ரத்தக்கண்ணீர் 1954ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இது குறித்துக் கதை கதையாகச் சொல்கிறார்கள். தவறான பாதையில் செல்பவன் சீரழிவான் என்பதைச் சொல்லும் ஒற்றை சொற்றொடர் கதை இது.

தோற்றவனின் கதையை யாரும் சொல்லுவதில்லை. அப்படிச் சொன்னாலும் அது வெற்றி பெறுவதில்லை. ஆனால் வாழ்க்கையையே தொலைத்தவனின் கதை இது. ஒரு நாடகம்/ திரைப்படத்தின் கதை இப்படி இருக்கும் என்று ஓர் இலக்கணம் உண்டு. அதைத் தகர்த்த ஒரு கதை; திரைப்படம் என இதைச் சொல்லலாம். 

2003இல் இப்படம் கன்னடத்தில் ‘ரக்தகண்ணீரு’ என்ற பெயரில் வந்துள்ளது. 

முதலில் கதையைப் பார்ப்போம். மோகன் தீயப்பழக்கங்கள் அனைத்தும் உள்ளவர். வெளிநாட்டில் படித்து வந்தவர். அவருக்கு ஊரில் ஒரு அப்பாவிப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால் மோகன், காந்தா என்கிற வேறு பெண்ணின் காலடியில் விழுந்து கிடக்கிறார். கண்டிக்கும் நண்பன் பாலு, தாய், மனைவி என யார் சொல்லியும் கேட்காமல் வாழ்கிறார். ஒரு காலகட்டத்தில் அவருக்குத் தொழுநோய் வருகிறது. காந்தா அவரை எட்டி உதைக்கிறார். பிச்சைக்காரராக மாறும் அவர், நண்பனையும் தன் மனைவியையும் இணைத்து வைக்கிறார். தான் இறந்த பிறகு, தவறு செய்யும் மனிதன் எவ்வாறு சிரமத்திற்குள்ளாவான் என அனைவருக்கும் தெரிய வேண்டும்.  அதனால் தனக்குச் சிலை வைக்க வேண்டும் எனச் சொல்லி இறக்கிறார். இவ்வளவுதான் கதை.  

ஆனால் இந்தப்படம் ஏற்படுத்திய தாக்கம் என்பது அளவிட முடியாததாக இருந்திருக்கிறது. ஒழுக்கக் குறைவிற்கும் தொழுநோய்க்கும் தொடர்பு இல்லை என்பதை முதலில் சொல்லிக் கொள்ள வேண்டும். அதனால் இப்போது அவரின் மகன் ராதா ரவி, தொழுநோய்க்குப் பதிலாக கதாநாயகனுக்கு எய்ட்ஸ் நோய் என மாற்றி இதே கதையை நாடகமாகப் போடுகிறாராம். என் தந்தையின் நண்பரும் என் தோழியின் அப்பாவுமான ஒருவர் தொழுநோயால் பெரிதும் சிரமப்பட்டார். உயர்ந்த குணமும், சிறந்த நடத்தையும் கொண்டிருந்தவர். அவரின் மனைவி பெயர் மேரி. இறுதிவரை அன்பாகக் கவனித்து வழியனுப்பி வைத்தது குடும்பம். அவரைப் பாடச் சொன்னால், ‘எனை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா’ எனப் பாடுவார். கண்ணில் நீர் கொட்டும்.

நாடகம் திரைப்படம் போன்றவற்றில் நல்லவன் சொல்லும் கருத்துக்குக் கைதட்டல் வரும். ஆனால், இத்திரைப்படத்தின் தொடக்கம் முதலே கெட்டவன் என மனதில் பதிந்த பின்னும், அவன் சொல்லும் கருத்துக்களுக்குத் திரைப்படம் முழுவதும் கைதட்டல் விழுந்து இருக்கிறது என்பது வியப்புதான். 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

என்ற குறளின் வடிவம் என்பது இந்தத் திரைப்படம்தான்.

இந்தக் கதைத் திரைப்படமாவதற்கு முன்பே, பல நூறு அல்லது ஆயிரம் தடவைகள் நாடகமாகத் தமிழ்நாடு மட்டுமல்லாமல், தமிழர்கள் வாழ்ந்த பல இடங்களிலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்து கொண்டேயிருந்திருக்கிறது. நடிகவேள் எம் ஆர் ராதா, அன்றாட நிகழ்வுகள், அரசியல் மாற்றங்கள் போன்றவற்றைத் தொடர்ந்து நாடகத்தில் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார். அதுவே இந்தத் திரைப்படத்தின் விளம்பரமாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் எதிர் நாயகன் கொடுத்த கருத்துகள் அனைத்திற்கும் கைதட்டல் விழுந்திருக்க வேண்டும். 

நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த ரத்தக்கண்ணீர் 

கதை வசனம் திருவாரூர் கே. தங்கராசு 

நடிகர்கள் 

நடிகவேள் MR ராதா 

ஸ்ரீ ரஞ்சனி 

எஸ்.எஸ். ராஜேந்திரன்

MN கிருஷ்ணன் 

சந்திரபாபு 

துரைசாமி 

சிங்கம் கிருஷ்ணமூர்த்தி 

கொட்டாப்புளி ஜெயராம் 

MR சுந்தரம் 

MN ராஜம்

SR ஜானகி

KS அங்கமுத்து 

மற்றும் பலர் 

இசை அமைப்பு சிதம்பரம் ஜெயராமன்

பின்னணி இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடல்கள் பாரதியார், பாரதி தாசன், உடுமலை நாராயண கவி,  கு. சா. கிருஷ்ணமூர்த்தி.

பின்னணிப் பாடகர்கள் 

சிதம்பரம் ஜெயராமன் 

எம்.எல். வசந்தகுமாரி

T. V. இரத்தினம்  

 T. S. பகவதி 

R ராஜேஸ்வரி 

ரத்னமாலா 

ராணி 

பத்மா 

கமலா 

ஏ.பி.கோமளா 

டைரக்ஷன் கிருஷ்ணன்-பஞ்சு

திரைப்படம் முழுவதுமே மோகனின் சிலை முன்னால், பாலு நின்று மோகனின் வாழ்க்கையைச் சொல்வதுதான் திரைப்படம்.  பல தீயப் பழக்கங்களுக்கு அடிமையானதால், மோகனைத் தான்தான் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு அழைத்து வந்ததாகச் சொல்கிறார். 

அவரின் நடவடிக்கைகள் தெரிந்தும், அவருக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத ஒரு பெண்ணை உறவு எனச் சொல்லி,  அவருக்குத் திருமணம் செய்து வைத்ததும் தவறு என்றோ, ஒரு பெண்ணின் வாழ்வு பாழாகிவிட்டது என்பதோ கதையோட்டத்தில் வருவது போலத் தெரியவில்லை. பாதிக்கப்படும் மனைவிக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவே கதையை நகர்த்துகிறார்கள். பல பெண்களுடன் தவறான உறவு வைத்து இருக்கும் மோகனுக்கும் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்படுகிறது. இப்படித்தான் உலகம் இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது கதை. 

நண்பனையும் மனைவியையும் இறுதியில் இணைத்து வைப்பது என்பது அந்தக் காலக்கட்டத்திற்கு என்ன இந்தக் காலக்கட்டத்திற்கும்கூட புரட்சிதான். இறுதிக்காட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனத் தயங்கியிருக்கிறார்கள். அந்தக் காட்சி இல்லையென்றால் தான் நடிக்கப் போவதில்லை என எம் ஆர் ராதா வலியுறுத்தி இருக்கிறார். இதனால், சில மாதங்கள் படப்பிடிப்பு கூட நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பின் அதுவே  ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. 

மோகன் ஆணவத்தைக் காட்டும் உரையாடல்தான் திரைப்படத்தின் பலம்.  பழமைவாதத்தை இகழ்வது, மூடநம்பிக்கையைச் சாடுவது எனத் திரைப்படம் முழுவதும் அனல் பறக்கிறது.   

“லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்” எனப் பாமர மக்களிடம் தொடங்குவார். “யோவ்! தமிழ்ல பேசு! தமிழ்ல பேசு!!” என்று அவர்கள் கத்த, இவர் பதிலுக்குப் பேசும் அலப்பறையில் சிரிக்கத் தொடங்கி விடுவோம்.

“ஊருக்கொரு லீடர். ஆளுக்கொரு கொள்கை. அவனவனுக்கு ஒரு டஜன் பட்டினிப் பட்டாளம். நான்சென்ஸ்.”

‘கவுன் போடு’ என அம்மாவைச் சொல்லுவது; ‘கிராப் வெட்டிக்கொள்’ என மனைவியைச் சொல்வது, இறந்து போன அம்மா அருகிலிருந்து அழும் உறவினர்களைப் பார்த்து, ‘நானே சும்மா இருக்கேன் இவனுக எதுக்கு இப்படி அழறானுக’ என்று சொல்வது எனக் குடும்பத்தில் ரகளை பண்ணினார் என்றால், வெளியில், 

‘இந்தியாவுல க்ரோர்ஸ் கணக்கா வெச்சுகிட்டிருக்கான் கட்சிய. எல்லா கட்சியும் பிஸினசில புகுந்து சம்பாதிக்கறான். வேற ஒண்ணுத்துக்கும் லாயக்கில்ல. தொழிலாளர் கட்சி, முதலாளி கட்சி, சாமியார் கட்சி இதே வேல.’ 

‘ஹோட்டல் சாப்பாடுல கல்லு பொறுக்க என்னால முடியாதுப்பா!’ 

‘அடடா! திங்கிறதுக்குக்கூட கட்சி வச்சு இருக்காங்கடா யப்பா!’

‘ராத்திரில மூட்டைப் பூச்சி கடிச்சா என்னப்பா செய்யறீங்க!’ 

‘ரோடு போடுறதுக்கு கல்லை மட்டும் கொண்டாந்து இறக்கிடுறானுங்க. அப்புறம் ரோடு எப்பவாவது போடுறானுங்க.’ 

எனத் திரைப்படம் முழுவதும் ஒரு எதிர்மறையான கதாபாத்திரம் சிரிக்கவைக்க முடிந்திருக்கிறது என்றால், திருவாரூர் தங்கராசு அவர்களின் திறமைதான். இவர் பெரியாரின் கொள்கைகளை உள்வாங்கி, நாடகங்களை எழுதியவர். இந்த நாடகம் முதன்முதலில் 14 ஜனவரி 1949 அன்று திருச்சிராப்பள்ளியில் அரங்கேறியிருக்கிறது. 

எம் ஆர் ராதா, 1937 (ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி) முதல் 1942 வரைத் திரைப்படங்களில் நடித்து வந்தவர், பின் நாடகத்தில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறார். ரத்தக்கண்ணீர் கதையைத் திரைப்படமாக எடுக்க அவரை அணுகியபோது, பல நிபந்தனைகள் போட்டு இருக்கிறார். அவ்வையார் திரைப்படத்தில் நடித்த கே பி சுந்தரம்மாள் அம்மாவை விடச் சம்பளம் கூடுதல் (1,00,000) வேண்டும்; தனது நாடகத்திற்கு இடையூறு இல்லாமல் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்ற அவரின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. 

அவருக்கு ‘நடிகவேள்’ என்ற பட்டத்தைக் கொடுத்தவர் ஐயா பட்டுக்கோட்டை அழகிரி. இந்தத் திரைப்படத்தில் எழுத்து போடும்போதே நடிகவேள் என்று இணைத்துத்தான் போடுகிறார்கள். இந்தத் திரைப்படத்திற்குப் பின் தொடர்ந்து நடித்து 125 படங்கள் என்ற எண்ணைத் தொட்டிருக்கிறார். 

இந்தத் திரைப்படத்தில், ஒப்பனை, நடிப்பு, தெனாவெட்டான பேச்சு எல்லாம் அற்புதம். பெரும் சோகப்படத்தை இவ்வளவு ரசித்துப் பார்த்திருக்கிறார்கள் என்றால் இப்படத்தைத் தன் தோளில் சுமந்த எம் ஆர் ராதாவையே அப்புகழ் போய்ச்சேரும். 

அடுத்து இந்தத் திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்குப் போனவர் என்றால் அது எம் என் ராஜம் அம்மாதான். பலரும் நடிக்கத் தயங்கிய பாத்திரத்தைத் துணிந்து நடித்து இருக்கிறார். எம் ஆர் ராதா அவர்களை, எட்டி உதைக்கும் காட்சியில் நடிக்கத் தயங்கிய போது, எம் ஆர் ராதா அவர்கள்தான் ‘நீ உதைப்பது மோகனை’ எனச் சொல்லி உதைக்க வைத்து இருக்கிறார்.

எஸ் எஸ் ஆர் அவர்களும் கதைக்கு அமைதியான முறையில் வலு சேர்க்கிறார்.

அனைத்துப் பாடல்களும் பிரபலமாக இருந்தவை. 

கு.சா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதி, சி.எஸ். ஜெயராமன், எம்.ஆர் ராதா இணைந்து பாடிய பாடல்

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் 

நிம்மதி கொள்வதென்பதேது-வாழ்க்கையில் 

அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும் (2)
அரும்பிட முடியாது

முடியாது. உண்மை, உண்மை,
என் ஆனந்தம் என் மகிழ்ச்சி என் இன்பம்
அத்தனையும் அற்று போய்விட்டது

அமைதியழிந்தது புயலும் எழுந்தது
ஆணவம் இன்றோடொழிந்தது 

ஒழிந்தது, என் ஆணவம் என் கர்வம் என் அகம்பாவம்
அத்தனையும் அற்று போய்விட்டது

குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவது ஏது
நல்ல குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவது ஏது

வாஸ்த்தவம், குணத்தை இழந்தேன், கொண்டவளைத் துறந்தேன்
கண்டவள் பின் சென்றேன் கட்டுடலையும் இழந்தேன்
இன்று கண்ணையும் இழந்தேன்
வாழ்க்கையில் இனி நிம்மதி யேது ஏது

உடுமலை நாராயண கவி இயற்றி, T.V.ரத்னம் அவர்கள் பாடிய பாடல். இப்பாடல் பூனம் என்ற ஹிந்திப் படத்தில் (1952) லதா மங்கேஷ்கர் அவர்கள் பாடிய ஜூமே ஜூம் தில் மேரா (Jhoome Jhoome Dil Mera) என்ற பாடலின் மெட்டில் உள்ளது. சங்கர் ஜெய்கிஷன் அவர்கள் இசையமைத்த பாடல் இது.

ஆளை ஆளைப் பாக்குறாய்

ஆட்டத்தைப் பார்த்திடாமல்

நாட்டியம் என்றே சொன்னால்

கூட்டத்தில் குறைச்ச லில்லை!

பாட்டியல் ராகம் தாளம்

கேட்க இங்கு யாரும் வல்லை 

சேட்டைகள் செய்துமே

காட்டுறார் தங்கப்பல்லை;

கல்யாண ஆசையாலே

கண்ணைக் கண்ணைக் காட்டுறார்! 

செந்தாழம் பூவைக் கண்டு

தீராத மோகம் கொண்டு

திண்டாட்டம் போடுகிறார்

நாற்காலியோடு ருண்டு

சொந்தங் கொண்டாட எண்ணிச்

சும்மா சும்மா பார்க்கிறார்! 

சிகரெட்டை ஊதித் தள்ளிச்

சேர்மீது துள்ளித் துள்ளிச்

சிநேகிதர் தம்மைக் கிள்ளிச்

சிரிக்கிறார் ஏதோ சொல்லி!

சிங்காரம் பண்ணுறார்

அங்கொரு ரொக்கப் புள்ளி

 எம். எல்.வசந்த குமாரி அவர்கள் பாடிய பிரபலமான பாடல் 

காதவை சாத்தாடி கையில் 

காசு இல்லாதவன் கடவுளானாலும் 

காதவை சாத்தாடி 

மதியும் குளிர் நதியும் சடை 

மருவியமுக் கண்ணன் 

மாயவனாம் கண்ணன் சுப்ர 

மண்ய அவன் அண்ணன் 

துதி புரியும் அண்ணன் 

துதி புரியும் மனிதர்களும் 

சொர்ண புஷ்பம் தராவிட்டால் 

துரத்தியடித்து இழுத்து 

இரவல் விசிறி மடிப்பு வேட்டிக்கு 

இடம் கொடுக்காதே- இயல் 

இசை நாடக கலைஞர் தமது 

இணக்கம் விடாதே 

அறிவில்லார் ஆதரவை 

அன்பு கொண்டு தேடு 

அதனாலே மேம்படும் 

அதிர்ஷ்டம் உன்னை நாடும் 

பொருள் தருவாரோடு உறவே கொண்டாடு 

பூமி மீது போலியுண்டு காலியுண்டு 

ஆளைக்கண்டு 

மனித வாழ்விலே மனமது போலே 

வாலிபம் தனில் நாமெல்லோரும் 

அனுபவித்ததே இன்பம் ஆகும் 

இனிய போகங்கள் யாவும் அநித்யம் 

இறந்தபின்னாலே ஏற்படும் நித்யம் 

என்றே சொல்லும் யோகியை வெறுப்போம் 

இன்பம் காணும் போகியை மதிப்போம் 

எழில் கொள் மாதரும் பழந்தருஞ் சாறும்  

இச்சை கொண்டிடும் இன்பங்களன்றோ 

இதனிலும் இன்பம் வேறொன்றுண்டோ?

நல்ல கீதத் தொழிலுணர் பாணர் 

நடனம் வல்ல நகைமுக மாதர் 

அல்லல் போக இவருடன் கூடி 

ஆடியாடிக் களித்தின்பம் கொள்வோம் 

சொல்ல நாவு கனியுதடா- நற் 

சுதியில் ஒத்து துணையொடும் பாடி 

புல்லும் மார்போடாடிக் குதிக்கும் 

போகம் போலொரு போகமின்க்குண்டோ 

மாதரொடு மயங்கிக் களித்தும் 

மதுர நல்லிசை பாடிக் குதிக்கும் 

காதல் செய்தும் -2

பெறும் பல இன்பம் 

கலையில் இன்பம்-2

பூதலத்தினை ஆள்வதில் இன்பம் 

பொய்மையல்ல-2 இவ்வின்பங்களெல்லாம் 

பொய்மையல்ல-2 இவ்வின்பங்களெல்லாம்

ஆலைக்கு வேலைக்குப் போன கணவனை  எதிர்பார்த்து இருக்கும் மனைவி பாடுவதாக பாவேந்தர் பாரதி தாசனார் எழுதிய பாடலை எம்.எல். வசந்தகுமாரி பாடுகிறார். 

ஆலையின் சங்கே நீ ஊதாயோ? மணி

ஐந்தான பின்னும் பஞ்சாலையின் சங்கே ஊதாயோ?

காலை முதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே

வேலை செய்தாரே! என் வீட்டை மிதிக்கவே

மேலைத் திசைகளில் வெய்யிலும் சாய்ந்ததே

வீதி பார்த்திருந்த என் கண்ணும் ஓய்ந்ததே

மேலும் அவர் சொல் ஒவ்வொன்றும் இன்பம் வாய்ந்ததே

விண்ணைப் பிளக்கும் உன் தொண்டையேன் காய்ந்ததே

குளிக்க ஒரு நாழிகையாகிலும் கழியும்

குந்திப் பேச இரு நாழிகை ஒழியும்

விளைத்த உணர்வில் கொஞ்ச நேரம் அழியும்

வெள்ளி முளைக்கு மட்டும் காதல்தேன் பொழியும்

உடுமலை நாராயணகவி இயற்றி T. V. ரத்தினம் அவர்கள் பாடிய பாடல் 

மாலையிட்ட மங்கை யாரோ?

என்ன பேரோ? -அந்த  

மானினியாள் எந்த ஊரோ  -உங்கள் 

மனம் நாடிய சுகமே தரும் 

மதி மேவிய வனிதா மணி 

மாமத வேள் தென்றல் தேரோ -திரு

வாய் மலர்ந்தே அருளீரோ

முகிலுக் கிணையு மென்ற

குழலைத் தழுவி நின்ற 

முக வட்ட மது சந்திர பிம்பமோ -பிறை 

நிகர் நெற்றி அவள் கண்ட சங்கமோ -பற்கள் 

முல்லையோ இடையில்லையோ -மலர்க்

கொல்லையோ வளர் செல்வியோ -துடை 

மகரத் துவஜன் கோயில் ஸ்தம்பமோ -தங்கள் 

சகபத்தினி உடலுந் தங்கமோ

கெண்டை மீனும் மானும் கண்டு நாணும் சுழல்  

வண்டு நேரும் விழி வல்லியா -கற்

கண்டு தேன் மருவும் சொல்லியா -தமிழ்ச் 

சிந்து பாடி மணித் தண்டையோடு பாதம் 

கொண்டு ஆடுகின்ற மெல்லியா -எந்தன் 

சிந்தைதான் மகிழச் சொல்லையா

காவியக் கலையோ -சிற்ப 

ஓவியச் சிலையோ -அந்த 

காமனின் சிலை பூமியின் மிசைக் 

காரிகையாய் உருமாறி வந்தாளோ

காவின் மலர்க்கொடியோ -கல்வி 

கேள்வியில் எப்படியோ -உங்கள் 

காதலி எந்தன் மாதிரி அன்பொடு

காமுறுஞ் சல்லாப ரசக் கோமளப் பெண்ணோ

கற்பனையின்  சீரோ கட்டழகி யாரோ

அற்புத மின்னோ குணவதி 

அவளும் உனக்கு தகுந்தவளோ

பாடியவர் T.S. பகவதி

தட்டி பரித்தார் என் வாழ்வை 

சஞ்சலம் கொள்ள வைத்தாரே 

வெட்டி முறித்து விட்டாரே 

வேரோடு சாய்த்து விட்டாரே 

ஆடிக்கிடந்த தேனாற்றில் 

அள்ளிக் கரைத்தாரே நஞ்சை 

வாடி அழுதிடலானேன்- இந்த 

வஞ்சியைத் தேற்றுவாரில்லை 

நெருப்பில் துடிக்கும் புழு ஆனேன் 

நீரைப் பிரிந்த மீன் ஆனேன் 

உருப்பட வழி ஒன்றும் இல்லையே 

என் உயிர் போய்த் தொலையவும் இல்லை 

வீட்டு விளக்கை தள்ளி மிதித்தாரே!- ஒரு 

மின்மினிப் பூச்சியை மதித்தாரே 

கூட்டுக கிளியைக் கொன்றாரே 

குள்ள நரியை நம்பிச் சென்றாரே 

எனப் பல பிரபலமான பாடல்கள் உள்ளன. 

இன்று பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.