சமையலறையில் வேலையை முடித்துவிட்டு வரவேற்பறைக்கு வந்த எனக்கு ஒரே அதிர்ச்சி. வீடே மயான அமைதியாக இருந்தது. வீட்டில் அமைதி என்றாலே குழந்தைகள் ஏதோ ஏழரையைக் கூட்டியிருக்கிறார்கள் என்ற அச்சம் எப்போதும் பெற்றோருக்கு இருக்கும். எனக்கும் அதே அச்சம் இருந்தது. ஒவ்வோர் அறையாகச் சென்று பார்த்தேன். முடிவாக என் படுக்கையறைக்குள் நுழைந்தபோது அறை முழுவதும் ஒரு வலுவான நறுமணத்தை உணர்ந்தேன். திடீரென்று தரையில் இருந்த ஒரு சிறிய கண்ணாடி துண்டு என் காலை நன்றாகக் கீறிவிட்டது. உயிர் போகும் வலி.

தரை முழுவதும் ஈரமாக இருந்தது.

இரு வாரங்களுக்கு முன் நான் வாங்கி வந்த விலையுயர்ந்த வாசனைத் திரவிய பாட்டிலின் உடைந்த கண்ணாடி துண்டுகள்தாம் அது. எனக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது.

“ஆதி, எங்கேயிருக்க?”

“ம்ம்ம்… வரமாட்டேன், வந்தா அடிப்பீங்க” என்று குரல் மட்டும் வந்தது.

அறையின் ஒரு மூலையில் எனது ஏழு வயது மகன் பயந்த முகத்துடன் ஒளிந்து நின்றிருந்தான். எனது கோபம் கொப்பளித்தது. நான் அவனை அறைக்கு வெளியே தரதரவென இழுத்து வந்து கடுமையாகத் திட்டினேன். முடிவில் அவன் அழ ஆரம்பித்துவிட்டான்.

“நான் உங்ககிட்ட பேசவே மாட்டேன்” என்று கத்திவிட்டு அழுது கொண்டே ஓடி விட்டான்.

நான் அறை முழுவதும் சிந்தி இருந்த வாசனைத் திரவியத்தைத் துடைத்து, உடைந்த கண்ணாடித் துண்டுகளைக் கவனமாகச் சுத்தம் செய்துவிட்டு, என் காயத்திற்கு மருந்து போட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். என் கோபம் தனியவே இல்லை.என் மகன் ஒரு மன்னிப்புகூடக் கேட்கவில்லையே என்கிற வருத்தம் ஒருபுறம், கடுமையான வலி ஒருபுறம்.

ஒரு மணி நேரம் ஆனது.

என் மகன் என் அருகில் வந்தான். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வந்திருக்கிறான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

“அம்மா, எழுந்திரு. எனக்குப் பசியாக இருக்கு. பாஸ்தா செஞ்சு கொடு” என்று எனக்கு உத்தரவிட்டுவிட்டு ஒரு பந்தை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் விளையாட ஓடிவிட்டான்.

நான் செய்வதறியாது நின்றேன்.

ஒரு வளர்ந்தவளாக, நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த நான் ஒருபுறம், நடந்த சம்பவத்தை முழுவதுமாக மறந்துவிட்ட என் குழந்தை ஒருபுறம்.

எங்களுக்குள் இருந்த இந்த அளவிட முடியாத வேறுபாட்டை உணர்ந்தேன்.

ஒரு கவலையையும் கோபத்தையும் தேக்கி வைத்திருந்த உள்ளம். ஒரு கள்ளம் கபடமற்ற களங்கமற்ற உள்ளம்.

இரு துருவங்களாக இருந்த எங்களைக் கண்டு வெட்கப்பட்டேன்.

நாம் குழந்தைகளாக இருந்தபோது களங்கமற்றதாக இருக்கும் நம் மனங்கள், நாம் வளர வளர, வெறுப்பும் கசப்பும் தேங்கிக் கிடக்கும் மனதாகத் தானும் வளர்கிறது.

குழந்தை பருவத்தில் இணைபிரியா நண்பர்கள் என்று நாம் பாராட்டிய பலர் பரம விரோதிகளாக மாறி இருப்பதையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

பாசமலர்களாக இருந்த சகோதரர்கள் ஒருவரை இன்னொருவர் வெட்டிக் கொள்ளும் அளவிற்குச் சென்றிருப்பதையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

என் நெருங்கிய தோழி நான் அவளைவிட ஒரு மதிப்பெண் அதிகம் பெற்றுவிட்ட ஒரே காரணத்தினால் என்னிடம் பேசுவதை நிறுத்திய நிகழ்வை நினைவுகூர்ந்தேன்.

இந்த வெறுப்பும் கசப்பும் தேங்கிக் கிடக்கும் நம் மனதுக்கு ஓர் அசாத்தியமான சக்தி உண்டு. ஒரு காந்தத்தைப் போன்று ஈர்க்கும் சக்தி. இந்த வெறுப்பும் கசப்பும் நிறைந்த நம் மனங்கள் மெல்ல மெல்ல, தனக்கு இணையான பாழடைந்த மற்ற மனங்களைப் படிப்படியாக ஈர்த்துக்கொள்கிறது.

அதுவே ஒரு சிறிய கூட்டமாக உருவெடுக்கிறது.

இந்தச் சிறிய கூட்டம் மற்ற சிறிய கூட்டங்களை ஈர்த்து

ஒரு பெரிய சமூகமாக உருவெடுக்கிறது.

பாவம் அந்தப் பெரிய சமூகம் மட்டும் விதிவிலக்கா?

அந்தப் பெரிய சமூகமும் அதே வேலையைத் திறன்பட செய்கிறது. பின்னர் அதுவே ஒரு மிகப் பெரிய தேசமாக உருவெடுக்கிறது. அந்த வெறுப்பும் கசப்பும் பூதாகரமாக உருவெடுத்து அழிக்க முடியாத ஒரு நிலையை அடைகிறது.

இதன் விளைவு போர் மற்றும் பயங்கரவாதம், இனவெறி, மதவெறி, மனிதனால் ஏற்படும் பேரழிவுகள், பாலின சமத்துவமின்மை, வன்முறை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் காரணமானது நம் அந்தச் சின்னஞ்சிறு மனம்.

பட்டாம்பூச்சி விளைவு என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். ஒரு சிறிய பட்டாம்பூச்சி தனது சிறகுகளை அசைத்து ஒரு சூறாவளியை உண்டாக்குவது போல ஒரு கற்பனை செய்து பாருங்கள். அத்தகைய சக்தியைக் கொண்டது நம் சின்னஞ்சிறு மனம். கேயாஸ் கோட்பாட்டின்படி, உலகை மாற்றும் பெரிய விஷயங்களுக்குக் காரணம் சிறிய விஷயங்கள் மட்டுமே.

நம் மனதை ஆட்கொண்டிருக்கும் இந்தத் தொற்று நோய்க்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா என்று தானே யோசித்து கொண்டிருக்கிறீர்கள். நானும் படு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தேன். ஒன்று மட்டுமே இதற்குத் தீர்வாக இருக்கும் என்று முடிவு செய்தேன்.

கால இயந்திரத்தில் பயணித்து, மீண்டும் சிறு குழந்தைகளாக எல்லாரும் மாறிவிட்டால், உலகில் சண்டைகளே இருக்காதுதானே?

அற்புதமான தீர்வு! என்ன சொல்கிறீர்கள்?

(தொடரும்)

படைப்பாளர்:

சித்ரா ரங்கராஜன்

கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து. ஹெர் ஸ்டோரிஸில் ‘மேதினியின் தேவதைகள்’ என்கிற தலைப்பில் தொடர் எழுதிக் கொண்டிருக்கிறார். இது இவருடைய இரண்டாவது தொடர்.