பெண்களுக்கான வெளி என்பது எது?
பெண்களுக்கான வெளியாகக் கட்டமைக்கப்பட்டது எது?
கட்டமைத்தது யார்?
பொதுவெளியில் பெண்களின் பங்கு என்ன?
வீடு மட்டும் பெண்களுக்கான வெளியா?
பெண்களின் பாதுகாப்பெனும்போது வெளி குறித்து கேள்வி எழுவதேன்?
அனைத்து பாலினத்திற்கான சமத்துவமான வெளியென்ற ஒன்று உள்ளதா?
இரவு பெண்களுக்கானது இல்லையா…? என்ற பல்வேறு கேள்விகளை கேட்கவைத்திருக்கிறது Her stories முன்னெடுத்த பெண்களுக்கான ’ஓர் இரவு உலா’. பெரும்பாலும் தலைவன் அல்லது இறைவன் உலா வருவதையே இலக்கியங்கள் குறிப்பிட்டிருக்கின்றன. ஆனால், இது பெண்களின் உலா. பெண்களால் பெண்களுக்காகவே முன்னெடுக்கப்பட்ட உலா.
சென்னையை மையப்படுத்தி சென்னையின் சில குறிப்பிடத்தக்க இடங்களான பெசன்ட் நகர் கடற்கரை, மெரினா கடற்கரை, கத்திப்பாரா, காசிமேடு மற்றும் கோயம்பேடு பூ மார்க்கெட் என தென்சென்னை மற்றும் வட சென்னையை ஓர் இரவு பகுத்துப்பார்க்கக் கற்று கொடுத்திருக்கிறது.
இரவு உலாவில் சுமார் 30 பெண்கள் கலந்து கொண்டதே மாற்றத்திற்கான முன்னுதாரணமாகப் பார்க்கிறேன். இந்த உலா வெறும் இடங்களை பார்வையிடுவதற்கான பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், ஒவ்வொரு இடத்தின் பெயர்க்காரணம் முதற்கொண்டு வரலாற்று கதாபாத்திரங்களான காரண கர்த்தாக்களை, காரண காரியங்களை மனங்களில் பதியவைத்தது சமூக வரலாற்றாய்வாளர் நிவேதிதா லூயிசின் உரையாடல்கள். அவற்றை நான் இங்க விவரிப்பதைவிட உரையாடல்கள் கட்டுரையாகவே வெளிவந்திருக்கிறது அதை நீங்களே படித்து தெளிவு பெற வேண்டும் என்பதால் இங்கு அந்த லிங்கை இணைக்கிறேன்.
கதை கதையாம் காரணமாம் – நிவேதிதா லூயிஸ்
பெண்கள் எதை குறித்துப் பேசப்போகிறார்கள்?
இரவு நேரங்களில் பெண்களுக்கு என்ன வேலை?
ஏன் பொதுவெளியில் பேச வேண்டும்?
என்ற கேள்விகளுக்கான பதிலை கொடுத்தது பெண்களின் ’இரவு உலா’.
பெண்களுக்குப் பாதுகாப்பற்றதா பொதுவெளி?
பெண்கள் பொதுவெளியை ஓரளவு பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், அப்பொதுவெளி பெண்களுக்கு உகந்ததாக பாதுகாப்பானதாக இருக்கிறதா என்றால், இல்லை என்பது இன்றைய நவீனமயமான காலகட்டத்திலும் பொதுவெளியில் இயங்கும் பெண்களின் பதிலாக இருக்கும். இன்று பொதுக் கழிவறைகளை பெரும்பாலும் பார்க்க முடிகிறது என்றாலும், அதன் பயன்பாட்டுத் தன்மை மிகவும் குறைவாகவே உள்ளது. பாதுகாப்பான கழிவறை பயன்படுதுவதே இங்கு சிக்கலாகத்தான் உள்ளது. பொழுதுபோக்கு இடங்களான பூங்காக்கள், கடற்கரை, திரையரங்குகள் வணிகவளாகங்கள் ஆகியவை பெரும்பாலும் ஆண்களாலே நிரம்பி இருக்கிறது. குறிப்பாக விளையாட்டு மைதானங்களில் பெண்கள் விளையாடுவதைப் பார்க்க முடிவதே இல்லை.
ஏனெனில், பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள், வீடே பெண்களுக்கு பாதுகாப்பான இடமாகக் கருதப்படுகிறது. பொழுதுபோக்கு, விளையாட்டு, உடற்பயிற்சி என அனைத்தும் வீடுகளிலே முடக்கப்படுகிறது. வீடுகளில்கூட ஆறு மணிக்கு மேல் வாசலில் உட்காரக் கூடாது. இரவு நேரங்களில் மொட்டைமாடியைப் பயன்படுத்தக்கூடாது. பதின்பருவத்தினர் தனி அறையில் கதவை மூடி இருக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளுடன்தான் இங்கு பெண்கள் வளர்க்கப்படுகின்றனர்.
எனவே, குடும்ப நிறுவனங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை குறித்து பேச பொதுச்சமூகம் தயங்குகிறது. குடும்பம் பெண்களுக்கான பாதுகாப்பான இடம் என்கிற பிம்பம் உடையாமல் கட்டிக்காப்பதையே ஆண் மனம் விரும்புகிறது. ஆண் மனம் புண்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று பெண்ணுக்குக் கற்பிக்கப்படுகிறது. இவையே பெண்களுக்கான பொதுவெளி குறித்தக் கேள்வியை நமக்கு எழுப்புகிறது.
சென்னையின் பெண்கள்
”சென்னையின் பெண்கள்” குறித்த களப்பணியை மேற்கொண்ட ஆய்வாளர் நிவேதிதா மற்றும் எழுத்தாளர் கீதா இளங்கோவன் தோழர்கள் இரவு நேரங்களில் சென்னையில் நகர மேம்பாட்டுக்காக உழைக்கும் பெண்களை ஆவணப்படுத்தி இருப்பதை அவர்களது உரையாடல்கள் வழி அறிய முடிகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் சென்னையின் அனைத்து சாலைகளிலும் பெண்களை தூய்மைப் பணியாளர்களாகவும் சிறு வியாபாரிகளாகவும் பெண்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.
அதேபோல், காசிமேட்டில் நிற்க இடமில்லாமல், பேச நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பெண்களை பார்த்தது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சிதான். படகில் இருந்து இறங்கிய மீன்களை ஏலத்தில் வாங்க அலை மோதும் பெண்கள்; வாங்கிய மீன்களை தாங்கள் இருக்கும் இடத்திற்கு தலையில் சுமந்து சென்று மீன் ரகங்களை கூடைகளில் பிரித்தெடுக்கும் பெண்கள்; சிறு கடையாக வைத்து வியாபாரம் செய்யும் பெண்கள்; வாங்கிய மீன்களை சுத்தம் செய்ய வரிசையில் அமர்ந்திருக்கும் பெண்கள்; இதைத் தவிர்த்து மீன் எடுத்துச் செல்லும் அலுமினியக் கூடைகளை விற்கும் பெண்கள், சிறு டீ கடை, கருவாட்டுக் கடை வைத்திருக்கும் பெண்களென காசிமேட்டு மார்க்கெட் முழுக்க பெண்கள் நிறைந்திருக்கிறார்கள். இதை பார்த்துக் கொண்டிருந்த என்னுடன் வந்த சக தோழர் சொன்னது, “நாம எவ்வளவு privileged-ஆக வாழ்ந்துட்டு இருக்கோம்”. இரவு தூக்கத்தைத் துறந்து தனது குடும்ப வாழ்வாதாரத்திற்காக ஓடிக் கொண்டிருக்கும் பெண்களையும் அவர்களின் உழைப்பையும் அறியாமல் அங்கீகரிக்காமலே சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
மலினப்படுத்தப்படும் பெண்களின் உழைப்பு
ஐ.டி. நிறுவனங்களில் பெண் ஊழியர்களின் பங்கு என்பது சமீப காலங்களிலே உயர்ந்திருக்கிறது. ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் குறித்து தவறான புரிதல்கள் இன்னும் உலவிக் கொண்டுதான் இருக்கிறது. ‘ஐ.டி. நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் திருமணத்திற்கு வேண்டாம்’ என்று விவாத நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளார்கள் கூறுவது ஐ.டி துறை குறித்த பொதுச்சமூகத்தில் பதிந்து கிடக்கிற தவறான புரிதல்களின் விளைவே.
அதற்கு முக்கிய காரணம் இரவு நேரங்களில் பணிபுரிவது. ஏனெனில், இரவு பெண்களுக்கானது இல்லை என்பதே. தனக்கு பிடித்த துறையில் பணி செய்ய ‘இரவு முழுக்க கண் விழித்து பெண்களால் வேலை பார்க்க முடியாது’ போன்ற (Stereotype) கற்பிதங்களை உடைத்தெறிந்துவிட்டு பெண்கள் பணி செய்துவருகின்றனர். இருப்பினும் பெண்களின் உழைப்பு ஆண்களால் உதாசீனப்படுத்தப்படுவதாக பெண் ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஒரு குழுவின் (Manager) மேலாளராக பெண் இருக்கும் நிறுவனங்களிலும் சில முக்கிய (Project) திட்டங்களுக்கு பெண் ஊழியர்களை தேர்வு செய்வதிலும் உள்ள ஆண் மனத் தடங்கலாக: ‘இரவு நேர பணிக்கு பெண்கள் வரமாட்டாங்க, வந்தா அவங்களுக்கு வண்டி ஏற்பாடு செய்யனும் (CAB), General shift-அ இருந்தாலும் 9 மணிக்கு மேல பெண்கள் வேலை செய்ய மாட்டங்க’ போன்ற கற்பிதங்கள் பெண்களின் உழைப்பை மட்டம்தட்டும் போக்கு தொடர்ந்து நடந்து வருவதாக கூறுகிறார் ஐ.டி. ஊழியர் ஷாமிலி. பதவி உயர்வுகளில் (Promotion) திருமணமாகும் பெண்கள் புறக்கணிக்கப்படுவதையும் நிறுவனங்கள் பெண்களுக்கு கொடுக்கும் ஒரு சில சலுகைகளை செயல்படுத்துவதில் ஆண்களுக்கு இருக்கும் அலட்சியத்தையும் அடையாளப்படுத்துகின்றனர்.
ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பாக வீடு சென்று சேர பாதுகாவலர்களை (Armed security) நிறுவனம் நியமித்திருக்கிறது. அப்படி உடன் வரும் (Armed security) பாதுகாவலர்களை மீண்டும் அழைத்து வந்துவிட வேண்டும் என்பதால், பெண் ஊழியர்களை மற்றொரு வண்டியில் ஏற்றிவிடுவதில் CAB ஓட்டுநர்கள் முனைப்பு காட்டுகின்றனர். அப்படித் திரும்ப கொண்டு வந்து விடுவதற்கு கூடுதல் தொகை செலவழியும் என்பதால் CAB உரிமையாளர்கள் தயக்கம் காட்டுவதாக ஐ.டி. துறைகளில் பெண்கள் சந்திக்கும் சவால்களைப் பட்டியலிடுகிறார் ஷாமிலி.
பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு என்பதும் ஆண்களால் மலினப்படுத்தப்பட்டே வருகிறது. ‘ஒரு வருஷம் வேலைக்கே போகாம வீட்ல இருந்து சம்பளம் வாங்குறாங்க’ என்று அவருக்கு தெரிந்த காவல்துறையில் பணிபுரியும் பெண் பற்றி கூறினார் எனது வகுப்பு நண்பர். முனைவர் பட்ட மாணவியான எனக்குத் திருமணம் ஆன பிறகு சக ஆண் தோழர்களால் சொல்லப்பட்ட ஒன்று, ‘உனக்கென்னப்பா அதான் ஒரு வருஷம் லீவு குடுக்குறாங்களே அப்புறம் என்ன?’ என்ற கேலி தொனியிலே வரும் கேள்விகள். உதவிப்பேராசிரியர் பணிக்குப் புதியதாய் திருமணம் செய்து கொண்ட பெண்களைத் தேர்வு செய்வதற்கு நிறுவனங்கள் காட்டும் தயக்கம் என இப்படியாக வேலைவாய்ப்புகளில் பணியிடங்களில் பெண்கள் சந்திக்கின்ற சிக்கல்களைப் பொதுச் சமூகமும் அரசும் கவனத்தில் கொள்வதே இல்லை.
பெண்களுக்கு வழங்கப்பட்ட கட்டணமில்லாப் பேருந்து பயணம் குறித்து ஆண்கள் மத்தியில் உள்ள வெறுப்புணர்வை பெண்கள் தினமும் எதிர்கொண்டு வருகின்றனர். அமைச்சரே ’ஓசில’ தான போறீங்கனு சொல்லும் அளவிற்கு இங்கு பெண்களுக்கான திட்டங்கள் மலினப்படுத்தப்படுகின்றன.
சிங்காரச் சென்னை யாருக்கானது?
வந்தாரை வாழவைக்கும் சென்னை இன்று பூர்வக்குடி மக்களை வெளியேற்றும் சென்னையாக மாறும் நிலையில் உள்ளது. சென்னை மாநகரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய உழைக்கும் மக்களை சென்னையின் புறநகர் பகுதியில் குடியேற்றுவது அம்மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா? இன்னமும் சென்னையின் பெரும் வணிக கட்டிடங்களிலும் அரசு நிறுவனங்களிலும் தூய்மைப் பணி செய்பவர்களாக அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீட்டு பணி செய்பவர்களாக அம்மக்களே இருக்கின்றனர். அப்படியெனில் பெண்களின் உழைப்பை மட்டுமே பயன்படுத்திக்கொண்டு அவர்களைச் சென்னையின் புறநகர்ப் பகுதியில் தள்ளுவது நவீன தீண்டாமை இல்லையா என்ற கேள்வியை சென்னையின் இரவு நேரங்களில் சாலைகளிலும், கத்திப்பாரா போன்ற வணிக தளங்களிலும் பணிபுரியும் பெண்களைப் பார்க்கும்போது இந்தப் பொதுச்சமூகத்தை நோக்கி கேட்க தோன்றுகிறது.
சென்னையின் அழகுக்காக பூர்வகுடி மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று அப்புறப்படுத்துகின்றனர். காலங்காலமாக தாங்கள் வாழ்ந்த இடத்திலிருந்து வெகு தொலைவுக்குத் தூக்கி எறியப்படுகின்றனர். சென்னையிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்மஞ்சேரி, கண்ணகி நகரில் மக்கள் குடியேற்றப்படுகின்றனர். அங்கு கல்வி, வேலைவாய்ப்பென எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாத இடத்தில் மக்களை குடியமர்த்துவது எப்படி சரியாக இருக்கும்? குறிப்பாக பெண்கள், குழந்தைகள் அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
பாரி முனையில் செம்மஞ்சேரி, கண்ணகி நகர் பேருந்துகளுக்கு மக்கள் அலை மோதுகின்றனர். கல்விக்கும் வேலைக்கும் சென்னையின் புறநகர் பகுதியிலிருந்து மக்கள் சென்னையையே நம்பி இருக்க வேண்டி இருக்கிறது. பெரும்பாலும் கூலி தொழிலாளியாக இருக்கும் மக்கள் போக்குவரத்து செலவுக்கே ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டியதாக இருக்கிறது. எப்போதும் போலவே இப்பொதுச்சமூகம் உழைக்கும் மக்களுக்கு எதிராக நடக்கும் ‘Ghettoization’-க்கு எதிராக அமைதிகாக்கிறது. அரசும் முதலாளித்துவ சமூகமும் உடந்தையாக இருக்கிறது.
சென்னை வெள்ளத்தின்போது ஆயிரக்கணக்கான மக்களைப் படகுகளால் காப்பாற்றிய மீனவர்களின் படகுகளைக் காப்பாற்ற அரசு தயங்குவது ஏன்? தமிழகத்தின் மிகப்பெரிய போராட்டமாகக் கருதப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் காப்பாற்றியதால் தமிழ்நாடு சிறப்பு காவல்படையினரால் மீனவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். பலரின் கை கால்கள் முறிக்கப்பட்டன. கார்த்திக் என்ற 11 வயது சிறுவன் தாக்கப்பட்டதில் அவரது ஒரு கண் பார்வையை இழந்தார். பல மீனவப் பெண்கள் கடுமையான வார்த்தைகளால் (verbal abuse) தாக்கப்பட்டனர். உடல்சார் வன்முறைக்கும் ஆளாகினர். மக்கள் கண்காணிப்பு குழு (Peoples watch) அமைப்போடு களப்பணியில் ஈடுபட்டபோது, பாதிக்கப்பட்ட பல்வேறு மக்களை நேரிடையாகப் பார்க்க முடிந்தது. ஜல்லிக்கட்டால் யாருக்கு பலன்? ஜல்லிகட்டால் மீனவ மக்கள் என்ன பலனடையப் போகிறார்கள்? பலன் ஒரு சமூகத்திற்கு, பாதிப்பு ஒரு சமூகத்திற்கா என்றே எண்ணத் தோன்றுகிறது.
கண்ணகி கற்புக்கரசியா?
உலகிலே இரண்டாவது நீளமான கடற்கரை என்கிற பெருமையைப் பெருகிறது சென்னை மெரினா கடற்கரை. 1884-ம் ஆண்டு கவர்னராக இருந்த M.E.Grant Duff என்பவரின் ஆசைக்கிணங்க உருவாக்கப்பட்டதே மெரினா கடற்கரை. 1886ஆம் ஆண்டுக்கு பிறகே சென்னையில் கடற்கரை என்பது உருவாக்கப்பட்டது என்கிற வரலாற்றுத் தகவல்களை தருகிறார் நிவேதிதா லூயிஸ். கடற்கரையில் காந்தி சிலை மற்றும் உழைப்பாளார் சிலை மட்டும் நிறுவப்பட்ட நிலையில், 1965-களில் நடைப்பெற்ற உலக தமிழ் மாநாடுக்கு பிறகே தமிழ் அறிஞர்களின் சிலையை நிறுவியது திராவிட கட்சி. சிலைகள் வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து பல்வேறுபட்ட கருத்துகள் நிலவி வந்தாலும், சிலை என்பது நினைவுகளை, கருத்தியலை, வரலாற்றைக் கடத்தக்கூடிய ஊடகமாக இங்கு இருப்பதை ஆய்வாளர் பதிவு செய்கிறார்.
அதே வேளையில், உழைப்பாளர் சிலையில் ஏன் பெண் இல்லை? எத்தனை பெண்களின் சிலைகள் இருக்கின்றன? போன்ற பெண்ணியலாளர்களின் கேள்விகள் தவிர்க்க முடியாதவை. சங்க கால ஒளவையாருக்கும் காலனிய கால அன்னி பெசண்ட்டுக்கும் சிலை இருக்கும் போது, சமகாலத்தில் சமூக சீர்திருத்ததிற்காக, பெண்களின் உரிமைக்காக போராடிய பெண்களின் சிலைகள் ஏன் இல்லை? தமிழகத்தில் எந்தவொரு அரசியல் கட்சியோ இயக்கமோ பெண்களுக்கான இடத்தை ஒதுக்கியது இல்லை என்கிற குற்றச்சாட்டை எழுப்புகின்றனர். தனக்கான நீதியை நிலைநாட்டிய பெண் கண்ணகி என்பதால் திராவிட தலைவர்களால் வைக்கப்பட்ட கண்ணகி சிலையானது பின்னாளில் ‘கற்புக்கரசி கண்ணகி’ என்று அடுத்து வந்த திராவிட கட்சித் தலைவர்களால் சொல்லப்பட்டு இன்று வரை அதுவே வரலாறாக மாறிபோன அவலத்தையும் பெண்கள் சுட்டிகாட்டினர்.
மேலும், இரண்டு வருடத்திற்கு முன்னர் அரசு நிகழ்ச்சி ஒன்றின் பத்திரிக்கை செய்தியில் ‘கற்புக்கரசி கண்ணகிக்கு மாலை அணிவித்தார் அமைச்சர்’ என்ற செய்தி வந்த போது, ”கற்புக்கரசிக்கு என்ன தகுதி? நாங்களெல்லாம் எப்படி கற்புக்கரசி ஆவது?” என்று கேள்வி எழுப்பி, அரசே இவ்வாறு செய்வது தவறு என்ற தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் கீதா இளங்கோவன்.
பெண்ணுரிமையைக் கைவிட்ட இயக்கங்கள்
”பெரியாருக்கு பிறகு வந்த எந்த திராவிட தலைவர்களும் ’கற்பு’ என்கிற கருத்தாக்கம் பெண்களுக்குக் கூடாது என்பதை வலியுறுத்தவில்லை. சமத்துவம், சமூக நீதி பேசும் திராவிட கட்சிகள் பெரியார் பேசிய பெண்ணுரிமையை பேசுவதில்லை. பெரியார் பேசிய ’Community Kitchen’ குறித்து எந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பேசுவதில்லை” என்று சுட்டிகாட்டுகிறார் கீதா இளங்கோவன். அரசியலில் பெண்களின் பங்கேற்பு என்பது போஸ்டர் ஒட்டுதல், பொது கூட்டம் நடத்துதல் என்கிற அளவில் மட்டும் இல்லாது, மேலை நாடுகள் போன்று ஊடகங்களில் விவாதம் நடத்துதல் போன்ற செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும்போது பெண்களின் அரசியல் வெளி சாத்தியப்படும் என்ற கருத்தும் பெண்களின் உரையாடலில் முன்வைக்கப்பட்டது. ஏனெனில் வெளி என்பது பொதுவெளி, தனிவெளி- Public space, Private space என இரண்டாகப் பிரிக்கப்பட்டு, Public space என்பது ஆண்களுக்கானது என்றும், Private space என்பது பெண்களுக்கானது என்றும் கருத்துருவாக்கம் காலங்காலமாக பொது மனங்களில் கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. எனவே பொதுத்தளங்களில் பெண்களின் செயல்பாடுகளை ஒடுக்க கலாச்சார அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றன.
அரசியல் செயல்பாடுகளில் பெண்களை இணைப்பதற்கு அரசியல் கட்சிகள் என்ன நடவடிக்கைகளை செய்கின்றனர்? மாநாடுகளுக்கு பெண்களை அழைத்துவரும் கட்சிகள் அவர்களுக்கான அடிப்படை தேவைகளை செய்து தருகின்றனவா போன்ற கேள்விகள் பெண்களின் உரையாடலில் எழுப்பப்பட்டன. மாரத்தான் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பவர்களால் பெண்களுக்கான தற்காலிக கழிவறைகளை செய்ய முடிகிறது என்றால், ஏன் கட்சிகளால் முடியாது என்ற வாதத்தை முன்வைத்தார் தோழர் கீதா இளங்கோவன்.
பெண்களை அரசியல்படுத்த பெரியார் முன்னெடுத்த நடவடிக்கைகள் முன்னுதாரணமாக இருந்திருக்கின்றன. பெண்கள் மாநாடுகளில் ஆண்களுக்கு தனி அரங்குகளும், ஆண்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறார் தோழர் நிவேதிதா லூயிஸ். இன்றைய தேசிய, மாநில கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் பெண்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து பல அம்சங்களை குறிப்பிடுவதில் முனைப்பு காட்டுகின்றன. பெண்களின் சமூக, அரசியல் நிலையை மேம்படுத்த, பெண்கள் மீதான குடும்ப வன்முறையை தடுக்க, பெண்கள் மீதான சமூக ஒடுக்குமுறைகளைத் தகர்த்தெரிய முன்னுதாரணமான நடவடிக்கைகளை எந்தவொரு அரசியல் கட்சிகளும் முன்னெடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.
பொதுவெளி பெண்களுக்கானது
இரவில் பொதுவெளியில் பெண்கள் இயங்க வேண்டும் என்பதற்காக 1970 தொடங்கி இன்று வரை பல்வேறு இயக்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் பல்வேறு பேரணிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இரவில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் பெண்கள் மீதான வன்முறையைத் தடுப்பதற்கும் பெண்ணிய இயக்கங்கள் தொடந்து போராடிவருகின்றனர். பெண்ணியம், பெண்ணுரிமை என்றாலே அது மேலை நாட்டுக் கலாச்சாரம், இறக்குமதி என்பதான தொனியே பலருக்கு வந்துவிடுகிறது. பெண்கள் தங்களுக்கான உரிமையைப் பேசினாலே அது தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகவே ஆண்கள் கருதுகின்றனர்.
இங்கு பொது வெளி, ஆண்களுக்கு பத்திரம் செய்து கொடுக்கப்பட உரிமை என்று கருதுவதால் அதில் பெண்கள் தங்களுக்கான இடத்தைக் கோருவது அபத்தம் என்கிற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்த அரசும், அரசியல் கட்சிகளும், பெண்ணிய இயக்கங்களும் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை ஹெர்ஸ்டோரிஸ் அமைப்பின் மூலம் நிவேதிதா லூயிஸ் மற்றும் கீதா இளங்கோவன் போன்ற சமகால பெண்ணிய செயல்பாட்டாளர்கள் முன்னெடுத்திருக்கும் இத்தகைய பணி பாராட்டுக்குறியது. இத்தகைய செயல்பாடுகள் இயக்கமாக மாறவேண்டும். சமத்துவம், சுயமரியாதை மலர பெண்களிடையே சகோதரத்துவம் – brotherhood/fraternity (இதற்கு ஈடான பாலின பேதமற்ற சொல்லைக்கூட நாம் இன்னும் உருவாக்கிக் கொள்ளவில்லை. ஆங்கிலத்தில் sisterhood) முக்கியமானது.
பெண்களின் ‘சகோதரத்துவத்தைக்’ கொண்டுவர, எதிர்பார்ப்பற்ற அன்பு முதன்மையானது. பெண்கள் இரவை கையகப்படுத்த வேண்டியதின் தேவையை வலியுறுத்துவது மட்டுமல்லாமல், பெண்கள் தங்களின் அனுபவங்களை, எண்ணங்களை எழுத்தாகக் கொண்டு வர வேண்டும் என்று உடன் பயணித்த அனைவருக்கும் பேனா கிடைக்காததால், பென்சிலை பரிசாக அளித்த கீதா தோழரின் பேரன்பிற்கான பரிசு இக்கட்டுரை.
படைப்பாளர்:
மை. மாபூபீ
சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பில் துறையில் முனைவர்பட்ட மாணவி. அரசியல், சமூகம் பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவருகிறார். தீக்கதிர் நாளிதழ், கீற்று, Thenewslite போன்ற இணையதளங்களில் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.