில் எழுதியிருப்பது தெரியாது என்பதற்காக ஆசிரியர்கள் கேள்வித்தாளை இவரிடம் கொடுப்பார்களாம். மறுநாள் தேர்விற்கான கேள்வி அடுத்த பக்கத்திலிருந்திருக்கிறது. இவர், சுமாராகப் படிக்கும் தோழிக்குச் சொல்லி அடியெல்லாம் வாங்கியிருக்கிறார். பின் அடித்த ஆசிரியரே அழுது அணைத்துக் கொண்டாராம். 

சந்தான லட்சுமி அம்மாவிற்குப் பிறந்த நாளெல்லாம் தெரியாது. புரட்டாசி மாதம் குறிப்பிட்ட நட்சத்திரம் என அம்மா சொல்ல, இவர்களே 10-10 1942 எனத் தீர்மானித்துக் கொடுத்திருக்கிறார்கள். பிற்காலத்தில் உறவினர் வீட்டிலிருந்த இவரின் பெயர் சூட்டுவிழா அழைப்பின் மூலம், பிறந்தநாள் 6-10-1942 எனத் தெரியவந்திருக்கிறது. பெரிய மாற்றமில்லை. வசதியான பிள்ளைகள் பிறந்தநாள் கொண்டாடுமாம். இவருக்கும் ஆசை; ஆனால் வழியில்லை. 1951ஆம் ஆண்டு வெளிவந்த உயிருடன் உனைக்காண்பேனோ பாடலின் மெட்டில் 

‘பிறந்தநாள் கொண்டாடுவேனோ -வெறும் 

பீதி அடைந்தேனே- கந்தா 

ஒன்றுமே இல்லையென்றே 

சொல்லவும் முடியவில்லை 

ஏனோ இந்த ஏழையகத்தில் பிறந்தேன்

என இவர் பாடலெழுதிப் பாடி அழுதது; அம்மாவிடம் அடி வாங்கியது  எல்லாம் பெரிய கதை என்கிறார். அவரது பிறந்தநாள் கொண்டாடும் ஆவல், எண்பதாவது வயதில் கடந்த ஆண்டு நிறைவேறியிருக்கிறது. அருகிலிருந்த அன்பர்கள் இணைந்து அதைக் கொண்டாடி சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். 

ஆறு தம்பிகள். பெரியவனுக்கும் எனக்கும் நான்கு ஆண்டுகள் தான் இடைவெளி. அதனால் அவனை நான் வளர்க்கவில்லை; மற்றபடி அனைவரையும் நான் வளர்த்திருக்கிறேன். இரண்டாவது தம்பியான சவுந்தரராஜன் என்ற முரளி, அக்காவை யாரும் டீ போட்டுக் கூப்பிடக்கூடாது என்று சொல்ல, அதன்பிறகு அப்பா ‘பாபு’ என மகளை அழைக்கத் தொடங்கியிருக்கிறார். 

ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று தண்ணீர் எடுத்துக் கொடுத்தால் மாதம் இரண்டு ரூபாய் தருவார்கள். இன்னொரு வீட்டில் பாப்பாவைப் பார்த்துக் கொண்டால் அதற்கு இரண்டு ரூபாய் தருவார்கள். இரண்டையும் சேர்த்துத் தான் பள்ளிக்குக் கட்டவேண்டிய நான்கு ரூபாயைக் கட்டுவேன். ஒன்றே முக்காலணா நோட்டு கூட அப்பா வாங்கித் தர மாட்டார். வெளியில் யாரும் என்ன சாப்பிட்டாய் எனக் கேட்டால் சவ்சவ் சாம்பார்; உருளைக்கிழங்கு பொரியல் என்பாராம். உண்மையில் வீட்டில் வெறும் கஞ்சி தானிருக்குமாம். நாங்கள் சொன்ன ஒரே பொய் அது தான் என்கிறார்.

அப்பா வைத்திருந்த சைக்கிள் கடையில் போதிய வருமானமில்லை. அப்பா நாள்தோறும் ஒரு படி அரிசி மட்டுமே வாங்கி வருவாராம். இவர் சைக்கிள் கடைக்குப் போய், காற்றடிக்க வருபவர்களிடம் சரியான காசை வாங்கி, காசு குறைந்தால் ஒருபடிக்குப் பதில் முக்கால் படி அரிசியும் மீதி இருக்கும் கொஞ்சம் பணத்தில் பயத்தம்பருப்பு (துவரம்பருப்பை விட இது மலிவு), பூசனிக்காய், தேங்காய் பத்தை இப்படி ஏதாவது வாங்கி வந்து கொடுத்திருக்கிறார்.

வள்ளிக்கிழங்கு மூன்றை அணாவிற்கு ஒரு தூக்கு  (ஒன்னேகால் வீசை) கிடைக்கும். வேர்க்கடலை மலிவான நாள் வேர்க்கடலை. கிழங்கு மலிவான நாள் கிழங்கு எனச் சாப்பிட்டு காலத்தை ஓட்டியிருக்கிறார்கள். அணா என்றால் ஆறு பைசா. அப்போது அரிசிப்பஞ்சம் இருந்த காலம் என்பதை இணைத்தே பார்க்க வேண்டும். இட்லி தோசை என்பதே கிடையாது. அரையணாவும் நாலணாவும் ஏறக்குறைய ஒரே மாதிரியிருக்கும். கடைக்காரர் தவறுதலாக நாலணாவைக் கொடுக்க இவர் திருப்பிக் கொடுத்திருக்கிறார். அதனால் கடைக்காரர் மேலும் சில கிழங்குகளைக் கொடுப்பாராம். இப்படி இளம் வயதிலேயே மிகுந்த சாமர்த்தியத்துடன் சந்தான லட்சுமி அம்மா இருந்திருக்கிறார்கள்.

‘எஸ் எஸ் எல் சி (ஆறாம்  பாரம்) படிக்கும்போது தாடி மாஸ்டர் (பெரிய தாடி வைத்திருப்பார்.) என்று ஒரு மாஸ்டர் தான் தேர்வுக்கட்டணமான பதினைந்து ரூபாயைக் கட்டினார்’ என்கிறார். சந்தான லட்சுமி அம்மாவின் அம்மா, சில நாள்கள் கழித்துக் கட்டிவிடுகிறேன் எனச் சொல்லத்தான் பள்ளிக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் அந்த நல்லாசிரியர் தானே கட்டியிருக்கிறார். “நான் கொடுக்கும் நிலைக்கு உயர்ந்தபிறகு கூட என்றுமே அதை அவர் திரும்ப வாங்கியதில்லை. அப்போதைக்கு பதினைந்து ரூபாய் என்பது மிகப்பெரும் தொகை” என நன்றியுடன் அவரை நினைவுகூருகிறார். 

“இவ்வாறு எப்போதுமே என்னைச் சுற்றிலும் நல்ல மனிதர்களைக் கடவுள் கொடுத்தார்; பார்வைக் குறைவு இருந்தாலும் அதைச் சரிக்கட்டும் விதமாக நல்லவர்கள் எப்போது என்னைச் சூழ்ந்திருந்தார்கள்” என்கிறார். 

1960 இல் எஸ் எஸ் எல் சி தேர்ச்சி பெற்றதும் அதே ஆண்டு இறுதியில் தொண்ணூறு ரூபாய் + அகவிலைப்படி 15 ரூபாய் என நூற்றைந்து ரூபாய் சம்பளத்தில் ஆசிரியர் வேலை கிடைத்துள்ளது. என் அம்மாவும் அதே காலகட்டத்தில் தொண்ணூறு ரூபாய் + அகவிலைப்படி என மிகவும் சிறிய கிராமம் என்பதால் ஏழெட்டு ரூபாய் வாங்கியதாகச் சொல்லியிருக்கிறார்கள். திருமணம் முடிந்தபின் சம்பளத்தை மட்டும் என் தாத்தாவிடம் அம்மா கொடுத்திருக்கிறார்கள். அகவிலைப்படி எத்தனை ரூபாய் எத்தனை காசு என்பது வரை என் அம்மாவுடன் வேலை பார்த்த ஆசிரியரிடம் கேட்டு வந்து போட்டுக் கொடுத்திருக்கிறார் ஒரு நல்லவர். இத்தனைக்கும் அவர் சம்பாதித்த பணத்தை அவர் தான் நிர்வகித்தார்; அப்பாவிடம் கொடுக்கவில்லை. கையில் காசில்லாமல் சம்பாதித்து என்ன பலன் என்ற சிந்தனை பிறகு வேலையை விடும் சூழ்நிலை வந்த ஆறுதலாக இருந்தது என்பார்கள்.

சரி சந்தான லட்சுமி அம்மா கதைக்கு வருவோம். அம்மா , நான்கு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அப்போது போகவர பத்து மைல் நடக்க வேண்டும். அது சுமையாகவோ களைப்பாகவோ தெரியவில்லை என அவர் சொல்கிறார். சிறந்த ஆசிரியர் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார். 

பின் telephone operator வேலை கிடைத்திருக்கிறது. சந்தான லட்சுமி அம்மா ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, ‘பிற்காலத்தில் என்னவாகப் போகிறீர்கள்?’ என வழக்கம்போல் ஆசிரியர் கேட்டிருக்கிறார். அதற்குச் சந்தான லட்சுமி அம்மா நான் என்ன மருத்துவராகவா போகப்போகிறேன்? என் கண்பார்வைக்கு அதெல்லாம் சாத்தியமில்லை. அதனால் telephone operator ஆகப்போகிறேன் எனச் சொன்னாராம். அதுவே எனக்குப் பிற்காலத்தில் அமைந்தது என்கிறார்.

‘1960களில் மாதம் இருநூறு ரூபாய் என்பது பெரிய சம்பளம். அதை நான் வாங்கி, அப்பாவிடம் கொடுத்தேன். அப்போதும் கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல என்பதாகத் தான் இருந்திருக்கிறது.  

முதல் சம்பளம் வாங்கியதும் அம்மாவிடம் தான் சம்பளத்தைக் கொண்டு கொடுத்திருக்கிறார். ‘எனக்கு அப்பா ஒரு நோட்டு கூட வாங்கித் தரவில்லை; அதனால் நீ காசை வாங்கிக் கொள்’ எனச் சொல்ல அம்மாவோ, ‘நீ உன் பணத்தை வைத்துக் கொள். நான் நினைத்தால் இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்’ எனச் சொன்னதால் பணம் அப்பா கைக்குப் போயிருக்கிறது. அதே போல் மறு ஆண்டு இன்னொரு தம்பி பிறந்திருக்கிறார். 

Revenue stamp 10 பைசா என்றால் அப்பா அவ்வளவு தான் கொடுப்பாராம். ஒரு சிறு நகை கூட யாருக்கும் வாங்கவில்லை. 1971 ஆம் ஆண்டு அப்பா இறந்திருக்கிறார். அதற்கான செலவிற்குக் கூட ஐந்நூறு ரூபாய்க் கடனாகத்தான் யாரிடமோ வாங்கியிருக்கிறார்கள். அப்படித்தான் அப்பாவின் நிர்வாகம் இருந்திருக்கிறது. மிகவும் அடம்பிடித்துத் தான் 1969 இல் ஒரு கைக்கடிகாரமே கிடைத்திருக்கிறது. அதை இன்னமும் பத்திரமாக வைத்திருப்பதாக அம்மா சொல்கிறார்கள். அறுபத்தைந்து ரூபாய்க்கு ஒரு கம்மல் வாங்குவதற்கே படத்தை பாடு தான். தோழி லட்சுமி முன்பணமாக ஐம்பது ரூபாய் கொடுத்திருக்கிறார். பின் அவரது திருமணத்தின் போது தான் கடனை அடைத்தேன் என்கிறார் அம்மா. என்ன இருந்தாலும் அப்பா உள்ளத்தை நோகடிக்காமல் வாழ்ந்தோம் என்ற ஒரு திருப்தி என் உள்ளத்தில் இருக்கிறது. 

அம்மாவைப் பெற்ற பாட்டி இறந்தபின், அந்த வீட்டைக் கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கி, சித்திக்கான பங்கைக் கொடுத்துவிட்டு அம்மா பெயருக்கு மாற்றியிருக்கிறார். அந்த வீட்டிலிருந்து மாத வாடகை ஒன்னேகால் ரூபாய் கிடைக்கும். 

அம்மா மீது அளவற்ற அன்பு கொண்டிருக்கும் சந்தான லட்சுமி அம்மா, தம்பிகளைக் கூட அம்மாவின் பிள்ளைகள்; அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் என் எண்ணமிருந்தது என்கிறார். 

அந்தக் காலகட்டத்தில் பெண் குழந்தைகளின் திருமணம் என்பது அவ்வளவு எளிதல்ல. அதுவும் பார்வைத்திறன் குறைந்த தனக்கு இன்னமும் சிரமம் என உணர்ந்து, திருமணம் குறித்த எந்த சிந்தனையும் தன் உள்ளத்தில் தோன்றாதவாறு பார்த்துக் கொண்டதாகச் சொல்கிறார்.

அப்பா இறந்தபிறகு குடும்பப் பொறுப்பு சந்தான லட்சுமி அம்மாவிடம் வந்திருக்கிறது. அனைவருக்கும் தனித்தனியாக, தட்டு, டவல், சோப்பு எல்லாம் வாங்கியிருக்கிறார். இட்லி, தோசை காப்பி என உணவும் மாறியிருக்கிறது. ஆனாலும் அளவுச்சாப்பாடு தான். காபி குடிக்காத தம்பிகளுக்குக் கூடுதல் ஒரு இட்லி எனக் கொடுத்திருக்கிறார். அதுவே எனக்கு வருத்தமாகத்தான் இருக்கும். 

ஒரு தம்பி இறந்த ஏக்கத்தில் ஒரு ஆண்டுக்குள் 1996 அம்மாவின் அம்மா இறந்திருக்கிறார்கள். அதன்பிறகு கடைசி தம்பிக்குத் திருமணம். வீட்டை விற்று தம்பிகள் அனைவருக்கும் ஆளுக்கு 3000 எனப் பிரித்துக் கொடுத்திருக்கிறார். அதன்பிறகு ஓய்வு பெற்ற நேரம் நான்கு லட்சம் ரூபாய் கிடைத்திருக்கிறது. கிடைத்த  பணத்தில் தனக்கென ஒரு வீடு வாங்கிக் கொண்டு மாதம்தோறும் கிடைக்கும் பணத்தில் நிம்மதியாக வாழ்கிறேன் என்கிறார்.  அருகில் இருக்கும் எல்லோரும் மிக அன்பானவர்கள். 

பார்வைத்திறன் தொடர்பாகப் பல முறை சிகிச்சை செய்திருக்கிறார்கள் ஒருமுறை கான்சர் எனச் சொல்லியிருக்கிறார்கள். பெரிய கண்ணாடி அணிந்து தான் படிக்க முடிந்திருக்கிறது. கோவையில் ஒரு மருத்துவமனையில் கண் சிகிச்சைக்கு எனச் சென்று பார்வைத்திறன் குறைந்தது மட்டுமல்லாமல், தாங்காத வலி. அதனால் சென்னை மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள்.

தம்பிகள், தம்பி மனைவி எல்லோரும் உடனிருந்து உதவி செய்திருக்கிறார்கள். இப்போது ஒரு கண்ணில் மட்டும் சிறிது பார்வையிருக்கிறது. சாந்தி ஒரு நாளுக்கு 34 தடவை மருந்து ஊற்றினாள். அருகிலிருக்கும் தெலுங்கு குடும்பம் பெற்ற பிள்ளைகள் போல் கவனிக்கிறது. அனைவரும் அன்பாக அனுசரணையாக இருக்கிறார்கள். கையிலிருந்த பணத்தில் தம்பி மனைவிகளுக்கு ஆளுக்கு ஐந்து பவுன் செய்து கொடுத்தேன். மிகமிக மகிழ்ச்சியாக நிறைவாக வாழ்கிறேன் எனச் சந்தான லட்சுமி அம்மா நிறைவான குரலில் சொல்கிறார்கள்.

அம்மா, தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறார். அதுமட்டுமல்ல, பக்கத்து வீட்டினர் எழுந்து கொள்ளுமுன் இவர் எழுந்துவிட்டால், அவர் வீட்டிற்கும் சேர்த்துக் கோலம் போடுகிறார்.

எல்லாம் சரியாக இருந்தும் நாம் அது இல்லை இது இல்லை எனத் தொடர்ந்து குறை சொல்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் நேர்மறையாகவே எடுத்துக் கொண்டு, உலகில் நம்மைச் சுற்றி வாழ்பவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்ற நேர்மறையான எண்ணத்துடன், நேர்மையாகத் தனியாக வாழும் சந்தான லட்சுமி அம்மா ஒரு சாதனைப் பெண்மணி என்பதில் ஐயமில்லை.

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.