வேலை என்பது அனைவருக்கும் பொதுவானதுதானே? ஆனால் அந்த ஒரே வேலைக்கு ஆண் கிளம்புவதும் பெண் கிளம்புவதும் ஒரே மாதிரியான சூழலில் அமைவதில்லை.

‘சமைத்துக் கிளம்புவதற்கும் சாப்பிட்டுக் கிளம்புவதற்கும் இடைப்பட்ட இடைவெளி, வரவேற்பறைக்கும் அடுக்களைக்கும் இடையேயான தூரம்’. இந்தத் தூரம் பார்வைக்கு சில அடிகளே இருப்பதுபோல் தோன்றினாலும் இது பல நூற்றாண்டுத் தூரம். பிறகொரு சூழலில் இதுகுறித்து விரிவாகப் பேசுவோம்.

ஆண் வேலை முடிந்து தாமதமாக வருவது, கடமை உணர்வு உள்ளவராகவும் பொறுப்புள்ளவராகவும் பார்க்கப்படுகிறது. அதேநேரம் பெண் பணி முடிந்து தாமதமாக வருவது, அவர் குடும்பப் பொறுப்பு அற்றவர் போலவும் வீட்டைக் கவனிக்காதவர் போன்றப் பார்வையையும் ஏற்படுத்துகிறது.

பணியிடத்துக்குப் பெண் உரிய நேரத்துக்கு வரும்போது, ‘அவங்க வீட்ல வேற யாரும் சமைப்பாங்க போல’, ‘சமைக்க ஆள் வச்சிருப்பாங்க’ போன்ற அங்கலாய்ப்புக் குரல்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

வேலையில் சமரசம் செய்துகொள்ளாத பெண்களை அவர்களின் குடும்ப வாழ்க்கையைக் கேலியாக்கிப் பேசுவது, பரவலாக வழக்கத்தில் உள்ளது. ‘இங்கேயே இவ்ளோ மெரட்டுறீங்க. வீட்ல சார் பாவம்!’ போன்ற சொற்களைக் கடக்காத நிமிர்நடைப் பெண்கள் அரிது.

பணியிடத்தில் ஒரு பெண் தன் பணியைச் சிறப்பாகப் பணிசெய்துவிட்டால், ‘அப்பா என்ன பண்றாங்க?’, ‘உங்க சார் என்ன பண்றாங்க?’ என்கிற கேள்விகள் பின்னொட்டாக வந்துநிற்கின்றன. எந்த ஒரு பெண்ணின் பணியிலும் அவரது அப்பாவோ இணையரோ வந்து பணி செய்வதில்லை. குடும்பத்தின் உதவியும் ஒத்துழைப்பும் இல்லாமல் ஆணோ பெண்ணோ யாராக இருப்பினும் வெற்றி பெற முடியாது என்பது உண்மை.

 ஆணின் வெற்றிக்கான பாராட்டு முழுக்க முழுக்க அவருக்கும் பெண்ணின் வெற்றிக்கான பாராட்டு அவரது கணவன் மற்றும் குடும்பத்தினருக்குப் பகிர்ந்து அளிக்கப்படுவதன் காரணம்தான் என்ன?

இதுஒருபுறமிருக்க, உண்மையில் பெண்கள் எந்த முடிவையும் சுயமாக எடுக்கிற சூழல் குடும்பத்தில் இருப்பதில்லை. பக்கத்துத் தெருவுக்கோ கடைவீதிக்கோ செல்லவும்கூட வெளிநாட்டிலோ வெளியூரிலோ  வேலைசெய்கிற தம் கணவர்களிடம் முன்அனுமதி பெறவேண்டி உள்ளது. அவசரமாகக் கிளம்ப வேண்டிய சூழல் வந்தாலும் கிளம்பியதும் தவறாமல் அங்கே தகவல் சொல்லியே ஆகவேண்டும் என்பது எழுதப்படாத விதிகளுள் ஒன்று.

ஏதோ அவசரத்தில் சொல்ல மறந்துவிட்டாலோ சென்று வந்தபிறகு சொன்னாலோ, அடுத்த இரண்டு நாள்களுக்குக் குடும்பத்தில் அமைதி இருக்காது. இப்பெண் குடும்ப பாரத்தையும் தாங்கிக்கொண்டு அதைத் தவறாமல் அவருக்குத் தகவலும் சொல்லி, ஒவ்வொன்றாகச் செய்வதற்குள் இரட்டைவாழ்வு வாழ்ந்த சுமையாகவேத் தோன்றும்.

வெளியூர், வெளிநாடு பணிச்சூழல் இப்படியிருக்க, ஒரே ஊரில் பணிசெய்பவர்கள் எனில், மனைவியின் ஏ.டி.எம் கார்ட் கணவனிடமே இருக்கும். ஏ.டி.எம் மெஷினில் பணம் எடுக்கக்கூட அந்த வீட்டு ஆண்களையே பெண்கள் எதிர்பார்க்க வேண்டியுள்ளது.

ஜிபே உள்ளிட்ட இணையப் பணப் பரிவர்த்தனைகள் அல்லாமல் வங்கி, ஏ.டி.எம் போன்ற இடங்களுக்குச் செல்ல ஏனோ இன்னும் சில பெண்களுக்குத் தயக்கம் இருக்கிறது. ஆண்கள் உங்கள் இணையர், மகள், சகோதரிக்கு இதுபோன்ற பொது இடங்களுக்குச் சென்று வருவதற்குப் பழக்கப்படுத்துங்கள்.

ஆண்களுக்கு டீக்கடை வாசல்போல பெண்களுக்கு எவ்வித இளைப்பாறலும் இல்லை. கேட்பதற்கு மிகைப்படுத்துதல் போன்று இருந்தாலும், இன்னமும் டீக்கடை வாசலில் ஒரு தேநீர் பருகுவது, பல பெண்களுக்கும் பெரும் ஏக்கமாகவே உள்ளது.

பணி முடிந்து மாலை வீடு கிளம்பும்முன் ஆண்கள் டீக்கடையில் கூடுவது மிக இயல்பானதாக பார்க்கப்படுகிறது. அதே பணி முடிந்த பத்தாவது நிமிடத்தில் பெண் வீட்டுக்குக் கிளம்பியிருக்க வேண்டும். இந்த டீக்கடை இளைப்பாறல், அவளுக்கு எட்டாக் கனி.

பல நேரங்களில் ‘எங்க போறீங்க?’ என்ற கேள்வியே ஆண்களுக்கு எரிச்சலாக இருக்கிறது. ஆனால் பெண்கள் கிளம்புவதைச் சொல்லிவிட்டுக் கிளம்பினாலும், எங்கே இருக்கிறோம் என்பதை மணிக்கொருமுறை அப்டேட் செய்துகொண்டே இருக்க வேண்டும். இதுவே ஆண்களுக்கு அப்படியில்லை.

இங்கே சமத்துவம் என்கிற பெயரில் எல்லாவற்றிலும் ஒரேவிதமான உரிமைப்போரை யாரும் நிகழ்த்துவதில்லை. ‘இதெல்லாம் பெரிய விஷயமா?’ என ஆண் மனம் நினைக்கிற பலவும், உண்மையில் பெண்களுக்குப் பெரிய விஷயமாக இருப்பவையே.

நகைச்சுவை என்கிற பெயரில் கேலிக்கு உள்ளாக்கப்படுவதும், ‘மீம்’களாக்கி அதிகம் கிண்டல் செய்யப்படுவதும் பெண்கள்தான். நகைச்சுவைப் பட்டிமன்றங்களில் ‘என் மாமியார் இருக்காளே’, ‘என் நாத்தனார் இருக்காளே’ போன்ற ‘நகைச்சுவை’களைப் பட்டிமன்ற நடுவர்கள் தவிர்த்தால், வீடுகள் செழிக்கும்.

விளையாட்டாகத் தொடங்கிய இவ்வகைக் கேலிப்பேச்சுகள், குடும்ப அமைப்பின்மீதும் மனைவி, மனைவியின் குடும்பம், மாமியார்- நாத்தனார் மீதும்  இனம்புரியா வெறுப்பையும் ஒவ்வாமையையும் இன்றைய இணைய உலகம் மூலம் வளர்த்துவிட்டிருக்கின்றன.

 முன்பு அம்மாவையும் அத்தையையும் பயத்தோடும் பாசத்தோடும் பார்த்த சற்றே வளர்ந்த ஆண்பிள்ளைகள், தற்போது மீம் கன்டென்ட் அனுப்பி அவர்களையே கிண்டல் செய்கிறார்கள்.

குடும்பச்சூழல் ஒருபுறமிருக்க, நட்பைப் பற்றிப் பார்ப்போம். கணவனின் தோழிகளது நட்பை அவரின் மனைவி இயல்பாகப் புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோலத் தானே மனைவியின் ஆண் தோழர்களையும் கணவன் எடுத்துக்கொள்ள வேண்டும்? உண்மையிலேயே அப்படித்தான் அந்த நட்பு புரிந்துகொள்ளப்படுகிறதா என்பதைச் சிந்திப்போம்.

திருமணத்துக்கு முன்புவரை ஆண், பெண் பாகுபாடில்லாமல் இயல்பாகப் பழகுகிற, பொதுச் செயல்பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிற பல பெண்கள் திருமணத்துக்குப் பின் தம் இயல்பு தொலைத்து அடையாளம் இழந்துவிடுகின்றனர். ‘குடும்பம்னா சில விஷயங்களை எல்லாம் விட்டுக்கொடுத்துத்தான் போகணும். அதுதான் குடும்பத்துக்கு நல்லது’ என்கிற சொல்லாடல் எப்போதும்  பெண்களை நோக்கி மட்டுமே ஏன் சொல்லப்படுகிறது?

குடும்பம் என்பது இருவருக்குமானது எனில், குடும்பத்துக்கான விட்டுக்கொடுத்தல்களும் இருவருமே செய்யவேண்டியவை என்பதை மனத்தில் கொள்வோம்.

ஆண் தன் தோழிகளை ‘ஹக்’ செய்து விடைகொடுக்கலாம். பெண் தன் தோழர்களுக்குக் கைகொடுத்துக்கூட விடைகொடுத்தல் குடும்பத்துக்கு இழுக்கு.

ஆண் தன் தோழமைகளோடு சென்று வரைமுறை இல்லாமல் செலவு செய்வது கேள்விக்கு உள்ளாகாது. மாறாக, பெண் வீட்டுக்கான மளிகை சாமானில் சிலவற்றைக் கூடுதலாக வாங்குவதும், மளிகை பில் நீள்வதும் அவளைக் கேள்விக்கும் கேலிக்கும் உட்படுத்துகிறது.

‘8000 ரூவாய்க்கு மளிகை பில் வந்திருக்கு’ என சீரியஸாக முகத்தை வைத்துக்கொள்கிற குடும்பத் தலைவர்கள், சினிமாவுக்கு பத்து டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஆகிற செலவை ஒரு பொருட்டாகவேக் கருதுவதில்லை.

 பெண்கள் குடும்பத்தை குடும்பமாக மாற்ற சற்றே கடுமையாக இருக்கும்போது, அவளுக்கு ‘ராட்சசி’ பட்டமே மிஞ்சுகிறது.

இங்கே யாரும் மளிகை சாமானை வாங்கித் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப் போவதில்லை. வீட்டில் பழங்களோ காய்களோ எல்லாரும் சாப்பிடவே வாங்கப்படுகிறது. அந்தப் பழங்களை வீணாக்காமல் நறுக்கிப் பகிர்வதைக்கூட குடும்பத் தலைவியே செய்யவேண்டும் என்றில்லை. ஆனால் வேறு யாரும் அதை செய்யப்போவதுமில்லை.

ஏதோ கவனக்குறைவாலோ பணிக் களைப்பாலோ ஓரிரு பழங்களோ காய்களோ வீணாகிவிடுவது இயல்புதான்.  அதைப்பார்த்ததும் பொருள் வீணாவது பற்றியும் விலைவாசி பற்றியும் பேசுவது அவளை மேலும் குற்றவுணர்வுக்கு உள்ளாக்கும் என்பதை அறிந்தேதான் பலரும் அந்நேரத்தில் கேள்விகேட்கிறீர்கள். ‘சாப்பிடலன்னா யாருக்காவது குடுக்கலாம்ல?’ என்கிறீர்கள். அதையே உங்களிடமும் அவள் கேட்கலாம்தானே? சமையலறைக்கும் இதர பொருள்களுக்கும் அவள் மட்டுமேதான் பொறுப்பு என்பதன் மறைபொருள்தான் அந்தக் கேள்வியா?

எங்களுக்கு மட்டும் ஆசையா என்ன? நீங்களும் கொஞ்சம் பொறுப்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நாங்களும் ரிலாக்ஸாக இருக்கிறோம்.

உங்களுக்கு இருப்பதுபோலவே நட்பு, சுதந்திரம், உணர்வு, ஓய்வு எல்லாமே எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை என்பதை அனைவரும் புரிந்துகொண்டால் வாழ்வு சுகிக்கும். பேசுவோம்.

படைப்பாளர்

பா. ப்ரீத்தி

தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ்நாடு அரசின் தமிழ்ப் பாடநூல் குழுவில் நூலாசிரியராகப் பணியாற்றியுள்ளார். பேறுகாலம் குறித்த இவரது அனுபவப் பகிர்வை ‘பிங்க் நிற இரண்டாம் கோடு’ என்கிற புத்தகமாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.