குடும்பத் தலைவிகளுக்கு மாத ஊதியம் என்கிற பெயரில் கமலஹாசன் முன்வைத்த தேர்தல் வாக்குறுதி, திமுக அரசால், ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ என்று பெயர் சூட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. யார் பயனாளிகள் என்பதற்கான விதிகளைத் தமிழக அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது.

திருமணம் ஆன பெண்கள் மட்டுமல்ல, 21 வயது நிரம்பிய திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் அனைவருமே விண்ணப்பிக்கத் தகுதியானவர் என்பது வரவேற்கத்தக்கது. ஆண்டுக்கு இரண்டரை லட்சத்துக்குக் கீழே வருமானம், 3600 யூனிட்டுக்குக் கீழே மின்சாரப் பயன்பாடுள்ள குடும்பங்கள் விண்ணப்பிக்கலாம். “பழங்குடியினர், சாலையோரங்களில் வசிப்போர், தூய்மைப் பணி புரிவோர், இதர ஆதரவற்றோர் அனைவரும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆதார், ரேஷன் கார்டு போன்றவை இல்லையென்றாலும் அதைப் பெற வழி செய்து உரிமைத் தொகை வழங்க வேண்டும்” என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். ஒரு கோடிப் பெண் பயனாளர்கள் என இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

யார் இந்தத் திட்டத்தில் பயனாளிகளாக விண்ணப்பிக்க முடியாது என்றும் அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது. இரண்டரை லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டி வரி செலுத்துவோர். அனைத்துவித அரசு ஊழியர்கள். வார்டு உறுப்பினரைத் தவிர மற்ற அனைத்து மக்கள் பிரதிநிதிகள். கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் வைத்திருப்போர். அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறுவோர் போன்றோர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது. கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவோருக்கு விலக்கு இருக்கிறது. அவர்கள் விண்ணப்பித்துப் பயன் பெறலாம். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்தத் தொகை கிடைக்கும்.

குடும்பத் தலைவராக இருக்க திருமணம் ஆகி இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை போன்ற விதிகளைப் பார்க்கையில், யாருக்கு இந்தத் தொகை போய்ச் சேரவேண்டும் என்பதில் அரசு மட்டத்தில் ஓர் ஆரோக்கியமான விவாதம் நிகழ்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. முற்போக்கு சிந்தனையும் சமூகநீதியும் உள்ளடக்கியதாக விதிகள் இருக்கிறது. ஏதேனும் குறைகள் இருந்தால் எதிர்க்கட்சிகளும் பெண்ணியலாளர்களும் பொதுமக்களும் சுட்டிக்காட்டுவார்கள். அதிமுக சார்பில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் எல்லாருக்கும் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு அரசு கஜானா ஒத்துழைக்க வேண்டும். உரிமைத்தொகை அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே அதைப் பற்றிய ஆரோக்கியமான விவாதங்கள் இரண்டாம்பட்சமாகி கேலி செய்யும் மீம்கள் முதலிடத்தைப் பிடித்தன.

இது ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டம். இதன் வெற்றி தோல்வி, நடைமுறைப்படுத்தப்பட்ட சில காலத்துக்குப் பிறகுதான் தெரியவரும். திட்டம் தொடர்பான உரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்றால்தான் சமூகத்தில் மாற்றம் உண்டாகும். குறிப்பாக யாரெல்லாம் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது என்று வரையறுக்கப்பட்டிருக்கிறேதோ அங்கு இந்த உரையாடல் நிகழ வேண்டும்.

ஏற்கெனவே சில நாடுகளில் இப்படிக் குடும்பத் தலைவிகளுக்குப் பணம் கொடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி இருக்கின்றன. சில நாடுகள் சரியான பலன் இன்றிக் கைவிட்டும் இருக்கின்றன. இந்தியாவிலேயேகூட பத்து வருடங்களுக்கு முன்பே குடும்பத் தலைவிகளுக்கு ஊதியம் எனும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுக் கிடப்பில் போடப்பட்டது. செயல்படுத்தினாலும் செயல்படுத்தாவிட்டாலும் பெண்கள் பணப்பலன் இல்லாத பணிகளைச் செய்கிறார்கள் என்பதில் உலகம் முழுவதுமே மாற்றுக் கருத்தில்லை.

வேலை செய்யும் வயதில் இருக்கும் மக்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் இது பற்றிய தெளிவைத் தரும். உலகில் கிட்டத்தட்ட 65 கோடிப் பெண்கள் வெளியில் சென்று வேலை பார்த்துப் பொருளீட்ட முடியாமல் இருக்கிறார்கள். இவர்களில் பலர், வீட்டையும் வீட்டில் உள்ள நபர்களையும் கவனித்துக் கொள்ளும் ஊதியமில்லாப் பணியில் இருப்பதையே காரணமாகத் தெரிவித்துள்ளார்கள். ஆண்களும் அரிதாக இப்படிக் குடும்பத்துக்காக ஊதியமில்லா கேர் ஒர்க் செய்கிறார்கள். உலகில் அவர்களின் எண்ணிக்கை 4 கோடி மட்டுமே.

உயர் வருவாய் உள்ள நாடுகளில் வேலை செய்யாத மொத்த ஆண்களில் தோராயமாக மூன்று சதவீதம் பேரும் மொத்தப் பெண்களில் தோராயமாக இருபது சதவீதம் பேரும் ஊதியமில்லாத கவனிப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர். நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் இந்த சதவீதம் தோராயமாக ஆண்கள் 6, பெண்கள் 47 என்று இருக்கிறது. குறைவான வருமானம் உள்ள நாடுகளைக் காட்டிலும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளின் சராசரி மோசமாக இருக்கிறது. இப்படி வருவாய் ஈட்டும் திறன் உள்ள பெண்கள் வீட்டில் குழந்தைகளுக்கு ஆய் கழுவிக்கொண்டிருந்தால் இந்தியா எப்போது வல்லரசாவது? ஆண், பெண் இருவரும் சேர்ந்து பணிபுரிந்தால்தானே சமூகத்தில் பாலினப் பாகுபாடு ஒழியும்? ஒரு தரப்புக்கு மட்டும் அந்த வாய்ப்பு மறுக்கப்படுவது எப்படிச் சரியாகும்?

பெண்கள் வேலைக்குப் போவது குறிப்பாக ஆசிய நாடுகளில்தாம் குறைவாக இருக்கிறது. குடும்பம், கலாச்சாரம், மதம், சமய நம்பிக்கைகள் காரணமாக இருக்கிறது. சொல்லப்போனால் பெண்களேகூட என் குழந்தையை, குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதில் எனக்கென்ன சிரமம், என் கடமை, பெருமை என்றெல்லாம் பேசுவதுண்டு. 36 வயதினிலே படத்தில் வரும் ஜோதிகா வேலைக்குப் போய் சம்பாதிப்பவராக இருந்தாலும்கூட கணவரும் மகளும் மதிக்காமல் இருப்பது போல காட்சிகள் இருக்கும். பல குடும்பத்தில் நடக்கும் உண்மை நிகழ்வு இது. பெண்களை சமூக ஊடகங்களிலும் வீடுகளிலும் மட்டம் தட்டிப் பேசுவதை ஆண்கள் நகைச்சுவை என்று நம்புகிறார்கள். இந்த நிலையில் வீட்டு வேலை மட்டுமே செய்யும் ஒரு பெண் சுயமரியாதையுடன் வாழ்வது என்பது ஆண்கள், பெண்களுக்கு நகைச்சுவை உணர்வுள்ளது என்று ஒப்புக்கொள்வதைப் போல குறைவான சாத்தியமுள்ள விஷயம்.

கணவர் சம்பாதிக்கும் பணத்தில் மனைவிக்கும் சமபங்கு இருக்கிறது என்றுதான் சட்டம் சொல்கிறது. வெளிநாட்டில் கணவன் சம்பாதித்த சொத்தில் விவாகரத்தாகி வேறு ஒருவருடன் வாழும் மனைவிக்குப் பங்கு கிடையாது என்கிற வழக்கில் பங்கிருக்கிறது எனக் கடந்த மாதம்கூடத் தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம். இந்த உரிமை பற்றிய தெளிவு பெண்களுக்கு இருக்கிறதா என்பதே கேள்வி. படித்து வேலைக்குப் போய் சம்பாதித்துக்கொண்டிருந்து, குழந்தை பிறந்த பிறகு வேலையைவிட்ட பெண்கள் இருக்கிறார்கள். கணவர்கள் சம்பாதிக்கும் பணத்தைத் தனக்கென பயன்படுத்துவதில் குற்ற உணர்வுகொள்ளும் பெண்கள் இந்தத் தலைமுறையிலும் இருக்கிறார்கள்.

நகரில் உள்ள சில குடும்பங்களில் ஆண், பெண் இருவருமே குடும்ப வேலைகளைப் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் தற்போது அதிகரித்திருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்வொன்றில் இந்தப் புதிய பழக்கத்திலும் எமோஷனல் லேபர் பெண் மீதே திணிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார் ஒரு பெண். சமைப்பது, பாத்திரம் தேய்ப்பது, காய்கறி வாங்குவது போன்ற வேலைகளை ஆண் செய்தாலும் அதைச் செய்ய வேண்டும் என்று பெண்தான் சொல்ல வேண்டும். அந்த வேலையைச் செய்ய வைக்கப் பலமுறை நினைவூட்டி, அது முடிந்ததா என்பதை உறுதிப்படுத்தும் வரை பின்தொடர வேண்டும். நானும் வேலையைப் பகிர்ந்துகொள்கிறேன் என்று சொல்லும் ஆண் அது பற்றிய மன அழுத்தத்தைத் தொடர்ந்து பெண்ணிடமே தள்ளிவிடுகிறார் என்று நுட்பமாகச் சுட்டிக்காட்டினார் அப்பெண்.

குடும்பம் என்பது ஆண், பெண் இருபாலரும் இணைந்தது. அதில் ஒருவர் வெளியே சென்று சம்பாதிப்பதும், ஒருவர் வீட்டைப் பார்த்துக்கொள்வதும் வேலையைப் பிரித்துக் கொள்ளும் எளிதான வழிமுறை. அது பெண்ணின் விருப்பமா அல்லது திணிக்கப்படுகிறதா? வேலைக்குப் போக விரும்பும் பெண் வீடு, வேலை என்று இரட்டைச் சுமைகளைச் சுமக்க நிர்பந்திக்கப்படுகிறாரா? பெண்கள் படிப்பது குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தர மட்டுமா? ஆண் செய்யும் வீட்டு வேலைகள் உதவியா, கடமையா? ஒரு பெண் விருப்பப்பட்டு வீட்டைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டால் அவர் சுய மரியாதையுடன் வாழ முடிகிறதா? தனக்கு விருப்பமானதை வாங்க அனுமதி கேட்க வேண்டியிருக்கிறதா? சம்பாதிக்கும் ஆண்கள் அப்படி அனுமதி கேட்கிறார்களா? உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாத குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு அந்தக் குடும்பத்தாரே ஏன் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதா மாதம் தனிப்பட்ட செலவுகளுக்காகக் கொடுக்கக் கூடாது? அதைக் கேட்டுப் பெறத் தனக்கு உரிமை இருக்கிறது என்பதை ஒரு பெண் புரிந்துகொள்கிறாரா? இந்த மாதிரி கேள்விகளை முன்வைத்து விவாதங்கள் நடக்க வேண்டும்.

குடும்பத்துக்காக உழைத்து ஓடாகப் போகும் ஆண்கள், தான் சம்பாதிக்கும் பணத்தைத் தனியாக வைத்துக் கொண்டு குடும்பத்தை ஆணின் சம்பாத்தியத்தில் மட்டுமே நடத்தும் பெண்கள் போன்ற விதிவிலக்குகள் இருக்கலாம். பெரும்பான்மையான பெண்கள் கையறு நிலையில் இருக்கிறார்கள் என்பதே உண்மை நிலவரம்.

இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் உரிமைத் தொகை அரசாங்கம் ஏழைப் பெண்களுக்குச் செய்யும் உதவி இல்லை. கேர் ஒர்க் செய்பவர்களின் உழைப்பு கவனம் பெறுகிறது. ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கணக்கிடப்படாமல் போகும் உழைப்பு அங்கீகாரம் பெறுகிறது. இது பெண்களுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கும் நல்லது. ஒரே வேலை செய்தாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வழங்கப்படும் ஊதியத்தில் பாகுபாடு இருக்கிறது. ஊதியமில்லா உழைப்பைப் பற்றிப் பேசினால்தான் ஊதியப் பாகுபாடு எனும் அடுத்த சமத்துவத்தை எட்ட முடியும். அதற்கான முதல் படிக்கல்லாக இருக்கட்டும் இந்தத் திட்டம்.

படைப்பாளர்:

இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்