ராபர்ட் கிளைவ், 1757-ம் ஆண்டு பிளாசி போரில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மெதுவாக ஆங்கில கிழக்கிந்திய ஆட்சி, இந்தியாவின் பெரும்பான்மை இடங்களில் நீண்டது. சில இடங்களில் மன்னராட்சி நடைபெற்றது. East India Company, Salute State, Tributary State, British Protectorate, Rajputana Agency, Client state, Indirect rule இப்படி விதவிதமான முறையில் அரசுகள் இருந்திருக்கின்றன. 

துணைப்படைத் திட்டம் (Subsidiary alliance) என்ற திட்டத்தை இங்கிலாந்து பிரித்தானிய ஆளுநராக 1798 முதல் 1805 வரை பதவியில் இருந்த வெல்லஸ்லி கொண்டு வந்தார். இந்தக் காலகட்டத்தில், எதிர்ப்பு தெரிவித்த திப்பு சுல்தான், கட்டபொம்மன் என அனைவரின் முடிவும் நிறைவேறிவிட்டது என்பதையும் இணைத்தே பார்க்க வேண்டும். துணைப்படைத் திட்டத்தின்படி அரசர்கள் அனைவரும் கிழக்கிந்தியக் கம்பனியின் படையைத் தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கான படையாக வைத்துக்கொள்ள வேண்டும்; தங்களுக்கென்று தனிப்படைகள் வைத்துக்கொள்ளக் கூடாது. ஆங்கிலேயர் கொடுக்கும் படைக்காக வரி செலுத்த வேண்டும். மறுத்தால் தங்களது ஆட்சிப்பகுதியில் குறிப்பிட்ட இடத்தை அபராதமாக ஒப்படைக்க வேண்டும். அரசின் தலைநகரில் ‘resident’ என ஒரு பிரிட்டிஷ் அதிகாரி இருப்பார். அவரின் அனுமதியின்றி, ஆட்சியாளர் மற்ற அரசுகளுடன் நேரடிக் கடிதப் பரிமாற்றம்/உறவுகளைக் கொண்டிருக்கக் கூடாது. இப்படிப் பல கட்டுப்பாடுகள் இருந்தன. மொத்தத்தில் அவனின்றி அணுவும் அசையாது. பெயருக்குத் தான் மன்னராட்சி. மற்றபடி மாப்பிள்ளை அவர் தான் அவரது சட்டை என்னது என சொன்னது மாதிரி ஆட்சி அவரது; அதிகாரம் என்னது என தான் இந்தியா முழுவதும் இருந்து இருக்கிறது. 

திறை வசூலிக்க முகமைகள் Agency இருந்திருக்கின்றன. துப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை வழங்குவது, அஞ்சல்தலை, கொடி, நாணயங்கள் வைத்துக் கொள்வது என ஆங்கிலேயர்கள் கொடுத்த அதிகாரத்தை மட்டும் இவர்களால் பயன்படுத்த முடியும் அவ்வாறு வெளியிடப்பட்ட அஞ்சல்தலைகளில் என்னிடம் உள்ளவற்றில் தொகுப்பு இங்கு வருகிறது. 

Feudatory states அஞ்சல்தலைகள் வெளியிட்டன. Convention statesகளில் ஜிந்த், ஃபரித்கோட், Jind and Faridkot போன்ற சில அரசுகள் தவிர அனைத்து அரசுகளும் பிரிட்டிஷ் இந்திய அஞ்சல்தலைகளில், தங்கள் பெயரை இணைத்துப் பயன்படுத்தின.

விடுதலைக்கு முன் 562 மன்னராட்சி அரசுகள் இருந்திருக்கின்றன. விடுதலைக்குப் பின்னர், சிக்கிம் தவிர பிற அரசுக்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பர்மாவுடன் இணைந்தன அல்லது இணைக்கப் பட்டன. அவை இணைக்கப்பட்ட நாள்களைப் பார்த்தால் அவை தானாக இணைந்தனவா அல்லது இணைக்கப் பட்டனவா என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

ஹைதராபாத் அரசு 

ஹைதராபாத் நிஜாம் தான் துணைக் கூட்டணியை முதலில் ஏற்றுக் கொண்டவர். பரப்பளவிலும் வருவாயிலும் பெரிய அரசாக அது இருந்தது. தற்போது தெலங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களின் சில பகுதிகள் இந்த அரசில் இருந்தன. 

இந்தக் காலக்கட்டத்தில் தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த அக்டோபர் 16, 1799 கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். திப்பு சுல்தான் 1799-ம் ஆண்டு நான்காவது ஆங்கிலோ-மைசூர் போரில் இறந்தபின் மைசூர் துணை மாநிலமாக மாறியது. 

மூன்றாம் ஆங்கிலோ-மராத்தா போருக்குப் பிறகு (1817-19), மராட்டிய ஆட்சியாளர் இரண்டாம் பாஜி ராவ் துணைக் கூட்டணியையும் ஏற்றுக் கொண்டார். அவாத் (1801), பேஷ்வா (1802), போன்ஸ்லே (1803), சிந்தியா (1804), சிங்ராலி (1814), ஜெய்ப்பூர், ஜோத்பூர் (1818) உள்ளிட்ட பிற மாநிலங்களும் இந்தக் கூட்டணியை ஏற்றுக்கொண்டன.

ஹைதராபாத் நிஜாம்தான் துணைக் கூட்டணியை முதலில் ஏற்றுக் கொண்டவர். 1778-ம் ஆண்டு, ஆங்கிலேயப் படை ஹைதராபாத்தில் நிறுவப்பட்டன. அது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் பாதுகாவல் பகுதியாக (protectorate of the British East India Company) மாறியது, 1798-ம் ஆண்டு ஒரு முறையான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஹைதராபாத் முதல் மற்றும் இரண்டாவது மராத்தா போர்கள். சிப்பாய் புரட்சி போன்றவற்றில் ஆங்கிலேயர்களுக்கு பக்கபலமாக இருந்தது. 

துணைப்படைத் திட்டத்தின் கீழ் அரசு, ஆங்கிலேயரின் சமஸ்தானமானது. 1798-ம் ஆண்டில், ஆர்தர் வெல்லஸ்லி நிறுவிய துணைக் கூட்டணியின் கொள்கையின் கீழ் பிரிட்டிஷ் பாதுகாப்பிற்கு ஒப்புக்கொண்ட முதல் இந்திய சமஸ்தானமாக ஹைதராபாத் ஆனது, பரப்பளவிலும் வருவாயிலும் பெரிய சமஸ்தானமாக அது இருந்தது. தற்போது தெலங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் அரசின் பகுதிகள் இணைந்துள்ளன.

ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியில் மின்சாரம் தொடரி (ரயில்), தொலைத்தொடர்பு, மேம்பட்ட சாலைகள் பாசன வசதிகள் என பல கட்டமைப்புகளை உருவாக்கினர். 

கடைசி நிஜாம் ஒஸ்மான் அலி கான் (Osman Ali Khan) உலகின் மிகப் பெரும் செல்வந்தராக தனது ஆட்சியின் முடிவின்போது இருந்து இருக்கிறார். அவர் தான் அப்போதைய ‘உலகின் பெரிய பணக்காரர்’ என்கிறார்கள். ஐதராபாத்தில் இப்போது இருக்கும் பல பொதுக் கட்டிடங்கள், ஒஸ்மானியா பல்கலைக்கழகம் போன்றவை அவரால் கட்டப்பட்டவை. ‘நவீன ஐதராபாத் கட்டிடக் கலைஞர்’ எனப் போற்றப்படுகிறார். விமான நிலையம்கூடத் திறந்து இருக்கிறார்.

இந்திய விடுதலைக்குப் பின், சமஸ்தானம், இந்தியா/ பாகிஸ்தான் என இரு நாடுகளுடனும் இணைய விரும்பவில்லை. ஆனால் இந்தியாவின் நடுவில் ஹைதராபாத் தனிநாடாக இருப்பதை இந்தியா விரும்பவில்லை. அதனால் ராணுவ நடவடிக்கை மூலம் இந்தியாவுடன் இணைக்கப் பட்டது. 18 செப்டம்பர் 1948 நிஜாம், இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

அதன்பின்னும், 1951-ம் ஆண்டு, அவர் நிசாம் எலும்பியல் மருத்துவமனையை (நிசாம் மருத்துவ அறிவியல் கழகம் (NIMS) கட்டினார். 14,000 ஏக்கர் நிலத்தை வினோபா பாவேயின் பூதான் இயக்கத்திற்குக் கொடுத்தார்.

இவை ஹைதராபாத் அரசு, 1930-ம் ஆண்டு வெளியிட்ட அஞ்சல்தலைகள். 

இவை ஹைதராபாத் அரசால் , 1930-ம் ஆண்டு வெளியிடப்பட்டவை. இதில் இருக்கும் படம், இன்றும் ஹைதராபாத்தில் அடையாளமாக இருக்கும் சார்மினார் (Charminar). சார்மினார் 1591-ம் ஆண்டு கட்டப்பட்டது. முகமது குலி குதுப் ஷா, 1591-ம் ஆண்டு தனது தலைநகரை கோல்கொண்டாவில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்ட ஹைதராபாத் நகரத்திற்கு மாற்றிய பின்னர் சார்மினார் கட்டினார். இதை மையமாக வைத்து தான் ஹைதராபாத் நகரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முசி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. தென்மேற்கில் மக்கா மஸ்ஜித் உள்ளது. சார் மற்றும் மினார் என்ற உருது சொற்களுக்கு நான்கு தூண்கள் என்று பொருள். 

1930-ம் ஆண்டு,  ஹைதராபாத் அரசு வெளியிட்ட அரண்மனை அஞ்சல் தலைகள். 

1938-ம் ஆண்டு அரசு, ஹைதராபாத் அரசின் வெள்ளி விழாவினை முன்னிட்டு சில அஞ்சல்தலைகளை ஹைதராபாத் அரசு வெளியிட்டது. 

ஹைதராபாத்தில் இருக்கும் யுனானி மருத்துவமனை இது. இது ஹிஜ்ரி 1345 ஆம் ஆண்டு பொ.ஆ. 1926-ம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு பொது மருத்துவமனை ஆகும்.

அதே ஆண்டு வெளியிடப்பட்ட ஓஸ்மானியா பல்கலைக்கழக (Osmania University) அஞ்சல்தலை.

இது தென்னிந்தியாவின் மூன்றாவது பழமையான பல்கலைக்கழகம். நிசாம் ஓஸ்மான் அலி கான், 29 ஆகஸ்ட் 1917 அன்று இதை உருவாக்க ஆணையை பிறப்பித்தார். கற்பிக்கும் மொழியாக உருதுவைப் பயன்படுத்திய முதல் இந்தியப் பல்கலைக்கழகம் இதுவே. முத்திரையில் நூருன் அலா நூர் என்ற சொற்றொடருடன் நிசாமின் கிரீடம் இருந்தது. முன்னாள் பிரதமர் பி வி நரசிம்மராவ் இப்பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார்.

இரண்டாம் உலகப்போரின் வெற்றியின் (ஆங்கிலேயரின் வெற்றி) நினைவாக 1945 ஹைதராபாத் அரசால் இந்த அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

தொடரும்…

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.