9/11/2024 சனிக்கிழமை அன்று விடியற்காலை 2.45க்கு எல்லாம் எனது நாள் தொடங்கிவிட்டது.

மற்ற நாள்களில் காலை ஐந்தரை அல்லது ஆறரைக்கு எழும் போதெல்லாம் கூட, ‘ஏன்டா எழுந்திருக்கிறோம்… இன்னும் கொஞ்சம் நேரமாச்சும் படுத்திட்டு இருக்க கூடாதா?’ என்றுதான் தோன்றும். சோர்வாகச் சில நிமிடங்கள் படுக்கையிலேயே கிடப்பேன். ஆனால் சனிக்கிழமை அன்று அத்தனை சீக்கிரமாக விழித்த போதும்கூட எனக்குச் சிறிதளவு சோர்வும் இல்லை. உடனடியாக எழுந்து குளித்து தயாரானேன்.

சரியாக நான்கு மணிக்கு ஆவடியில் ரயில் ஏறிவிட்டேன். பெண்கள் பெட்டி துடைத்து வைத்தது போலச் சுத்தமாக இருந்தது. யாருமே இல்லை. லேசான பீதியுடன் வந்து அமரும் போது இரண்டு பெண்கள் கூடையுடன் அதே பெட்டியில் ஏறினார்கள். அவர்கள் பேசிக் கொண்டே இறங்குகிற பாதையில் கால்களை நீட்டிக் கொண்டு சாவகாசமாக அமர்ந்தனர். நமக்குத்தான் இந்த விடியற்காலை பயணம் எல்லாம் புதிது. ஆனால் அவர்களுக்கு அந்த நேரமும் இடமும் மிகவும் பழக்கமானவையாக இருந்தன.

நான் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டேன். அம்பத்தூரில் தோழர் மீனாவும் இணைந்து கொண்டார். பல முறை இதே பழவேற்காட்டுக்கு அவர் குடும்பத்துடன் பயணித்திருப்பதாகச் சொன்னார். அதுவும் பொறுப்பான ‘குடும்ப இஸ்திரியாகப்’ பிரியாணி எல்லாம் சமைத்து எடுத்துச் சென்றதாகச் சொன்ன போது அந்தச் சுற்றுலா உண்மையில் இன்பச்சுற்றுலாவாக இருந்ததா என்ற கேள்வி எழுந்தது.

உண்மையில் குடும்பத்துடன் செல்கிற எந்தச் சுற்றுலாவும் முழுக்க முழுக்க இன்பச் சுற்றுலாவாக இருப்பதில்லை. முக்கியமாகப் பெண்களுக்கு.

அதுவும் சின்ன குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது அவர்களுக்குத் தேவையான பால் புட்டி, பேம்பர்ஸ், உடைகள், இத்யாதி இத்யாதி எனப் பார்த்துப் பார்த்து பொருள்களை அடுக்கி எடுத்துச் செல்வதிலேயே பாதி ஓய்ந்து போய்விடுவோம். அடுத்து குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது, மலம் கழித்தால் சுத்தம் செய்ய வழித்தடங்களில் கழிவறையைத் தேடி அலைவது எனச் சுற்றுலாவின் முழுச் சந்தோஷத்தை நம்மால் அனுபவிக்கவே முடியாது. 

‘இதுக்குப் பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்’ என்று தோன்றும்.

பெண்களின் பெரும்பாலான குடும்ப சுற்றுலாக்கள் எல்லாம் கூட்டை தூக்கிக் கொண்டே பறப்பது போலத்தான். இந்தக் கூடுகளை நம் தோளிலிருந்து இறக்கி வைக்கவேனும் இது போன்ற ஒரு தனிப் பயணம் தேவையாக இருக்கிறது. சந்தோஷத்துக்காக, நிம்மதிக்காக, மன அமைதிக்காக என்று நமக்கே நமக்கான ஒரு பயணம். இந்தப் பயணம் அப்படி அமையும் என்று எனக்கு நிறைய நம்பிக்கை இருந்தது. அதனால்தான் அந்த நாள் விடியல் எனக்கு அத்தனை உற்சாகமாகத் துவங்கியது.

மீனாவும் நானும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே ரயில் சென்ட்ரலை அடைந்தது. சாரல் மழையுடன் வழி நெடுக ஈரம். இருப்பினும் அன்றைய எங்கள் பயணத்தில் இடையூறு செய்யாமல் பெரிய மனதுடன் மழை சிறு சாரலுடன் நிறுத்திக் கொண்டது. அதிகம் தாமதிக்காமல் எல்லோரும் சரியான நேரத்தில் கூடிவிட்டனர். ஆர்வக் கோளாறில் நாங்கள் ஏற வேண்டிய வாகனத்துக்குப் பதிலாக வேறொரு வாகனத்துக்குக் கைகாட்டி மொக்கை வேறு வாங்கினோம்.

அதன் பிறகு நிதானமாக வந்து நின்றது ‘ரமணி’என்ற பெயரில் இருந்த மினி பஸ். அந்த நாள் முழுக்க எங்களுடன் ரமணியும் ஒரு கதாபாத்திரமாக இணைந்து கொண்டது. அங்கிருந்து இனிதே தொடங்கிய எங்கள் பயணத்தில் மொத்தம் இருபத்தொரு பெண்கள். பதினெட்டு வயது தொடங்கி பல்வேறு வயதுகளில்…

எங்கள் வசிப்பிடங்கள், வாழும் சூழ்நிலைகள், வேலைகள் எல்லாம் வெவ்வேறாக இருப்பினும் ஹெர் ஸ்டோரீஸ் அமைப்பின் வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்களாக ஒரு குடையின் கீழ் பெண்கள் நாங்கள் ஒன்றிணைந்து அந்தப் பயணத்தை மேற்கொண்டோம். எளிய அறிமுகத்துடன் தொடங்கிய இந்த ‘மகளிர் மட்டும்’ பயணத்தில் எல்லோரைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கான சூழலும் நேரமும் நிறையவே அமைந்தது என்று சொல்லலாம்.

முதல் நிறுத்தம். மூலக்கடை. தேநீர்க் கடை. சூடான எண்ணெய்யில் வடைகள் கொதித்துக் கொண்டிருந்தன. நாங்கள் அனைவரும் கூட்டமாக இறங்கி அந்தக் கடையை முற்றுகையிட்டோம். நிறைய டீ, சில காபிகள். நான் தேநீர்ப் பிரியை. கண்ணாடி டம்ளரில் வந்த தேநீரைப் பார்த்ததும் அம்மா நினைவு வந்தது. ‘இந்த டம்ளர்ல எல்லாம் டீ குடிக்கக் கூடாது’ என்ற அம்மாவின் அறிவுரைகளை ஒதுக்கிவிட்டு, தேநீருடன் ஒரு செல்பியை எடுத்து முகநூலில் பகிர்ந்து கொண்டேன்.

போட்டதுமே முதல் கமென்ட். ‘வீட்டுல தேநீர்கூட போட்டு குடிக்காம எங்க போறீங்க?’

இது போன்ற ஸ்லீப்பர் செல்கள் சமூக ஊடகம் முழுக்க உண்டு. நம் வாழ்க்கையை நாம் எப்படி வாழ வேண்டுமென்று அவர்கள் பாடம் எடுப்பார்கள். நாம அதை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது. படித்ததும் சிரித்துவிட வேண்டும்.

அடுத்து அம்மா அழைத்தார். “எங்க இருக்க? என்ன பண்ற..? வீட்டுல பசங்களுக்கு ஏதாவது சமைச்சு வைச்சுட்டு வந்தியா?”

“எது… மூணு மணிக்கு சமைச்சு வைக்கவா?”

மீண்டும் சிரித்துக் கொண்டேன். நாம் எவ்வளவு தூரம் வந்தாலும் என்ன சாதித்தாலும், பொறுப்பான அம்மா, மனைவி என்ற நிலையிலிருந்து கொஞ்சம்கூட இறங்கிவிடவே கூடாது என்பது அவர்கள் எதிர்பார்ப்பு. அவர்களும் அப்படித்தானே வாழ்ந்தார்கள்? சங்கிலி போல நீண்டு கொண்டே இருக்கும் இந்த எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம் நாம் செவி சாய்த்தால், நம்மால் வாழவே முடியாது. முக்கியமாக நமக்கான வாழ்வை வாழவே முடியாது.

இந்த நாள் எனக்கான நாள் என்று முடிவு செய்தேன். எத்தனை மணி நேரம் எங்கள் பயணம் நீண்டது என்றே தெரியாத அளவுக்குக் கதையடித்துக் கொண்டே சென்றோம்.

அடுத்த நிறுத்தம் காலை உணவு. மொறுமொறு தோசைகளும் மல்லிகைப்பூ இட்லிகளும் எங்கள் முன்னிருந்த நீண்ட மேசைகளை ஆக்கிரமித்துக் கொண்டன. கூடவே சட்னிகளும் சாம்பார்களும் என் டயட்டை சோதித்தன. இன்னும் இன்னும் சாப்பிடத் தூண்டியது. அதுவும் அன்பாகக் கேட்டுக் கேட்டுப் பரிமாறிய அந்த உணவகப் பெண்கள் எங்கள் காலை உணவை அதிகச் சுவையானதாக மாற்றினார்கள். வயிறும் மனமும் நிறைந்த திருப்தியில் மீண்டும் தொடர்ந்த எங்களது பயணம் பழவேற்காட்டில் முடிந்தது. இறங்கியதும் மீன் வாடை குப்பென்று அடித்தது. கூடைகளில் இறால் விற்றுக் கொண்டிருந்த பெண்கள்.

கடல் உணவுக்கு எப்போதும் தனிச்சுவைதான். அதுவும் ஐஸ் இல்லாமல் புத்தம் புதிதாக இருந்தால் சொல்லவே வேண்டாம். இறால்களைப் பார்த்ததும் வாங்கத் துடித்த மனதை அடக்கிக் கொண்டேன்.

‘வந்த வேலை முக்கியம் குமாரு’

சில நிமிட காத்திருப்பிற்குப் பிறகு பழவேற்காடு ஏரியில் மூன்று படகுகளில் தோழர்கள் நாங்கள் பிரிந்து பயணித்தோம். எங்கள் குழு சென்ற மோட்டார்ப் படகை இருவர் ஓட்டி வந்தனர். அவர்களின் இளையவராக இருந்தவர் அந்த ஏரியைக் குறித்து விளக்கினார். பெயர் ரமணன். அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மூன்றாம் வருடம் படிப்பதாகச் சொன்னார். பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. கல்வியுடன் சேர்த்து தங்களுடைய குடும்பத்தின் தொழிலையும் ஒரு பக்கம் கற்றும் வைத்திருக்கிறார்கள். ஒரு வகையில் இந்தப் பிள்ளைகளின் தனிச்சிறப்பு அதுதான்.

அந்த நீண்ட படகுப் பயணம் கடலோரத்தில் வந்து முடிந்தது. ஆவேசத்துடன் சீறிப் பாய்ந்த அலைகளில் கால் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதால் தூரமாக நின்றபடி ரசித்தோம். பல்வேறு இடங்களிலிருந்து சங்கமித்த பெண்கள் நாங்கள், கொசஸ்தலை ஆறும் கடலும் கலக்கும் அந்த அழகிய சங்கமத்தின் முன்னே நின்று குழுப் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டோம்.

அங்கிருந்து மீண்டும் படகில் ஏறி ஆழமே இல்லாத இடத்துக்கு வந்தோம். அங்கே மீனவர்கள் சிலர், பெரிய  வலை ஒன்றை உதறி மேலே தூக்கிக் கொண்டிருந்தார்கள். அதில் மீன்கள் சிக்கியிருந்தன. அந்தக் காட்சி எங்கள் அனைவரையும் கவர்ந்தது. அதனைப் படம் பிடித்துக் கொண்டோம்.  

அடுத்துக் குளிக்க வேண்டுமென்ற முடிவுடன் ஒரு சாரார் உள்ளே குதிக்க, அடுத்தடுத்து ஒவ்வொருவராகத் தண்ணீரில் இறங்கினார்கள். அந்த இடத்தில் இடுப்பு வரை மட்டுமே தண்ணீர் இருந்தது. எங்கள் குழுவில் சிலர் திறமையாக நீச்சலும் அடித்தார்கள். பெரும்பாலானோர் மாற்றுத் துணி எடுத்து வரவில்லை. ஆனால் அதெல்லாம் ஒரு பெரிய விஷயமாகவே அப்போதைக்குத் தெரியவில்லை.

 ‘ஆசையக் காத்துல தூது விட்டு’ என்று அந்த மெல்லிய அலைகளுடன் தவழ்ந்து குதித்து நீச்சலடித்து விளையாடிக் களித்த பிறகு, மீண்டும் படகுகளில் கிளம்பினோம்.

அங்கிருந்த மணற்திட்டில் நீண்ட மூக்கு, நீளமான கால்களுடன் சில பறவைகள் தென்பட்டன. அவற்றைப் படம் பிடிக்க அருகே படகை எடுத்துச் செல்லக்  கேட்டோம். எங்கள் படகு நெருங்கியதுமே தம் வெள்ளைச் சிறகுகளை விரித்துக் கொண்டு அவை பறந்தன. பார்க்கவே அவ்வளவு ரசனையாக இருந்தது. உடன் வந்த தோழர்கள் அது பூநாரையாக இருக்கலாம் என்று கணித்தார்கள். அந்த அரிதானக் காட்சியை அதிக நேரம் ரசிக்க முடியாமல் எங்கள் படகு திரும்பியது. அடித்த வெயிலுக்கு எங்கள் ஈர உடைகள் எல்லாம் கரையை நெருங்குவதற்குள் காய்ந்து விட்டன.

அடுத்த இடத்துக்குச் செல்லக் கிளம்பி எல்லோரும் பேருந்தில் ஏறிய பிறகுதான், தோழர் தேமொழி அவர்கள் செல்பேசி தொலைந்து போனது தெரிய வர, குழுவினர் கலக்கத்துடன் தங்கள் பைகளை எல்லாம் துழாவினார்கள். வெகுநேரத் தேடலுக்குப் பிறகு செல்பேசி கிடைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிந்தபிறகு மீண்டும் எங்கள் பயணம் தொடர்ந்தது.

பயணத்தின் வழிகாட்டியாக எங்களுடன் இணைந்திருந்த மகேந்திரன், முதலில் அழைத்துச் சென்றது ராஜலட்சுமி அவர்களின் வீட்டிற்கு. எங்கள் ஆத்திர அவசரங்களை முடித்துக் கொண்டு, வீட்டின் வராந்தாவில் அப்படியே சுற்றி அமர்ந்தோம். கதை கேட்கும் பாணியில்.

இருபது வருடங்களுக்கும் மேலாக மீனவ சமூகத்தினருக்காக ராஜலட்சுமி குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய பணிகளைப் பாராட்டி சென்னைப் பல்கலைக்கழகம் கௌரவித்து விருது வழங்கியுள்ளதைக் கேட்டுத் திகைப்புற்றேன். ‘வயதுக்கு வந்த பெண்கள் பள்ளிக்குச் செல்லக் கூடாது’, ‘திருமணமான பெண்கள் பொது வெளியில் இயங்கக் கூடாது’ போன்ற கட்டுப்பாடுள்ள காலகட்டத்திலேயே ராஜலட்சுமி தன்னுடைய சமூகத்திற்கான பங்களிப்பைத் தர முன்வந்துள்ளார். சுயஉதவிக் குழுக்கள் நடத்தும் தொழிற்பயிற்சி போன்றவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

அவருடைய வாழ்க்கையைச் சுனாமிக்குமுன் சுனாமிக்குப்பின் என்று பிரிக்கலாம். சுனாமிக்கு முன்பு வரை கடைத் தெருவுக்குக்கூடச் செல்லாத அதே ராஜலட்சுமி, இன்று ஆளுநர் முதல் பல அரசியல் தலைவர்களையும் சந்தித்து மீனவ சமுதாய பிரச்சினைகளுக்காகப் பேசுகிறார். பத்திரிக்கைகள் அவரை தேடி வந்து பேட்டி எடுக்கின்றன. பலரின் வாழ்க்கையைத் தலை கீழாகப் புரட்டிப் போட்ட சுனாமி, சாமானியப் பெண்ணாக இருந்த ராஜலட்சுமியைச் சாதனை பெண்ணாக மாற்றியது.

மிகவும் எளிமையான பாணியில் எங்களுடன் உரையாடினாலும் அவருடைய பேச்சில் ஆளுமையும் பெருமிதமும் மிளிர்ந்தது. அந்த ஆளுமை அவருக்குச் சாதாரணமாக வந்துவிடவில்லை. நிறைய ஏச்சுக்கள் பேச்சுகளைக் கடந்துதான் அவர் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார். இருபது வருடங்களுக்கு முன்பு பொது வெளியில் இயங்க முன்வந்த போது அவருக்குத் தன் சொந்தக் குடும்பத்திலேயே நிறைய எதிர்ப்புகள் கிளம்பின. அக்கம் பக்கத்தினர் அவதூறு பரப்பினார்கள். அப்போதும் அவர் இயக்கம் தடைப்படவில்லை. அத்தனை எதிர்ப்புக்களையும் மீறி தனக்கான தனிப்பட்ட இடத்தை, அங்கீகாரத்தை மீனவ சமுதாயத்தில் நிலைநிறுத்திக் கொண்டார். அவருடைய சமூகப் பங்களிப்பு அளப்பரியது. ஆரம்பத்தில் யாரெல்லாம் அவரை தவறாக விமர்சித்தார்களோ, பின்னாளில் அவர்களே அவரிடம் உதவி கேட்டு வந்து நின்றார்கள்.

தோழர் ராஜலட்சுமியிடம் பேசி முடிக்கும் வரை எங்கள் யாருக்கும் பசி என்ற உணர்வே இல்லை. மீனவ சமுதாயத்தில் அவர் சாதித்த விஷயங்களைக் கேட்கக் கேட்க ஆச்சரியமாக இருந்தது.

வீடுதான் உலகம் என்று நம்பிக் கொண்டிருக்கும் பெண்களுக்குத் திடீரென்று குடும்பத்தில் ஏற்படும் நெருக்கடியோ அல்லது அழுத்தமோ அவர்களைச் சமூகத்திற்குள் கொண்டு வருகிறது. அப்படியான கட்டாயம் வரும் போது அவர்கள் திறமையும் ஆளுமையும் வெளிப்படுகிறது. ராஜலட்சுமியின் கதையும் அப்படிதான்.

ஆனால் அப்படி ஒரு கட்டாயம் வரும் வரை இன்றைய பெண்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இன்று வாய்ப்பும், கல்வியும் நமக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கித் தந்திருக்கின்றன. நாம் அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாலே போதும். தோழர் ராஜலட்சுமி போலப் பலர் உருவாகலாம். நிறையப் பெண்கள் சமூக மாற்றத்திற்காகக் குரல் கொடுத்தால் இன்னும் பெரியளவிலான மாற்றத்தை நாம் கொண்டு வரலாம்.

செவிக்கு உணவு கிடைத்தபின் இயல்பாகவே வயிறு கூவத் தொடங்கியது. மீன் குழம்பு, மீன் வறுவல், இறால் தொக்கு என்று சுவையான ஓர் அசைவச் சாப்பாடு எங்களுக்காகக் காத்திருந்தது. அது ஓர் ஆரம்பப் பள்ளிக் கூடம். அதேநேரம் அது அவர்களின் சமூக கூடமாகவும் இயங்கி வருகிறது. அங்கிருந்த ஓர் அறையில்தான் வட்டமாக அமர்ந்தோம். கொலைப் பசி. நன்றாகச் சாப்பிட்டு முடித்ததும் உடல் இயல்பாகவே ஓய்வுக்குத் தயாரானது. ஒரு குட்டி தூக்கம் போடவேண்டும் போலிருந்தது.

ஆனால் அதன் பிறகுதான் இந்தப் பயணத்தின் மிக முக்கியமான சந்திப்புகளும் அனுபவங்களும் எங்களுக்காகக் காத்திருந்தன. 

தொடரும்…

படைப்பாளர்

மோனிஷா

தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இணையத்தில் 27 நாவல்களை இதுவரை எழுதியுள்ளார். அவற்றில் இருபது நாவல்கள், புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பெண்ணியம், சூழலியல் விழிப்புணர்வு இரண்டும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன. சிறார் எழுத்திலும் தற்போது ஈடுபட்டுள்ளார். இவரின் ‘ஒரே ஒரு காட்டில்’ சிறார் நூலை ஹெர் ஸ்டோரீஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.