பெண்கள் பல உரிமைகளையும் போராடித்தான் பெறுகிறார்கள். சமீபத்தில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் (province) தலைநகரான விக்டோரியாவிற்குச் சென்றோம். மாநிலத் தலைநகர் என்பதால், பல அரசு அலுவலகங்கள் உள்ளன. அவற்றுள் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சட்டமன்றம் (Legislative Assembly of British Columbia) ஒன்று. உள்ளே சென்று பார்த்தோம். அதில் வாக்களிக்கும் உரிமை, வாக்கு அரசியலில் பெண்கள் தொடர்பான செய்திகளுக்காக ஓர் அறை ஒதுக்கி இருந்தார்கள்.

1917ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் சில பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர். அந்த உரிமையைப் பெற்ற மிகச்சில பெண்களுக்கான நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் விதமாக 2017ஆம் ஆண்டு, சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘முதல்’ மற்றும் ‘குறிப்பிடத்தக்க’ பெண்களுக்கான கண்காட்சியாக இது உள்ளது. இங்கு பெண்கள் வாக்குரிமை பெற்றதற்கான நீண்ட வரலாறு குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

புதிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதல் பொதுத் தேர்தல் 1871ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. மறு ஆண்டே, பெண்களுக்கான வாக்குரிமை தொடர்பான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, 23க்கு 2 என்கிற வாக்குகளில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

1873ஆம் ஆண்டு வெள்ளை இனப் பெண்களில் சொத்து வைத்திருப்பவர்கள் மட்டும் நகராட்சி தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

1890களில் இருந்தே அன்னே செசிலியா ஸ்போஃபோர்ட் (ANNE CECILIA Spofford), மரியா கிராண்ட் (Maria Grant) போன்றவர்கள், பெண்களின் வாக்கு உரிமை குறித்துத் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். மரியா கிராண்ட், கனடாவில் அரசியல் அலுவலகத்திற்குத் (elected to political office) தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் முதல் பெண் பள்ளி வாரிய அறங்காவலர் (school board trustee).

விக்டோரியா Local council Of Women 1987ஆம் ஆண்டு இருவரையும் சிறப்பித்துள்ளது.

1910 பிரிட்டிஷ் கொலம்பியா அரசியல் சமத்துவ லீக் (BCPEL) அதன் தொடக்க மாநாட்டை நடத்துகிறது. எழுத்தாளர் நெல்லி மெக்லங் (Nellie McClung) போன்றவர்கள், பல மாகாணங்களுக்கும் இது குறித்துப் பயணம் செய்து பரப்புரை ஆற்றினர். நெல்லி மெக்லங் பிற்காலத்தில் 1921இல் ஆல்பர்ட்டாவின் (Alberta) சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பலரின் தொடர் முயற்சிக்குப் பின், 1917ஆம் ஆண்டு அனைத்துப் பெண்களுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையும், தேர்தலில் போட்டியிடும் உரிமையும் கிடைத்தது.

மேரி எலன் ஸ்பியர் ஸ்மித் (Mary Ellen Spear Smith) என்பவர்தான், பிரிட்டிஷ் கொலம்பியா சட்டமன்றத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் (MLA), மற்றும் முதல் பெண் அமைச்சர். இவர்தான் பிரிட்டிஷ் பேரரசின் முதல் பெண் செயல் சபாநாயகர் (Acting Speaker in the British Empire) என்பதும் குறிப்பிடத்தக்கது.

1863 இல் இங்கிலாந்தில் பிறந்த இவர், திருமணத்திற்குப் பிறகு 1891ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கொலம்பியா வந்திருக்கிறார். பெண்களுக்கான வாக்குரிமை தொடர்பான பணி முதல்கொண்டு, பல களப்பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருந்திருக்கிறார்.

அவரின் கணவர், சட்டமன்ற உறுப்பினரானதுடன், மாநில நிதி அமைச்சராகவும் அப்போது இருந்திருக்கிறார். மேரி எலன் ஸ்மித் தனது கணவரின் அரசியல் வாழ்க்கைக்கு உதவிய வண்ணம் இருந்திருக்கிறார்.

1917ஆம் ஆண்டு, கணவர் இறக்க, இடைத்தேர்தல் வந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் அனைத்துப் பெண்களும் தேர்தலில் வாக்கு செலுத்தவும், போட்டியிடவும் முடியும் என்கிற நிலை வந்துள்ளது. இடைத்தேர்தலில் மேரி எலன் ஸ்மித் ‘பெண்களும் குழந்தைகளும் முதலில்’ (Women and children first) என்கிற முழக்கத்துடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு, பெரும் வாக்கு இடைவெளியுடன் வெற்றியும் பெற்றிருக்கிறார். இவ்வாறு, சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்கிற பெருமையைப் பெற்றார். 14 ஆவது, 16 ஆவது, சட்டமன்ற உறுப்பினர்கள் அட்டவணையில் அவரது பெயர் இருக்கிறது. கீழே உள்ள படத்தில் இருப்பவர்கள், மேரி எலன் ஸ்மித் உள்பட 14வது சட்டமன்ற உறுப்பினர்கள்.

பல்வேறு காலகட்டங்களில் சட்டமன்றத்தில் பணியாற்றிய பெண்களின் படங்கள் கீழே உள்ளன.

கடைசியாக மேலே இருக்கும் படத்தில், கடைசியாக இருப்பவர் ரச்சனா சிங் (Rachna Singh). டெல்லியில் பிறந்து, சண்டிகரில் வளர்ந்த இவர், 2001ஆம் ஆண்டுதான் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் குடியேறி இருக்கிறார். வந்து சில ஆண்டுகளிலேயே (2017) சட்டமன்ற உறுப்பினராக ஆகி இருக்கிறார். பிற்காலத்தில் கல்வி மற்றும் குழந்தை பராமரிப்பு அமைச்சர் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார்.

1965 இல் கல்கத்தாவில் ஆங்கிலேய இந்திய பெற்றோருக்குப் பிறந்த ஜூட் தியாப்ஜி (Judeline Tyabji) சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர். இவரும் மேலே உள்ள படத்தில் உள்ளார். இவர், 1991–1996 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

கீழே இருக்கும் படங்கள் 41 ஆவது சட்டமன்றக் கூட்டத் தொடர்கள் குறித்தவை. தற்போதைய பிரிட்டிஷ் கொலம்பியாவின் 42வது சட்ட மன்றத்தில் 87 உறுப்பினர்களில் 37 பெண் உறுப்பினர்கள் உள்ளனர். இது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 42.5 விழுக்காடு. அதனால் இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடரைப் படம் எடுத்தால், இந்தப் படத்தைவிட இன்னமும் கூடுதலாக பெண்கள் இருக்கலாம்.

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.