இளம் வயதில் பள்ளிக்கூடம் போகாமல் மட்டம்போட வயிறு வலிக்கிறது என்று சொல்வது சகஜம்தான். அலுவலகத்தில் வேலையில் சேர்ந்த பிறகுகூட ‘ஆஸ் ஐயாம் ஸபரிங் ஃபிரம் ஃபீவர்’ என்று பொய்க் காரணம் எழுதிய விடுப்புக் கடிதம் கொடுத்திருப்போம்.

ஆனாலும், உடம்பு சரியில்லை என்று பொய் சொல்லி ஒருத்தர், ஊரை ஏமாற்றித் தொழிலதிபர் ஆனதாகக் கேள்விப்பட்டிருக்கமாட்டோம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெல் கிப்சன் (Belle Gibson), அதைச் செய்திருக்கிறார். இந்தப் பெண்ணை, இன்ஸ்டாவின் மோசமான மோசடியாளர் என்கிறது நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படம்.

2009ஆம் ஆண்டு பதின்ம வயதில் ‘ஸ்கேட்டிங்’ குழும உறுப்பினராக ஆனதிலிருந்து தொடங்குகின்றன பெல்லியின் பொய்கள். இக்குழுவின் இணையதளத்தில் தன் உடல்நிலை குறித்துப் பதிவிட ஆரம்பித்தார். அவசர ஊர்திக்குக் காத்திருக்கிறேன்’எனத் தொடங்கி, அறுவை சிகிச்சைவரையிலான பதிவுகள். இதயம் ரத்தத்தை பம்ப் செய்யும் திறனை இழந்துவிட்டது. இதய அறுவை சிகிச்சை நடக்கிறது. அதுவும் ஒன்றல்ல, மூன்று முறை. மாரடைப்பு. அது இரண்டு முறை. ஒரு தடவை பக்கவாதமும் வந்தது. இத்தனை துயரமான வாழ்வில் இரண்டுமுறை அறுவைசிகிச்சை மேசையில் ‘இறந்துபோய்’ மீண்டு வந்தார். பின்னர் மூளையில் கட்டியும் வந்தது. எல்லாமே பொய்தான்!

அவர் பதிவிட்டது இளைஞர்கள் நிறைந்த குழுமம் என்பதால் இதைப் பற்றிப் பெரிதாக அவர்கள் அலட்டிக்கொள்ளவில்லை. பெல்லி, தான் வசித்த சிறிய நகரத்தைவிட்டு மெல்பர்னுக்கு இடம்பெயர்ந்தார். இணையத்தில் சமூகவலைத்தளங்கள் பரவலான காலக்கட்டம். சாமானியர்களும் புகழ்வீச்சுடன் வலம்வரக் களம் அமைத்தன இத்தளங்கள். இன்ஸ்டாவில் பதிவுகளிட்டுக் கொண்டிருந்த பெல்லி, 2013ஆம் ஆண்டு தனக்கு மூளையில் கட்டியிருப்பதாகப் பதிவுசெய்தார். சரிசெய்ய முடியாத நான்காம் நிலையில் இருக்கும் கட்டி. ‘நான்கே மாதங்களில் இறந்துவிடுவேன் எனச் சொல்லப்பட்ட நான், வழக்கமான மருத்துவத்தைக் கைவிட்டு, மாற்று மருத்துவம், உணவு, வாழ்வியல் முறைகளின் மூலம் நலமாக இருக்கிறேன் என்றார்.

வழக்கமான மருத்துவம் என அவர் குறிப்பிட்டது, கீமோதெரபி, மருந்து, மாத்திரை உள்ளிட்ட நவீன அறிவியல் பரிந்துரைக்கும் மருத்துவத்தை. சட்டென அந்தப் பதிவு, பலரின் கவனத்தை ஈர்த்தது. பற்றிக்கொள்ள ஏதேனும் நம்பிக்கையான விஷயம் கிடைக்குமா எனக் காத்திருந்த புற்றுநோய் பாதிக்கப்பட்ட  ஆயிரக்கணக்கானவர்கள், பெல்லியைப் பின்தொடர ஆரம்பித்தனர்.

உணவுப் பதார்த்தங்களின் படங்களைப் பதிவிட்டால் பொதுவாகவே நிறைய விருப்பக்குறிகள் வரும். பொன்னிற முடியுடன், அழகான, ஆரோக்கியமான, கச்சிதமான உடலுடன் புற்றுநோயுடன் போராடும் இளம் தாயின் பதிவுகள் வைரல் ஆகாமல் போனால்தான் ஆச்சர்யம்!

தனக்குக் கிடைத்த புகழ்வீச்சினைச் சரியாகப் பயன்படுத்தி, ‘தி ஹோல் பேன்ட்ரி’ என்ற செயலியை அறிமுகப்படுத்தினார். அதில் ஆரோக்கிய உணவுக்கான ரெசிபி, உடற்பயிற்சிகள், வாழ்வியல் தத்துவங்கள், ஆலோசனைகள், அனுபவங்கள் எல்லாம் இருந்தன. புற்றுநோய் சிகிச்சை அமைப்புகளுக்கு நிதி திரட்டினார். மக்களிடம் பேராதரவு கிடைத்தது. ‘வெல்னஸ் வாரியர்’ எனப் பெயரிட்டுச் செய்திகள் வெளியாகின. அனைத்துலக அளவில் சந்தையை வைத்திருக்கும் பென்குவின் பதிப்பகம் இவருடைய சமையல் குறிப்பு நூலைப் பதிப்பிக்க முன்வந்தது. ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஸ்மார்ட்வாட்சில் பெல்லியின் ஆரோக்கிய செயலியைச் சேர்த்துக்கொண்டது. இவ்வளவு பெரிய அங்கீகாரங்களுடன் பல நாடுகளுக்கும் விமானங்களில் பறந்துகொண்டிருக்கும் பிஸியான பிஸினஸ் பெண்மணியாகிவிட்டார் பெல்லி.

பெரிய வீடு, கார் என்று எல்லாம் வந்தன; அவர் சொன்ன மரணம் மட்டும் வரவில்லையே என யாருக்கும் சந்தேகம் எழவில்லை. 2014ஆம் ஆண்டு, மீண்டும் ஒரு புற்றுநோய் பதிவைப் போட்டார். ஏற்கெனவே இரண்டு புற்றுநோய்கள் எனச் சொல்லிவிட்டதால் இந்த முறை மூன்றாவது நான்காவது புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தார். கர்பப்பை, ஈரல், மூளை, ரத்தம், மண்ணீரல் என்று தனக்குத் தெரிந்த உடல் உறுப்புகள் பெயரை எல்லாம் குறிப்பிட்டு அங்கெல்லாம் கேன்சர் பரவிவிட்டது என்றார். இதன் பிறகு, பெல்லியின் நட்புப்பட்டியலில் இருந்த ஷானல் சந்தேகம் கொள்ளத் தொடங்கினார்.

பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் வலிப்பில் துடித்த பெல்லிக்கு உதவ ஆம்புலன்ஸை அழைக்க முயன்றார் ஷானல் (Chanelle McAuliffe). உடனே இயல்புநிலைக்கு வந்து எழுந்து உட்கார்ந்து அதைத் தடுத்தார் பெல்லி. சந்தேக விதை விழுந்தது அப்போதுதான். தன்னைப் போலவே ஆரோக்கியமற்ற உணவுகளை உண்டு, குடித்துக் கும்மாளமிடும் பெல்லியின் வாழ்வு, அவர் இன்ஸ்டாவில் காண்பிக்கும் மதுவில்லாத ஆரோக்கிய வாழ்வு டெம்ப்ளேட்டுடன் ஒத்துப்போகவில்லயே என யோசிக்க ஆரம்பித்தார். நேரடியாகவே கேட்டபோது, மருத்துவ அறிக்கைகள் எதையும் காண்பிக்காது மழுப்பினார், பெல்லி. பெல்லியைப் பற்றி காவல்துறை, மருத்துவத்துறை, செய்தியாளர்கள் எனத் தன்னால் இயன்றவரை தகவல் தெரிவித்து விஷயத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவர முயன்றார்.

ஷானல்

பெல்லி, தான் சேகரித்த நிதியை வாக்களித்தபடி தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கவில்லை என்று செய்தி ஷானல் முயற்சியின் மூலம் வெளியானது. இதே நேரத்தில், புற்றுநோய் பாதித்த மனைவிக்காக பெல்லியை இன்ஸ்டாவில் பின்தொடர ஆரம்பித்த செய்தியாளர் ஒருவரும் பதிவுகளில் இருக்கும் பெல்லியின் கடந்த காலத்தைத் தேட ஆரம்பித்திருந்தார். அவருடைய புலனாய்வுக் கட்டுரையும் அடுத்து வெளியானது. ஸ்கேட்டிங் குழுவில் இருந்தபோது சொன்ன பொய்கள் அனைத்தையும் தோண்டி எடுத்து வந்து கொட்டியது அக்கட்டுரை. அனைத்தும் சர்ச்சையானது. அவற்றுக்கு பதிலளிக்காமல் காணாமல் போன பெல்லி, ஆஸ்திரேலியாவின் அறுபது நிமிடம் என்கிற ஷோவில் பங்கேற்றார்.

செய்தித் துறையில் பல்லாண்டு அனுபவம் வாய்ந்த தாரா பிரவுன் முழுத்தரவுகளையும் கையில் வைத்துக் கொண்டு கேட்ட கேள்விகள், பெல்லியின் வேஷத்தை மொத்தமாகக் கலைத்தன. ஆஸ்திரேலிய தொலைக்காட்சி வரலாற்றில் முக்கியமான ஷோவாக இந்நிகழ்ச்சி அறியப்படும் அளவுக்கு அமைந்தது. பென்குயின் பதிப்பகம் பெல்லியின் புத்தகங்களுக்காக விளம்பரக் காணொளி பதிவு செய்யும்போதே சந்தேகம் எழும் வகையில்தான் பெல்லி பேசியிருந்தார் என்பதை, அந்தக் காணொளியைப் பார்த்தால் புரிந்துகொள்ள இயலும். அதை வெளியிடாமல் மறைத்து, கண்டும் காணாமல் போய்விட்டது பென்குயின் நிறுவனம். விஷயம் வெளியில் தெரிந்த பிறகு, ‘நாங்கள் பதிப்பித்தது உணவுக்குறிப்புகள் அடங்கிய புத்தகம். அவ்வளவுதான்’ என்று நழுவிவிட்டது. ஆப்பிள் நிறுவனமும் சத்தமின்றி பெல்லியின் செயலியை நீக்கிவிட்டது. இரு பெறுநிறுவனங்களும் தங்கள் பிரான்ட் இத்தனை புற்றுநோயாளர்களை ஏமாற்ற உதவியதைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. கொண்டாடப்பட்ட மக்களால் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார் பெல்லி. தங்களின் ரட்சகராக நினைத்த பெண் தங்களை ஏமாற்றிவிட்டதை எண்ணி, மனவுளைச்சல் அடைந்தனர் மக்கள்.

வாயில் இருந்து வரும் சொற்களை இவர்கள் காதுகளே நம்புமா எனக் குழம்பும் அளவுக்குப் பொய் பேசுவோர் நம் ஊரிலும் இருக்கிறார்கள். எப்படி இப்படிப் பொய் பேசுகிறார்கள் என்பதையெல்லாம் நாம் ஆராய்வதில்லை. புளுகு என்று புரிந்தவர்கள் புறக்கணிக்கிறார்கள். நம்புபவர்கள் கொண்டாடுகிறார்கள்.

பெல் கிப்சன் வெளிநாட்டுக்காரர் என்பதால் அவர்கள் குல வழக்கப்படி இதன் வேர் என்னவாக இருக்கும் என்று குடைகிறார்கள். நியாயமாகப் புளுகினால் பிரபல புனைவு எழுத்தாளர்கூட ஆகலாம். அநியாயமாகப் புளுக ஏதாவது காரணமிருக்க வேண்டும் என்பது மேற்குலக நம்பிக்கை. அவர்கள் எதிர்பார்ப்பது போல, பெல் தன் பதினைந்தாவது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளார். அதற்கு முன்புவரை சாதாரண குடும்பச்சூழல்தான். அப்படியான சூழலை எத்தனையோ பேர் எதிர்கொள்கின்றனர். அவர்களனைவரும் இவர் அளவுக்குப் பொய் சொல்வதில்லை.

அப்படியானால் மனநலம் சார்ந்த சிக்கல் இருக்குமா? மன்சாஸன் ஸின்ட்ரோம் (Munchausen’s syndrome) என்று ஒன்று இருக்கிறது. நோய் இருப்பதாக நடித்து பரிதாபம் தேட முயலும் மனநலக் கோளாறு இது. நடிப்பு ஒரு கட்டத்தில் அதிகமாகி தன்னைத் துன்புறுத்திக்கொள்ளவும் காயமேற்படுத்திக்கொள்ளவும் தயங்கமாட்டார்கள். பெல், தன்னை எப்போதும் வருத்திக்கொண்டதில்லை. எனவே இந்தச் சந்தேகமும் அடிபட்டுப்போகிறது.

அடுத்து, ‘பேத்தலாஜிகல் லையர்'(Pathological liar) என்கிற கோளாறு. தன்னையறியாமல் செய்யும் மனநலக் கோளாறுகளின் பட்டியலில் இது கிடையாது. தெரிந்துதான் பொய் சொல்கிறார்கள் என்பதால் இக்கோளாறு உளவியல் கருத்தாக்கம் மட்டுமே. பெரும்பாலானோருக்குப் புரியும்படி சொல்வதென்றால் உளச் சிக்கல் கிடையாது, உளவியல் கருத்தாக்கம் மட்டுமே.

பொய் சொல்லப் பழகிய பேத்தலாஜிகல் பொய்யர்கள், அனுபவத்தின் காரணமாகத் தடையின்றி பொய் சொல்வார்கள். ‘விருந்துக்கு அழைத்தார், போனேன்’ என்று சுருக்கமாக இருக்காது. ‘சுடச்சுட ஆவி பறக்கும் 4 இட்லிகளும் அயிரை மீன் குழம்பும் கொடுத்தார்கள். அதைச் சாப்பிட்டு முடிக்கும் முன்பே ஆட்டு மூளைத் தொக்கும், சிக்கன் வறுவலும் தட்டில் வைத்தார்கள். அடுத்து மொறுமொறுவென தோசையை வைத்து அதன் மேல் நல்லி எலும்புத் துண்டுடன் மட்டன் குழம்பு ஊற்றினார்கள்.’ இப்படி ‘ஆஹா! அப்படியா’, எனக் கேட்கத் தயாராக இருந்தால், ஆமைக்கறி வரைக்கும் விளக்கமாகச் சொல்வது ஓர் அறிகுறி. சந்தேகம் எழுப்பினால் விளக்கம் கொடுக்காமல், சண்டைக்கு வருவார்கள். ஒவ்வொரு முறை சொல்லும் போதும் வெவ்வேறு விதத்தில் ஒரே விஷயத்தை மாற்றி மாற்றிப் பேசுவார்கள். ‘மாட்டிக்கொள்வோமே’ என்கிற நினைப்பே இன்றி இவர்களால் பொய் சொல்ல முடியும்.

இவ்வறிகுறிகளோடு ஒப்பிட்டால், பெல் பொய்யைப் பழகிய பேத்தலாஜிகல் லய்யர் என்றே முடிவுக்கு வரமுடியும். ஆனால் நான் அவளல்ல என்று மறுக்கிறார் பெல். காரணம் கண்டுபிடிப்பதா முக்கியம்? செய்த குற்றத்துக்கு தண்டனை பெற்றாரா? அதுவும் இல்லை. நீதிமன்றம் போய் வழக்குகளைச் சந்தித்தாலும் சிறைத் தண்டனைக்குப் பதில் கணிசமான பணம் தண்டம் விதிக்கப்பட்டது. அரசு அதை வசூலிப்பதில் தீவிரம் காட்டவில்லை. பெல், தலையில் முக்காட்டுடன் எத்தியோப்பிய மொழியைப் பேசிக்கொண்டு தொண்டுநிறுவனம், நிதி சேகரிப்பு என்றெல்லாம் பேசும் காட்சியுடன் நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படம் முடிவுக்கு வருகிறது.

உண்மை பேசுவது வாழ்வை எளிதாக்கும். ஆனால் ஏனோ பொய்களைப் பேசி வாழ்வைச் சிக்கலாக்கி மனவுளைச்சலுடன் வாழ்கிறோம். இளம் வயதில் ‘உம்மாச்சி கண்ணைக் குத்தும்’ என்றோ, ‘சான்ட்டா கிளாஸ் பரிசு கொடுப்பார்’ என்றோ சொல்லப்படுவதில் தொடங்குகின்றன நம் வாழ்வில் பொய்கள். சடங்காகவோ, வாழ்வின் சுவாரஸ்யம் கூட்டவோ, அழகியலுக்காகவோ இதையெல்லாம் ஒப்புக்கொள்கிறோம். காதல், கல்யாணம் போன்ற நெடுங்காலம் தொடரும் உறவுகளில் பொய்கள் தவறு என்பதை நாம் உணர்வதேயில்லை.

தொடர் பொய்கள் பேசும் ஒருவருடன் வாழ்வதற்கும் பொய்யான ஒரு வாழ்வை வாழ்வதற்கும் பெரிய வித்தியாசமில்லை. தமிழ்த்திரைப்படங்கள் ரொமான்டிசைஸ் செய்து கொண்டாடும் விஷயங்களில் பொய்களுக்குத் தனியிடம் உண்டு. அன்புக்குரியவர் மனம் புண்படும் என்று பொய்யை இயல்பாக்குகிறோம்.

சமூகப் பொய்களில் முதன்மையானது பாலின வகிபாகம் தொடர்பானவை. உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றும் கடமை ஆணுக்குரியது என்று நம்பி தம் வாழ்வைத் தொலைத்த எத்தனையோ ஆண்கள் உள்ளனர். நம்பாமல் குடித்துவிட்டு ரோட்டில் உருளும் ஆண்களும் இருக்கிறார்கள். அந்தக் குடும்பத்தைக் காலகாலமாக பெண்கள் உழைத்துக் கரைசேர்க்கத்தான் செய்கிறார்கள்.

போலவே, ‘நான் சுட்டாத்தான் பூரி புஸ்ஸுனு வரும்’ வகையிலான பெண்களுக்கே உரித்தான பொய்கள். அந்தப் பெண்கள் திடீரென ஒருநாள் இல்லாது போனாலும், மற்ற குடும்ப உறுப்பினர்களின் வாழ்வு அப்படியே நின்றுவிடுவதில்லை. உப்பிவராத பூரியைச் சாப்பிட்டுச் சமாளித்துக்கொள்வார்கள். அல்லது, வேறு ஒரு பெண்ணை அழைத்துவந்து பூரி செய்து வாழ்வைத் தொடர்வார்கள். குறைந்தபட்சம் இம்மாதிரிஎல்லாமே தன் தலையில்தான் இருக்கிறது என்கிற பொய்யை நம்ப மறுத்தால்கூட, வாழ்க்கை சிறக்கும்.

ஆவணப்படத்தின் முன்னோட்டம்

60 மினிட்ஸ் ஆஸ்த்திரேலியா ஷோவில் பெல்லி

பொய்களும் விளக்கங்களும்

படைப்பாளர்

கோகிலா 

இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.

ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற தொடர், ‘இணையத் தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற புத்தகமாக ஹெர் ஸ்டோரிஸ் மூலம் வெளிவந்திருக்கிறது. இது தவிர ‘உலரா உதிரம்’ என்கிற அரசியல் வரலாறு நூல் மற்றும் ‘தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி’ என்கிற சிறார் நூலையும் எழுதியுள்ளார்.