ஹலோ தோழமைகளே, நலம், நலமா?

கடந்த இரு அத்தியாயங்களாக சுயபிரகடனத்தைப் பற்றி நிறைய பேசினோம். அதன் அவசியம், நேர்மறையாக இருக்க வேண்டிய அவசியம் எல்லாம் அலசி ஆயிற்று. இந்த அத்தியாயத்தில் சில சுயபிரகடன உதாரணங்களைப் பார்ப்போம்.

இவை எல்லாமே பொதுவானவைதான். உங்கள் தேவைக்கு ஏற்றவாறு அப்படியே அல்லது உங்களுக்கு ஏற்றார் போல் மாற்றிக் கொள்ளலாம். இதற்கெந்த விதிமுறையும் இல்லை. நேர்மறையாக இருக்க வேண்டியது மட்டுமே ஒரே விதி.

சில உதாரணங்கள்.

  1. நான் வலிமையானவள்/ன்.
  2. நான் ஆரோக்கியமானவள்/ன்.
  3. என் கனவுகளைச் சாத்தியமாக்கும் திறன் எனக்கு நிறைய உள்ளது.
  4. நான் சந்திக்கும் மனிதர்கள் அனைவரும் என்னிடம் அன்பாகவும் எனக்கு உதவுபவர்களாகவும் உள்ளனர்.
  5. எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் எனக்கு வெற்றிதான்.
  6. என் உறவினர்களும் நட்பு வட்டமும் எனக்கு எப்போதும் உறுதுணையாக உள்ளனர்.
  7. என் உடலின் ஒவ்வொரு செல்லும் ஆரோக்கியமாக உள்ளது.
  8. இன்று நான் சந்திக்க போகும் ஒவ்வொரு மனிதரும் என் வெற்றிக்கு உதவப் போகிறார்கள்.
  9. இன்றைய நாள் என்னுடைய நாள். எனக்கான நாள். இன்று அனைத்தும் எனக்குச் சிறப்பாக நடைபெறும்.
  10. நான் என்னை நம்புகிறேன்.
  11. நான் என்னை மிகவும் நேசிக்கிறேன்.
  12. எனது செல்வ நிலை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
  13. நான் என் திறமைகளை மேன்மேலும் மெருகேற்றுகிறேன்.
  14. என் முடிவெடுக்கும் திறன் நன்றாக உள்ளது. நான் எடுக்கும் முடிவுகள் எனக்கு வெற்றியைத் தருகிறது.
  15. எந்தச் சூழ்நிலையிலும் இறுதி வெற்றி எனக்கே.
  16. நான் வெற்றியை ஈர்க்கிறேன்.

இதெல்லாம் பொதுவானவை. இதைத் தாண்டி உங்களின் தனிப்பட்ட தேவைகளையும் சுயபிரகடனமாகச் சொல்லலாம்.

  1. நான் மிகவும் அழகானவள் / ன்.
  2. என் எடை சரியான அளவில் உள்ளது.
  3. நான் எனக்குத் தேவையான பணத்தைச் சம்பாதிக்கிறேன்.
  4. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
  5. என் வாழ்வில் எந்த மாற்றம் வந்தாலும் அத்தனையும் எனக்கு நன்மைக்கே.
  6. நான் ஒவ்வொரு நாளும் வளர்கிறேன், என் திறமைகளை வளர்த்துக் கொள்கிறேன்.

இது போல இன்னும் நிறைய உங்கள் தேவைக்கு ஏற்றார் போல எழுதலாம்.

உங்களின் தேவைக்கு வேண்டியதை எழுதிய பின், அதைத் தினமும் மனதாரப் படிக்கலாம், கண்ணாடியைப் பார்த்துச் சொல்லலாம், தினமும் எழுதலாம். அல்லது நீங்களே பேசி பதிவு செய்து மறுபடியும் மறுபடியும் கேட்கலாம்.

எதைச் செய்தாலும் பரவாயில்லை. ஆனால், சொல்லும் போதும் எழுதும் போதும் அதை மனதார முழு நம்பிக்கையோடு செய்யுங்கள். நான் அழகானவள் என்று சொல்லும் போதே உங்கள் மூளை, ’அப்படி ஒன்றும் இல்லையே’ என்று குறுக்கே ஒரு கட்டையைப் போடும். இதெல்லாம் ஆரம்ப கால இடையூறுகள். அதற்காகவெல்லாம் நிறுத்தாமல், சோர்ந்து போகாமல் இந்தப் பிரகடனங்களை மந்திரம் போலச் சொல்லுங்கள். நான் நன்றாகச் சம்பாதிக்கிறேன் என்று சொல்லும் போதே, ’பர்ஸில் நூறு ரூபாய்கூட இல்லை’ என மூளை குறுக்கே வரும். இன்றுதான் இல்லை, ஆனால் அது நிரந்தரமில்லை என்பதைப் புரிந்துகொண்டு தொடர்ந்து சொல்லுங்கள். சிறிது நாட்களில் மூளையின் இடையூறு குறையும், பின் நின்றே போய்விடும். அதுதான் நீங்கள் சொல்வது ஆழ்மனதில் பதிகிறது என்பதற்குச் சாட்சி. பின் நீங்கள் ஆசைப்படுவது போன்றே உங்கள் வாழ்க்கை மாறும். இந்த வாக்கியங்களைத் திரும்பத் திரும்பப் படிக்கும் போது உங்களை அறியாமல் மற்றொரு மாற்றம் நிகழும். நீங்கள் உங்களை நேசிப்பதோடில்லாமல் உங்களைச் சுற்றி உள்ளோரையும் நேசிக்கத் தொடங்குவீர்கள். இந்த அனைத்து வாக்கியங்களும் மற்றவர்களைப் பற்றிய நல் எண்ணங்களை மட்டுமே உங்கள் மனதில் விதைக்கிறது. இந்த உலகம் ஒரு கண்ணாடியைப் போல உங்கள் உள்ளத்தைப் பிரதிபலிக்கும். உங்கள் மனதில் இயல்பாக ஊற்றெடுக்கும் சுய நேசமும், மற்றவர்களின் மேல் உள்ள அன்பும் இந்த உலகம் முழுக்கப் பிரதிபலிக்கும் போது, உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், வெற்றிகரமாகவும், மிகவும் திருப்தியாகவும் மாறுவதை நீங்கள் நன்கு உணரமுடியும்.

வாருங்கள் உங்களை மாற்றி, உலகத்தை மாற்றலாம்!

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.