ஆசை மகன் 1953ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதுவே ஆஷாதீபம் என மலையாளத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப் பட்டது.  

இப்படத்தில் சத்யன், பி.எஸ்.சரோஜா, ஜெமினி கணேசன், பத்மினி,  டி.எஸ்.பாலையா, வி.தட்சிணாமூர்த்தி, டி.என்.கோபிநாதன் நாயர், ஜே.சசிகுமார், நாணுக்கூத்தன், பங்கஜவல்லி, கிரிஜா, ஆரன்முலா பொன்னம்மா, அடூர் பங்கஜம் போன்றோர் நடித்துள்ளனர். 

வி. தட்சிணாமூர்த்தி இசையமைத்துள்ளார். குயிலன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பின்னணி பாடகர்கள்: பி. லீலா, எம்.எல். வசந்தகுமாரி, ஜிக்கி, கன்டசாலா, வி.ஜே. வர்மா மற்றும் ஏ.எம்.ராஜா.

டி. ஈ. வாசுதேவன் தயாரித்து,  ஜி. ஆர். ராவ் இயக்கியிருக்கிறார்.

சேகர் (ஜெமினி கணேசன்) தீய பழக்கங்கள் நிறைந்தவர். அவரின் நண்பர் விக்ரமன் (டி.எஸ்.பாலையா). இருவரும் ஜெயந்தியின் (பத்மினி) நடனத்தைப் பார்க்கச் செல்கிறார்கள். 

சந்திரன் (சத்யன்) தனது அம்மாவுடன், மாமா வீட்டிற்குப் படிப்பிற்காகப் பணம் கேட்டுச் செல்கிறார். உரையாடலுடன் சண்டையாக அந்த சந்திப்பு முடிகிறது. இந்த மாமாவின் மகன் தான் சேகரன்.

கடன் வாங்கி, பணத்தைப் புரட்டிக் கொண்டு சந்திரன், நகரத்திற்கு ரயிலில் கிளம்புகிறார். அதே ரயிலில் சரளா ஊருக்குள் மூட்டை முடிச்சுடன், அப்பாவுடன் ஊர் வந்து இறங்குகிறார். அப்பா ஊருக்குப் புதிய அஞ்சல் துறை அலுவலராக வந்திருக்கிறார். ரயில் புறப்படுகிறது. ஒரு பெட்டியைச் சரளா, ரயிலில் தவற விட்டு விட்டு இறங்கி விடுகிறார். இவர் கேட்க, ரயிலில் ஏறிய சந்திரன் எடுத்துக் கொடுக்கிறார். இப்படி ஒரு அறிமுகம் இருவருக்கிடையில் ஏற்படுகிறது. 

சேகரன், அப்பாவிற்குத் தெரியாமல், அம்மாவிடம் பணம் வாங்கி ஊதாரித்தனமாக செலவழிக்கிறார். இதனால், சந்திரனின் தங்கை சாந்தாவைத் (பி.எஸ்.சரோஜா) திருமணம் செய்து வைக்க சேகரனின் அம்மா நினைக்கிறார். சேகரனின் அப்பாவும் அம்மாவும் பெண் கேட்டுப் போகிறார்கள். சந்திரனிடம் கேட்க வேண்டும் எனப் பெண்ணின் அம்மா சொல்லிவிடுகிறார். 

மறுபக்கம், சேகரன், ஜெயந்தியுடன் பழகுகிறார். அப்பா அம்மாவின் வாயை மூடவே திருமணம் என்கிறார். சந்திரன் சம்மதம் தெரிவித்து எழுதியதாக, சேகரன் வீட்டு மேலாளர் கடிதம் எழுத, திருமண வேலைகள் நடக்கின்றன. இது தெரிந்து சந்திரன் வருவதற்கு முன் திருமணம் நடந்து விடுகிறது.

சந்திரனும் சரளாவும் காதலிக்கிறார்கள். சேகரன், கையில் பணமில்லாததால் வீட்டிலேயே திருடுகிறான். திருடன் நினைத்து ஓடி வந்த அப்பாவைத் தள்ளி விட, அப்பா இறக்கிறார். 

அப்பா, இறக்குமுன், சொத்து மனைவி மற்றும் மருமகள் சாந்தா பெயரில் எழுதி வைத்து இருக்கிறார். இது அதுவரை யாருக்கும் தெரியாது. இப்போது தெரிந்ததும், வீட்டில் கணவனும், மாமியாரும் சாந்தாவைக் கொடுமைப் படுத்துகிறார்கள். சாந்தா அம்மா வீட்டிற்குத் துரத்தப் படுகிறார்.

ஒரு காலகட்டத்தில் சேகரனின் அம்மாவிற்கு அறிவு வருகிறது. ஆனால் அந்நேரம், சேகரன் வாங்கிய கடனிற்காக அம்மா வீட்டை விட்டு விரட்டப்பட, அவரும் சாந்தாவின் வீட்டிற்கே வருகிறார். சந்திரன் சரளா திருமணம் நடைபெறுகிறது. 

விக்ரமன் ஜெயந்தி இருவரும் கணவன் மனைவி அல்லது காதலர்கள் என சேகரனுக்குத் தெரிய வரும்போது இவரின், சொத்து அனைத்தும் அவர்கள் வசம் போய்விட்டது. அதனால், சேகரன் இருவரையும் கொலை செய்கிறான். அங்கே அம்மாவும் இறக்கிறார். சிறை சென்ற அவனுக்காக, சாந்தா காத்திருக்கிறார்.

நாயகன் சத்யன் அவர்களின் இயற்பெயர் மனுவேல் சத்தியநேசன். சீர்திருத்தக் கிறிஸ்தவரான இவர் தமிழர் என நினைக்கிறேன். இவர் இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக மியான்மரில் பணியாற்றி இருக்கிறார். போருக்குப் பிறகு திருவிதாங்கூர் மாநில காவல்துறையில் ஆய்வாளராகப் பணி புரிந்தும்  இருக்கிறார். 1952 ஆம் ஆண்டு ‘ஆத்மசகி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

தமிழர்கள் மத்தியில் அவரது புகழ்பெற்ற திரைப்படம் என்றால், “கடலினக்கர போனோரே காணாப் பொன்னெனப் போனோரே போய் வரும்போள் எந்து கொண்டுவரும்” பாடல் புகழ் ‘செம்மீன்’. சத்யன் மலையாள திரையுலக அடையாளங்களுள் ஒருவர்.

இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் போதே அவருக்கு நாற்பது வயதிற்கும் மேல். ஆனாலும் கட்டுக்கோப்பான உடலமைப்பால் அவ்வளவு வயது தெரியவில்லை. நன்றாக, இயல்பாக நடித்தும் இருக்கிறார்.

///இதற்கு முன் வரை சிறு சிறு வேடங்களில் வந்து கொண்டிருந்த ஜெமினி கணேசன், இத்திரைப்படத்தில் இரண்டாவது நாயகனாக வருகிறார்.

ஏற்கனவே நாயகியாக வந்துவிட்ட பத்மினி வில்லியாக வருகிறார்.

ஒரு பாடல் தவிர அனைத்துப் பாடல்களையும் குயிலன் எழுதியுள்ளார். 

வி. தட்சிணாமூர்த்தி இசை அமைத்துள்ளார். இவர், மலையாள இசையமைப்பாளர்களுள் தவிர்க்க முடியாத இடத்தில் இருப்பவர். பாடகர் யேசுதாஸ், அவரின் அப்பா, அவரின் மகன், பேத்தி என நான்கு தலைமுறையினருக்கு இசை அமைத்து இருக்கிறார். வேறு மொழிகளிலும் ஓரிரு திரைப்படங்களுக்கு இசை அமைத்து உள்ளார். தமிழில் அவரது பாடல் என்றவுடன் நினைவிற்கு வரும் பாடல் “நந்தா நீ என் நிலா” 

இந்தத் திரைப்படத்தில் ஆசிரியர் பாத்திரத்தில் நடிக்கவும் செய்து இருக்கிறார். 

எம்.எல்.வசந்தகுமாரி,  பி.லீலா இருவரும் இணைந்து பாடும் பாடல். 

கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே – என்றும்

நிலையான மொழியே உன் புகழ் பாடுவேன் அருமை (கலை)

அலை மேவும் கடல் தந்த ஆரமுதே போல்

இணையே இல்லை எனவே இன் சுவையாகவே வளரும்

கரும்பான காவியம் கம்பனின் பாடலே – தேன்

வழிந்தோடும் நதிபோல் நல் விருந்தாகுமே

வீரன் பாரதி பாடல் அழகால் தேசம் உயர்வாகுமே..

கரும்பான காவியம் கம்பனின் பாடலே.

வள்ளுவன் குறளாலே வளர்ந்த தாய்மொழி

உள்ளம் கொள்ளை கொள்ளும் இலக்கியம் சேர்மொழி

தெள்ளுகவி மலர்கள் தேடி நிதம் தந்த

ஔவையும் இளங்கோவும் யாவரும் போற்றியே 

இப்பாடல் P. லீலா, V. J. வர்மா குழு பாடியது. நடனம் அவ்வளவு அழகாக இருக்கிறது 

பாயும் கண்களால் வெல்லுவேன் 

காலில் தங்க சலங்கை குலுங்க 

கைகள் தாளங்கள் கொட்டி முழங்க  

இங்கு ஆடுங்கள் ஆனந்த கீதங்கள் பாடுங்கள் 

வெண்ணிலவைப் போலே விண்ணிலிருந்து மேலே 

தன் கண்ணாலே அழைத்திடும் சுந்தரி யாரோ 

பலருள்ளம் கவருகின்ற ராணி இவள் 

ரூபவாணி இவள் 

தேவி பாதங்கள் பட்டாலே யோகம் வரும் 

சுக போகம் வரும் 

இங்கு ஆடுங்கள் பாடுங்கள்

தாளங்கள் போடுங்கள் 

இப்பாடல் P. லீலா, அவர்கள் பாடியது.

ராஜாவே நல்ல ரோஜாவைப்பார் 

பொன்மாலை நேரம் இப்பூஞ்சோலை ஓரம் 

பூத்திருக்கு உனக்கே காத்திருக்கு 

வாசமுள்ளது என்ற போதிலும் வண்டு தொட்டதில்லை.

ஆசை உள்ளது என்ற போதிலும் யாரும் தொட்டது இல்லையே 

நேசமுள்ள ஜீவன் உன் நினைவாலே தேடுதே 

நீங்காத தேனூருதே 

பனிநீரில் ஆடி உன் பாசத்தை நாடி 

தனியாக ஏங்குது பாராய் இங்கே 

பூ வேண்டுமா இதழ் தான் வேண்டுமா 

இல்லை தேன் வேண்டுமா 

இதில் எது வேண்டும் சொல்வாயே 

இப்பாடல் ஏ.எம்.ராஜா & பி.லீலா பாடியது.

ஓடம் ஏறிச்சென்றே காதல் கனாவிலே 

ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே 

நாமே உதவுவோம் 

அலையோடு ஆழி சேர்ந்தே ஆனந்தமாவதைப் போலே

நலமாக நாமும் சேர்ந்தே பேரின்பம் காண்போமே 

உள்ளங்கள் ஒன்று சேர்ந்தால் யூகமே விநாடியாகும் 

கவலை பறந்து போகும் காலம் பொன்னானதாகும் 

குறையே இல்லாமல் இன்பம் காண்போம் 

வாழ்வே குதூகுலம் தான் 

மாங்குயில் பாடும் மயில் ஆடும் 

இளமான்கள் ஓடும் 

மாமலையோரம் இந்த நேரம் 

வெகு வேகம் செல்லுவோம் 

நாமின்ப வானம்பாடி நம்போல் வேறுண்டோ 

சந்திரன் (சத்யன்) தனது அம்மாவுடன், மாமா வீட்டிற்குப் படிப்பிற்காகப் பணம் கேட்டுச் செல்கிறார்கள்.

இப்ப எதுக்குப்பா வக்கீல் படிப்பு? படிச்ச படிப்புக்கே வேல கிடைக்காத காலமாயிருக்கு. 

எல்லாத்துக்கும் ஒரு அளவு வேணும். ரெண்டு காலும் இல்லாதவன் மரம் ஏறணும்னா?

பணத்தை கொட்டி படிச்சவங்கெல்லாம் தரிக்கினதத்தோம் போடுறாங்க. 

நம்ம மாணிக்கம் கையில் மூணு லட்சம் இருக்கு. ஆனா மழைக்குக் கூட பள்ளிக்கூடம் ஒதுங்கினதில்ல.

பணத்தில மிதக்குறவங்களையும் பட்டினி கிடக்கிறவங்களையும் ஒண்ணா நினைக்க முடியுமா? பணமுள்ளவங்க படிக்கலைன்னா ஒரு குறைவும் இல்லை. ஆசையும் உற்சாகமும் உள்ளவங்க படிக்கக் கூடாதா? 

இப்படி கல்வி குறித்த உரையாடலுடன் தொடங்கும் திரைப்படம், பின் வழக்கமான குடும்ப கதையாக மாறுகிறது.

‘ஜகமெல்லாம் ஒரு நாடக மேடை 

ஜனமெல்லாம் அதில் வேஷதாரிகள்  

பகவான் அதற்கே சூத்ரதாரி என்றால்’  என்ற தொகையறாவுடன் தொடங்கும்பாடல் இது வரை கேட்டது இல்லை என்றாலும், கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது.  

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.