புதுச்சேரி இப்போது இந்தியாவின் யூனியன் பகுதிகளுள் ஒன்று. பீஜப்பூர் சுல்தான் கீழ்க் குறுநில மன்னனாக இருந்த ஷேர்கான் லோதி, பெரம்பலூர் வாலிகண்டபுரத்தில் அரசாண்டு வந்தார். அவரிடமிருந்து புதுச்சேரியை பிரான்சுவா மார்ட்டின் தானமாகப் பெற்றார். பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனம் அங்கு அமைக்கப்பட்டது.

புதுச்சேரி நகரத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டது; வணிகம் வளர்ந்தது. மார்ட்டின் புதுச்சேரியில் கோட்டை எழுப்பியும் கொத்தளங்கள் அமைத்தும் அதை வளமுள்ள நகரமாக மாற்றினார். 

பிப்ரவரி 04, 1673-இல் பிரெஞ்சு நிறுவனத்தின் முதல் ஆட்சி அதிகாரியான பெலாஞ்சர் தெ எஸ்பினே (Bellanger de l’Espinay) புதுச்சேரியின் டேனிஷ் லாட்ஜில் குடியேறினார். அதே ஆண்டு பிரான்சுவா மார்டினை முதல் ஆளுநராக பிரெஞ்சு அரசு நியமித்தது. 1720-1738-ஆம் காலகட்டத்தில் பிரெஞ்சு நிறுவனம் காரைக்கால், மாகே, ஏனாம், சந்திரநகோர் பகுதிகளை இணைத்துக் கொண்டது. 1793–இல் ஏற்பட்ட பிரெஞ்சு புரட்சியின்போது ஆங்கிலேயக் கிழக்கு இந்திய நிறுவன அதிகாரத்தின் கீழ் மாறிய இப்பகுதிகள், 1814-ஆம் ஆண்டு பிரெஞ்சு கிழக்கு இந்திய நிறுவனத்திடம் திரும்பவும் ஒப்படைக்கப்பட்டன. 

புதுச்சேரிக்கு தூப்ளே 1742இல் கவர்னராகப் பொறுப்பேற்றார்.  அதன் பின்பு ஆங்கிலேயருடன் அரசியல் போட்டிகளில் இறங்கி, நாடு கவரும் முயற்சிகளில் பிரெஞ்சுக்காரரும் ஈடுபடலாயினர்.

1761ஆம் ஆண்டு வந்தவாசிப் போர் /மூன்றாம் கர்நாடகப் போரில், புதுச்சேரி, ஆங்கிலேயரிடம் வீழ்ந்தது. 1763 பாரிஸ் ஒப்பந்தம், மூன்றாம் கர்நாடகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. புதுச்சேரி பிரெஞ்சு அரசின் வணிகத் தளமாகத் தொடர ஆங்கிலேய அரசு, ஒப்புக் கொண்டது. பிரெஞ்சு ஆட்சி நிலைநாட்டப்பட்டது. இந்த அரசு,  Établissements français dans l’Inde என அழைக்கப்பட்டது. 

பிரெஞ்சு இந்திய அஞ்சல்தலைகள் கொஞ்சம் என்னிடம் உள்ளன. அவை குறித்த வரலாறு என்னிடம் இல்லை. கீழ்க்காணும் மூன்று தலைகளும் வரிவிதிப்புக்கான ஸ்டாம்புகள் என்பதை அவற்றில் உள்ள டிம்பர் டாக்ஸ் (timbre taxe, taxe) என்ற சொற்கள் மூலம் அறியலாம். போஸ்ட் (poste) என குறிப்பிடப்பட்டுள்ளவை அஞ்சல் தலைகள். chiffre என குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல்தலை, postage due வகையைச் சேர்ந்தவை. இதில் உள்ள Centimes Percevoir என்பது எத்தனை சென்டுகள் வசூலிக்கப்படும் என்பதைக் குறிப்பிடுகிறது.

chiffre என குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல்தலை postage due வகையைச் சேர்ந்தவை

1948ஆம் ஆண்டு ஜூலை மாதம் புதுச்சேரி பிரெஞ்சு அரசு வெளியிடப்பட்ட அஞ்சல்தலைகள், அப்சரஸ் மற்றும் துவாரபாலகர் ஓவியங்கள் தாங்கி வந்துள்ளன. இவற்றில் அச்சிடப்பட்டுள்ள cache என்கிற சொல் காசைக் குறிக்கிறது. ரோபி அல்லது பிரெஞ்சு ரூபாய் என்பது பிரெஞ்சு இந்தியாவின் நாணயமாகும். இது இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட இந்திய ரூபாய்க்கு சமமாக இருந்தது. ஒரு ரூபாய் 2.40 பிராங்குகள் (Franc) அல்லது அதற்கு சமமாக இருந்தது. ஒரு ரோபி (roupie) 8 பணம் மதிப்பு கொண்டது. ஒவ்வொரு பணமும் 3 டோடோஸ் (doudous) அல்லது 20 காசு (cache) மதிப்பு கொண்டதாக இருந்தது.

பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி, இந்தியா விடுதலை பெற்ற பின் 1954ஆம் ஆண்டு,  நவம்பர் ஒன்றாம் நாள், இந்தியாவுடன் இணைந்தது. ஆனால், அதற்கான பிரெஞ்சு அரசின் ஒப்புதல் 1962ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16ஆம் நாள்தான் கிடைத்து இருக்கிறது. அதனால், நெடுங்காலமாக, ஆகஸ்ட் 16ஆம் நாள் புதுச்சேரியின் சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட்டது. 2014ஆம் ஆண்டு முதல், நவம்பர் ஒன்றாம் நாள் கொண்டாடப்படுகிறது.

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.