கேள்வி

எங்க பையனுக்கு 5 வயது முடிந்து விட்டது. புது பள்ளிக்கூடத்தில் சேர்க்கவேண்டும். எதெல்லாம் பார்க்க வேண்டும்?

பதில்:

ஜூன் மாதம் நிறைய குழந்தைகள் புது பள்ளிக்கூடத்தில் சேர்வார்கள். இப்போது இருந்தே தேடினால்தான் நம் மனசுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் பிடித்த மாதிரி அமையும். இந்த நேரத்தில் இது சரியான கேள்வி.

பள்ளிக்கூடம் என்பது குழந்தையின் முழு வளர்ச்சி, குடும்பத்தின் வளர்ச்சி மற்றும் சமுதாயத்தின் வளர்ச்சியை மையப்படுத்தி இருக்க வேண்டும். பாடங்களைப் புரிந்துகொண்டு மார்க் வாங்க வைப்பது மட்டுமே பள்ளியின் நோக்கமல்ல.

  • உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்க வேண்டும். காலையில் 7:00 மணிக்கு பள்ளி      வாகனத்தில் ஏறி மாலை 5- 6 மணிக்கு திரும்பி வரும் அவலம் கூடாது. பிஞ்சு குழந்தை.
  •  பள்ளியின் சுற்றுச்சூழல் (Ambience) இனிமையானதாக இருக்க வேண்டும். மரங்களுடன் கட்டிட இடிப்பாடுகள், குப்பை தொட்டிகள் இல்லாத இடமாக இருந்தால் நல்லது.
  •  நல்ல வெளிச்சத்துடன் காற்றோட்டமான வகுப்பறைகள் இருக்க வேண்டும்.
  •  மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறைகள் இருக்க வேண்டும்.
  •   கழிவறைகளில் தண்ணீர் வசதி இருக்க வேண்டும்.
  •  அவை சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
  •  சிறு குழந்தைகள் சாப்பிட, கைகழுவ தனி இடம் வேண்டும்.
  •  விளையாட்டு மைதானம் கட்டாயத் தேவை.
  •  குழந்தையின் வகுப்பறை தரைத்தளத்தில் இருக்க வேண்டும்.
  •  ஒரு வகுப்பறையில் ஒரு டீச்சரும், 20 குழந்தைகளும் போதுமே.
  •  வகுப்பறையின் டெஸ்க், நாற்காலிகள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவை. ஒரு டெஸ்கில் இரண்டு குழந்தைகள் இருந்தால் நல்லது.
  • பல விதமான விளையாட்டுகள், கலைகள் மற்றும் திறன் வளர்ச்சிக்கான திட்டங்கள் பள்ளியில் செயல் படுத்தப்படவேண்டும்.
  • யாராவது அடிப்பது, கிள்ளுவது, கிண்டல் கேலி செய்வது, அவமானப்படுத்துவது போன்றவை செய்தால் உடனே அதை தைரியமாக ஆசிரியர்களிடம் தெரியப்படுத்த குழந்தையை ஊக்கப்படுத்த வேண்டும்.
  • பள்ளிகளில் உணவகம் இருந்தால் அதில் தரமான, சத்தான உணவுகள் மட்டுமே விற்கப்பட வேண்டும், அறிவுறுத்தப்பட வேண்டும்.
  • ஆசிரியர்களும் மற்ற பணியாளர்களும் சின்னச் சின்னதாக வாழ்க்கைக் கல்விக்கான விஷயங்களை எளிதாக சொல்லிக்கொடுக்க வேண்டும் – உதாரணம்: கை கழுவிவிட்டு சாப்பிட வேண்டும், உணவை வீணடிக்கக் கூடாது, குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடவேண்டும், பெரியவர்களுக்கு மரியாதை தரவேண்டும்.
  •  ஆசிரியர்களும், உதவியாளர்களும் குழந்தை நேயம் உடையவர்களாக அன்புடன் பராமரிப்பவர்களாக இருக்க வேண்டும். அவர்களிடம் ஒரு Personal Touch இருப்பதை குழந்தை உணர்ந்து விட்டால் பள்ளிக்கூடம் செல்ல குழந்தை அடம் பிடிக்காது. சிறு குழந்தைகளின் வகுப்பறை சூழல் இன்னொரு வீடு (Another Home) என்று உணர்வை குழந்தைக்கு தர வேண்டும்.
  •  குழந்தைகளுக்கு உடல் நலம் சரியில்லை என்றால் பள்ளிக்கு அனுப்பலாமா என்ற முடிவை அம்மா எடுக்க வேண்டும். நாங்கள் மருந்துகளை கொடுக்கிறோம் என்றெல்லாம் கட்டாயப்படுத்தக்கூடாது.
  •  அதே நேரம் குழந்தைக்கு பள்ளியில் உடல் நலம் சரியில்லை என்றால் அடிப்படை முதலுதவி செய்ய பள்ளியில் வசதி இருக்க வேண்டும். உடனடியாக பெற்றோருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
  •  ஆசிரியருக்கும் அம்மா அல்லது அப்பாவுக்கும் தொடர்ச்சியான நல்ல புரிதல் (Rapport) இருக்க வேண்டும். குழந்தையை பற்றி இருவரும் அடிக்கடி பேசிக் கொள்ள வேண்டும்.
  •  எந்தவிதமான தண்டனையும் குழந்தைக்குத் தரக்கூடாது. கண்களை உருட்டி பார்த்தால் கூட சட்டப்படி தப்பு! தெரியுமா!
  •  LKG, UKG, முதல் வகுப்பு குழந்தைகளுக்கு எழுதும் வீட்டுப்பாடம் இருக்கக் கூடாது.
  •  ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒப்பிட்டு ஆசிரியர்கள் எப்போதும் பேசக்கூடாது.
  •  வகுப்பறையில் குழந்தைகளுடன் மகிழ்வாக நேரம் செலவழித்து ஆடல், பாடல், படங்கள் மூலம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இருந்தால் குழந்தைக்கு நல்லது. அத்துடன் குழந்தையின் தனிப்பட்ட திறமையை கண்டறியும் ஆசிரியர் கிடைத்துவிட்டால் குழந்தைக்கு இரட்டிப்பு லாபம் தான்.
  •  காலையில் தன் வகுப்புக் குழந்தைகள்  எல்லோரும் வகுப்பறைக்கு வந்து விட்டார்களா என்று கவனிக்கும் ஆசிரியரும், உதவியாளரும், மாலையில் எல்லா குழந்தைகளையும் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்ட பிறகு தான்  கிளம்ப வேண்டும்.
  •  குழந்தைகளை கேள்வி கேட்க ஊக்கப்படுத்த வேண்டும். தான் சொல்லிக் கொடுப்பதை மட்டும் கவனிக்க வேண்டும் என்று ஆசிரியர் நினைக்கக் கூடாது ( பெற்றோர்களே உங்களுக்கும் இதே அறிவுரை தான்).
  •  குழந்தைகளின் கேள்விகளுக்கு முடிந்த அளவு சரியான விளக்கத்தைத் தர ஆசிரியர் முயற்சி செய்ய வேண்டும்.
  •  பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பு குழந்தைக்கு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.
  •  இரு மொழிகளில் (உ-ம்) தாய்மொழி, ஆங்கிலம் இரண்டு மட்டும் பயிற்றுவிக்க வேண்டும். தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரவேண்டும். குழந்தையை வேற்று மொழியில் பேசச் சொல்லி கட்டாயப்படுத்த கூடாது.
  •  குழந்தைகளை வகுப்பறையில் மற்ற குழந்தைகளுடன் கூடி விளையாட ஆடி, பாடி, மகிழ தாராளமாக வாய்ப்பு அளிக்க வேண்டும்.

 இவையெல்லாம் ஓரளவாவது இருந்தால் அது Child Friendly School. அதாவது  குழந்தை நேயப்பள்ளி. உங்கள் சுட்டியை தாராளமாக சேர்க்கலாம்.

 அதிகமான கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மட்டும் தான் தரமானவை என்பது இல்லை. இதைப் புரிந்து கொள்ளுங்கள். பள்ளிக்கூடம் என்பது குழந்தைக்குப் பாதுகாப்பானதாக, உணர்வுகளுக்கு இனிமையானதாக, மன அளவில் குழந்தைகளை உயர்த்திவிடுவதாக, மொத்தமாக மகிழ்ச்சி நிறைந்த ஒரு வீடாக இருக்க வேண்டும். அது குழந்தையின் பல்வேறு திறன்களை, முக்கியமாக ஆழமாக சிந்தித்து செயல்பட வைக்கும் இடமாக இருக்க வேண்டும்.

இதெல்லாம் மருத்துவர் கங்கா சொல்லவில்லையம்மா! ஐக்கிய நாடுகள் குழந்தைகள் கூட்டமைப்பும் (UNICEF) இந்திய குழந்தை மருத்துவர் கூட்டமைப்பும் இந்த வழிமுறைகளைத் தொகுத்தளித்திருக்கின்றன.

கேள்வி

யமுனாவுக்கு பத்து வயது ஆகிறது. ஹெச்.பி.வி. (HPV – கருப்பை வாய் புற்றுநோய்த் தடுப்பூசி) போடச் சொல்கிறார்களே? அது கட்டாயமா?

பதில்

தடுப்பு ஊசிகள் குழந்தையின் எதிர்கால நல்வாழ்விற்கு அவசியம். அதுவும் இந்த ஊசி குழந்தைகளுக்குக் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும். 1990களில் தொடங்கி கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் பல அடுக்கு ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தத் தடுப்பூசி உருவாக்கப்பட்டிருக்கிறது. 2000களின் தொடக்கத்தில் புழக்கத்துக்கு வந்தது. பெரிய பக்க விளைவுகள் இன்றி 25 வருடங்களாக இது பயன்பாட்டில் உள்ளது.

ஹ்யூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்று என்பது ஒரு பாலியல் நோய் – அதாவது பாலுறவால் பரவக் கூடியது. ஆண்களிடமிருந்து பெண்களுக்குத் தொற்றுகிறது. இந்தத் தொற்று நீடித்து இருக்கும்போது கருப்பை வாய் மற்றும் பிற பகுதிகளில் (Vulva, Vagina போன்ற பெண்ணுறுப்பு சார்ந்த பகுதிகள்) புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். ஆண்களுக்குப் பிறப்புறுப்பு, மலத்துவாரம் ஆகிய இடங்களில் புற்றுநோய் ஏற்படும். புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புபெண்களுக்கு மிகவும் அதிகம்.

இந்தியாவில் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளில் மார்பகப் புற்றுநோய் முதல் இடத்திலும் கருப்பை வாய் புற்றுநோய் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. 2022ன் புள்ளி விவரப்படி 6,60,000 மகளிருக்குப் புற்றுநோய் ஏற்பட்டு அதில் 35,000 மகளிர் இறந்திருக்கிறார்கள். வளர்ந்துவரும் நாடுகளில்தான் இறப்பு விகிதம் அதிகம்.

மற்றுமொரு ஆராய்ச்சி முடிவின்படி இந்த ஹெச்.பி.வி தடுப்பூசி போடுவதால் இறப்பு 62% குறைந்திருப்பதாகவும் தெரிகிறது. இது மகிழ்ச்சியான செய்தி அல்லவா?

இந்த வைரஸ் தொற்று புற்றுநோயை மட்டுமே ஏற்படுத்துவது இல்லை. பெண்களுக்குக் கருப்பை வாயில் புண், கருத்தரிப்பதில் தாமதம், கருச்சிதைவு, குறைமாதக் குழந்தை மற்றும் எடை குறைந்த குழத்தைப் பிறப்பு ஆகியவையும் ஏற்படக்கூடும். ஆண்களுக்கு மலத்துவாரத்தைச் சுற்றி மரு போன்ற புண்கள் (Anal wart), விந்தணு எண்ணிக்கைக் குறைவு, விந்தணு அமைப்பில் மாறுபாடுகள் ஆகியவை ஏற்படுகின்றன.

இந்தத் தடுப்பூசி தற்போது அரசு மருத்துவ சேவை மூலம் இலவசமாக அளிக்கப்படுவதில்லை. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துகொண்டு இருக்கின்றன

இந்தத் தடுப்பூசி ஆண், பெண் இரு பாலருக்கும் அளிக்கப்பட வேண்டும். முதல் பாலியல் உறவுக்கு முன்பு அளிக்கப்பட வேண்டும்.

15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு முறையும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு மூன்று முறையும் ஊசி போட வேண்டும். இரண்டு தவணை போடும்போது முதல் ஊசி போட்டு ஆறு மாதங்கள் சென்று அடுத்த ஊசி போடவேண்டும். மூன்று தவணைகள் தேவைப்படும்போது முதல் ஊசி போட்டு 1-2 மாதங்களில் இரண்டாவது தவணை, ஆறு மாதங்களில் மூன்றாவது தவணை என்று கணக்கிட்டு ஊசி போட வேண்டும். இந்த ஊசிகள் 80-90% வைரஸ் தொற்றினைத் தடுக்கின்றன. 60-70% புற்றுநோயைத் தடுக்கின்றன.

லேசான காய்ச்சல், உடம்பு வலி, ஊசி போட்ட இடத்தில் லேசான வலி போன்ற பக்க விளைவுகள் ஓரிரு நாட்கள் மட்டுமே இருக்கும்.

மகளிரின் நலத்தில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும் ஹெச்.பி.வி தடுப்பு ஊசியைக் கட்டாயம் யமுனாவிற்கும் பரிசாக, சொத்தாக அளியுங்கள். உங்கள் நண்பர்களின் ஆண், பெண் குழந்தைகளுக்கும் பரிந்துரை செய்யுங்கள்.

படைப்பாளர்

மரு. நா. கங்கா

நா.கங்கா அவர்கள் 30 வருடம் அனுபவம் பெற்ற குழந்தை மருத்துவர். குழந்தை மருத்துவம் மற்றும் பதின்பருவத்தினர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான உணவு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற உணவு ஆலோசகர். குழந்தை வளர்ப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்திய குழந்தை மருத்துவர் சங்கத்தின் “சிறந்த குழந்தை மருத்துவர்” விருது பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார். வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.